சிறப்புப்பக்கங்கள்

எமக்குத் தமிழ் தெரியாது

கரு பழனியப்பன்

ஓர் இயக்கம் வைத்து மொழியைக்  காக்கவேண்டுமென்றால் அந்த  மொழி சிதைந்து கிடக்கிறது என்றுதான் அர்த்தம். மொழியைக் காப்பது என்றால் இயல்பாக வரவேண்டும். தாயைக்காப்பதுபோல்.  அப்படி நடக்காதபோது இயக்கங்கள் அவசியம். தமிழ் போன்ற  மிகத்தொன்மையான மொழியில் அனாவசியமான மொழிக்கலப்பு ஏற்படும்போது அது தேவையில்லை என்று சொல்ல இங்கே ஆள் தேவைப்படுகிறது. பொதுவாக எல்லாவற்றையும் சுவீகரிக்கும் ஒரு மொழியே வளரும் என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் கட்டுமரம் என்ற சொல்லை ‘கடமரான்’ என்று ஏற்றுக்கொண்டான் என உதாரணம் காட்டுவார்கள். காரணம் அவனிடம் கட்டுமரம் இல்லை. இந்த பண்பால்தான் ஆங்கிலம் உலகெங்கும் படிக்கப்படுகிறது என்று தவறான ஒரு தகவலைச் சொல்வார்கள்.

எந்த அயல் சொல்வந்தாலும் தமிழில் முன்னாடியே அது இருக்கிறது  அல்லது நல்ல சொல் உருவாக்கமுடியும் என்பதுதான். பொதுவாக புதிய தமிழ்ச் சொல் ஆரம்பத்தில் எள்ளி நகையாடப்படுகிறது. பேஸ்புக் என்பதற்கு ஆரம்பத்தில் வதனப்புத்தகம் என்றார்கள். இப்போது முகநூல் என்று வந்து நிலைபெற்றுவிட்டது.  ஐம்பது ஆண்டுக்கு முன்பு பஸ் வந்தபோது பேருந்து என்றோம். சிரித்தார்கள். ஆனால் இன்று அது  வழக்கத்தில் இருக்கும் சொல். ஆகவே இந்த தூய்மைவாதம், மொழிமாற்றம் மிக அவசியம். கண்டிப்பாக நமக்குத் தமிழ்ச்சொற்கள் வேண்டும்.

தமிழ்  திரையுலகில் இதை நாங்கள் செய்கிறோமா என்றால் இல்லை. வரிவிலக்கு அளிப்பதால் தமிழ் வளர்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், அதுவும் தலைப்பில் மட்டும்.  உள்ளே முழுக்க ஆங்கிலம் பேசுகிறோம்.  பேச்சுவழக்காக இருப்பதில் ஆங்கிலம் அதிகமாக இருக்கவேண்டும் என்று இப்படிச் செய்கிறோம். இதற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சி. நம் அன்றாட வாழ்வைக் கெடுப்பது தொலைக்காட்சி.மக்கள் தொலைக்காட்சி நீங்கலாக மற்ற தொலைக்காட்சிகளைப் பாருங்கள். இரண்டு நிமிடங்களில் 20 ஆங்கிலச்சொல்களை கடந்து செல்வீர்கள். பண்பலையும் இதில் சேர்த்தி. சூப்பரான பாட்டு வருது, உங்க பிராப்ளம் என்ன என்பார்கள். தமிழ்நாட்டில் தொகா. பார்க்கிறார்களோ இல்லையோ நாள் முழுக்க கேட்கிறார்கள். காலையில் போட்ட தொலைக்காட்சியை இரவுதான் அணைக்கிறார்கள். இதனால் எல்லோரும் வலிந்து ஆங்கிலம் பேசுகிறார்கள். இதில் சினிமாவின் பங்களிப்பு குறைவு என்றே நான் சொல்வேன்.

சினிமாவில் தனித்தமிழ் இல்லை. இருந்தால் நல்லது. நானும் இதைச் செய்வதில்லை.  வாழ்த்துகள், இலக்கணம் போன்ற தனித்தமிழ் திரைப்பட முயற்சிகள் நான் செய்யவில்லை. நான் லட்சிய பாத்திரம் வைக்கவில்லை. சராசரி பாத்திரம் மட்டுமே வைக்கிறேன். ஒருவேளை தனித் தமிழ் பேசும் பாத்திரம் ஒன்று என் சினிமாவுக்கு தேவை என்றால் நான் செய்வேன். சாதாரண பாத்திரம் வரும்போது அது ஆங்கிலம் கலந்துதான் பேசும். ஏனெனில் சூழல் அப்படி. நாம் வீட்டில் ஆங்கிலம் கலந்துதான் பேசுகிறோம்.

