சென்னையில் மட்டுமல்ல எங்குமே வாடகைக்கு வீடு மறுக்கப்படுகிறவர்களாக இருப்பவர்கள் திருநங்கைகள். சமூக விலக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் இவர்களை இந்த வீடு கிடைக் காத புறக்கணிப்பு அல்லது அதிக வாடகை கொடுத்து குடியேறும் நிலைமை மேலும் துயரில் தள்ளுகிறது. வாடகை வீடு தொடர்பான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் திருநங்கை சமூகப்போராளியான கல்கி.
‘‘பொள்ளாச்சியில் பெரிய வீடு இருந்தாலும் கூட சென்னையில் வாழ வந்தபோது இந்த நகரம் என்னை வாடகைக்கு வீடுதராமல் அலையத்தான் விட்டது. என் தோழி பிரியாபாபு வீட்டில் தங்கி இருந்து என் இன்னொரு தோழியான ரோஸ் உடன் சேர்ந்து வீடு பார்க்க அலைந்துகொண்டிருந்தேன். சுமார் 20 இடங்கள் பார்த்தும் கிடைக்காமல் ஊருக்கே திரும்பிப் போய்விடலாம் என்று முடிவுசெய்தபோது கடைசியாக சைதாப் பேட்டையில் மாற்றுத்திறனாளி ஒருவர் தன் வீட்டு மாடியில் ஓர் அறையை எங்களுக்கு வாடகைக்குக் கொடுத்தார். அதன் பின்னர் நர்த்தகி படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விஜயபத்மா கொட்டிவாக்கத்தில் இருந்த தன் வீட்டை எனக்கு வாடகைக்குக் கொடுத்தார். சைதாப்பேட்டையில் இருந்து கொட்டிவாக்கம் சென்றேன். ஆனால் அந்த வீட்டை அவர் கொஞ்சநாளிலேயே விற்றுவிட்டார். அதனால் நான் காலி செய்யவேண்டி வந்தது. மீண்டும் வீடு தேடும் படலம் தொடங்கியது. அதே மாதிரி இருபது, இருபத்தியைந்து வீடுகள் தேடி எந்த வீடும் கிடைக்கவே இல்லை. நான் காலி செய்யவேண்டிய கெடுவுக்கு கடைசி இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தன. நான் வீடிழந்தவள் ஆகி நடுத்தெருவுக்கு வரவேண்டிய சூழல். அப்போது ஆரோவில்லில் இருந்த நண்பர்களுக்கு விசயத்தைக் கூறி அங்கே வீடு கிடைக்குமா என்று போன் செய்தேன். அன்றே மதியம் இரண்டு மணி அளவில் வீடு அங்கே கிடைக்க, உடனே லாரியைப் பிடித்து என் பொருட்களை அள்ளிப்போட்டு ஆரோவில் போனேன். சென்னைக்கு வந்து சேர்ந்த புதிதில் வீடு தர அலையவிட்ட இந்நகரம், பின்னர் இங்கே ஐந்தாறு ஆண்டுகள் வாழ்ந்த பின்னரும் ஒரு நாள் நடுத்தெருவில் நிறுத்தி, ஊரைவிட்டே துரத்திவிட்டது!
ஆரோவில் வந்த பின் அங்கேயும் பாண்டிச்சேரியிலும் சில ஆண்டுகள் வசித்த பின் இப்போது என் சொந்த ஊரான பொள்ளாச்சிக்கே திரும்பிவிட்டேன். சென்னையுடன் ஒப்பிடுகையில் பாண்டிச்சேரியில் வீடு கிடைப்பது எளிதாகவே இருந்தது.
