பள்ளிக்கூடம் முடிந்த பின் அந்த பத்து வயது பெண் குழந்தையிடம் வந்த மற்றொரு சிறுமி, ‘நீயும் உன் சகோதரியும் ஏன் வேறு வேறு கார்களில் வீட்டிற்கு செல்கிறீர்கள்?’ என்று கேட்ட போது அவள் குழம்பித்தான் போனாள். ‘வா நான் உன்னை அவளிடம் அழைத்து செல்கிறேன்,’ என்று கைப்பிடித்துக் கூட்டிப்போனாள். அங்கே...
உன் பெயர் என்ன ?: பானுரேகா .
உனது அப்பா பெயர் என்ன?: ஜெமினி கணேசன்.
இந்த பதிலை கேட்ட உடன் அந்த பெண் குழந்தைக்கு அழுகை வந்துவிட்டது. “அது எப்படி முடியும் , அவர் எனக்கு தானே அப்பா!...”
சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் வேதியியல் லெக்சரராக வேலைபார்த்து வந்த அந்த இளைஞனுக்கு வெள்ளித்திரை மீது ஒரு ஈர்ப்பு. கல்லூரி வேலையை உதறிவிட்டு ஜெமினி ஸ்டுடியோவின் தயாரிப்பு நிர்வாகியாக வேலைக்கு சேர்ந்தார். புஷ்பவல்லி கதாநாயகியாக நடித்த மிஸ் மாலினி படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க இளைஞருக்கு வாய்ப்பு கிடைத்தது.
ராமசாமி கணேசன் , ஜெமினி கணேசன் ஆனார். புஷ்பவல்லியும் ஜெ. கணேசனும் இணைந்து பல படங்கள் நடித்தனர் . படத்திலும் வெளியிலும் நெருக்கம் கூடியது . புஷ்பவல்லிக்கு முந்தைய திருமணம் மூலம் இரண்டு குழந்தைகளிருந்தது. ஜெ.கணேசனும் ஏற்கனவே திருமணமானவர்தான்.
புஷ்பவல்லி ஜெ.கணேசன் உறவில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. மனம்போல மாங்கல்யம் திரைப்படத்தில் ஜெமினிக்கு இரட்டை வேடம். சுரபி பால சரஸ்வதியும், சாவித்ரியும் ஜோடிகள். புஷ்பவல்லியின் மீதான மயக்கம் ஜெமினிக்கு மெதுவாக குறைந்தது. ஜெமினி சாவித்ரி பற்றிய கிசுகிசுக்கள் மெல்ல முளைத்தன. மைசூர் சாமுண்டி கோவிலில் வைத்து ஜெமினியும் சாவித்ரியும் ரகசிய திருமணம் செய்து கொண்ட செய்தி வெளியாக, மனமுடைந்து போனார் புஷ்பவல்லி .
புஷ்பவல்லியின் வீட்டிற்கு ஜெமினி வருவதும் குறைந்து போனது.
கே.பிரகாஷ் என்ற சினிமா ஒளிப்பதிவாளர் புஷ்பவல்லியின் வாழ்வில் நுழைந்தார். இந்த புதிய உறவிற்கு சாட்சியாக இரு குழந்தைகள். சினிமா வாய்ப்புகள் புஷ்பவல்லிக்கு குறைந்து போனது; குதிரை பந்தயத்தின் மீது ஈடுபாடு அதிகமானது.
வருமானம் குறைவாகவும் செலவு அதிகமாகவும் இருந்த காலகட்டத்தில் புஷ்பவல்லியின் முதல் இரண்டு பிள்ளைகளும் ஸ்திரமில்லாமலிருந்தனர்.
பள்ளியிறுதி தேர்வில் தோல்வியுற்று தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்ட பானுரேகா நடிப்பதற்கு தயாரானாள்.
ஜெமினி திரையுலகில் கொடிகட்டி பறக்கும் போது பானுரேகாவும் அவளது தாயாரும் பல சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கினர். நல்ல வாய்ப்புகள் வந்தபாடில்லை, துக்கடா வேடங்களே வாய்த்தன. “ஒன்பதாம் வகுப்புடன் என் படிப்பு நிறுத்தப்பட்டது. பதினான்கு வயதில் நான் நடிப்புத்துறையில் கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்டேன். என் அம்மாவுக்கு எவ்வளவு கடன் இருந்தது என்றே எனக்குத் தெரியாது. படப்பிடிப்புத் தளத்துக்குச் செல்ல நான் சில சமயம் மறுத்து என் சகோதரனிடன் அடிவாங்குவேன்,” என்று ரேகா கூறியிருக்கிறார்.
