சிறப்புப்பக்கங்கள்

உப பாண்டவத்திற்குப் பின்னால்...

முதல் புத்தகம்

எஸ்.ராமகிருஷ்ணன்

என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பு வெளியில் ஒருவன். சென்னை புக்ஸ் 1990-ல் வெளியிட்டது. இந்தத் தொகுப்பை நான் உருவாக்கவில்லை. வெவ்வேறு இதழ்களில் வெளியான எனது சிறுகதைகளைத் தொகுத்து எழுத்தாளர்

தமிழ்செல்வன்  கொண்டு வந்தார். என் மீதான அன்பில் அவரே புத்தகம் வெளியிட்டு விட்டதால் முதற்புத்தகம் கொண்டுவருவது பெரிய சிரமமின்றி எளிதாக நடந்துவிட்டது.

ஆனால் முதல்நாவலான உப பாண்டவத்தைக் கொண்டு வர பெரும்போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது சென்னையை விடுத்து விருதுநகரில் குடியிருந்தேன். திருமணமாகியிருந்தது. வேலை எதுவும் செய்யவில்லை. கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வீட்டிலிருப்பேன். பகல் முழுவதும் படிப்பேன். எழுதுவேன். எனது மனைவி வேலைக்குச் சென்று வருவார், இலக்கியத்தை நம்பி எப்படி வாழுவது. எனது அடையாளம் என்ன? நான் எழுத்தாளன் என்றால் அதை நம்பி வாழ முடியுமா என்ற குழப்பங்கள் மேலோங்கியிருந்தன.

வீட்டின் அன்றாடப்பிரச்சனைகள் என்னை அழுத்தின. ஆனால் எழுதுவது மட்டுமே எனது வேலை என்பதில் உறுதியாக இருந்தேன். அதன் காரணமாகவே பிரம்மாண்டமான படைப்பு ஒன்றை எழுத வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழமாக உருக் கொண்டிருந்தது.

எதை முதல்நாவலாக எழுதுவது என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது.

கல்லூரி நாட்களில் மகாபாரதத்தைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். ஆகவே மகாபாரதம் சார்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் விதையாக விழுந்திருந்தது. அதன் தொடர்ச்சியாகச் சில ஆண்டுகள் மகாபாரதம் குறித்த இடங்களைக் காணவும் மகாபாரதத்தின் நிகழ்த்துகலைகளை அறிந்து கொள்ளவும் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றியலைந்தேன். அந்த அனுபவத்திலிருந்து ஒரு நாவலை எழுதலாம் என முடிவு செய்து கொண்டேன்.

உப பாண்டவம் என்ற தலைப்பு நாவல் எழுதும் முன்பாகவே மனதில் உருவாகிவிட்டது. மிகுந்த ஆவேசத்துடன் நாவலை எழுதத் துவங்கினேன் கையெழுத்துப்பிரதியில் ஐநூறு பக்கங்களுக்கும் மேல் வந்தது. அதை நண்பர்கள் சிலருக்கு வாசிக்க அனுப்பினேன். அவர்களின் ஆலோசனையைக் கேட்டுத் திருத்தங்கள் மேற்கொண்டேன். யார் நாவலை வெளியிடுவார்கள் எனத்தெரியாமல் மதுரையிலிருந்த ஒவ்வொரு பதிப்பகமாக அணுகத்துவங்கினேன். ஒருவரும் உப பாண்டவம் நாவலை வெளியிட முன்வரவில்லை.

ஒரு பதிப்பாளரை காணும்படி கோணங்கி சொன்னதால் உடனே கிளம்பி சென்னை சென்றேன்.

சென்னையில் எங்கே தங்குவது என்பது பிரச்சனை. தெரிந்த நண்பனின் அறையில் தங்கிக் கொண்டு நாவலின் கையெழுத்துபிரதியை ஒரு ஜோல்னா பையில் போட்டுக் கொண்டு பதிப்பாளரை காணச்சென்றேன். அவர் கையெழுத்துபிரதியை வாங்கிப் பார்த்துவிட்டு பெரிய நாவலாக உள்ளது ஆகவே தன்னால் வெளியிட இயலாது என மறுத்துவிட்டார். சென்னையில் உள்ள பிரபல பதிப்பகங்கள் அத்தனையையும் சந்தித்து நாவலை வெளியிட இயலுமா எனக்கேட்டேன்.

ஒரு பதிப்பகம் நாவலை வெளியிட பத்தாயிரம் பணம் வேண்டும் என்று கேட்டார்கள். இன்னொரு பதிப்பகம் எதற்கு மகாபாரதத்தை நாவலாக எழுதியிருக்கிறீர்கள் என ஏளனம் செய்தார்கள்.

