'If you want to be become rich, become a farmer'
இது அமெரிக்காவின் பிரபலமான முதலீட்டாளர் ஜிம் ரோஜரின் கூற்று. வாழ்க்கையை நடத்துவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் பெரும்பான்மையான இந்திய விவசாயிகளிடம் இதைக் கூறினால், அவர்கள் கொலை வெறி ஆகி விடக்கூடும்.
சோகத்தின் விளிம்பில் கோபத்துடனிருக்கும் இந்திய விவசாயிகளுக்கு அரசு என்ன செய்தது, என்ன செய்யத் தவறியது என்று ஆராய்வதை விட விவசாயிகளின் வாழ்வை மாற்றும் சக்தி அவர்களிடமே இருக்கிறது என்பதும், எதிர்காலம் விவசாயிகளினுடையது என்பதும் உண்மை.
உலக மக்கள் தொகை 500 கோடியிலிருந்து 600 கோடி ஆவதற்கு பிடித்த காலத்தை விட குறைவான காலத்தில் 600 லிருந்து 700 கோடியாக உயர்ந்திருக்கிறது. 2050 ல் உலக மக்கள் தொகை 1000 கோடியாக உயருமென்று ஆய்வுகள் கூறுகின்றன.
மண் உருவாவதை விட 10 லிருந்து 40 சதவீதம் வேகமாக நீர் மற்றும் காற்று அரிப்பதன்மூலம், பயிரிடும் மண் வளம் (crop soil) காணாமல் போகிறது. காடுகள் உருவாவதை விட 500 மடங்கு வேகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு புள்ளி விவரங்களும் உலகம் விவசாயியின் காலில் விழும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.
தற்போதுள்ள விவசாய நிலங்களால் 1000 கோடி மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவீதம் விவசாயத்தின் மூலம் கிடைக்கிறது. ஆனால் வேலை வாய்ப்புகளில் 45-50% வேலைகளை விவசாயமே உருவாக்குகிறது. 52.5% விவசாயக் குடும்பங்கள் கடனில் கஷ்டப்படுவதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. 22.5% விவசாயிகள் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பதாக 2013ல் எடுத்த அரசு கணக்கு கூறுகிறது.
நபார்டு வங்கியால் 2015-16 ல் நடத்தப்பட்ட அனைத்திந்திய பொருளாதார கணக்கீட்டு ஆய்வுப்படி சராசரி இந்திய விவசாயக் குடும்பத்தின் மாத வருமானம் ரூ.8059.
சுதந்தரத்திற்கு பின் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டதன் விளைவாக இந்தியா ஏழாவது பெரிய விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியாளராக உலக அரங்கில் திகழ்கிறது. ஆனால் விவசாயிகளின் நிலை உயரவில்லை.
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு உற்பத்திப் பெருக்கம் மட்டும் போதுமானதல்ல. உலகளாவிய அளவில் விவசாய வருமானத்தை உயர்த்துவதற்கு 5 விஷயங்கள் பின்பற்றப்படுகின்றன.
1. உற்பத்தியை அதிகரித்தல்.
2. அரிதான ரகத்தையோ, விலை பொருளையோ (cash Crop)விளைவித்து உயர் மதிப்பு பெறுவது.
3. குறிப்பிட்ட நிலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிர்களை விளைவித்து வருமானத்தை உயர்த்துவது.
4. விவசாயத்துடன் தொடர்புடைய (கால்நடை, கோழி, தோட்டப் பயிர்கள்) மற்ற நடவடிக்கைகள் மூலம் வருமானத்தைப் பெருக்குவது.
5. உற்பத்திப் பொருளின் மதிப்பைக் கூட்டுவது.
எந்தக் காலத்தில் என்ன பயிரை விளைவித்தால் நல்ல விலை கிடைக்கும் என்பதை அறிந்து செய்வதன் மூலம் அதிக விளைச்சலால் விலை சரியும் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.
