லிபர்டி தீவில் Talk என்ற அந்த புதிய இதழுக்கான வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புதிய இதழின் ஆசிரியரான தினா பிரவூன் ஏற்கெனவே வேனிட்டி பேர் ( Vanity Fair ) மற்றும் நியூயார்க்கர் பத்திரிகையில் இருந்தவர். திரையுலக பிரபலங்களுடன் ஓவியர்கள், எழுத்தாளர்கள், மாடல்கள் , அரசின் முக்கியஸ்தர்கள் குழுமியிருந்தனர். எல்லோரும் படகில் அழைத்து வரப்பட்டிருந்தனர். மெழுகுவர்த்திகள், மற்றும் குறைந்த வெளிச்சம் தரும் விளக்குகள் மட்டுமே ஒளிகொடுத்துக் கொண்டிருந்ததால் ரொமான்டிக்காக இருந்தது அந்த பகுதி. அழகான உடையில் வலம் வந்து கொண்டிருந்த பத்மாவின் கண்கள் அந்த நபரின் கண்களைச் சந்தித்தது. இவர் பார்ப்பதற்கு எழுத்தாளர் சல்மான் ருஷ்டியைப் போல் இருக்கிறாரே என்ற யோசனையை புத்தி நம்ப மறுத்தது. மறுபடியும் அந்த கண்கள் சந்தித்தன.
“வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கதைகளைக் கேட்க எனக்கு இஷ்டம்” என்று ஆரம்பித்த அவர், “ நாம் உங்கள் கதையைப் பற்றி பேசலாமே” என்றார். தனது கதையை விரிவாகப் பகிர்ந்து கொண்டார் பத்மா. விடைபெறும் போது இருவரும் தங்களது தொலைபேசி எண்களைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது பத்மா இதில், உங்கள் முழுப் பெயரை எழுத முடியுமா? என்று கேட்க அவர் எழுதினார்,‘ சல்மான் ருஷ்டி‘என்று.
மறுநாள் காலை பத்மாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு,‘ சாரி . ராங் நம்பர்‘ என்று சொல்லிவிட்டு அந்த இணைப்பைத் துண்டித்தார். இருந்தாலும் கேட்ட குரலாக இருக்கிறதே என்ற யோசனையில் பத்மா.
சிறிது நேரத்தில் அதே நம்பருக்கு அழைத்த பத்மா,“நீங்க சல்மான் தானே ?” என்றார்.
‘ம்ம், ஆமாம். நான் தப்பான நம்பரை டயல் செய்து விட்டதாக நினைத்தேன். அது உன் குரல் போலில்லை...ம்ம். என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”
“ ஓர் ஆடையை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்காக உடுத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு பிடித்திருப்பது போல் தோன்றுகிறது”
“நீ அதை வாங்க வேண்டும்”
இப்படியாக பத்மாவின் தொலைபேசி உறவு சல்மானுடன் ஆரம்பித்தது.
அடிக்கடி தொலைபேசிக் கொண்டார்கள் இருவரும்.மிகவும் பிஸியான மனிதர் என்று சல்மானைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்த பத்மாவிற்கு ஆச்சர்யம். பத்மாவைப் பற்றி சல்மான் பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தார். அந்த ரகசியம் பின்னால் தான் தெரியவந்தது. இத்தாலி இதழான Panorama வில் ஒரு முறை சல்மான் ருஷ்டியின் நாவல் பற்றிய பெரிய கட்டுரை இடம்பெற்றிருந்தது. அதில் பத்ம லஷ்மி பற்றிய கட்டுரையும் வேறொரு பக்கம் வெளியாகியிருந்தது.
வெறுமையான நாட்களை நகர்த்திக்கொண்டிருந்த பத்மாவிற்கு சல்மானின் தொலைபேசி அழைப்புகள் ஒரு வித பரவசத்தைத் தந்தது.
லண்டனில் வாழ்ந்து வந்த சல்மான் நியூயார்க் வந்தார். அப்போது அங்கிருந்த பத்மாவிடம் ஒருநாள் மதிய உனவுக்கு இருவரும் போகலாமா? என அழைத்தார்.
“உங்களோடு நான் மதிய உணவுக்கு வரமுடியாது” இது பத்மா.
“ என்ன இது? வெறும் சாப்பாட்டுக்கா தயக்கம்?”
