சிறப்புப்பக்கங்கள்

என் மானசீக குரு சோ!

தா.பிரகாஷ்

சபா நாடகங்களின் வழியே தனக்கென தனி முத்திரை பதித்தவர். பல்துறை வித்தகர் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட எஸ்.வி.சேகரை அவரது வீட்டில் அந்திமழைக்காக சந்தித்துப் பேசினோம். பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு இது:

ரேடியோ கூத்தபிரான் அண்ணா மூலமாக வேப்பம் பூ பச்சடி என்ற ரேடியோ நாடகத்தில் நடித்த போது, எனக்கு வயது பத்து. அதே வயதில், மேடையில், துப்பறியும் சாம்பு நாடகத்திலும் நடித்தேன். அதேபோல், பதினெட்டாவது வயதில், கோவை மத்திய சிறைச்சாலையில் நடந்த நாடகத்தில், மேக்கப் போட்டு, பொட்டு வைத்து, முதலில் நடிகராக்கியவர், நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் தான். அது ஒரு நல்ல அனுபவம்.

என் அப்பா எஸ்.வி.வெங்கட்ராமன்,சித்தப்பா எஸ்.வி.

சங்கரன் இருவரும் மிகப்பெரிய கலைஞர்கள்.

சோவின் முதல் இரண்டு நாடகங்களை அப்பாதான் இயக்கினார். சித்தப்பா, சோவின் விவேகா பைன் ஆர்ட்ஸ் கிளப்பின் மேடை இயக்குநராக பணியாற்றினார்.

அப்பாவின் குழுவில் பணியாற்றியது, கோபாலகிருஷ்ணன் நாடகத்தில் நடித்தது போன்றவைகள் தான் எனக்கும் நாடகத்துக்குமான உறவு ஏற்பட காரணம் என்று சொல்லலாம்.

 தனியாக நாடகப் பிரியா என குழு ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தாலும், அதற்கான பொருளாதார பலம் இல்லாமல் இருந்தது. நாமே ஆளுக்கு ஐந்து ரூபாய் போட்டு ஆரம்பித்து விடுவோம் என்று முடிவு செய்து, ஆளுக்கு ஐந்து ரூபாய் போட்டோம். நண்பரான கமல்ஹாசனும், ஐந்து ரூபாய் கொடுத்தார். நாடகம் போட ஆரம்பித்து, எட்டு மாதத்திற்குப் பின், எல்லோருக்கும் அந்த ஐந்து ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டது. இப்படி தான் நாடகப்பிரியா குழு ஆரம்பிக்கப்பட்டது. குழு ஆரம்பிக்கும் போது சுந்தா, குருமூர்த்தி,ஜோசியர் சீனா ஆகியோரும் உடனிருந்தனர்.

பல முக்கியமான கதாசிரியர்கள் கிரேசி மோகன், கோபு&பாபு, கிருஷ்ணகுமார், எல்.கணபதி, ஜி.கே.கோபிநாத், நிலா என்ற கோவி கோவன் ஆகியோரையும் நான் தான் அறிமுகப்படுத்தினேன்.

சோ சார் தான் என்னுடைய மானசீக குரு. அவரது அரசியல் நையாண்டி எனக்குப் பிடிக்கும். அதைத்தான் என்னுடைய நாடகங்களிலும் நான் பின்பற்றுகிறேன். அதேபோல், என்னுடைய அப்பாவிடமிருந்தும் பலவற்றைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அப்பா நடத்திவந்த ‘கற்பகம் கலாமந்திர்' என்ற நாடக நிறுவனத்தில் ஆரம்பத்தில் மேடை உதவியாளராகப் பணிபுரியத் தொடங்கினேன்.

