சிறப்புப்பக்கங்கள்

என் படங்கள் சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பே!

Prakash

தஞ்சை வட்டாரத்தின் நிலவியலை அதன் பசுமையோடு திரையில் காட்டுபவர் இயக்குநர் சற்குணம். களவாணி, வாகை சூட வா போன்ற  படங்களால்  அசத்திய இவரது ஐந்தாவது படமான ‘பட்டத்து அரசன்' இப்போது வெளியாகி இருக்கிறது. அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.

‘ஒரு முறை, எங்கள் கிராமத்திற்குச் சென்றிருந்த போது, கபடிப் போட்டியில் வித்தியாசமான அணி ஒன்று களமிறங்கியது. அந்த அணியில் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இது தான் ‘பட்டத்து அரசன்' திரைப்படம் உருவாகக் காரணம்,' என படம் குறித்த சிறு அறிமுகத்துடன் பேச்சைத் தொடர்ந்தார் சற்குணம்.

 ‘தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பலாப்பட்டு ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கிராமம். அங்கு தான் பிறந்து வளர்ந்தேன். மற்ற கிராமங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்னுடைய கிராமம். ஒரு தலித்தின் பெயரில் பூங்கா திறந்தது எங்கள் கிராமத்தில் தான்.இதை எங்கேயும்நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தலித்துகளுக்கும் மற்றசாதியினருக்குமான உறவே மாமான் மச்சான் உறவு தான். சாதியத்திற்கான அடையாளமாக அங்கு எதையுமே பார்க்க முடியாது.சாதிக் கட்சிகளின் கொடிகளைத் தலித்துகளோ முக்குலத்தோரோ ஏற்றியதில்லை. அதற்குக் காரணம் கம்யூனிசம். தஞ்சைப் பகுதியில்விவசாய சங்கம் உருவாக்கியபோது, மிக முக்கியமான கிராமமாக இருந்தது எங்கள் ஊர். ஜமீன் ஒழிப்பின் போது அனைத்து சாதியினரும் ஒன்றாக சென்றுதான் ஜமீன் வீட்டில் கொள்ளையடித்தார்கள். அப்படி ஒரு வரலாற்றை சுமந்த ஊர்.

‘எங்கள் கபடிக் குழுவின் தலைவர் கண்ணன். அவர் ஒரு தலித். எங்கள் கிராமத்தில் நூறு சதவீதம் பாகுபாடு ஒழிந்துவிட்டது என்று சொல்லமாட்டேன். ஆனால் அங்கு ஒருவித சகோதரத்துவம் நிலவுகிறது,' என்றவரிடம் ‘உங்களை நீங்கள் எப்படி அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள்?' என்றோம்.

‘முப்பத்தைந்து கிலோ எடைப் பிரிவிலிருந்து கபடி ஆட ஆரம்பித்த என்னை, கபடி வீரராகவே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். கபடி தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டு.

ஒரு முறை புலவன்காடு என்ற ஊரில், நாற்பத்தைந்து கிலோ எடைப் பிரிவுப் போட்டியில் கலந்து கொண்டு, எங்கள் கபடி அணி முதல் பரிசு பெற்றது. அதில் கிடைத்த ஐந்நூறு ரூபாய் எடுத்துக் கொண்டு பட்டுக்கோட்டை சென்றோம். நாதன் ஸ்டுடியோவில் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு, சோலை மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு, அன்னபூர்ணா தியேட்டரில் ‘வால்டர் வெற்றிவேல்‘ படம் பார்த்துவிட்டு ஊர் வந்து                                                                                                                                                                                                                                                                                                                      சேர்ந்தோம்.சிறு வயதில், படிப்பைத் தவிர மற்ற விஷயங்கள் மீதே ஆர்வம் அதிகம். கபடி ஆடப்போவது, மீன் பிடிக்கச் செல்வது என ஊர் சுற்றியாக இருந்தாலும், இன்னொரு பக்கம், ரஜினி ரசிகர் மன்ற தலைவர், வார்டு உறுப்பினர், இளைஞர் பெருமன்றத்தின் துணைத் தலைவர் என பொறுப்புள்ள ஆளாகவும் இருந்திருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தலில் வார்டு மெம்பருக்குப் போட்டியிட்ட போது கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதைத் தவிர்க்க முடியவில்லை.