“லஞ்சுக்குப் பதில் அங்குள்ள பார்க்கில் சந்தித்து நடந்தவாறே பேசலாமா?” பத்மா.
பிற்பகல் 4 மணிக்கு சந்திப்பதாக முடிவானது. பத்மா அங்கே வரும் போது சல்மான் காத்துக் கொண்டிருந்தார்.
இருவரும் பேசிக்கொண்டே சென்ட்ரல் பார்க்கில் நடந்தனர். அங்குள்ள ஏரியை சுற்றிச் சுற்றி நடந்தனர். முடிவில்லாமல் தொடர்ந்தது உரையாடல் இருவரிடமும் பேசுவதற்கு நிறைய இருந்தது. அருகிலிருந்த மார்க் ஹோட்டலில் சல்மான் தங்கியிருந்தார். அவரை விட்டு விட்டு போவதாக முடிவு செய்து உடன் சென்றார் பத்மா. அப்போதும் பிரிய மனமில்லை. பத்மாவின் நண்பர்களோடு தொடர்ந்த டின்னரிலும் சல்மான் கலந்து கொண்டார். பின்னும் தொடர்ந்த பேச்சு சல்மானின் படுக்கையிலும் தொடர்ந்தது.
காலையில் விழித்த பத்மா ,‘ I’m naked in a married man’s bed ‘ என்று தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.
அமெரிக்காவை விட்டு லண்டன் செல்லும் முன் சல்மான் மீண்டுமொருமுறை பத்மாவை சந்திக்கிறார். அப்போது,“ஏதாவது கேள் , என்ன பரிசு வேண்டும்” என்று கேட்டார்
“எனக்கு ஒரு கதை தரவேண்டும்”
“என்னிடம் வெளியிடப்படாத கதைகள் உள்ளன. தருகிறேன்”
“அது வேண்டாம் புதிதாக ஒரு கதை எழுதித் தரவேண்டும்” என்றார் பத்மா.
ஒரு எழுத்தாளர் தனது நூலுக்காக எப்போழுது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்ற சூழலில் காதல் வயப்பட்டதை‘ Love, Loss, What we ate ‘ என்ற பத்மலஷ்மியின் புத்தகம் நுணுக்கமாக விவரிக்கிறது.
அவரது உயிர் குறிவைக்கப்பட்டிருந்ததால் இலக்கிய நிகழ்வுகளில் கூட பலத்த பாதுகாப்புகளுக்கு நடுவே கலந்து கொண்டிருக்கிறார்.
ஒரு முறை மொரோக்கோவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்ற பத்மலஷ்மிக்கு, சல்மானின் மனைவி என்பதால் விஷேச பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
தான் எழுதிய புத்தகத்தால் ஒருவர் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருந்தது என்பதற்கு சல்மான் ருஷ்டியின் வாழ்வு ஒரு உதாரணம்.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் சிறந்த எழுத்தாளருக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் போது தன் பெயர் இல்லை என்பதை அறிந்தவுடன் எரிச்சல்படும் சல்மானை , நீங்கள் நோபல் பரிசுக்கு தகுதியானவர்தான், ஆனால் அவர்கள் தான் சரியான ஆளுக்கு பரிசு வழங்கவில்லை என்ற பல்வேறு சால்ஜாப்புகள் சொல்லி பத்மா உடன் வாழ்ந்த வருடங்களில் சமாதானப்படுத்தியிருக்கிறார். ஒரு வழியாக சமாதானமாகும் ருஷ்டி, நிறைய சிறந்த எழுத்தாளர்களுக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என்று கூறிவிட்டு, Proust, Joyce…தொடங்கி பல எழுத்தாளர்களின் பெயரை குறிப்பிடுவாராம்.
காதலில் மூழ்கி இருந்த பொழுதில் பத்மா கேட்ட அவருக்காக எழுதப்படவேண்டிய கதையின் சுருக்கத்தை எழுதி பேக்ஸில் அனுப்பினார் சல்மான். அதுதான் ‘The enchantress of Florence ‘ என்ற பெயரில் சல்மானின் ஒன்பதாவது நாவலாக வெளியானது.
சல்மான் + பத்மாவின், காதல் +குடும்ப வாழ்க்கை எட்டு வருடம் தொடர்ந்து பின் விவாகரத்தில் முடிந்தது. நாவல் வெளியாகும் போது விவாகரத்தாகி ஒரு வருடம் முடிந்து போயிருந்தது.
ஏப்ரல், 2017.