சிறப்புப்பக்கங்கள்

எடும் எடும் எடும்!

கலிங்கப்போர்

டாக்டர்.ப.சரவணன்

முதல் குலோத்துங்க சோழன் வடநாட்டு போர்களுக்குப் பிறகு, தமது சோழ நாட்டிலே வேட்டையாடும் தொழிலை மட்டுமே செய்து வந்தான். அவ்வாறு ஒரு முறை பாலாற்று பக்கம் பரிவேட்டையாடி காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த போது தென்னவர், சேரர், குயகர், சாவகர், சேதிபர், யாதவர், கன்னடர், பல்லவர் முதலிய பன்னாட்டு வேந்தர்கள் திறை செலுத்த வந்தனர், ஆனால் கலிங்க அரசன் அனந்தபத்மன் மட்டும் உரிய திறையோடு இருமுறையாக வரவில்லை. அதனால் கோபமுற்ற குலோத்துங்கன் தன் படைத் தலைவரை நோக்கி “கலிங்க வேந்தன்  படைவலிமை அற்றவனாயினும் அவனது குன்றரண் பெருவலிமை கொண்டது, அதனால் நம் யானைப் படையுடன் நீர் சென்று அவ்வரணை அழித்து அவனைப் பிடித்து வருக” என்று கட்டளையிட்டான்.

அதை கேட்ட தலைமை சேனாதிபதி கருணாகரத் தொண்டைமான் எழுந்து அடி வணங்கி “ யான் ஏழ் கலிங்கங்களையும் அழித்து வருவேன்” என்று கூறினான். உப சேனாதிபதிகளான பல்லவரசர், வானாகோவரையன், முடிகொண்ட சோழன் ஆகியோருடன் பாலாறு, குசத்தலை, முகதி, கொல்லி, பெண்ணை, வயலாறு, மண்ணாறு, குண்டியாறு, பேராறு, கோதாவரி, கம்பை, சந்தநதி, கோதமை முதலிய நதிகளை கடந்து யுகாந்தக் கடல் கொதித்து வருவது போலக் கலிங்க நாட்டினுள் புகுந்து, நாடெங்கும் தீக்கொளுவிச் சூறையாடினான்.

கலிங்கமக்கள் சோழப்படையின் கொடுமைக்கு ஆற்றாது தமது அரசன் அனந்த பத்மனிடம் முறையிட்டனர். அவன் உடனே சோழப்படைகளை வென்றழிப்பேன் என்று வீராவேசம் கொண்டான். அவனது அமைச்சர் களுள் ஒருவனான எங்கராயன் எழுந்து, “குலோத்துங்கன் ஏவிய படையின் முன் பாண்டியர் ஐவர் கெட்ட கேட்டினை நீங்கள் கேட்கவில்லையா?

சோழன் படைகளைக் கண்ட மாத்திரத்தில் புறமிட்டு ஓடிய சேரரின் கதி யாதாயிற்று? கடலில் சென்று விழிஞத்தை அழித்துக் காந்தளூர்ச் சாலையைக் கைக்கொண்டது அவன் படையன்றோ?” என பலவெற்றிகளைக் கூறி “ அடர்ந்து வரும் அப்படையை நாம் எதிர்க்க முடியுமா?” என்றான்.

அனந்தபத்மன், எங்கராயனது கூற்றுகளை அறவே மறுத்துப் போர் புரிய தீர்மானித்தான். இரு பிரிவுகளிடையே கடும் போர் மூண்டது. அப்படைகளின் ஒலி ஏழ் கடலும் ஒன்று சேர்ந்து ஆர்த்தது போன்று இருந்தது. சோழ சேனாதிபதி கருணாகரத் தொண்டைமான் மதக்களிற்றின் மீதமர்ந்து நேராகவே போர் முகத்துள் நுழைந்தான், கலிங்கச் சேனைகள் சின்னாபின்னமாயின. எண்ணற்ற களிறுகளுடன் குதிரை, தேர், ஒட்டகம், செல்வக் குவியல், மகளிர் கூட்டம்  முதலிய கலிங்கதேசத்துச் செல்வங்கள் எல்லாவற்றையும் சோழனது படைகள் கைப்பற்றிக் கொண்டன.

தோல்வியுற்ற கலிங்க மன்னன் அனந்த பத்மன் ஓடி ஒளிந்தான், ஒற்றர்கள் மூலம் அவன் தங்கியிருந்த மலைப்பகுதியைக்  கண்டறிந்த கருணாகரன் சூரிய அஸ்தமனத்துக்குள் கண்டறிந்து தாக்கினான். அங்கிருந்த கலிங்கப்படைகள் பெரும்பாலும் துடைத்தெறியப்பட்டன. எஞ்சிய வீரர்களும் மாறு வேடம் கொண்ட அருகர், தெலுங்கர், வடுகர், பாணர் எனக்கூறி தப்பியோடினர். அனந்தபத்மன் போன இடமே தெரியவில்லை.

இவ்வெற்றிச் செயலை குலோத்துங்கன் அவைக்களப் புலவன் ஜெயங்கொண்டார் பரணியாய் பாடினார். 

எடும் எடும் எடும் என எடுத்ததோர்

இகல் ஒலி கடல் ஒலி இகக்கவே

விடு விடு விடுபரி கரிக்குழாம்

விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே- என்று போர் ஆர்ப்பரித்துத் தொடங்கியதை ஜெயங்கொண்டார் பாடுகிறார். இந்தப்போர் குலோத்துங்கனின் ஆட்சியில் கி.பி.1110 வாக்கில் நடந்திருக்கலாம் என்கிறார் நீலகண்ட சாஸ்திரியார். கலிங்கத்துப்பரணியாக இப்போர் நிலைத்திருந்தாலும் இதனால் நிரந்தர தீர்வு எதுவும் ஏற்படவில்லை என்கிற அவர் கொஞ்சகாலம் கழித்து கலிங்கம் மீண்டும் சோழர்களின் கையைவிட்டு நழுவி விட்டதைச் சுட்டிக் காட்டுகிறார். கலிங்கப்போர் குறித்த சில சிற்பங்கள் ஒரிஸாவில் தந்தகிரி, உதயகிரி ஆகிய மலைகளில் காணப்படுகின்றன. கருணாகரத் தொண்டைமானுடன் குலோத்துங்கனின் மகன் விக்கிரமச்சோழனும் போர்புரியச் சென்றிருந்தாகச் சொல்லப் படுகிறது.

குலோத்துங்கனின் தளபதி கருணாகரத் தொண்டைமான் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவன். ஊர் சென்னை அருகே உள்ள வண்டலூர் என்பார்கள். ஆனால் கும்பகோணம் அருகே உள்ள வண்டுவாஞ்சேரி என்பார் மு.ராகவையங்கார். கம்பரின் சிலையெழுபதிலும் கருணாகரத் தொண்டைமான் கொடைச்சிறப்புக்காகப் புகழப்பட்டுள்ளான்.

(கட்டுரையாளர் கலிங்கத்துப்பரணிக்கு உரைஎழுதி பதிப்பித்துள்ளார்)

மே, 2015.