சிறப்புப்பக்கங்கள்

உணப் பழக்கமும் உடலுழைப்பும் பயன் தரும்! - சித்த மருத்துவர் ந.கபிலன்

வசந்தன்

த ற்போதைய அறிவியல் காலத்தில் இதனை சர்க்கரை நோய் என அடையாளப் படுத்துகிறார்கள். ஆனால், பழங்காலத்தில் இருந்தே இந்த நோய் இருந்து வருவதாக சித்த மருத்துவம் சொல்கிறது. சித்தர்கள் இதனை மதுமேகம் என்கிறார்கள்.

இப்போதாவது இரண்டுவித சர்க்கரை நோய் தான் இருப்பதாக சொல்கிறார்கள்.ஆதி காலத்தில் 20 வகையான மதுமேகம் இருந்ததாக சித்த மருத்துவ வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் சில நோய்கள் குணப்படுத்த முடியாத தன்மைகளில் இருந்திருக்கின்றன. எனவே, சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய் முன்பே அறியப்பட்ட ஒன்று. முன்பே இவ்வகை நோய்கள் இருந்தாலும், இவ்வளவு அதிகமாக இல்லை. நவீன காலத்தில் இயற்கை விளைபொருட்களை சாராத உணவு முறைகள், நவீன வாழ்க்கை முறை, உடலுழைப்பு குறைவு காரணமாக
சர்க்கரை நோய் அதிகமாக வருகிறது. அந்த காலத்தில் உடலுழைப்பு இல்லாத பணக்காரர்களுக்கு மட்டுமே அரிதாக மதுமேகம் வந்தது.

சித்தாவில் சர்க்கரை நோய்க்கு பல்வேறு மருத்துவ முறைகள் உள்ளன. அவற்றினால் இந்நோயைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். பூரணமாக குணப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இல்லை. உணவு பழக்கம், எளிய உடற்பயிற்சிகளோடு சித்தாவில்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். சித்த மருத்துவமுறையைப் பொறுத்தவரை
சர்க்கரை நோய் உள்ள அனைவருக்கும் ஒரேமாதிரியான மருந்துகளைக் கொடுக்க முடியாது. உடலின் தன்மைகளுக்கேற்ப இன்சுலினை அதிகரிப்பதற்கான மருந்துகள், உணவிலிருந்து உடலில் சேரும் சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்துகள் என நோயாளிகளுக்கேற்ப மாறுபடும்.

சர்க்கரை நோய் வருவதற்கு முன்னரே தடுக்க வேண்டுமென்றால் உடலுழைப்பு நிச்சயம் இருக்க வேண்டும். உணவுக்கு ஏற்ற உடலுழைப்பு இருந்தால், தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம்கூட இருக்காது. மூதாதையருக்கு இருந்து, மரபணு காரணமாக வருபவர்களுக்கும் உணவுப் பழக்கமும், உடலுழைப்பும் பயன் தரும். இதன்மூலம் சர்க்கரை நோய் தாக்கும் வயதை தள்ளிப்போட முடியும். 30 - 35 வயதில் வரக்கூடியதை 45 வயதுக்குமேல் வரும் அளவுக்கு தள்ளிப்போடலாம். மரபணு ரீதியாக அல்லாமலும்கூட பலருக்கு சிறிய வயதிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இவை அனைத்துக்கும் உணவு கட்டுப்பாடும், உடலுழைப்பும் நன்மை பயக்கும். 

