சிறப்புப்பக்கங்கள்

உறக்கமில்லா இரவுகள்

கே.பி.ஆனந்த்

என் தாய்மாமாவின் நண்பர் டாக்டர் எம்.ஜி.ராமலிங்கம். இருவரும் சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்றவர்கள். நானும் அக்கல்லூரியில் தான் படித்தேன். எனது பள்ளிப் பருவத்திலிருந்தே பொது அறிவு சார்ந்த விஷயங்களில் எனக்கு இருந்த நாட்டத்தைக் கண்டு நான் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்து வந்தார். அந்தப் பொறி தான் கல்லூரிப் படிப்பின் இறுதியில் கொழுந்துவிட்டு எரிந்தது.

அந்த காலத்தில் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் குறித்து அதிகமாகத் தெரியாத நிலையில் கண்ணில் எதிர்ப்படுபவர்களிடம் எல்லாம் அதுகுறித்து வினாக்கள் எழுப்பினேன். பார்க்கின்ற நூலகங்களில் எல்லாம் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான புத்தகங்களைத் தேடினேன். கல்லூரி நூலகத்திலும் கன்னிமாரா நூலகத்திலும் புத்தகங்களில் மூழ்கினேன், குறிப்பெடுத்துக் கொண்டேன். இரவில் விடுதியில் ஒரேமாதிரி கருத்துள்ள மாணவர்களுடன் கல்லூரி மருத்துவமனையின் நடைமேடைகளிலும் படிப்பு தொடர்ந்தது.

இத்தேர்வுக்கான தேடலில் வெல்லவேண்டும் என்று எல்லோரிடமும் உறுதியாகச் சொல்வேன். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்வின் முடிவுகளில் நான் வெற்றி பெறுவதாகவும் இந்தியாவிலேயே முதல் தேர்ச்சியாளனாய் எனது புகைப்படம் பத்திரிகைகளில் வருவதாகவும் கற்பனை செய்து கொள்வேன். பின்பு உறக்கமேது? உறக்கமில்லா இரவுகள் மூன்றாண்டு காலம் நீண்டன.

இளநிலை படிப்பு முடித்து முதுநிலைப் படிப்பிற்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றேன். இருப்பினும் அது வேண்டாம் என முடிவெடுத்து, குடிமைப் பணித் தேர்வையெ குறிவைத்தேன்.

தந்தை வழி தாத்தாவின் வற்புறுத்தலில் எனக்குத் திருமணமும் விரைவில் நடந்திருந்ததால் குற்ற உணர்வு வேறு. தாய் தந்தையருக்கு இருவரும் சுமையாக இருக்கிறோமோ என்று. கூட்டுக்குடும்பத்தில் மனைவியை இருக்க வைத்துவிட்டு நான் விடுதியில் தங்கி தேர்விற்காக படித்து வந்தேன். வார இறுதியில் மட்டும் ஓரிரு நாள் வீட்டிற்கு  சென்று வருவதை வழக்கமாக வைத்துக் கொண்டேன். பெற்றோர் மற்றும் மனைவியின் பொறுமையும் எனக்கு பக்க பலமாக இருந்தன.

சென்னையில் அண்ணா நகரிலிருந்த அரசுப் பயிற்சி நிலையத்திற்கும் பெரியார் திடலிலிருந்த பயிற்சி நிலையத்திற்கும் சென்று வருவதுண்டு. அங்கும் சகதேர்வு எழுதுபவர்களோடும் புத்தகங்களோடும் உரையாடிவிட்டு எனது தேடல் தொடர்ந்தது. சென்னை ராணிமேரிக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்த திருமதி சரளா ராஜகோபாலனின் ஊக்குவிப்பையும் வழிகாட்டுதலையும் இவ்வேளையில் நினைவு கூர்கிறேன்.

அதன் பின்னர் குடிமைப் பணித் தேர்வு என்ற கனவை வென்று இந்திய தணிக்கைத் துறைக்குத் தேர்வானபோது ஏற்பட்ட மனநிறைவுக்கு இணையே இல்லை!

கே.பி.ஆனந்த், முதன்மை கணக்காய்வுத் தலைவர். தமிழ்நாடு - புதுச்சேரி

அக்டோபர், 2022