ஒரு நாள் அறையில் ஜோல்னா பையை வைத்துவிட்டு ஒவியர் ஆதிமூலம் அவர்களைப் பார்க்க போயிருந்தேன். மாலை திரும்பி வந்த போது ஜோல்னா பையைக் காணவில்லை. பதறிப்போய் நண்பனிடம் கேட்ட போது அந்தப் பையைத் துணி அயர்ன் பண்ணுவதற்காக இன்னொரு நண்பர் கொண்டு போயிருக்கிறார். பையிலிருந்த பொருட்களை எடுத்து அலமாரியில் போட்டிருக்கிறேன் என்றார்.

அலமாரியை திறந்த போது பையிலிருந்த மற்ற பொருட்கள் யாவும் இருந்தன. நாவலின் கையெழுத்துபிரதியை மட்டும் காணவில்லை. கோபத்தில் கத்தி சண்டையிட்டேன். அப்போது அயர்ன் பண்ணச்சென்றிருந்த நண்பர் திரும்பி வந்தார். அவர் நாவலை தான் படிப்பதற்காக எடுத்தாகவும் மாடிப்படி ஒரமாக வைத்துள்ளதாகவும் சொன்னார். ஒடிப்போய் மாடிப்படியில் தேடினேன்.

தொட்டி செடி ஒன்றின் அடியில் நாவலின் கையெழுத்துபிரதி திறந்து கிடந்தது. அதைக் கையில் எடுத்துக் கொண்ட போதும் கோபம் அடங்கவில்லை. அந்த அறையில் இனி ஒரு நிமிசம் தங்க கூடாது என வெளியேறி அருகிலிருந்த பூங்காவிற்குப் போய் உட்கார்ந்து கொண்டேன். எங்கே போவது. என்ன செய்வது எனத் தெரியவில்லை. திருவல்லிகேணி மேன்ஷனில் இருந்த ஒரு நண்பனை தேடிப்போனேன். அவன் ஒரு வாரம் அறையில் தங்கிக் கொள்ள அனுமதி தந்தான். அந்த ஒருவாரத்திற்குள் ஏதாவது ஒரு அச்சகத்தில் நாவலை வெளியிட தந்துவிட வேண்டும் என முனைப்புடன் அலைந்தேன். ஆனால் முடியவில்லை. கசந்த மனதுடன் நாவலுடன் விருதுநகருக்குப் பஸ் ஏறினேன்.

அடுத்தச் சில வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் மதுரையில் கவிஞர் மீரா அவர்களைச் சந்தித்தேன். அவரிடம் நாவலை பற்றிச் சொன்னவுடன் நானே வெளியிடுகிறேன். எவ்வளவு பக்கங்கள் என்று கேட்டார். ஐநூறு என்றேன், அதைக் கேட்டதும் யோசனையுடன் நாவலை சுருக்கி இருநூறு பக்கமாக்க முடியுமா எனக்கேட்டார். அது எனக்கு ஒப்புதலாக இல்லை. ஆகவே மறுத்துவிட்டேன்.

ஒராண்டு காலம் அந்த நாவலை வெளியிட முடியாமல் கையில் வைத்துக் கொண்டே அலைந்தேன். மாறி மாறி திருத்தினேன். நூறு பக்கங்களை நீக்கினேன். நண்பர்கள் சிலர் நாமே வெளியிடலாமே என்ற யோசனையைச் சொன்னார்கள். அதற்கான பொருளாதார உதவிகள் தேவை என்ற போது நண்பர்களே ஏற்றுக் கொள்ள முன்வந்தார்கள். குறிப்பாகக் கவிஞர் தேவேந்திரபூபதி அக்கறையுடன் உதவிகள் செய்தார். அட்சரம் என்ற புதிய பதிப்பகம் ஒன்றை நானே துவங்கி நாவலை வெளியிடுவது என முடிவானது.

சிவகாசியில் உள்ள அச்சகம் ஒன்றைத் தொடர்பு கொண்டு நாவலை அச்சிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். நாவலின் அச்சுக்கோர்பு, பிழைத்திருத்தம் என ஒவ்வொரு பணியாக நடைபெற்றது. அட்டைப் படம் தேடி கண்டுபிடித்து ஒவியர் மாரீஸ் உதவியுடன் அதை வடிவமைத்து சிவகாசியில் கொண்டு போய்க் கொடுத்துவந்தேன்.

