சிறப்புப்பக்கங்கள்

என்னை விட என் மீது அதிக அக்கறை!

நாராயணன் திருப்பதி

இந்தியாவிலிருக்கும் உயர்ந்த நெறிகள் நம் கலாச்சாரத்தோடு தொடர்புடையவை. அது தான் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்தி வருகிறது. இன்றைக்கு இளைஞர்கள் பொருள் ஈட்டும் அவசியத்திலும், அவசரத்திலும் இருக்கின்றனர். யார் பெரியவர்கள் என்ற கேள்வியும், ‘தான்' என்ற உணர்வும் இளம் தம்பதியர் மத்தியில் மேலோங்கியிருக்கிறது.

நான் எங்கிருந்தாலும் இரவு பத்து மணிக்கு வீடு திரும்பிவிடுவேன். இரவு உணவை வீட்டிற்கு வந்துதான் சாப்பிடுவேன். இதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கிறேன். என்னுடைய துணி மணிகளை என்னுடைய மனைவி தான் எடுத்து வைப்பார். நான் எதை சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்வார். என்னை விட என் மீது அதிக அக்கறை கொண்டவர்.

திருமணமான சில வருடங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழுமையாக குடும்பத்துடன் செலவழிப்பேன். ஆனால், காலச்சூழலால்,இப்போது அந்தளவிற்கு நேரத்தை செலவிட முடியவில்லை. இருப்பினும் இருவரும் படம் பார்க்க தியேட்டருக்கு செல்வதுண்டு. அப்படி சமீபத்தில் பார்த்த படம் ராக்கெட்ரி. மாதத்திற்கு ஒரு முறையாவது தியேட்டருக்கு சென்றுவிடுவோம். லதாவிற்கு கடவுள் பக்தி அதிகம் என்பதால் அடிக்கடி கோவிலுக்கு செல்வார். அதனால், நானும் அடிக்கடி கோவிலுக்குச் செல்வது வழக்கமாகிவிட்டது.

என் மனைவி என்ன செய்கிறாரோ அதையே என் விருப்பமாக்கிக் கொண்டதால், என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி அவர் நடக்க வேண்டும் என நான் எதிர்பார்த்தது கிடையாது. தூங்கி எழுந்தது முதல் தூங்கப் போகும் வரை வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்கள் மீதும் முடிவெடுக்கும் சர்வ அதிகாரம் அவருக்கு உள்ளது. என்னுடைய விருப்பத்தை அவர் நிறைவேற்ற வேண்டும் என நான் நினைத்ததில்லை.

ஆகஸ்ட், 2022