"It is better to risk starving to death than surrender. if you give up on your dreams what is left" - Jim Carrey
பதினாறு வருடங்களுக்கு முன் 2004 டிசம்பர் மாதத்தில் அந்திமழை இணையதளம் ஆரம்பமானது. அப்போதிலிருந்து அச்சு இதழ் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளும் தொடர்ந்தன.
அனுபவமுள்ள மூன்று பத்திரிகையாளர்களிடம் அந்திமழை இதழுக்கு ஆசிரியராக வர விருப்பமா என்ற வேண்டுகோளோடு விவாதங்களும் நடந்தேறின.
அப்போது திருவனந்தபுரம் சூர்யா தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த கவிஞர் சுகுமாரனிடம் அந்திமழைக்காக ஒரு தொடர் கேட்டு தொடர்ந்து பேசிவந்தேன். நான் ஒன்று கேட்டேன் அவர் வேறொரு விஷயத்தை முன்வைத்தார். பின் இரண்டுமில்லாமல் 'வேழாம்பல் குறிப்புகள்' தொடர் ஆரம்பமானது.
வேழாம்பல் காலக்கட்டத்தில் சுகுமாரன் பணியில் மூன்று மாறுதல்கள் நிகழ்ந்தன. நான்காவது முறை இரு நிறுவனங்களுடன் இணைந்து பயணிக்க முடிவெடுத்தார் அதில் ஒன்று அந்திமழை.
அப்போது புத்தக வெளியீடு - அச்சு இதழ் பற்றியும் சுகுமாரன், கௌதமன் மற்றும் நான் நீண்ட உரையாடல்களை நிகழ்த்தினோம். அதில் மிக முக்கியமானது கோவையிலும் பெங்களூரிலும் நடந்த உரையாடல்கள்.
2012-இல் The Sunday Indian தமிழ் பதிப்பாசிரியராக இருந்த அசோகன் மாற்றத்தை நோக்கிய நிலையில் அந்திமழை வரவேற்றது. சுகுமாரன், அசோகன், கௌதமன் மற்றும் நான் ஆகியோர் கலந்தாலோ சித்த ஜூலை 2012-இல் பெங்களூரில் நடந்த எடிட்டோரியல் கூட்டம் மிக முக்கியமானது. இதழின் உள்ளடக்கம் இடது, வலது, திராவிடம், தமிழ்தேசியம், தேசியம், மையம், சோத்துக்கட்சி என்று எல்லா தரப்பினருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். சுவாரஸ்யம் குறையக் கூடாது, ஜோதிடம், அரசியல் மற்றும் சினிமா கிசுகிசுக்களை தவிர்ப்பது என்பது போன்ற பல விஷயங்கள் இறுதிசெய்யப்பட்டன. ஒவ்வொரு இதழிலும் 18-24 பக்கங்கள் ஒரு சிறப்பு பகுதியாக வெளிவர வேண்டுமென்ற எனது விருப்பம் மட்டும் விவாதப்பொருளானது. எல்லா இதழும் வேண்டாம், வேண்டுமென்றால் வருடத்திற்கு 4 சிறப்பிதழ்களை வெளியிடலாம் என்பது மற்றவர்களது கருத்தாக இருந்தது. பெரும்பாலான தருணங்களில் எனது கருத்தோடு ஒத்துபோகும் கௌதமனுக்கும் இதில் சந்தேகம் இருந்தது. இந்த சிறப்பிதழ் முயற்சி எடுபடுமா? என்று.
முதல் இதழ் சிறப்பிதழாக வெளிவரவில்லை. இரண்டாவது இதழ் ‘இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் 75 ஆண்டுகள்' என்ற சிறப்பிதழாக வந்தது. இரண்டாவது இதழின் வெளியீடு சென்னை அண்ணாசாலையில் ஓர் அரங்கில் சிறப்பாக நடந்தது. மறுநாள் எழும்பூரில் உள்ள ஒரு விடுதியில் அறையில், ‘வேலைக்கு போகாமல் வாழ்வது எப்படி?' என்ற எனது சிறப்பிதழ் ஐடியா விவாதப்பொருளானது. ‘உத்யோகம் புருஷலட்சணம் என்கிற பொதுபுத்திக்கு எதிராக இருக்கிறதே' என்று ஆட்சேபனை சொன்ன சுகுமாரன், ‘பரிசோதனை முயற்சியாக பார்க்கலாம்' என்றார்.
முதல் பதினாறு இதழ்கள் வரை சிறப்பிதழ்கள் பற்றிய விவாதம் ஆசிரியர் குழுவிற்குள் நிகழ்ந்த வண்ணம் இருந்தது.
இதுவரை வெளியான 100 இதழ்களில் 93 சிறப்பிதழ்கள் வெளியிட்டிருக்கிறோம்.
