சிறப்புப்பக்கங்கள்

என்றென்றும் எம்.ஜி.ஆர்!

திருநின்றவூர் தி.சந்தானகிருஷ்ணன்

எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரம் மக்களைக் கட்டிப்போட்டது. 1936ம் ஆண்டு ‘சதிலீலாவதி ’ என்ற சமூகத் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் காலடி எடுத்து வைத்த எம்.ஜி.ராமச்சந்திரன் அறிமுக காலத்தில் புராண இதிகாச படங்களில் சிறிய வேடங்கள் தாங்கி நடித்தார். அப்படி அவர் நடித்த முதல் புராணப்படம் 1938ம் ஆண்டில் வெளிவந்த தக்‌ஷயக்ஞம்! சிவ துவேஷம் கொண்ட தக்‌ஷன் அவரை அவமதிக்க நினைத்து ஒரு மகா யாகம் நடத்துகிறான் அதற்கு பிரம்மா, விஷ்ணு, அஷ்டதிக்பாலகர்கள் , முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிகள் அழைக்கப்படுகின்றனர் , ஆனால் சிவனுக்கு அழைப்பில்லை, இந்த மகாயாகத்தில் பங்கேற்பவர்களில் ஒருவரான விஷ்ணுவாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார்.

1939ல் ப்ரஹலாதா என்றொரு படம், மாயாபுரி அரசன் ஹிரண்யன் பிரம்மதேவனிடம் சாகாவரம் பெற்று வருகிறான். ஹிரண்யனின் அட்டகாசத்துக்கு பயந்த இந்திரன் கர்ப்பிணியான அவனது மனைவி லீலாவதியை சிறைபிடிக்கிறான். இப்படத்தில் இந்திரனாக  வந்தவர் எம்.ஜி.ஆர். ‘வேதவதி அல்லது சீதாஜனனம் ’ என்ற பெயரில் 1941ல் ஒரு புராணப்படம் வெளிவந்தது. அதில் எம்.ஜி.ஆருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. இந்திரனை தோற்கடிக்கும் தன் மைந்தன் மேகநாதனின் வீரத்தை மெச்சிய இராவணன் அவனுக்கு இந்திரனை வென்றவன் என்றும் இந்திரஜித் என்ற பட்டமளித்தான். இந்த இந்திரஜித் பாத்திரத்தில் நடித்தவர் தான் எம்.ஜி.ஆர். தாசிகுலத்தில் பிறந்த தும்பை எனும் பெண் ஈஸ்வரபக்தியில் இணைந்தவள் . அவளைக் குலத்தொழில் புரிய குடும்பம் வற்புறுத்துகிறது ,

 சங்கடத்தில் சிக்கித்தவிக்கும் தும்பைக்கு ஈஸ்வரன் அருள் புரிகிறார் என்பதே கதை. தும்பை பாத்திரத்தில் பின்னாளில் பிரபல பாடகியாக பரிமளித்த பாலசரஸ்வதி ராவ் (நினைவூட்டுகிறோம் ‘ மல்லிகை பூ ரோஜா’ என்ற பாட்டை) ஏற்றிருந்தார். சிவபெருமானாக எம்.ஜி.ஆரும் , பார்வதியாக எம்.கே.டி. அம்பிகாபதி புகழ்  எம்.ஆர்.சந்தான லஷ்மியும் நடித்திருந்தனர். படம் 1943 ம் ஆண்டு வெளிவந்தது. தாசிப்பெண் அல்லது ஜோதிமலர் என்ற பெயரில்.

1944ம் ஆண்டில் பி.யூ.சின்னப்பா நடித்து வெளிவந்த ‘ஹரிச்சந்திரா’ திரைப்படத்தில் அரசன் ஹரிச்சந்திரனின் மகா மந்திரி சத்திய கீர்த்தியாக எம்.ஜி.ஆர் நடித்தார். அதே போல் இசையரசி எம்.எஸ்.சுப்புலஷ்மி ‘ மீரா’ வாக நடித்த இன்னிசைச் சித்திரத்தில் அவரது கணவர் ராணாவின் (வி.நாகய்யா) தளபதி ஜெயமாலாக எம்.ஜி.ஆர் நடித்தார். இப்படம் 1945ம் ஆண்டு திரையிடப்பட்டது.