குல்ஜித்பால் மும்பையின் சினிமா தயாரிப்பாளர், தனது புதிய படத்திற்கான கதாநாயகியைத் தேடிச் சென்னை வந்தவர் வாணிஸ்ரீயை சந்திக்க படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். அங்கே வாணிஸ்ரீயுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் கண்களில் தட்டுபட்டார் பானுரேகா. மேலும் விசாரித்து தெரிந்து கொண்ட குல்ஜித் அன்று மாலை புஷ்பவல்லியின் வீட்டில். அன்று தனது அடுத்த நான்கு படங்களுக்கு ரேகாவை ஒப்பந்தம் செய்தார். முதல் படமான அஞ்சனா சாபரில் (Anjana Safa) நடிக்க சம்பளம் ரூ25,000. 7,ஆகஸ்டு, 1969 அன்று அஞ்சனா சாபர் படத்திற்கு பூஜை போடப்பட்டது.
புதிய படத்திற்கு ஏதாவது அதிரடியாக செய்து விளம்பரம் தேடலாமென்று தயாரிப்பாளர் , இயக்குநர் , மற்றும் கதாநாயகன் மூவரும் சேர்ந்து ஆலோசித்து ஒரு திட்டம் தீட்டினர்.
அன்று மும்பை மெஹபூப் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு, காதல் காட்சி எடுப்பதாக பேச்சு. இயக்குநர் ஆக்ஷன் என்று கூறியதும் கதாநாயகன் ரேகாவை கையில் அள்ளி அவர் உதட்டில் உதடு பதித்தார். இந்த முத்தம் பற்றி முன்பு யாரும் பேசவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போனார் ரேகா. கேமிரா எல்லாவற்றையும் படம்பிடித்துக்கொண்டிருந்தது. இயக்குநர் கட் சொல்லவில்லை, கதாநாயகனும் ரேகாவை விடுவதாக இல்லை. ஐந்து நிமிடத்திற்கு மேலாக கவ்விய ரேகாவின் உதட்டை நாயகன் விடவே இல்லை. விடுவிக்கப்பட்ட பின் அழுகையும் அவமானமும் ததும்ப ஓடிப்போனார் ரேகா.
ஏமாற்றப்பட்டதாக, பயன்படுத்தப்பட்டதாக ரேகா உள்ளுக்குள் புழுங்கினார். அம்மாவின் பொருளாதார சூழலும் எதிர்த்தால் வேறு வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்ற பயமும் ரேகாவை மௌனமாக்கியது. ரேகாவின் மௌனம் குல்ஜித்திற்கு தைரியத்தை கொடுக்க, சினிமா வட்டாரங்களில் வண்டி வண்டியாக கிசுகிசுத் தகவல்கள் பரவின . இந்த முத்தக்காட்சியின் படம் “Indian Kissing crisis : to kiss or not to” என்று சிறப்பு கட்டுரையாக லைப் இதழில் வெளிவர ரேகாவின் பாப்புலாரிட்டி அதிகரித்தது. இதுபற்றி பின்னர், “ நான் அதைச் செய்யவில்லை. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என் மன உளைச்சலை எதனாலும் ஈடு செய்யவே முடியாது. லைப் பத்திரிகையில் வந்த கட்டுரையால் கூட,” என்று ரேகா கூறினார்.
தன்னை காதலோடு சீராட்டும் ஆண்மகனுக்காக ரேகாவின் மனம் நீண்ட நாட்களாக ஏங்கியது என்பது அவரது வார்த்தைகளை உன்னிப்பாகக் கவனித்தால் தெரியும்.
ஜிதேந்திரா உடன் ஜோடியாக நடிக்கும் போது நெருக்கமான ரேகா காதலோடு அணுக , ஜிதேந்திராவோ டைம் பாஸாக நினைக்க முறிந்தது உறவு.