அதேபோல், பள்ளிக்கூட நாட்களில் எந்த போட்டியிலும் கலந்து கொண்டதில்லை. பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்ததும் ஐடிஐ சேர்ந்தேன்.அப்போது தான் பேச்சுப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன். பின்னர், ஐடிஐ-லிருந்தே மாவட்ட அளவில் நடந்த பேச்சுப் போட்டிக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு விவேகானந்தர் பற்றிப் பேசினேன். மாவட்டம் முழுவதிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்ததால் ‘நமக்கு எங்கு பரிசு கிடைக்கப் போகிறது?' என வந்துவிட்டேன். மறுநாள் ஐடிஐ-க்கு சென்ற போதுதான் சொன்னார்கள், எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது என்று. அது ஒரு பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது. பின்னர் ஐடிஐ-யில் நடந்த எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு பெற்றிருக்கிறேன்.

இயக்குநர் பாக்யராஜ் நடத்திய ‘பாக்யா‘ இதழுக்கு அட்டைப் பட கவிதை எழுதி அனுப்பியிருக்கிறேன். ஆனால், எந்தக் கவிதையும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. என்னை சினிமாவிற்கு வரவைத்த திரைப்படங்கள் என்றால், அது கதிரின் ‘இதயம்', விக்ரமனின் ‘நான் பேச நினைப்பதெல்லாம்' படங்கள் தான். சென்னை வந்து உதவி இயக்குநராகச் சேர்வதற்கு எட்டு வருடங்கள் ஆனது.

பத்து இயக்குநர்களின் பெயர்களை எழுதி வைத்துக் கொண்டு, ஒவ்வொருவராக சென்று சந்திப்பேன். யாரிடமாவது வாய்ப்பு கிடைக்காது என்று உறுதியானால், அந்த பட்டியலில் வேறு ஒரு இயக்குநரின் பெயரை சேர்த்துக் கொள்வேன். அகத்தியன், பிரபுசாலமன், சசி, கதிர், விக்ரமன், எஸ்.ஜே.சூர்யா, சுசி கணேசன், பாலுமகேந்திரா போன்றவர்களிடம் உதவி இயக்குநராக சேர்வதற்கு முயற்சித்திருக்கிறேன்.இறுதியில் எங்கள் ஊர்க்காரர்களான பஞ்சநாதன், சீனாதானா ஆகியோரின் உதவியால் ஏ.எல்.அழகப்பன் சாரின் தொடர்பு கிடைத்தது. அவர், வசனகர்த்தாவான கலைமணி சாரிடம் உதவியாளராக சேர்த்து விட்டார். அப்போது அவர் ‘ஷக்கலக்க பேபி‘ படத்திற்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார். அந்த படத்தின் கதை விவாதத்திலும் பங்கேற்றேன். கலைமணி சாரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

மீண்டும் அழகப்பன் சாரை சந்திக்க வந்தபோது, அவர் நெப்போலியன் நடித்த ‘கலகலப்பு' (2001)படத்தைத் தயாரிக்கும் பணியில் இருந்தார். அந்த படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். அதன் பிறகு, ஏ.எல். விஜய் சாரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அவர் இயக்கிய முப்பதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் வேலைப் பார்த்தேன். அவர், அஜித்சாரை வைத்து இயக்கிய ‘கிரீடம்' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினேன். அதில் ராஜ்கிரண் சாரும் நடித்திருந்தார்.

சென்னைக்கு வந்ததும் வடபழனி முருகன் கோயிலுக்குப் பின்புறம் உள்ள அழகிரி நகரில் தங்கினேன். பிறகு கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி, முகப்பேர், அண்ணா நகர்,சாலிகிராமம் என ஒரு ரவுண்ட் அடித்து மீண்டும் வடபழனி முருகன் கோயிலுக்கு எதிரில் வந்து தங்கினேன். அப்போதுதான் முதல் படமான ‘களவாணி' எடுத்தேன். இப்போது நினைத்தாலும் அந்த நிகழ்வு ஆச்சரியமாக இருக்கும்.

களவாணியைக்கதையாகஎழுதவில்லை. அது சுவாரஸ்யமான காட்சிகளின் தொகுப்பு. காட்சிகளைக் கோர்க்கும் போது ஒரு கதாபாத்திரம் தேவைப்பட்டது, அது தான் விமல் நடித்த கதாபாத்திரம். அதை மையப்படுத்தி எடுத்ததுதான் களவாணி திரைப்படம்.

நாம் இன்று மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து விட்டோம். ஆனால், 1960களில் அப்படி இல்லை. அந்தக் காலகட்டத்தில் நடக்கக் கூடிய கதை தான் ‘வாகை சூடவா‘. செங்கல் சூளையை மையப்படுத்திய கதை என்று சொல்வதை விட குழந்தை தொழிலாளர்களைப் பற்றிய படம் தான் அது. அந்த படத்திற்கு லொக்கேஷன் கிடைப்பது தான் பெரிய சவாலாக இருந்தது. கமுதி அருகே, காணா விளக்கு ஊரில்தான் முழுப் படப்பிடிப்பும் நடந்தது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, ஜிப்ரான் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தது.