‘ஸ்ரீ முருகன் ’ என்ற திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர் , யூ.ஆர்.ஜீவரத்தினம் நடித்திருந்தனர், இதில் சிவனாக எம்.ஜி.ஆரும், பார்வதியாக மாலதியும் (பாதாள பைரவி புகழ்) நடித்திருந்தார். இதில் இவர்கள் இருவருமாடிய சிவ தாண்டவம் பாராட்டை பெற்றது படம் 1946ம் ஆண்டில் வெளிவந்தது.

1948ல் வெளிவந்த அபிமன்யு திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் அபிமன்யூவின் தந்தை அர்ஜுனனாக முக்கிய பாத்திரமேற்றிருந்தார். படத்தின் நிறைவு பகுதி முழுதிலும் நிறைந்திருந்தார். தன் மகன் அபிமன்யூ மாண்ட போர்க்களத்தில் எம்.ஜி.ஆர் கண்ணிர் மல்க கதறி அழுது பேசிய வசனங்கள் உருகும் வண்ணம் அமைந்திருந்தன.

‘மாயா மச்சீந்திரா’ -1939 ல் திரைக்கு வந்தது. மச்சீந்திர நாதனாக எம்.கே.ராதா நடித்திருந்தார். எம்.ஜி.ஆர் ஸீர்யகேது என்ற பாத்திரத்தை ஏற்றிருந்தார். கபட சந்நியாசியின் செப்படி வித்தைகள், கல்லால் ஆன மாலை , மோஹினி இரவல் என்ற பல விசித்திரங்கள் கொண்டது இப்படம். படத்தில் பயன் படுத்தப்பட்ட அலக் நிரஞ்ஞன் என்ற மந்திரச்சொல் மக்கள் மனதில் நிலைத்திருந்தது.

1945ல் சாலிவாஹனன் திரைக்கு வந்தது. படத்தில்  சாலிவாஹனனாக ரஞ்சன் நடித்தார்.  இவரது ஜோடி டி.ஆர்.ராஜகுமாரி. உஜ்ஜயினியின் சக்கரவர்த்தி விக்ரமாதித்தனாக எம்.ஜி.ஆர் நடித்தார். மந்திர தந்திரங்களில் கை தேர்ந்த சாலிவாஹனனின் ஜாலங்கள்! பிரமிப்பூட்டும் வேதாளம், உயிர் பெற்றெழுந்த மண் குதிரை இப்படி பல சுவாரஸ்யமான கற்பனைகள் கலந்ததாக கதை ஓட்டமிருந்தது.

அடுத்து குறிப்பிடும் படம் எம்.ஜி.ஆரைப் பொறுத்தமட்டில் மிக முக்கியமானது ஆகும். அதுதான் 1947 ல் வெளிவந்த ‘ ராஜ குமாரி’ இதில் ராஜகுமாரி மல்லிகாவாக கே.மாலதி நடித்தார். அவளது காதலன் சுகுமார் தான் எம்.ஜி.ஆர். இப்படத்தில் தான் முதன் முதலாக எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தார். இது மந்திர மாயாஜாலத்திற்கு முக்கியத்துவம்  அளித்த படம். கயவன் மந்திரவாதியால் அபகரித்துச் செல்லப்பட்ட ராஜகுமாரியை சுகுமார் எப்படி மீட்டு அடைகிறான் என்பது கதை. ஜாலத்தீவு, மாய விளக்கு, மாயா பூதம், மந்திரவாதியின் மாய சக்தி, சாபத்தீவு , விஷராணி என்று மந்திர , தந்திர மாயா ஜாலங்கள் படம் முழுவதும் கொட்டிக் கிடந்தது. இக்காட்சிகள் படத்திற்கு வெற்றியையும், எம்.ஜி.ஆருக்கு கதாநாயகன் என்ற அந்தஸ்தையும் தேடித்தந்தது. 1948ல் ஜுபிடர் தயாரித்து வெளியிட்ட மோஹினி என்ற திரைப்படத்தில் மோஹினியாக வி.என்.ஜானகியும். அவள் காதலன் விஜயகுமாராக எம்.ஜி.ஆரும் நடித்திருந்தனர். எம்.ஜி.ஆரின் வெற்றித்தடம் பதித்த படங்களில் மோஹினியும் ஒன்றாகும்.

எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் கட்டாயம் குறிப்பிடவேண்டிய படங்களில் ஒன்று மர்மயோகி. 1951ம் ஆண்டில் இதுவும் ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்புதான். அந்த காலத்திலேயே படத்தில் பேய் உலா வந்த காட்சி முதன் முதலாக இடம்பிடித்தது மர்ம யோகியில்தான். அற்புதமான சண்டைக் காட்சிகள் கொண்ட படம், ஆங்கில நடிகர் எரால் பிளைன் பாணியில் சாரட்டிலிருந்து தாவிக்குதித்து எதிரிகளை தன் வாளால் சரமாரியாகத் தாக்கி தவிடு பொடியாக்குகிறார் எம்.ஜி.ஆர். பேய் வருவதைக் கருத்தில் கொண்டு சென்சார் போர்டு இப்படத்திற்கு ‘ஏ’ சர்ட்டிபிகேட் வழங்கியது. தமிழ் சினிமாவில் முதல் ‘ஏ’ சர்ட்டிபிகேட் வாங்கிய படம் மர்மயோகிதான்.

செஞ்சியை ஆண்ட வீரன் ராஜாதேசிங்கு. இந்த சரித்திர கதை பெரிதும் மாற்றப்பட்டு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.  தவிர பல பிரச்சனைகளால் படம் நீண்ட காலமாக வளர்ச்சியில் தொய்த்திருந்தது. எனவே படத்தில் எம்.ஜி.ஆர் தேசிங்கு ராஜன், தாவுத்கான் என்று ரெட்டை வேடத்தில் நடித்திருந்தும் 1960ல் வெளியிடபட்ட கிருஷ்ணா  பிக்சர்ஸ் ‘ ராஜா தேசிங்கு’ தோல்வியை தழுவியது .

புகழ்பெற்ற பிரித்விராஜ்- சம்யுக்தா  சரித்திர  காதல் கதை ராணி சம்யுக்தா என்ற  பெயரில் வெளியானது.  எம்.ஜி.ஆர் பிரித்திவிராஜனாகவும், பத்மினி ராணி சம்யுக்தாவாகவும் நடித்தனர். படத்தின் பாடல்கள் அனைத்தையும் இனிமையாக்கிய இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவனை இவ்விடத்தில் நினைவு கூறுவது ரசிகர்களின் நன்றி கடனாகும்.  குறிப்பாக எம்.ஜி.ஆரும், பத்மினியும், பாடுவதாக அமைந்த ஜோடிப்பாடலான ‘ ஓ வெண்ணிலா ஓவெண்ணிலா வண்ணப்பூச்சூடவா வெண்ணிலா’ நினைக்கும் போது நெஞ்சினில் ரீங்காரமிடுகிறது. 1962 ல் வெளியாகி படமும் வெற்றிபெற்றது.

இதனை அடுத்து 1963 ல் எம்.ஜி ஆர் நடித்த மற்றுமொரு சரித்திரப் படம் ‘ காஞ்சித்தலைவன்’ . இப்படத்தில் எம்.ஜி.ஆர் கம்பீரமாகவும் உணர்ச்சிப் பெருக்குடனும் நடித்திருந்தார். தவிர பாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தியிருந்தார். ஹரிபாபு தலைமையிலான ஒப்பனைக்குழு தன் பங்கை பாங்காக செய்து பாராட்டு பெற்றது.

தவிர அக்கால கட்டத்தில் அரேபிய பாணி  காலகட்ட படங்கள் சிலவற்றிலும் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார். அவற்றில் குறிப்பிடத்தகுந்த படங்கள் மூன்று.

