ஓவியம் டிராட்ஸ்கி மருது
சிறப்புப்பக்கங்கள்

எனக்குப் பிடித்த குறள்

Staff Writer

தமிழின் பெருமைகளில் ஒன்றாக நிலைப்பது திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகளாக அது நிலைத்து நிற்பதற்கும் தொடர்ந்து வாசிக்கப்படுவதற்கும் அதில் இருக்கும் மனிதகுலத்தின் இறுதிவரைக்கும் பொருந்தக் கூடிய கருத்துகளே காரணம். வெறும் கருத்துகளாக இல்லாமல் காவியச் சுவையுடன் கூடிய படைப்புமுறை குறளை ஒரு இலக்கியப் படைப்பாகவும் திகழச்செய்கிறது. இந்த இதழில் பல்வேறு அறிஞர்கள் தங்கள் பார்வையில் குறளைப் பற்றிய கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள்.

அத்துடன் எனக்குப் பிடித்த குறள் என்ற தலைப்பில் பல பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். இப்பகுதியில் குறள்களுக்குப் பொருள் சொல்ல, மு.வ. அவர்களின் உரை பயன்படுத்தப் பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

 கருதி இடத்தாற் செயின்.

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால் உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

நடிகர் சிவக்குமார்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையால்.

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

நல்லி குப்புசமி செட்டியார்

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்

மெய்வருத்தக் கூலி தரும்.

ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

இரா.பார்த்திபன்

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.

தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவார்.

காலச்சுவடு கண்ணன்

அகலாது அணுகாது தீக்காய்வர் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழு குவார்.

அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர் அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்கவேண்டும்.

கவிஞர் பழனிபாரதி

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்.

மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம்போல் கூர்மையான அறிவு உடையவரானாலும் ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.

தொல்.திருமாவளவன்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி

தாழாது உஞற்று பவர்.

சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.

பேராசிரியர்.கு.ஞானசம்பந்தன்

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.

என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு தானே முன்வந்து துணைசெய்யும்.

ஜனவரி, 2015.