வினோத் மேகராவுடன் ஜோடியாக ரேகா நடித்த போது மெல்ல ஒரு பிரியம் இருவரிடமும் உருவானது, மென்மையான வினோத் தனது நாகரிகமான அணுகுமுறையால் ரேகாவின் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்தார். ரேகாவும் வினோத்தும் காவிய காதலர்களாக வலம் வந்தனர், சுபம் விழும் என்று எல்லோரும் நம்புகையில் பிரச்சினை வினோத்தின் அம்மா வடிவில் வந்தது , அந்த காலகட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக பேசும் ரேகா எதையும் மறைப்பதில்லை. ‘it is sheer fluke that I have never got pregnant so far,” என்று செப்டம்பர் 1972ல் ‘Stardust'” இதழுக்கு கொடுத்த பேட்டியில் திருவாய் மலர்ந்திருந்தார். இது போன்ற வெளிப்படையான பேச்சுக்கள் ரேகாவிற்கு எதிராக அமைந்தது.
Tick 20 விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் , ரகசிய திருமணம் நடந்ததாகவும் சினிமா பக்கங்களில் செய்தி வந்தது. வினோத்தின் அம்மா வில்லியாகி காதலைப் பிரித்தார்.
ரேகாவின் மனதில் காதலுக்கான ஏக்கம் குறையவே இல்லை. பாலிவுட் வில்லன் ஜீவனின் மகன் கிரண்குமார், கோபக்கார இளைஞனாக அறிமுகமான உயர்ந்த நடிகர் என்று அலைபாய்ந்த ரேகாவின் காதல் எங்குமே நிலைக்கவில்லை.
தீவிர ரசிகனாக அறிமுகப்படுத்தப்பட்ட முகேஷ் அகர்வால் ரேகாவைக் காதலிப்பதாகக் கூறினார். எப்படி விழுந்தார் என்று அவர் நண்பர்கள் ஆச்சர்யப்பட 4, மார்ச் 1990அன்று இரவு மும்பையில் பூட்டிய கோவிலை திறந்து, வீட்டிற்கு சென்றிருந்த பூசாரியை தூக்கிவந்து, மந்திரம் சொல்லச்சொல்லி இரவு 10.30க்கு ஒரே ஒரு தோழி முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமண உறவுக்கு வெளியே பிறந்த குழந்தையான ரேகாவிற்கு திருமணம் என்கிற நிகழ்வு மிக முக்கியமாகப் பட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
திருமணமான 24 மணிநேரத்திற்குள் இருவரும் லண்டனுக்கு தேனிலவு கொண்டாட பறந்தனர். லண்டனில் தான் முகேஷின் சிக்கல்கள் புரிந்தது.
நீண்ட காலம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த முகேஷுக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவருடன் உறவு நீடித்தது. மெல்ல மெல்ல பிரச்சனைகள் பெரிதாகி இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர். அதன் பிறகு பல முறை முயன்றும் முகேஷால் ரேகாவுடன் பேச முடியவில்லை. ஏழாவது மாதத்தில் முகேஷ் தற்கொலை செய்துகொள்ள ரேகாவை உண்மைக்கு மாறாக கொலைகாரியாக பத்திரிகைகள் சித்தரித்தன.
ரேகாவின் மனம் யோகா மற்றும் ஆன்மீகத்தை நாடத்துவங்கியது.
1994ஆம் ஆண்டு பிலிம்பேர் இதழ் வாழ்நாள் சாதனையாளர் விருதை ஜெமினி கணேசனுக்கு வழங்க முடிவெடுத்து அந்த விருதை வழங்க ரேகாவை சென்னைக்கு அழைத்தது. ஜெமினி கணேசன் கால் தொட்டு வணங்கி விட்டு ரேகா விருது வழங்கினார். என் பிரியமான மகளிடமிருந்து விருது வாங்குவதில் மிக்க மகிழ்ச்சி என்றார் ஜெ.கணேசன். தங்களை வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை என்ற தீராத வருத்தம் புஷ்பவல்லிக்கும் ரேகாவிற்கும் இருந்தது. அங்கீகாரம் ரேகாவை நெகிழச் செய்தது. பாவம், இதை கேட்கத்தான் புஷ்பவல்லி உயிரோடு இல்லை.
குறிப்பு: இக்கட்டுரை , Stardust , Filmfare , Eternal Romantic : My father Gemni Ganesan , Eurekha : The intimate Life Story of rekha , REKHA The Untold Story ஆகிய புத்தகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.
ஜூன், 2017.