1. குலேபகாவலி - 1955

2. அலிபாபாவும் 40 திருடர்களும். - 1956

3. பாக்தாத் திருடன் - 1960

எதிர்பாராத விபத்தால் கண்களை இழக்கிறார் தாசன் முல்கின் தந்தை ஜைனன் முல்க். கண்பார்வையை மீட்க வேண்டுமாயின் குலேப்பூ வேண்டும். குலேப்பூவோ அடங்காத ஆணவக்காரி பகாவலியின் நகாவலி ராஜ்யத்தில் இருக்கிறது. அதை அடைய தாசன் முல்க் பல அபாயங்களை வெல்கிறான். படத்தில் தாசன் முல்க்காக எம்.ஜி.ஆர் நடித்து 1955ல் வெளிவந்த மகத்தான வெற்றிப்படம் குலேபகாவலி.

அலிபாபாவும் 40 திருடர்களும் - நாடறிந்த நல்லதொரு சுவாரஸ்யம் மிக்க கதை.  படத்தில் எம்.ஜி.ஆர் அலிபாபாவாகவும் , பி.பானுமதி மார்ஜியானா வாகவும் நடித்தனர். தமிழ் நாட்டில் தயாரான முதல் கேவா கலர் படமிது. படத்தின் வெற்றியை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

பாக்தாத் தேசத்து அமைச்சர் காசிம் ரஸ்வி வயது முதிர்ந்த பாதுஷாவை சிறையில் அடைத்து மன்னனாகிறான். மன்னனின் வாரிசான குழந்தை அபு பாதுஷாவின் உண்மை ஊழியனான அப்துல்லாவால் காப்பாற்றப்படுகிறான். அபு  வளர்ந்து எப்படி இந்த நிலைமையை சரி செய்கிறான் என்பதே கதை. அபுவாக எம்.ஜி.ஆரும் ஜோடியாக வைஜெயந்தி மாலாவும் நடித்திருந்தனர். கிழவனாக மாறுவேடத்தில் ஜெரினாவை ஏலத்தில் எடுத்து அபு பாடும் ‘யாருக்கு டிமிக்கி கொடுக்க பாக்குற, எங்கே ஓடுர சொல்லு’ படத்தில் சிறப்பாக அமைந்தது. பாக்தாத் திருடன் முதலுக்கு மோசமில்லை என்ற ரீதியில்  ஓடியது.

எல்லை காண முடியாத விண்வெளியைக் கண்கொண்டு பார்த்து படத்தயாரிப்பாளர்களான சரோடி பிரதர்ஸ் ஏ.காசிலிங்கத்தின் பொறுப்பில் திரைப்படமாக எடுத்தார்கள். அது தான் 1963 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த விஞ்ஞான யுக்தியை அடிப்படையாக கொண்ட ‘கலைஅரசி’.  படத்தில் நாயகன் மோகனாக எம்.ஜி.ஆரும் நாயகியாக பானுமதியும் விண்மண்டலதளபதியாக எம்.என்.நம்பியாரும் நடித்தனர். படம் புதுமையாக இருந்தும் மக்கள் மனதில் பதியாது போய் தோல்விப்பட வரிசையில் நின்றது.

தென் தமிழகத்தில் காவல் தெய்வமாக மக்கள் வணங்குவது மதுரை வீரன் சாமி.  இந்தப் படத்தில் வீரனாக எம்.ஜி.ஆரும், பொம்மியாக பானுமதியும், வெள்ளையம்மாளாக பத்மினியும் நடித்திருந்தனர். படம் தமிழ் நாடெங்கும் பெரும் வெற்றி பெற்றது.   இப்படத்தை சாகச வீரரு என்று தெலுங்கில் மொழி மாற்றம் செய்து தயாரிப்பாளர் வெற்றிகண்டனர்.  படத்திற்காக உடுமலை நாராயண கவி ‘பாற்கடல் அலைமேலே’ என்ற பக்தி பாடலை எம்.எல்.வசந்த குமாரியை பாடவைத்து அதற்கு பத்மினியை ஆடவைத்து படமாக்கினார். எம்.ஜி.ஆருக்கு இது பிடிக்கவில்லை. தயாரிப்பாளரான கிருஷ்ணா  பிக்சர்ஸ் லஷ்மண செட்டியார் அதன்படியே படத்தில் இந்த நடனத்தை நீக்கிவிட்டார். ஆனால் இப்பாடலை மட்டும் தனியாக தணிக்கை செய்து இடைவேளை முடிந்ததும் ஆரம்ப காட்சியாக இப்பாடல் நடனத்தை காட்டினார். இக்காட்சி படத்தில் இப்போது இல்லை, பாடல் மட்டுமே கேட்கக் கிடைக்கிறது.