ஆரம்பக் கல்வியை தஞ்சாவூரில் படித்தேன். பிறகு திருவல்லிக்கேணியிலுள்ள இந்து மேல்நிலைப்பள்ளி.  அடுத்து மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.மேல் நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, நாடகங்களின் மீது ஈடுபாடு ஏற்பட்டது. அப்பாவுடன் சேர்ந்து அவ்வப்போது ஒரு சில நாடகப் பணிகளை மேற்கொண்டு வந்தேன். நாடகம் எனக்குள் இயல்பாக வந்த கலைவடிவம். அதை இன்றளவும் விரும்பி செய்கிறேன். அப்பாவிடமிருந்து ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு போன்றவற்றைக் கற்றுக் கொண்டேன். எனக்கு குடிப்பழக்கமோ அல்லது வேறு எந்த போதைப் பழக்க வழக்கங்களோ கிடையாது. இந்த நல்ல பழக்கத்தை என்னுடைய குழுவில் உள்ள கலைஞர்களும் பின்பற்றுகின்றனர். ஒழுக்கத்துடன் இருப்பது மிக முக்கியமானது.

என்னுடைய நாடகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகளைக் கொண்டிருக்கும். அவன் ஒரு தனிமரம், கண்ணாமூச்சி, திரும்பி வந்த மனைவி, கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், மகாபாரதத்தில் மங்காத்தா, சாதல் இல்லையேல் காதல், காதுல பூ, ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, வால் பையன், எல்லாமே தமாஷ்தான், எல்லோரும் வாங்க, அதிர்ஷ்டக்காரன், யாமிருக்க பயமேன், பெரிய தம்பி, சின்ன மாப்பிளே பெரிய மாப்பிளே, எப்பவும் நீ ராஜா, தத்துப்பிள்ளை, அல்வா, பெரியப்பா, குழந்தைசாமி மற்றும் மெகா வசூல் என மொத்தம் இருபத்து நான்கு நாடகங்களை இயக்கியுள்ளேன். இவை 6,500 முறை மேடையேறி இருக்கிறது. ஒரு நாடகம் சமூக விழிப்புணர்வைப் பற்றிப் பேசினால் மற்றொரு நாடகம் சுற்றுச்சூழல் பிரச்னையைப் பற்றிப் பேசும். இப்படி வெவ்வேறு கதைக்களத்தைக் கொண்டிருக்கும்.

தமிழகத்தில் சபா நாடகத்தின் வளர்ச்சி எப்படி இருக்கின்றது என கேட்டால், மிக மோசமான நிலையில் உள்ளது என்றே சொல்லமுடியும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போது இரண்டு கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்தேன்.நாடக கலைஞர்கள் அரசு பஸ்களில் பயணம் செய்ய 50 சதவீத கட்டணச் சலுகை, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாடகம் நடத்த 50 சதவீத கட்டணச் சலுகை வழங்குவது தான் அந்த கோரிக்கை .அடுத்த மூன்று நாட்களிலேயே அதை அரசாணையாகவும் வெளியிட்டார்.

அதேபோல், சபா நாடகங்கள் என்றாலே ஒரு சமூகத்திற்கு உரியதாகவே பார்க்கப்படுகிறது. இது துரதிர்ஷ்டவசமானது. சபா நாடகங்களுக்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இதனால், சபா நாடகங்களுக்குத் தனியாக நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. இந்தப் பார்வை மாற வேண்டும்.

 மைலாப்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒரே ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியது கிடையாது. இருப்பினும் அரசியலில் சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. இனி அரசியலில் தொடரலாமா வேண்டாமா என்று யோசிக்க ஆரம்பித்துள்ளேன். உலக அளவில் எனக்குப் பிடித்த தலைவர் என்றால், மோடி தான். என்னை நண்பரே என்று அழைத்தவரும் அவரே.

எனக்கு வயது எழுபத்து ஒன்று. என்னுடைய பேத்திக்கு வயது ஏழு. நான் சொல்லும் நகைச்சுவைகளுக்கு அவள் விழுந்து விழுந்து சிரிப்பதை தான் வெற்றியாக கருதுகிறேன். அதேபோல், நண்பர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பாக அழைத்து, அவருடைய பேரனும் என்னுடைய நகைச்சுவையை ரசித்துச் சிரிப்பதாக சொன்னார். தலைமுறைகள் கடந்தும் ரசிக்கப்படுவதுதான் அங்கீகாரம்!

அக்டோபர், 2021