முன்னே நீண்டிருக்கும் பாதையில் தொடர்வதற்கு ஆயத்தமாகும்போது, தாண்டிச் செல்லும் மைல்கற்களைக் கொண்டாட மறக்காதே என்பது நெல்சன் மண்டேலாவின் கூற்று. ‘‘புதிதாய் வெளிவந்திருக்கும் அந்திமழை இதழில் அ.முத்துலிங்கத்தின் ‘‘நானும் மகளும்'' கட்டுரை அற்புதம்! டோண்ட் மிஸ் இட்! :-)'' என்று முகநூலில் பாராட்டிய பத்திரிகையாளர் ரா.கண்ணனில் தொடங்கி எண்ணற்றவர்களின் அன்பு வார்த்தைகள் தான் எங்களை முன்னகர்த்துகிறது.
வசவுகளை, கடுமையான விமர்சனங்களையும் பெற்றிருக்கிறோம். வாசகர்கள் துணுக்குகள் குட்டிச் செய்திகளை மட்டுமே விரும்புகிறார்கள். ஆழமான வித்தியாசமான விஷயங்களை படிப்பதில்லை என்ற பொதுக் கருத்தை அந்திமழை பொய்யாக்கியுள்ளது.
பல்வேறு வாசக கடிதங்கள் எங்களுக்கு ஊக்கம் தருபவை. விற்பனை பிரிவை நடத்தும் இரா. சுதாகர் வாசகர் கடிதம் எழுதியதன் மூலம் தான் அந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். எடிடோரியல் கூட்டத்திற்கு அவரையும் அழைத்துக் கொள்வோம். நவம்பர் 2017 சிறப்பிதழான 25 குறும்பட இயக்குநர்கள் ஐடியா அவருடையது தான்.
‘‘தங்களின் அந்திமழை வாசகர்களுள் நானும் ஒருவன். தமிழில் வரும் தரமான இதழ்களுள் அந்திமழையும் ஒன்று. எனது பாராட்டுகள்'' என்ற பாலுமகேந்திராவின் கடிதத்தை இதயத்தின் அருகில் வைத்திருக்கிறேன்.
பல்துறை சார்ந்த 1500 - க்கும் மேற்பட்டவர்களின் பங்களிப்பினாலும், ஆயிரக்கணக்கான வாசகர்களின் தொடர் ஆதரவாலும் அந்திமழை தொடர்ந்து பொழிகிறது.
உலகின் பல பத்திரிகைகளின் ரசிகராக இருந்த போதிலும் சி.ப.ஆதித்தனார், எஸ்.ஏ.பி வாசன், டி.எஸ்.சொக்கலிங்கம், ராம்நாத் கோயங்கா, குஷ்வந்த்சிங், வினோத்மேத்தா, எம்.ஜெ.அக்பர் ஆகியோரது வாழ்க்கையின் வசீகரம் தான் என்னை தொடர்ந்து இயக்குகிறது.
எழுத்து மற்றும் பத்திரிகையின் மேல் நான் மோகங்கொண்டு திரிந்த கல்லூரி நாட்களில் என்னிடம் நேரம் செலவழித்து இதழியல் பற்றிய தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு என்னை செதுக்கிய மதன், ராவ், டிராட்ஸ்கி மருது, மாலன், அ.மா.சாமி, சாவி, ஞாநி, சுஜாதா, ரா.கி.ர, திலகவதி, கோமல் சுவாமிநாதன், முகிலன், கயல் தினகரன், ஆர்.எம்.டி. சம்பந்தம், விக்ரமன், சி.கஸ்தூரிரங்கன், க. சந்தானம், மணியம் செல்வன் மற்றும் பலருக்கு எனது நன்றிகள்.
இருபத்தைந்து வருடங்களாக என்னோடு தொடர்ந்து பயணிக்கும் அசோகன், கௌதமன் மற்றும் அந்திமழை குழுவிற்கும் எனது மனைவி மற்றும் குடும்பத்திற்கும் எனது நன்றிகள்.
போலி செய்திகளை சுலபமாக உருவாக்கிவிடலாம். நிஜமான இதழியல் செலவுபிடிக்கக்கூடியது என்ற தாமஸ் ஹெண்ட்ரிகின் வார்த்தைகள் தற்போது பலருக்கு புரிய ஆரம்பித்துள்ளது.
‘‘வரலாற்றை முதலில் பதிவுசெய்வது இதழியல்தான்'' (Journalism is the first rough draft of the history) என்பது தி வாஷிங்டன் போஸ்ட் இதழின் இணை உரிமையாளரான பிலிப் எல். கிரஹமின் புகழ்பெற்ற வார்த்தைகள்.
தொடர்ந்து அன்பையும் ஆதரவையும் தாருங்கள், அந்திமழை தமிழகத்தின் வரலாற்றின் முதல் பதிவை எழுதுவதற்கு. அந்திமழையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வாசகர்கள், படைப்பாளிகள், விற்பனையாளர்கள், விளம்பரதாரர்கள், விமர்சகர்கள், நண்பர்கள் உறவுகள் யாவருக்கும் நன்றி.
அந்திமழையின் 100 இதழ்கள் ஊர் கூடி இழுத்த தேர்.
என்றும் உங்கள்
அந்திமழை இளங்கோவன்
டிசம்பர், 2020.