அட்டை தயார் என அறிந்தவுடன் நேரில் போய்ப் பார்த்தேன். சிகரெட் அட்டை போன்ற போர்டு ஒன்றில் அச்சடித்து வைத்திருந்தார்கள். அதை ஏற்க என்னால் முடியவில்லை. அடித்த அட்டைகளை அப்படியே நிராகரித்துவிட்டு வேறு ஒரு அச்சகத்தில் புதிதாக அட்டையை அச்சிட ஏற்பாடு செய்தேன். புத்தகம் ஒரு வாரத்தில் தயாராகிவிடும் என்றார்கள்.

ஒவ்வொரு நாளும் சிவகாசியில் இருந்து வரும் போனுக்காகக் காத்துக் கொண்டிருப்பேன். ஒரு நாள் மதியம் அச்சகத்திலிருந்து போன் வந்தது. உடனே பேருந்தில் கிளம்பி சிவகாசிக்குச் சென்றேன். அச்சகத்தில் மேலாளர் வெளியே சென்றிருந்தார். அவரது மேஜையில் ஒரேயொரு புத்தகம் மாதிரிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து புரட்டிப் பார்த்தேன்.  நாவலை முகர்ந்து பார்த்தேன். புரட்டி புரட்டி பார்த்தேன். நான் நினைத்தது போல அச்சாகி யிருக்கவில்லை.

ராதுகா பதிப்பக புத்தகம் போலக் கொண்டு வர வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால் அந்தத் தரமோ நேர்த்தியோ கையில் வைத்திருந்த புத்தகத்தில் இல்லை. ஆனாலும் நாவல் அச்சாகிவிட்டது என்ற சந்தோஷம் மனதில் பெருகியது.

அச்சக மேலாளர் வந்து சேர்ந்தவுடன் புத்தகங்கள் தயார் ஆகிவிட்டது. வேனில் அனுப்பி வைக்கிறேன், என்றபடியே உங்க புத்தகத்தைப் படிச்சி பார்த்தேன், ஒண்ணுமே புரியலை என்றார்.

மகாபாரதம் பற்றிய நாவல் என்றேன். இதை எல்லாம் யாரு படிக்கப்போறா எனச் சலிப்போடு சொன்னார். நாவல் வெளியான முதல் நாள் இப்படி ஒருவர் சொல்கிறாரே என ஆதங்கமாக இருந்தது.

அந்த முதற்பிரதியை கையில் வாங்கிக் கொண்டு விருதுநகர் செல்லும் பேருந்தில் ஏறி ஜன்னல் ஓர சீட்டாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டு நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்க அதிர்ச்சியாக இருந்தது. நாவலில் பிழைத்திருத்தம் செய்த எதுவும் திருத்தப்படவேயில்லை. அப்படியே அச்சிட்டிருந்தார்கள். வழியில் இறங்கி சிவகாசிக்கு போய் அச்சகத்தில் சண்டையிடலாமா என்று தோணியது. இனி என்ன செய்வது. மறுபடி அவ்வளவு புத்தகங்களையும் அச்சிட முடியுமா என்ன. கவலையும் வேதனையும் ஒன்று சேர்ந்து கொண்டது. நாவலை கையில் வைத்தபடியே தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தேன்.

வீட்டிற்கு வந்த போது மனதில் துளி சந்தோஷமில்லை. சே. இப்படி ஆகிவிட்டதே என வேதனையாக இருந்தது. இரவு தேவேந்திரபூபதியை சந்தித்துச் சொன்ன போது அவர் மறுபடியும் அச்சிட்டு விடலாம் என்றார்.  ஆனால் அதற்கு இன்னொரு மடங்கு பணம் தேவைப்பட்டது. அத்துடன் அச்சிட்ட பிரதிகளை எண்ண செய்வது என்ற பிரச்சனையும் உருவானது. அடுத்த நாள் கவிஞர் தேவதச்சனை சந்தித்து நடந்த விஷயங்களைச் சொன்னேன். அவர் நடந்தை பற்றிக் கவலைப்பட வேண்டாம். அடுத்தப் பதிப்பில் அச்சுப்பிழைகளை சரி செய்துவிடுங்கள். நாவலை விநியோகம் செய்யத் துவங்குங்கள் என்று உற்சாகப்படுத்தினார்.

