ராஜேஷ்குமார் 
சிறப்புப்பக்கங்கள்

என்னை பல்ப் ரைட்டர் என்பவர்கள் ஒரு கிரைம் நாவல் எழுதிக் காட்டட்டும்!

ராஜேஷ்குமார்

Staff Writer

ஒரு லட்சம் பிரதிகள் வரை மாதந்தோறும் கிரைம் நாவல்கள் விற்பனை ஆன புகழுக்குச் சொந்தக்காரர். 1500 நாவல்களுக்கு மேல் எழுதி இருப்பவர். கிரைம் நாவல்களின் மன்னன் ராஜேஷ்குமாரிடம் சில கேள்விகள்.

 நாவல் வடிவத்துக்கு நீங்கள் எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

 1968-ல் கல்லூரிக் காலத்தில் எழுத ஆரம்பித்தவன் நான். 1977-ல் தான் என் முதல் சிறுகதை குமுதத்தில் வெளிவந்தது. ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் குமுதம் வரும். அதில் தவறாமல் என் சிறுகதைகள் இடம் பெற்ற காலமும் உண்டு. தொடர்ந்து எல்லா பத்திரிகைகளிலும் என் கதைகள் வந்தன. 1980-ல் குமுதம் நிறுவனத்தில் மாலைமதி மாத இதழைத் தொடங்கினார்கள். அதில் பெரிய எழுத்தாளர்களின் கதைகள் வெளிவந்தன. அப்போது ஒருநாள் என்னை குமுதத்தில் இருந்து அழைத்த ராகிரங்கராஜன் மாலைமதிக்கு ஒரு நாவல் எழுதுமாறு கேட்டார். எனக்கு நாவல் எழுதத்தெரியதே என்றேன். அவர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு ட்விஸ்ட் வைத்து இறுதியில் முடிச்சு அவிழுமாறு எழுதுங்கள் நிறைய சம்பவங்களைக் கோர்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். மற்றவர்கள் சமூகக் கதைகள் எழுதுகிறார்கள், நீங்கள் கிரைம் எழுதுங்கள் என்றார். அப்படி முதல் முதலாக 100 பக்கத்தில் ஒரு நாவல் எழுதினேன். வாடகைக்கு ஒரு உயிர் என்ற நாவல். வெளியாகி பெரும் வரவேற்பு கிடைத்தது. அது வந்த சில மாதங்களில் கல்கண்டு தமிழ்வாணன் மரணமடைந்துவிட்டார்.  துப்பறியும் கதைகளை அவர் எழுதுவார். அவருக்கு பதிலாக யாரை எழுதவைக்கலாம் என்று யோசித்தபோது குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ. பி என்னுடைய பெயரைச் சொல்லி இருக்கிறார். கல்கண்டுவில் என் முதல் தொடர்கதை ஏழாவது டெஸ்ட் டியூப் வெளியானது. ஒரு நாவலில் இரண்டு ட்ராக் கொண்டுபோய் இடையில் ஒரு அத்தியாயத்தில் இந்த இரு ட்ராக்குகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கொண்டுபோய் கதைகளை முடிக்கும் சூட்சுமம் பிடிபட்டது. ஒரு நாவல் படித்தால் இரண்டு கதை இருக்கும் அது ஒன்றாகச் சேரும். கதையில் ஆபாசமோ வன்முறையோ இருக்காது. அதில் ஒரு பொயட்டிக் ஜஸ்டிஸ் இருக்கும். இதுதான் என்னுடைய நாவல் வடிவம். பெண்கள் என் நாவலை அதிகம் விரும்பி படிக்க ஆரம்பித்தார்கள்.

 போலீஸ் துறையில் இருக்கும் நண்பர்கள் சொல்லும் சம்பவங்களை என் கதைகளில் முடிச்சாகப் பயன்படுத்துவேன். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கிராமத்தில் இருக்கும் காவல்நிலைய ஆய்வாளர் எனக்கு ஒரு கேஸ் கட்டை அனுப்பி, அதில் யார் கொலைகாரர் என்று கண்டுபிடிக்குமாறு கேட்டு அனுப்பி இருந்தார். அந்த ஆய்வாளர் என் தீவிர வாசகர். உங்களுடையது பிராக்டிகல். என்னுடையது தியரி. கதை எழுதும்போதே எனக்கு கொலைகாரன் யார் என்று தெரியும். நான் கற்பனையில் எழுதுகிறவன், நீங்கள் காவல்துறை அதிகாரி. உங்கள் முறைப்படிதான் கண்டுபிடிக்கமுடியும் என்று திருப்பி அனுப்பிவிட்டேன்.