இதில் ஒரு தமாஷான விஷயம், நர்த்தகி படத்தில் நடிப்பதற்கு முன்பாக நான் குடியிருந்த சைதாப்பேட்டை வீட்டில் என் திருநங்கை தோழிகள் வந்து கொஞ்சம் ஆட, பாட இருந்ததனால் சற்று பிரச்னை ஆகிவிட்டது! எனவே வீட்டைக் காலி செய்யச் சொல்லி விட்டார்கள். அப்போது என் பொருட்களை எல்லாம் எடுத்து தோழி பிரியாபாபு வீட்டில் வைத்துவிட்டு அங்கேயே தாற்காலிகமாகத் தங்கினேன். அந்த சமயத்தில்தான் அமெரிக்க அரசு என்னை ஒரு கௌரவப்பிரஜையாக அங்கே வரும்படி அழைப்பு விடுத்தது. இங்கே தங்கவே வீடு இல்லாத நிலையில் அமெரிக்க அங்கீகாரம்!'' என்கிறார் அவர் வேதனையுடன்.
‘‘ நான் 14 வயதில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டவள். இப்போது எனக்கு 35 வயதாகிறது. இத்தனை ஆண்டுகளில் முழுக்க வாடகை இல்லங்களில்தான் வசித்திருக்கிறேன்,‘‘ எனத் தொடங்குகிறார் ரேணுகா. இவர் சினேகிதி அமைப்பின் வடசென்னைப் பொறுப்பாளர். ‘‘திருநங்கை என்றால் முதலில் வீடே கொடுக்கமாட்டேன் என்றுதான் சொல்வார்கள். அதில் மறுபேச்சே கிடையாது. திருநங்கைகளுக்கு வீடுகள் கிடைக்கும் இடம் என்றால் அது சென்னையின் சேரிப்பகுதிகள்தான். அங்கும் வாடகையும் முன்பணமும் இரண்டுமடங்காக உயர்த்தித்தான் வாங்குவார்கள். ஆயிரம் ரூபாய் வாடகைக்குப் போகும் இடம் என்றால் எங்களுக்கு 2000 ரூபாய் சொல்வார்கள். முன்பணம் 20,000 ரூபாய். அப்புறம் ஏராளமான விதிமுறைகள். எங்களைத் தேடி யாரும் வரக்கூடாது என்கிற விதி அதில் பிரதானம். நான் நிறைய நாட்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பக்கமாக உள்ள குப்பங்களில் வசித்தேன். கூடுதலான வாடகை கேட்டால் திருநங்கைகள் என்னதான் செய்யமுடியும்? கடை கேட்டல், பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் போன்றவற்றில் போய்தான் விழுவார்கள். உலகத்தில் பெண்கள்தான் அதிகம் கொடுமை அனுபவிப்பதாகச் சொல்வார்கள். அவர்களை விட அதிகம் சித்திரவதைகளை அனுபவிப்பவர்கள் திருநங்கைகள்தான். வாடகை வீடென்றாலும் இரவுகளில் கதவுகள் தட்டப்படுவது, ரவுடிகள் தொந்தரவு எல்லாப் பிரச்னைகளையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். நான் குடியிருந்த ஒரு வீட்டில் நான் கீழ் வீட்டில் இருந்தேன். மேல் வீட்டில் வீட்டு உரிமையாளர் இருந்தார். அவரது மகன் இரவில் குடித்துவிட்டு வந்து எங்கள் வீட்டு வாசலில் படுத்துவிடுவார். அய்யா இவரை வீட்டில் படுக்க வைத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டால் இங்கே அதெல்லாம் அப்படித்தான் என்று சொல்லிவிட்டார்கள். நான் வீடு காலி செய்கிறேன். அட்வான்சைக் கொடுங்கள் என்று கேட்டால் தரமாட்டேன், உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டனர். காவல்துறைக்குப் போனால் அவர்கள் உதவிக்கு வருவதில்லை. கடைசியில் ஆளைவிட்டால் போதும் என்று அங்கிருந்து வந்துவிட்டேன். என் நிலையைப் பார்த்து ஒரு கட்டத்தில் என் பெற்றோர் என்னை ஏற்றுக்கொண்டனர். இப்போது திருவொற்றியூரில் அவர்கள் ஏற்பாட்டில் வசிக்கிறேன். கௌரவமான வாழ்க்கைக்குத் தேவை வீடுதான். அந்த வீட்டை என்னைப்போன்ற திருநங்கைக்கு வாடகைக்கு விடாமல் துரத்துகிறது இச்சமூகம்,'' என்கிறார் அவர்.
மே, 2018.