எங்கள் வீட்டில் என் குழந்தை என்னிடம் தமிழில் மட்டுமே பேசுகிறது. தமிழில் பேசும்போது ஆங்கிலம் கலக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன்.  ஆங்கிலம் பேசும்போது அதில் தமிழ் கலக்க நாம் வெட்கப்படுகிறோம். ஆனால் தமிழ் பேசும்போது ஆங்கிலச் சொல் கலப்பதில் பெருமை அடைக்கிறோம். அது அசிங்கம் என்றால் இதுவும் அசிங்கம்தானே.

தமிழாசிரியர்களை மோசமாக தமிழ்ப்படங்கள் சித்திரிப்பதாக சொல்வார்கள். அவர்களை மட்டுமல்ல மொத்தமாக ஆசிரியர்களையும் மாணவர்களையும் மோசமாகத்தானே காட்டியிருக்கிறோம்? நான் சிவப்பதிகாரம்  படம் எடுக்க திருச்சியில் ஒரு கல்லூரியை அணுகியபோது அதன் முதல்வர் தயங்கினார். நான் ஆசிரியர்களை ஒருபோதும் மோசமாகக் காட்டமாட்டேன். தரமான ஆசிரியர்களிடம் படித்தவன்;  நிஜமாகவே கல்லூரியில் படித்து வந்தவன் நான் என்று சொன்னபிறகே அனுமதி வழங்கினார்.

தமிழ்த்திரையில் ஆரம்பத்தில் இசைத்தமிழ் இருந்தது. பின்னர் வசனத்தமிழ் இருந்தது. திராவிட இயக்கத்தவர்கள் இதைத் தொடங்கிவைத்தார்கள் உரைநடை போல் இருந்ததில் இருந்து,   பின்னர்  வட்டார வழக்கு வந்தது. பாரதிராஜா வருகையின் பின்னால் திரைமொழி மாறியது. வட்டார வழக்கு இயல்பாகியது. இப்போது வட்டார வழக்கு என்ற பெயரில் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்.

தனித்தமிழ்  சினிமாவில் வளரும் என்று எதிர்பார்க்காதீர்கள். முதலில் நீங்கள் மாறுங்கள்.. அரசியல் தொடங்கி தனித்தமிழ் வரை சர்வரோக நிவாரணி அல்ல சினிமா.  சினிமாவில் செய்வதை விட வீட்டில் செய்யுங்கள். ஏன் என்று கேட்டால் திரைத்துறையில் இருக்கும் எனக்கு தமிழ் தெரியாது. 1970 க்கு பிறகு பிறந்த எல்லோரையும் ஆங்கிலக்கல்விக்கு அனுப்பிவிட்டீர்கள். தாய்மொழிக் கல்வி இல்லை. இப்போது இரண்டாவது தலைமுறை ஆங்கிலக் கல்வி கற்கிறது. இன்று கல்லூரிக்கு வந்திருக்கும் மாணவனின் தந்தையே ஆங்கில வழியில் படித்தவர். வடபழனி பேருந்து நிலையத்தில் நின்று யாரையாவது பிடித்து  தமிழில் நான்கு வரி எழுதச்சொல்லுங்கள் ஒற்றுப்பிழை இன்றி எழுதிவிட முடியுமா அவர்களால்? அப்படி நடந்தால் நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். வேண்டுமானால் தனித்தமிழில்கூட படம் எடுக்கிறேன். வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறோம்? எங்களுக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலச்சொல் இல்லாமல் எங்களுக்குப் பேசத்தெரியாது.

மலையாளத்தில் படங்களைப் பாருங்கள். இப்போது வந்திருக்கும் புதிய தலைமுறை இயக்குநர்கள் படங்களில்கூட  ஆங்கிலச் சொற்கள் கலப்பு மிகக்குறைவாக இருக்கிறது. தமிழில் தனித்தமிழ் பயன்படுத்தி வந்த படங்கள் வெற்றி அடையவில்லை என்று சொல்லவேண்டியதில்லை. அதன் தோல்விக்குக் காரணம் தனித்தமிழ் அல்ல. வேறு காரணங்கள் இருக்கும். தோல்விக்கும் தனித்தமிழுக்கும் தொடர்பு இல்லை.

என்போன்ற இயக்குநர்களுக்கு ஆங்கிலம் கலக்காமல் பேசத்தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இயல்பாகவே ஆங்கிலம் கலக்காத மொழி வந்திருக்கும். இதற்குக் காரணம் நாற்பது ஆண்டுகளாக நீங்கள் திறந்து வைத்திருக்கும் ஆங்கிலப்பள்ளிகள். தாய்மொழிக்கல்வியைத் திட்டம்போட்டு ஒழித்துவிட்டீர்கள்.  குற்றம் இந்த சமூகத்தினுடையது. என்மேல் குறை சொல்லாதீர்கள்.

(நமது செய்தியாளரிடம் பேசியதில் இருந்து)

செப்டெம்பர், 2016.