சிறப்புப்பக்கங்கள்

எனக்கு அர்த்த நாரீஸத்தில் நம்பிக்கை இல்லை! - கலாப்ரியா

கலாப்ரியா

யாரும் தெரிந்தே எந்தப் பொருளையும் தொலைக்க முடியாது. ஆனால் புரிந்து கொள்ளலின் குறைபாடுகளைக் களையத் தவறுவதன் மூலம் இருவர் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கலாம்.   அதே சமயம் யாரும் வாழ்க்கையை நூறு சதவிகித முன் தீர்மானங்களுடன் வாழ்ந்து விட முடியாது.

தீர்மானங்களையும் திட்டங்களையும் சிதைத்து விடும் எந்த நிகழ்வும் அதன் இயற்கைப் போக்கிலேயே நிகழும். நம் விருப்பப்படி நிகழ்வதில்லை. திருமணம் என்பதும் அப்படியான ஒன்றுதான். அவரவர்களுக்கான பல ஃப்ளாஷ்பேக்குகளுடன் தான் இரு உயிர்களின் ஒன்றிணைவும் திருமண உறவில் ஒன்று கலக்கின்றன. இந்த முன் நடந்த நிகழ்வுகள், காலிப்பெருங்காய டப்பா வாசனை போன்ற பெருமை பீற்றல்கள், பல விடலைப் பருவக் கோளாறு (Adolescence) அல்லது அறியாமை காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.  இளம் பிராயத்தில் மட்டுமல்ல நல்லது கெட்டது தெரிந்த பின்னும் சபலங்கள் சறுக்கல்கள் இல்லாத மனிதரென்று எவரும் இருக்க முடியாது. இதையெல்லாம் சொல்லக் காரணம் இவற்றினால் இல்லற வாழ்வில் உரசல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்ற புரிதல் வேண்டும் என்றே.

வசந்த மாளிகை படத்தில் ஒரு வசனம் வரும் ‘சின்ன எஜமான் கெட்டுப்போய்ட்டாரே தவிர கெட்டவர் இல்லைம்மா' என்று வாணிஸ்ரீயிடம் வி.எஸ்.ராகவன் சொல்லுவார். இது அப்போது எங்களால் காமெடியாகக் கூடப் பார்க்கப்பட்டது ஆனால் ஒரு சீரியஸான விஷயமாக இப்போது தோன்றுகிறது. இது ஆண்களுக்கே அதிகமும் பொருந்தும். அதனால் இதை ஒரு சுய வாக்கு மூலமாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். எங்கள் தலைமுறைப் பெண்களுக்கு பல சமூகத் தடைகள் உண்டு. (இப்போதும்தான்).  அதனால்  அவர்கள் மீது கணவர்கள் பெரிதாகக் குற்றம் சுமத்தி தங்கள் மைனஸ் பாயிண்டுகளை மறைத்துக் கொள்ள முடியாது.

யாரும் யார் மீதும் இப்படிக் குற்றம் சுமத்துவதால் பயன் ஏதுமில்லை, குற்றங்கள் செய்யாமலிருப்பதோ அல்லது அது தொடராமல் நிறுத்தப்படுவதோ நல்லது என்று இருவரும் புரிந்து கொள்வது ஒரு வகையில் சம்சாரப் பயணம் எளிதாகச் செல்ல உதவும். இது முழுக்க முழுக்க ஆண்மையப் பார்வைதான். உண்மையில் இதில் நாம் பெண்கள் பக்கத்துக் கருத்தை அதிகம் கேட்க வேண்டும், பதிவு செய்ய வேண்டும் என்று நான் சொல்லுவேன். உண்மையில் இந்தக் கட்டுரையை  என் மனைவியை எழுதச் சொல்லியிருக்கலாம்.

நீண்ட இல்லறம் என்று வருகையில் அது இருவர் மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல. அது குடும்பம் என்று நீட்சி பெற்று விடும். குடும்பம் என்னும் போது குழந்தைகளின் நலன் அவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்ற புரிதலையும் வேண்டி நிற்கிறது, அல்லது நடக்கிறது.  ஒரு கால கட்டத்திற்குப் பின் அவர்கள் நலன் கருதி நம் தேவைகளைக் குறைத்து பிணக்குகளைத் தவிர்த்து விடலாம். ‘இல்லற வாழ்க்கையில் ‘தாம்பத்யம்' என்பது பிணக்குகளை வேரறுக்க இயற்கை உண்டாக்கி வைத்திருக்கும் ஒரு அருமையான ஏற்பாடு,' என்பது போல ராஜாஜி அவர்கள் ஒரு விஷயம் சொல்லுவார். அதில் உண்மையிருக்கிறது. அந்த அற்புதத்தை அசைக்கிற வகையில் ஏதும் நிகழாதிருப்பது நல்ல இல்லறத்திற்கு நிச்சயம் வழி வகுக்கும்.

என்னைப் பொறுத்து, கி.ராஜாநாராயணன் மாமா ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார், ‘வேய் மருமகப்பிள்ளை உனக்கு வாய்த்திருக்கும் வீட்டம்மா கணவதி அத்தையைப் போல அமஞ்சிருக்கா. அதனால் எல்லாவற்றையும் அவளிடம் ஒப்படைத்து விட்டு பேஷா, நீ எழுதுகிற காரியத்தை மட்டும் பார்' என்று. அதை எழுதி சுமார் நாற்பது வருடமிருக்கும். அதையே பின்பற்றுகிறேன். மாமா பாஷையில்  சொன்னால் அது,  ‘சௌரியமாவும்' இருக்குங்கிறதுதான் மறுக்க முடியாத உண்மை.

இப்ப முகநூலில் பலரும் தங்கள் மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கையில் ‘வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்' என்று கண்ணதாச வரிகளைக் கடன் வாங்குகிறார்கள். இதுல முக்காலே மூணு வீசம் பொய் என்றாலும் உண்மைன்னு எடுத்துக்கிட்டு ஏமாந்த மாதிரி இன்னும் இருக்கிற வாழ்க்கையைக் க(ழி)ளிப்பதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன்.

எனக்கு ‘ஆண் பாதி பெண்பாதி நின்றானவன்' என்கிறஅர்த்த நாரீஸத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. கணவன் மனைவி இருவரும் தீர்மானமான வேற்றுமைகள் உள்ள இரண்டு உடல்கள்,  உயிர்கள். ஆனால் அந்த வேற்றுமைகள் அகங்காரங்களைக் களைந்து விட்டு ரெண்டு பேரும் மனதளவில் சமம்ன்னு நினைச்சா வாழ்க்கை நல்லாவே இருக்கும். ‘வண்டி ஓடச் சக்கரங்கள் இரண்டு மட்டும் தேவை- அந்த இரண்டிலொன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்'- என்று கண்ணதாசன் பாடவில்லையா. இதையெல்லாம் நான் கொஞ்சமாவது பின் பற்றுவதாக நினைக்கிறேன். ஆனால் நிச்சயம் என் மனைவி முழுதாகவே உணர்ந்திருக்கிறார். அந்த உணர்தல்தான் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் பரிவுடன் ஊட்டுகிறது.

ஆகஸ்ட், 2022