படம் எடுக்கும் போதே ‘இந்தப் படத்துக்கு நிச்சயம் விருது கிடைக்கும்' என்றார்கள். அவர்களின் வாய் வார்த்தை பலித்தது. படம் பார்த்துவிட்டு பாரதிராஜா சார், ‘டேய் உனக்கு இது ரெண்டாவது படம் தானே இது?. இப்படி எடுத்து வச்சிருக்கீயே. தூக்கமே வரலடா' என்றார். ‘தண்ணீர் கலக்காத பால்'என்றார் பாலுமகேந்திரா சார். சினிமா துறையை சேர்ந்தவர்கள், ஊடக நண்பர்கள் எல்லோரும் பாராட்டினார்கள். பல பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டையும் விருதையும் பெற்றது. அந்தப் படத்திற்குப் பிறகு, எனக்கு நல்ல மரியாதை கிடைத்தது.

செஞ்சியைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற தம்பி, இன்று வரை படத்தைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார். இதை அந்தப் படத்துக்குக் கிடைத்த முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.

அடுத்த படம் நய்யாண்டி, தனுஷை வைத்து எடுத்தேன். பெரிய நாயகர்களின் தேதி கிடைப்பதற்குக் காத்திருக்க வேண்டும் என்பதால் நய்யாண்டி வருவதற்குக் கொஞ்சம் தாமதமானது.

நான் சின்ன பையனாக இருந்த போது, எங்கள் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் சண்டை. இதில் அருவா எடுத்துச் சென்ற நபர்களில் நானும் ஒருவன். ஊரின் பெரிய மனிதர்கள் அதைத் தடுக்க நினைத்தார்கள். அங்கிருந்துதான் ‘சண்டிவீரன்' கதை தோன்றியது. ஒளிப்பதிவுக்காகச் செழியனிடம் இக்கதையைக் கூறினேன். அவர்தான் இந்தக் கதையைப் பாலா சாரிடம் கூறியுள்ளார். பின்னர், அவரை சந்தித்துப் பேசினேன். படத்தின் கதையைக் கேட்டு விட்டு, இதில் நாயகன் வேடத்தை யார் செய்தால் நன்றாக இருக்கும் என்றார். அதர்வா செய்தால் நன்றாக இருக்கும் என்றேன். உடனே அதர்வாவுக்கு போன் செய்து, ‘டைரக்டர் சற்குணம் வருவாப்ல, கதை சொல்வாரு, கேட்டுக்கோ‘ என்றார். அதர்வாவுக்கு கதை பிடித்திருந்ததால் படத்தின் பணிகள் உடனே தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், எடுத்தவரை படத்தைப் பார்க்கிறீர்களா என்று பாலா சாரிடம் கேட்டேன். ‘முழுப் படத்தையும் முடி, முதல் பிரதியை பார்க்கிறேன்' என்று கூறிவிட்டார். படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘தாய்ப்பாலும் தண்ணீரும்' பாடல் பெரிய அளவுக்குப் பேசப்பட்டது. சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் சார் கூட அந்தப் பாடலை ட்வீட் செய்திருந்தார். தண்ணீர் பிரச்னைக்கான பாடலாக அது மாறியிருக்கிறது.‘வாகை சூடவா' படத்திலிருந்து என்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராகவன் ஒரு நல்ல கதை எழுதி வைத்திருப்பதாக கேள்விப்பட்டு அவனிடம் கதையைக் கேட்டேன். அந்த கதையைக்  கேட்ட ராஜ்கிரண்சார் நடிக்க சம்மதம் தெரிவித்தார். என்னுடைய தயாரிப்பு என்றதும் விமலும் நடித்தார். அதுதான் மஞ்சப்பை படம்,' என்றவரிடம் சொந்த வாழ்க்கை பற்றி கேட்டோம்.

‘எனக்கு பெண் பார்த்த போது, ஆனந்த விகடனில் வந்த போட்டோவைத்தான் கொடுத்து அனுப்பினேன். பெற்றோர் தான் எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். மனைவி பெயர் சரண்யா. யாழ்வர்மன், ஆதித்திய வர்மன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்,' என்றவரிடம், உங்களின் அடுத்த படைப்பு எதைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் என்றோம்.

‘இப்போது சென்னையில் இருந்தாலும் ஊரில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதிலும் பங்கேற்கிறேன். அதுவே என்னை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. அதனால், மண்சார்ந்த படைப்புகளாகவே என்னுடையது இருக்கும்.சொல்லப்போனால், என்னுடைய எல்லா திரைப்படங்களும் என் சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பே,' என்று கூறி நேர்காணலை நிறைவு செய்தார்.

டிசம்பர், 2022