நாக்பூரைச் சேர்ந்த சச்சின் காலே பொறியாளர். டெல்லியில் ஆண்டுக்கு 24 லட்சம் சம்பாதித்தவர், வேலையை உதறிவிட்டு சொந்த ஊருக்கு விவசாயம் பார்க்க 2013 ல் திரும்புகிறார். அவருக்கு விவசாயத்தில் எல்லாமே புதிதுதான். 15 வருட பிஎஃப் பணத்தை முதலீடாகப் போட்டு, தன்னுடைய பொறியியல் அறிவை விவசாயத்திற்கு பயன்படுத்தி லாபம் ஈட்டியுள்ளார். 2014 ல் இன்னவேட்டிவ் அக்ரி லைஃப் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி விவசாயிகளை இணைத்து ஒப்பந்த முறையில் விவசாயம் செய்கிறார். இதில் 137 விவசாய குடும்பங்கள் இணைந்து 200 ஏக்கரில் லாபகரமாக விவசாயம் செய்கிறார்கள். சச்சின் காலேவின் நிறுவனம் ஆண்டுக்கு இரண்டு கோடி அளவில் வியாபாரம் செய்கிறது. இந்தியாவெங்கும் இப்படி பல வெற்றிகரமான விவசாய கதைகள் உள்ளன.
விவசாயிகளின் இன்றைய தேவை அனுசரணையான குடும்பம் தான். மற்ற தொழில்களைப் போல வருமானம் இல்லை என்ற நெருக்கடி இருக்கிறது. விவசாய குடும்பத்திலிருந்து படித்து வேறு வேலைக்கு சென்றவர்கள் விவசாயத்திற்கு உதவ நிறைய விஷயங்கள் இருக்கிறது.
1. Myagriguru.com என்ற இணைய தளம் விவசாயம் தொடர்பான ஏராளமான தகவல்களை கொண்டிருக்கிறது.
2. Trringo என்ற செயலி விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்களை குறைவான விலையில் வாடகைக்கு எடுப்பதற்கு உதவுகிறது.
3. Smartfarm என்கிற மென்பொருள் மூலமாக பெங்களூரைச் சேர்ந்த Cropin நிறுவனம் விவசாய உற்பத்தித் திறன், பூச்சிகளிடமிருந்து பயிரை பாதுகாத்தல், நோய் தடுப்பு முறைகள் ஆகிய சேவைகளை தருகிறது.
4. Formizen Company – நகரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கான பொருட்களை இயற்கை முறையில் விளைவித்து பயன்படுத்த நினைத்தால், நகரத்திற்கு அருகில் விவசாய நிலங்களை பயிர் செய்ய வாடகைக்கு விடுகிறது.
5. Agrostar – என்ற தளம் குஜராத், மாகாராஷ்டிரா மாநிலங்களில் நவீன முறையில் விவசாயம் செய்ய உதவுகிறது.
6. விவசாய விளைபொருட்களை சரியான விலைக்கு நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய பெரிய நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. ஐடிசி கோதுமையையும், மகேந்திரா திராட்சையையும் நேரடியாக கொள்முதல் செய்வது சின்ன உதாரணம்.
நம்முடைய காலகட்டத்தில் கிராமத்திலிருந்து நகரை நோக்கி ஓடினோம். ஆனால் எதிர்காலத்தில் permaculture வாழ்வு முறை வரும் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். இது இயற்கையாக ஓரிடத்தில் மனிதர்கள் சேர்ந்து அந்த இடத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வீடுகளை அமைத்து, மழை நீரை சேகரித்து, அவர்களுக்கான உணவுப் பொருட்களை அவர்களே விளைவித்து, கழிவுகளை மறுசுழற்சி செய்து வாழ்வதுதான். மீண்டும் நாம் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்ப வேண்டியிருக்கும் என்பதைத்தான் இது குறிக்கிறது.
நாளைய உலகிற்கு, எந்த தொழில் செய்பவரையும் விட,
அதிகமாக விவசாயிகள்தான் தேவை.
என்றும் உங்கள்,
அந்திமழை இளங்கோவன்.
மார்ச் 2019 அந்திமழை இதழ்