உங்களை பல்ப் ரைட்டர் என்று கூறுகிறார்களே? அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

  எழுத்து இலக்கியமா இல்லையா என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். நான் பாமர வாசகரைப் படிக்க வைக்கிறேன். இதுதான் இலக்கியம். 1989&ல் ஜனவரியின் ஞாயிற்றுக்கிழமை என்ற தொடர்கதை குமுதத்தில் எழுதினேன். அச்சமயம் யாரை எழுத வைக்கலாம் என்று அப்பத்திரிகையில் ஆலோசித்த போது பல பெரிய எழுத்தாளர்கள் பெயரைச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் எடிட்டர் எஸ்.ஏ.பி என் பெயரைச் சொல்லி அதற்கான காரணமாக ஒன்றைச் சொல்லி இருக்கிறார். எழும்பூர் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளில் மண்டிபோட்டு உட்கார்ந்து ரயில் வரும் நேரத்தில் வாடிக்கையாளர்களைக் கூட பிடிக்கப்போகாமல் ஒரு புத்தகத்தைப் படித்திருக்கிறார். எஸ்.ஏபி நின்று அவரைக் கவனித்து விட்டு என்ன நூல் என்று பார்த்திருக்கிறார். நான் எழுதிய மாலைமதி நாவல். பாமரனையும் கவரும் எழுத்தாளர் அவர். எனவே அவரை எழுத வைக்கலாம் என்றிருக்கிறார். என்னை பல்ப் ரைட்டர் என்று சொல்கிறவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களை என்னைப் போல் ஒரு நாவல் எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம்! என்னாலும் இலக்கியமாக எழுதமுடியும். அதை யார் படிப்பார்கள் சொல்லுங்கள். புரியாத வார்த்தைகளைப் போட்டு எழுதமுடியும். ஒரு கும்பல் உட்கார்ந்து இப்படியெல்லாம் தவறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு பிரபலமான மனிதர், மாதம் ஒரு கிரைம் நாவல் எழுதுவதெல்லாம்  இலக்கியம் அல்ல என்று மேடையில் பேசி இருக்கிறார்.  நான் கேட்கிறேன். ஒரு மாதத்தில் ஒரு கிரைம் நாவல் நீங்கள் எழுதிக்காட்டுங்கள் பார்க்கலாம். அதன் பிறகு இலக்கியமா இல்லையா என்று பார்ப்போம். என் கதைகள் பிடிக்கவில்லை என்றால் ஏன் இவ்வளவு பேர் படிக்கிறார்கள். பத்திரிகைகள் கொண்டாடுகின்றன. கலைமாமணி விருது போன்ற விருதுகள் ஏன் கொடுக்கப்படுகின்றன?

உங்களைப் போல எல்லோரும் எளிதில் படிக்கும் படி எழுதுகிறவர்கள் குறைந்துவிட்டனரா?

 நானும் என் போன்ற சக எழுத்தாளர்களும் சிறுகதைகள் எழுதி பின்னர் நாவல்கள் எழுதினோம். ஆனால் இப்போது வரும் இளம் எழுத்தாளர்கள் சில சிறுகதைகள் எழுதிவிட்டு உடனே ஒரு நாவல் எழுதுக்கிறார்கள். அத்துடன் விட்டுவிடுகிறார்கள். அப்புறம் செல்போன் அறிமுகத்துக்குப் பின் புத்தகம் படிப்பவர்கள் குறைந்துவிட்டதைப் பார்க்கிறேன். பத்திரிகைகளும் சுருக்கமான கதைகளை வெளியிடுகின்றன. எனவே எழுத்தாளர்களும் குறைந்துவிட்டனர்.

நீங்கள் திரும்பத்திரும்பப் படிக்கும் நாவல் எது?

 பொன்னியின் செல்வன். அது ஒரு மெகா கிரைம் திரில்லர். அதில் வரும் அரச கதாபாத்திரங்களுக்கு என்னுடைய நாவல்களில் பாண்ட் சர்ட் மாட்டி விட்டுக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். என்னை பொறுத்தவரை முதல் முதலாக பெண் மானபங்கம் செய்யப்பட்டது மகாபாரதம். முதல் பெண் கடத்தல் ராமாயணம். முதல் வன்முறை மதுரையை கண்ணகி எரித்தது. இந்த முப்பெரும் காவியங்கள் பெரும் கிரைம் காப்பியங்கள். மண், பெண், பொன் என்பனவற்றுக்காக நடந்தவை. இந்த  மூன்றையும் மாபெரும் காவியங்களாக ஒப்புக்கொண்டிருக்கும் அறிவு ஜீவிகள் நான் கிரைம் நாவல் எழுதினால் பல்ப் என்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்? காமதேனு பத்திரிகை தொடங்கப்பட்டபோது என்னை கிரைம் எழுதச்சொன்னார்கள். உடன் எழுதுகிறவர்கள் நாஞ்சில் நாடன், தமிழச்சி தங்கபாண்டியன். எம்மூவரையும் சமமாகத்தானே பார்த்தார்கள்? எங்கிருந்து வந்தது பல்ப்? இன்னும் இவர் எழுதுகிறாரே என்ற பொறாமைதான் இந்த விமர்சனத்துக்குக் காரணம். புதிய தலைமுறைக் கல்வியில் பல வாரங்களாக அறிவியல் கேள்வி பதில் எழுதிவருகிறேன். மாணவர்களும் ஆசிரியர்களும் தேடிவந்து பாராட்டுகிறார்கள். இதுதான் என்னைப் பொருத்தவரை சாகித்ய அகாடமி விருது.

நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளர் யார்?

 இதைச் சொல்ல வருத்தமாக இருக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தெரியவில்லை.

ஜனவரி, 2019.