சர்க்கரை நோய்க்கு மற்ற மருத்துவ முறைகளைபோல் சித்தாவில் வெறும் மாத்திரைகள் மட்டும் கொடுக்கப்படுவதில்லை. கசாயம், வெந்நீரில் கலந்து உட்கொள்ளும்படியான மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இவை மட்டுமன்றி சர்க்கரை நோய்க்கு இன்னும் பல்வேறு ஆராய்ச்சிகளும், அதனை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கும் பணிகளும் சித்தாவில் நடைப்பெற்று வருகின்றன. அதனை ஆய்வு மாணவர்கள் ரிவர்ஸ் மெத்தடாலஜியில் விலங்குகளில்
பரிசோதனை மூலமாகவும், நேரடி சிகிச்சை மூலமாகவும்  சித்த மருந்துகளுக்கு வீரியம் இருக்கிறது என நிரூபித்து வருகிறார்கள். சித்தாவில் மட்டும்தான் நோயின் தன்மையை அறிந்து மருத்துவராலேயே மருந்தை தயாரிக்க முடியும். பல்வேறு நாட்பட்ட நோய்களுக்கு சித்தா சிறந்த மருத்துவ முறையாக விளங்குகிறது.  இப்போது சிக்கன்குனியா, டெங்கு போன்ற காய்ச்சல் களுக்குகூட சித்தாவின் நிலவேம்பு கசாயம், மற்ற மருந்துகளை அரசே மக்களுக்கு பரிந்துரைக்கும் நிலை ஏற்பட்டிருப்பதை கவனிக்கலாம். சித்தாவில் தொடக்கம் முதல் ஒரு நோய்க்கான மருந்து கொடுக்கும்போதே, அதனால் பக்க விளைவு எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கான மருந்தும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது (Combined drug). இதனால் சித்தாவை பொறுத்தவரை பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. மற்ற மருத்துவ முறைகளில் குறிப்பிட்ட நோய்கான மருந்து கொடுக்கும்போது, அந்த நோய் வேறெந்த உறுப்புகளையும் பாதிக்காமல் இருக்க கூடுதலாக சில மருந்துகள் அளிக்கப்படுகின்றன.
சித்தாவில் அனைத்துக்கும் சேர்த்து ஒரே மருந்தாக கொடுக்கப்படுகிறது.

  எந்த வகை உணவாக இருந்தாலும் சரி இனிப்புகளை அதிகமாக உட்கொண்டால் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும். வேறு சில காரணங்களும் சித்தாவில் சொல்லப்படுகிறது.

சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க பிஞ்சு பச்சைக் காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்வது அவசியம். அறுசுவையும் கிடைக்கும் உணவுகளை நாம் இப்போது அதிகம் எடுத்துக் கொள்வதில்லை. முன்பெல்லாம் நமது உணவில் அறுசுவை இருந்தது. இப்போது துவர்ப்பு, கசப்பெல்லாம் நம் உணவில் பெரும்பாலும் இருப்பதில்லை. அறுசுவையும் இருக்கும் உணவுகளை சாப்பிடுவது மூலமாகவும் சர்க்கரை நோயை தடுக்கலாம். முக்கியமாக நன்கு பசித்த பிறகு சாப்பிட வேண்டும். பசித்த பிறகு இரண்டுவேளை வீதம் சாப்பிட்டபோதெல்லாம் ரத்தத்தில் சர்க்கரை சேரும்  அளவு குறைவாக இருந்தது. தேவையான இடைவேளை இல்லாமல் மூன்று முறை நான்குமுறை சாப்பிடுவதால்
சர்க்கரை அதிகரிக்கும்.

வெள்ளைச் சர்க்கரையை விட கருப்பட்டி, தேன் போன்றை இனிப்புகளில் குளுக்கோஸ் குறைவுதான். எனினும் அவற்றையும் அதிகமாக சாப்பிடக் கூடாது. இவற்றிலும்
சர்க்கரை உள்ளது.அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் அதிகமாக வரும், சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அந்த அளவுக்கு வராது என்பதெல்லாம் தவறு. ஏற்கெனவே
சொல்லியதைப்போல் எந்த உணவாக இருந்தாலும் உடலுழைப்பு தேவை. இதில் கவனம் செலுத்தினால்  நோயை தவிர்க்கவும், கட்டுக்குள் வைக்கவும் முடியும்.

(சந்திப்பு: வசந்தன்)