சிறப்புப்பக்கங்கள்

என்னுடைய பணிகளை நான் பார்த்துக் கொள்வேன்! - ராஜா

ராஜா, பட்டிமன்ற பேச்சாளர்

திருமணம் என்பது இருவரின் பார்வையோடு தொடர்புடையது. கணவனின் வெற்றி மனைவிக்கு நிறைவைத் தருமா என்பதும், மனைவியின் நிறைவு கணவனுக்கு மகிழ்ச்சியைத் தருமா என்பதும் கேள்விக்குறி தான். தன்னுடைய இணை இதைத்தான் நினைக்கிறார் என்பதை புரிந்துகொள்பவர்களால் தான் திருமண வாழ்விற்குள் நீண்ட காலம் பயணிக்க முடியும்.

சேர்ந்து வாழ்தல் என்பது சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டிய ஒன்று.  முந்தைய தலைமுறை சகிப்புத்தன்மையுடன் இருந்தது. ‘அவர் அப்படித்தான், அவரை ஒண்ணும் செய்ய முடியாது‘ என பெண்கள் நம்பினர். ஆனால், இன்று அப்படியில்லை. ‘அவர் அப்படித்தான் என்றால் நானும் அப்படித்தான்‘ என நினைக்கின்றனர். இன்று நடக்கும் விவாகரத்துகள் நீயா  நானா என்ற போட்டி மனப்பான்மையில் நடக்கிறது. விவாதங்கள் வெற்றி பெறும் போது உறவுகள் துண்டிக்கப்படுகின்றன.

பொதுவாக பிரபலங்களின் வாழ்க்கையில் யாரேனும் ஒருவர் அனுசரித்து போவதால் தான், அவர்களின் வாழ்க்கை சுமுகமாக செல்கிறது.  என் மனைவி லீலா மிகவும் அனுசரித்துச் செல்கிறவர்.

 திருமணமாகி  இந்த முப்பத்து ஒன்பது வருடங்களில் என் மனைவிக்குப் பிடித்த விஷயங்கள் எதாவது நான் செய்கிறேனா என்று தெரியவில்லை. அவர் தான் என்னை அனுசரித்துக் கொள்கிறார். ஆண்கள் வெளியே சுற்றும் குடும்பங்கள் இப்படித்தான் இருக்கும். பெண் முரண்பட்டார்கள் என்றால், ஆண்களால் வெளியே சுற்ற முடியாது. யாராவது ஒருவர் குடும்ப பாரத்தை தாங்க வேண்டும் அல்லவா! பொதுவாக என்னுடைய பணிகளை நான் பார்த்துக் கொள்வேன். எனக்கான குறிப்புகள், துணி மணிகள் போன்றவற்றை நானே எடுத்து வைத்துக் கொள்வேன். இந்த சுமையை அவர் மீது வைக்க மாட்டேன்.

சகித்துப் பொறுத்துப் போகிறவர்கள் நிலைத்து வாழ்வார்கள். நீயா  நானா என போட்டிப் போட்டு வாழ்க்கையை நடத்தினால் வாழ்க்கை சிக்கல் தான்.

ஆகஸ்ட், 2022