சிறப்புப்பக்கங்கள்

உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்!

தமயந்தி

அப்பா! இந்த ஒற்றை வார்த்தையில் மினுங்கும் அன்பின் அர்த்தங்கள்- மின்னும் நட்சத்திரங்கள்.

ஓர் இரவை அலங்கரிப்பதை ஒக்கும். அப்பா மிக எளிமையான மனிதர். ஆகச் சிறந்த பொறுமையும் முதிர்ச்சியும் அன்பும் நிறைந்த அவராலே உருவாக்கப்பட்டவள் நான்.

என்னிடம் அத்தனை பொறுமை கிடையாது. இன்றைக்கு அப்பா உயிரோடு இருந்திருந்தால்? என்று விடிந்ததும் நினைக்கும்படியான ஒரு வாழ்வை தந்து போனதுதான் அப்பா எனக்கு கொடுத்த பெருவாழ்வு. ஒரு நுண்ணிழையாய் அப்பா என்னுள் நிரப்பி சென்ற அற்புத பேழையை அவர் தந்த உடல் உயிரை சுமந்து பண்புகள் நிறைந்து வாழ்கிறேன்.

அப்பா என்றுமே நியாயத்துக்காக நிற்பார். ஆசிரிய சங்கம் பெரிதா தனிப்பட்ட உறவுகள் பெரிதா என்றால் சங்கம் பெரிது என்று வாழ்ந்து காட்டியவர் என் அப்பா. தாத்தா திண்டிவனத்தில் டி.எஸ்.பியாக இருந்து இறந்த பிறகு தான் அப்பாவுக்கு அவர் வாங்கி இருந்த கடன்கள், அத்தை கல்யாணம், குழந்தைப் பிறப்பு, என் அம்மாவின் அப்பா வாங்கி வைத்த கடன் எல்லாமே சுமக்கும் நிலை ஏற்பட்டது.

சென்னையில் பஸ் கட்டணத்திற்கு கூட காசில்லாமல் நடந்து போன நாட்களைப் பற்றி பின்னிரவு உரையாடல்களில் சொல்லுவார். அப்பா எனக்கு கால் வலித்தால் கால்களைப் பிடித்து விடுவார். அப்பா எனக்காக பாட்டனி நோட்ஸ் பொறுமையாக எழுதிக் கொடுப்பார். நான் கதை எழுதினால் அவர் முகம் பிரகாசமடையும்.

ஆனாலும் அப்பா சமூகத்திற்காக என் தனிப்பட்ட வாழ்வு சார்ந்த கனவை செவி மடுக்கவில்லை. அதற்கும் அவர் காரணமில்லை என்று அவர் தந்த முதிர்ச்சியே தான் தோன்ற வைக்கிறது. இந்த சமூகம் மற்றும் குடும்ப கட்டமைப்பு தந்த அழுத்தமே அதன் வேர் என்று நான் அறிவேன். இறுதி நாட்களில் பார்கின்சன் வியாதி முற்றிய போது ‘‘ உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்... சொல்லணும்'' என்று சொன்னபடி என் கண்ணையே உற்று பார்ப்பார் . ஆனால் எதுவும் சொல்லவில்லை. அவர் மரணித்த போது நான் கண்களில் அடிப்பட்டு சென்னையில் இருந்தேன். ஆனால் ஒன்று இப்போது கூட அவர் சொல்லாமல் போன அந்த வார்த்தைகள் தான் என்னைக் கைப்பற்றி அழைத்துப் போகின்றன.

ஜனவரி, 2021