சிறப்புப்பக்கங்கள்

எதிரியின் தலைநகருக்குள் புகுந்த பல்லவன்

வாதாபிப்போர்

நா.மார்க்சிய காந்தி

வரலாற்றில் சில போர்கள் பெரிதும் புகழ்ந்துரைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றே பல்லவர் காலத்து வாதாபிப் போர். பல்லவர்களும் சாளுக்கியரும் நேரெதிர் நின்று போர் புரிவது புதிதல்ல. முதலாம் மகேந்திர வர்மன் காலத்தில் (கி.பி 590 -630) முதலாம் புலிகேசியுடன் காஞ்சிக்கருகில் உள்ள புன்னலூரில் பெரும் போர் நடந்தது. இப்போரில் மகேந்திரன் வென்றதாக கசாக்குடிச் செப்பேடும், புலிகேசி வென்றதாக மரூட்டூர்ச் செப்பேடும் கூறுகின்றன. இவையிரண்டையும் ஆய்கையில் புலிகேசி பல்லவர் தலைநகரம் வரை முன்னேறி வந்துள்ளான் என்பதும், மகேந்திரனால் விரட்டப்பட்டான் என்பதும் தெரிகிறது. புலிகேசி காஞ்சியைப் பிடிக்கவில்லை என்றாலும் பல்லவர் பகுதிகள் சிலவற்றைப் பிடித்திருத்தல் வேண்டும்.

இவனை அடுத்து வந்த  முதலாம் நரசிம்மவர்மன் மீண்டும் புலிகேசியுடன் மோதினான். இவனது வெற்றிப்போர் சாளுக்கிய மன்னர்களின் தலைநகரான வாதாபியிலேயே நடந்தது. இவ்வெற்றியை கொண்டாடி, அவன் ‘வாதாபி கொண்ட நரசிம்மன்’ என்றும் ‘வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரசன்’ என்றும் பட்டம் தரித்துக் கொண்டான். திருக்கழுக்குன்றம் மலையின் மீது பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும், ஒரு கல் மண்டபத் தூணின் தலைப்பகுதியில் உள்ள கல்வெட்டும் இவனை இப்பெயரால் குறிப்பிடுகின்றன.

நரசிம்மனின் இப்போர் பல இடங்களிலோ, அல்லது பலமுறையோ நடந்திருக்க வேண்டும். கூரம், உதயெந்திரம் செப்பேடுகள், ‘பரியளம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய போர்க்களங்கள் ஒவ்வொன்றிலும் புறமுதுகு காட்டி ஓடிய புலிகேசியின் முதுகாகிய பட்டயத்தில் வெற்றியைக் குறிக்கும் எழுத்துக்களை எழுதியவன்’ என்று  இவனைக் குறிக்கின்றன. கலசத் தில் தோன்றிய அகத்தியரைப்போல (அவர் வாதாபி என்னும் பெயருடைய அசுரனை வென்றார்) நரசிங்கனும் வெற்றி பெற்றான் என்கின்றன. காசாக்குடிச் செப்பேடோ, எதிரி அரசர்களின் கூட்டங்களை நாசம் செய்யும் வால்நட்சத்திரம் ஆனவனும், வாதாபி என்ற நகரத்தை வெற்றி கொள்வதில் அதே பெயர் கொண்ட அசுரனை  ஜெயித்தவரான கும்பத்தில் தோன்றிய அகத்தியரைக் காட்டிலும் வேகமுள்ளவனும், வெற்றி வீரனுமான நரசிம்மன் என்று பாராட்டுகிறது.

வாதாபியை வெற்றி கொண்டு, அவ்வூரின் நடுவே நிலையாக நின்ற வெற்றித் தூணை நரசிம்மன் அகற்றித் தன்னாட்டுக்குக் கொணர்ந்தான் என்று வேலூர் பாளைய செப்பேடு கூறுகிறது. மகேந்திரன் காலத்தில் பல்லவர் பகுதிகளைக் கைப்பற்றிய புலிகேசி தன் பல்லவ வெற்றியைப் பொறித்துத் நிறுவிய வெற்றித்தூணாக அது இருக்கலாம். நரசிம்மன் வாதாபி நகர் வெற்றியைப் பறைசாற்றும் வகையில், அங்குள்ள இயற்கையான பாறையொன்றின் மீது தன் கல்வெட்டினையும் பொறித்து வைத்தான். இன்றும் வாதாபியில் மல்லிகார்ஜுன தேவர் கோயிலுக்குப் பின்னால் உள்ள பாறையில் நரசிம்ம வர்மனின் சமஸ்கிருத கல்வெட்டு காணப்படுகிறது.

வாதாபி வெற்றிக்கு முன்னரே மேற்கூறிய பரியளம், மணி மங்கலம், சூரமாரம், ஆகிய இடங்களில் நிகழ்ந்த போர்கள் நடந்திருக்க வேண்டும். பரியளமும், சூரமாரமும், வாதாபியிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வரும் இரு வழிகளிலும் அமைந்துள்ளன. பரியளம் கிழக்குப் புற வழியிலும், சூரமாரம் மேற்குப் புற வழியிலும் அமைந்துள்ளன. எனவே பல்வேறு வழிகளிலும்  வழி நெடுக போர்கள் நடந்திருக்கின்றன என்பது உறுதி. இறுதி வெற்றி தலைநகர் வாதாபியில் கிடைத்தது.

புலிகேசி சாதாரண வீரனல்ல. அவனை அவன் நாட்டிலேயே அதுவும் அவன் தலைநகரிலேயே வெற்றி கொண்டான்  நரசிம்மன். வாதாபி நகரம் சமதளப்பகுதியில் அமைந்தது அல்ல. குன்றுகளும் பாறைகளும் நிறைந்த பகுதி.  எந்தப் பாறைக்கும் பின்னால் மறைந்து நின்று, பகைவரைக் கொல்வதற்கு ஏற்ற பகுதி. அப்படியிருந்தும் வேற்று நாடான காஞ்சியிலிருந்து சென்ற வீரர்கள் வல்லபப் படையை வெற்றி பெற்றிருக்கிறார்கள். அங்கு சென்று பார்க்கும் போதுதான், அவ்வெற்றியின் அருமை புலப்படும்!

வாதாபி போருக்குப்பின் பல ஆண்டுகள் புலிகேசியின் மகனான முதலாம் விக்கிரமாதித்தனால் வாதாபிக்குள் வரவே இயலவில்லை. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவனால் மீண்டும் வாதாபிக்கு வர முடிந்தது.

வாதாபிப் போருக்கு, நரசிம்மனுக்குத் தளபதியாய்ப் படை நடத்தி சென்றவர் பரஞ்சோதி. அவரே பின்னர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டரென பெயர் பெற்றவர். பல ஆண்டுகள் சாளுக்கியர்களை தலைதூக்க இயலாமல் செய்த வெற்றி அது. தருகிறது.

(கட்டுரையாளர் ஒரு தொல்லியலாளர்)

மே, 2015.