ஐம்பது நூறு என நாவலின் பிரதிகளை நானே சுமந்து கொண்டு ஊர் ஊராகப்போய்ப் புத்தகக் கடைகளில் தந்து வந்தேன். சென்னைக்குக் கிளம்பி போய்ப் புத்தகங்களை விநியோகம் செய்தேன். இரண்டு வாரங்களில் நாவல் குறித்த பாராட்டுகள் வரத்துவங்கின. முக்கிய எழுத்தாளர்கள் பலரும் நாவலை பற்றிப் பாராட்டினார்கள். விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. நாவல் வேண்டும் என வீடு தேடி வந்து வாங்கிப் போக ஆரம்பித்தார்கள். அன்றாடம் பத்து மணியாடர் கள் வரத்துவங்கியது. புத்தகங்களைத் தபால் நிலையத்தில் கொண்டு போய் அனுப்பி வைத்துவிட்டு வருவேன்.

கோவையில் உள்ள விஜயா பதிப்பம் அதிகப் பட்ச பிரதிகளை வாங்கி விற்பனை செய்து தந்தார்கள். எட்டு மாதங்களில் அதன் முதற்பதிப்பு விற்றுத் தீர்ந்து போனது.

அதன் மறுபதிப்பை கொண்டு வர வேண்டும் எனச் சென்னைக்குச் சென்றேன். மிதிலா அச்சகம் நடத்திக் கொண்டிருந்த எழுத்தாளர் மோகன் நாவலின் பிழைகளைத் திருத்தி அழகிய இரண்டாம் பதிப்பை கொண்டு வர உதவி செய்தார்.

உப பாண்டவம் நாவல் வழியாக எனக்கு மிகப்பெரிய இலக்கிய அங்கீகாரம் கிடைத்தது. எந்தப் பதிப்பகங்கள் என் நாவலை வெளியிட மறுத்தனவோ அவர்களே மறுபதிப்பு வெளியிட கேட்டார்கள். ஆனால் நான் தரவில்லை. மூன்று பதிப்புகளை நானே வெளியிட்டேன். விருதுகளும் பாராட்டுகளும் வாங்கிக் குவித்த உப பாண்டவம் தற்போது விஜயா பதிப்பகம் மூலம் ஐந்து பதிப்புகள் வெளியிடப்பட்டு இன்றும் தனக்கான வாசக வட்டத்தைக் கொண்டிருக்கிறது.

உப பாண்டவத்திற்குக் கிடைத்த வரவேற்பும் பாராட்டும் உற்சாகத்துடன் என்னை நெடுங்குருதி நாவலை எழுத வைத்தது. நண்பர் மனுஷ்யபுத்திரன் தனது உயிர்மை பதிப்பகத்தில் அதை வெளியிடுகிறேன் என உரிமையுடன் வாங்கிக் கொண்டார். அன்றிலிருந்து இன்று வரை எனது 65 புத்தகங்களை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்கான ஒரு பதிப்பகத்துடன் இணைந்தே செயல்பட்டிருக்கிறார்கள். உயிர்மையுடன் அந்த நல்லுறவு  இனிதாகத் தொடர்கிறது.

இன்றைக்கும் எனது உப பாண்டவம் நாவலின் முதல்பதிப்பை அடிக்கடி எடுத்து பார்த்துக் கொள்வேன். அது ஒரு பாடம். எனக்கான அடையாளத்தை உருவாக்கி கொள்ள நான் பட்ட

சிரமங்களின் அடையாளச்சின்னம். இலக்கிய உலகில் எனக்கான இடத்தை உருவாக்கி தந்த படைப்பு.

நான் எழுதிய நாவல்களில் என்னால் மறுமுறை எழுத முடியவே முடியாத படைப்பாகக் கருதுவது உப பாண்டவத்தை மட்டுமே. அந்த நாவலை எழுதிய நாட்களில் இருந்த ஆவேசமும் கொந்தளிப்பான மனநிலையும் இன்றில்லை.

இப்போது எனது எட்டாவது நாவல் இடக்கை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதைக் கையில் வாங்கிய நாளில் என்னை அறியாமல் உப பாண்டவம் நாவலை அச்சகத்தில் வாங்கிய தருணம் மனதில் தோன்றி மறைந்தது. கடந்து வந்த தூரத்தை நினைத்து பெருமூச்சிட்டுக் கொண்டேன்.

அரங்கில் இடக்கை நாவலை வெளியிட்டுப் பேசியவர்கள் அத்தனை பேரும் பாராட்டினார்கள், ஆனால் என் மனதில் சந்தோஷம் கவியவேயில்லை. ஏனோ முதல்நாவலை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். வீடு வந்த போது எழுத்தாளின் சந்தோஷமும் துயரமும் தனது புத்தகங்கள் சார்ந்தவை மட்டும் தானோ எனத் தோன்றியது.  வேறு என்ன ஆசை எழுத்தாளனுக்கு இருந்துவிடப் போகிறது சொல்லுங்கள்.

ஜூன், 2016.