 மந்திரகுமாரி(1950),  புதுமைப்பித்தன் ( 1957) சக்ரவர்த்தி திருமகன் -(1957) ஆகிய சுவாரசியமான படங்களிலும் இந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் நடித்திருந்தாலும் நாடோடி மன்னன் (1960) முக்கியமானது. இதன் இயக்கம் எம்ஜிஆர். இந்த படத்தின் ஒரு பகுதி (கன்னித்தீவு) கலரில் காட்டப்பட்டது. நாடோடி- மன்னன் இருபாத்திரத்திலும் இரட்டை வேட மேற்று எம்.ஜி.ஆர் வெகு  சிறப்பாக நடித்தார். முதன் முறையாக இப்படத்தில் சரோஜா தேவிக்கு முக்கிய பாத்திரம் அளிக்கப்பட்டது. பாடல்கள் கருத்தையும் , இசை செவிபுலனையும் குளிர்வித்தன. 1958ம் ஆண்டின் சிறந்த டைரக்டர் எம்.ஜி.ராமசந்திரன், சிறந்த படம் ‘நாடோடி மன்னன்’ என்று பேசும் படம் கௌரவித்தது. படம்  The Prisoner of Zenda என்ற ஆங்கிலப்படத்தின்  சாயலிலிருந்தாலும்  தமிழில் சிறப்புற வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

சென்னை , மதுரை, கோவை, திருச்சி, சேலம் , தஞ்சை, நெல்லை, ஈரோடு , திண்டுக்கல், வேலூர், மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் 100 நாட்கள் ஓடி தமிழ் பட வரலாற்றில் புதிய சாதனை புரிந்தது.

 அதே ஆண்டு வெளியான மன்னாதி மன்னனும் அழகான படம். படம் பாமரர்களும் ரசிக்கும் வண்ணம் படமாக்கப்பட்டிருந்தது. மணிவண்ணன் ஆடற்கலையில் வல்லவன் என்பதை அப்பாத்திரத்தை ஏற்ற எம்.ஜி.ஆர் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தினார். ‘ஆடாத மனமும் உண்டோ ’ பாடலுக்கு தபேலாக்களை கையாளும் விதமும், நடனமும் வியக்க வைக்கின்றன. கற்பழிப்பு காட்சியில் பாடலும் நடனமும் இணைந்த காட்சி  இன்றும் ஆச்சர்யப்பட வைக்கிறது.  வில்லன் கனிக்கண்ணன் (பி.எஸ்.வீரப்பா) கற்பழிக்க வரும் போது பத்மினி கற்பின் பெருமையை கலையுடன் கலந்து ‘கலையோடு கலந்தது உண்மை’ என்று கற்பின் பெருமை பாடி அவனைத் தடுத்தவண்ணம் ஆடுவார்.

பிரபல கதாசிரியர் அகிலன் எழுதிய ‘கயல்விழி’ என்ற நாவலே ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்(1978)’ என்று திரைப்பெயர் எடுத்தது. எம்.ஜி.ஆர் முழுமையாக நடித்து வெளிவந்த கடைசிப்படம் இது. இப்படத்தையும் எம்.ஜி.ஆரே இயக்கினார். எனினும் படம் வெற்றி பெறாமல் போயிற்று. ஆனாலும் எம்.ஜி.ஆரின் வீரம், விவேகம், போன்ற முத்திரைகள் படத்தில் பதியத்தான் செய்திருந்தன.

பிப்ரவரி, 2017.