சிறப்புப்பக்கங்கள்

எண்ணூருக்கு எப்போது விடிவு?

பகத் சிங்

சில ஆண்டுகளுக்கு முன்பாக அந்த நகரில் இரண்டு பெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன. அவற்றை அங்கு வைக்கப்பட்டிருந்த ப்ளெக்ஸ் போர்டுகள் இவ்வாறு அறிவித்தன:

1 ‘‘ நகருக்கு முதல் பேட்ரோல் பங்க் கொண்டு வந்த மண்ணின் மைந்தனே''

2 ‘‘நகர மக்களின் நீண்ட நாள் கனவான ஏ.சி உணவகத்தை துவங்கிய எங்கள் அண்ணனே‘‘

இந்த சாதனை நிகழ்ந்தது  பின்தங்கிய ஒரு மாவட்டத்தின் கடைகோடி கிராமத்தில் இல்லை.   பெருநகர சென்னை மாநகராட்சியின் முதல் இரண்டு வார்டுகளை உள்ளடக்கிய சென்னை 600057 என்ற பின்கோடு கொண்ட எண்ணூர் நகரத்தில்தான் இது நடந்தது. 2011ஆம் ஆண்டு

சென்னை மாநகராட்சிக்கு மாறிய போதிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த வளர்ச்சியையும் எண்ணூர் பகுதியும் அது சார்ந்திருக்கும் கத்திவாக்கம் நகராட்சியும் பெறவில்லை. தாம்பரமும், வேளச்சேரியும், மடிப்பாக்கமும், திருவான்மியூரும், பூவிருந்தமல்லியும் அடைந்த வளர்ச்சி ஏன் எண்ணூரை அடையவில்லை?

வளர்ச்சிக்கு தொழில்வளர்ச்சிதான் முக்கியக் காரணம் என்றால் எண்ணூரை விட தொழிலில் வளர்ந்த இடம் இங்கே ஏது? இந்தியாவிலேயே கனரக வாகன உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் அசோக் லைலேண்ட், அதற்கான என்ஜின் பாகங்களை தயாரிக்கும் (இந்துஜா) எண்ணூர் பவுண்டரிஸ், தமிழக முதலீட்டாளர்களின் அடையாளமாக உள்ள முருகப்பா குழுமத்தின் பாரி உர தொழிற்சாலை, கொத்தாரி உர தொழிற்சாலை, ஐ.சி.ஐ. மருந்து தயாரிப்பகம், எண்ணூர் அனல் மின் நிலையம், மத்திய கனிம வள ஆய்வகம் என பல தொழில் நிறுவனங்கள் எண்ணூருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே வந்துவிட்டன.

அதன் அருகில் உள்ள திருவொற்றியூரில் எம்.ஆர்.எப் டயர்ஸ், விம்கோ தீப்பெட்டி தொழிற்சாலை, எவரெடி பேட்டரிஸ், கே.சி.பி சிமெண்ட்ஸ் என எண்ணிலடங்கா தொழில்õலைகள் உள்ளன. மணலியையும் சேர்த்தால் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே போகும். எண்ணூர் உப்பங்கழி ஆற்றை கடந்தால் எண்ணூர் துறைமுகம், எல் அண்ட் டி கப்பல் கட்டும் தொழிற்சாலை, கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் உள்ளிட்டு பத்துக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டுள்ளன.  ஆனால் இந்த தொழில் வளர்ச்சி ஏன் எந்த கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுவரவில்லை?

அரசு எப்போதாவது தவறி ஏதேனும் ஒரு நல்லதை செய்துவிட்டாலும், அதிகாரிகள் அது மக்களை அடையாமல் பார்த்துக்கொள்வார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு மாநகர போக்குவரத்து கழகத்தால் எண்ணூர் பணிமனைக்கு ஒதுக்கப்பட்ட புதிய பேருந்துகள், ஒரே ஒருநாள் மட்டுமே இவ்வழித்தடத்தில் இயக்கப்பட்டன. பிறகு மந்தைவெளி பணிமனையில் அவை ஒப்படைக்கப்பட்டு அதற்கு மாற்றாக இரண்டு பழைய பேருந்துகளை பெற்றுள்ளனர். மெட்ரோ ரயிலும் அப்படித்தான், முதல் கட்ட திட்டமிடலின் போது எண்ணூரில் இருந்து துவங்குவதாக இருந்த திட்டம், பின்னர் தென்சென்னைக்கு மட்டுமே உரியதாக மாறியது. பல போராட்டங்களுக்கு பின்தான் வடசென்னையின் எல்லையை எட்டிப்பார்த்தது. தங்கசாலை வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டது. இப்போது திருவொற்றியூர் வரை மெட்ரோ வரவிருக்கிறது. குப்பையை கொட்டக்கூட அது சென்னையின் முதல் வார்டான எண்ணூரை வந்தடையாது என்பதுதான் இங்கு எதார்த்தமான சூழல். 

ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் கொண்டாடப்படும் போதெல்லாம், இவங்க யாருக்கான சென்னையை கொண்டாடுறாங்க என்ற கேள்வியை எம்மால் கேட்காமல் இருக்க முடியாது.

ஆகஸ்ட், 2018.