சிறப்புப்பக்கங்கள்

ஈகோ இருக்கக்கூடாது!

இரட்டையர்கள்: பாரதி – வாசு

இரா. கௌதமன்

இயக்குநர் சந்தான பாரதியும், வாசுவும் இணைந்து இரட்டை இயக்கு நர்களாக பாரதிவாசு என்ற பெயரில் இயக்கிய முதல் படம் பன்னீர் புஷ்பங்கள்.

1981--ல் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம். படம் பெயர் தெரியாத இன்றைய தலைமுறை கூட ஆனந்த ராகம்,கோடை காலக் காற்றே பாடலை முணுமுணுப்பார்கள்.இந்த இரட்டை இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் சந்தான பாரதியை சந்தித்தோம்:

இயக்குநர் ஸ்ரீதரிடம் ‘ஓ மஞ்சு’ படத்தின்போது நான் உதவியாளனாக சேர்ந்தேன்.அடுத்து மீனவ நண்பன் படம் ஆரம்பிக்கும்போது வாசு வந்து சேர்ந்தார்.  ஐந்து வருடம் ஸ்ரீதர் சார்கிட்ட நாங்க அஸிஸ்டெண்டா வேலை பார்த்தோம். இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்று வரிசையாக படங்கள். வாசுவுக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்தது. அப்பவே நாங்க ரெண்டு பேரும் பேசி வச்சிக்கிட்டோம். ரெண்டு பேருல யாருக்கு முதல் வாய்ப்பு வந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்தே டைரக்ட் செய்யறதுன்னு. பி.வாசுவோட அப்பா பீதாம்பரம் பெரிய மேக்கப் ஆர்டிஸ்ட். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கெல்லாம் மேக்கப் போட்டவரு. அப்புறம் புரட்யூசராவும் இருந்தார். என்னுடைய அப்பா சந்தானம் சினிமாக்காரர். முதலில் நடிகர் அப்புறம் புரட்யூசர். அதனால சின்ன வயசிலிருந்தே சினிமா தொடர்புகள் அதிகம். மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், மனோபாலா எல்லாம் எங்க வீட்ல உட்கார்ந்துதான் பேசிட்டிருப்போம். இளையராஜா, கங்கை அமரன் எல்லாருமே நல்ல நண்பர்கள். எங்க வீட்டிலிருந்து மூணு தெரு தள்ளிதான் இயக்குநர் மகேந்திரன் இருந்தார். அவரோட உதிரிப் பூக்கள் படம் பார்த்துட்டு மிரண்டு போனேன். வித்தியாசமா படம் செய்யணும் என்கிற உந்துதலை இது போன்ற படங்கள் தான் கொடுத்தது.

 அந்த சமயத்தில்தான் கங்கை அமரன் நீ ஒரு படம் டைரக்ட் பண்ணு. நான் தயாரிக்கிறேன் என்றார். நல்ல கதை கிடைச்சா செய்யலாம்னு சொல்லியிருந்தேன். அந்த சமயத்துல சோமசுந்தரேஷ்வரை (இயக்குநர் ராஜேஷ்வர்) எதேச்சையா சந்தித்தேன். அவர் ஸ்கிரிப்ட் எழுதியிருந்த அவள் அப்படித்தான் எனக்கு பிடிச்ச படம். அவர்கிட்ட ஸ்கிரிப்ட் இருந்தா சொல்லுங்க, நாம படம் செய்யலாம்னு சொன்னேன். அங்கேயே அவர் ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்துக்கு ஒன் லைனை சொன்னார். எனக்கும் பிடிச்சிருந்தது. வாசுகிட்ட வந்து சொன்னேன். உட்கார்ந்து பேசி முழுசா ரெடி செய்தோம். இப்பிடித்தான் பன்னீர் புஷ்பங்கள் ஆரம்பித்தது.

ரெண்டு பேர் சேர்ந்து படம் செய்யறதுல உள்ள நல்ல விஷயம், நான் ஒரு ஐடியா சொல்லுவேன். வாசு ஒரு ஐடியா சொல்லுவார். ரெண்டுல உள்ள பிளஸ்,மைனஸை யோசிச்சு செய்யறப்ப புது ஐடியா ஒண்ணு கிடைக்கும். ஷீட்டிங்கிற்கு முன்னாடி எல்லாமே பேப்பரில் இருக்கும். அதுதான் எங்க ஒர்க்கிங் ஸ்டைல். எல்லா விவாதமும் முடிச்சி ஸ்பாட்டுக்கு போகும் போது அங்க வேலையை பிரிச்சி செய்வோம். நான் கேமரா ஆங்கிள் சொல்லும்போது வாசு நடிப்பு வசனப் பகுதியை பார்த்துக் கொள்வார். அதே மாதிரி கேமரா ஆங்கிள்ல இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு அவருக்கு தோணினா எங்கிட்ட சொல்லுவாரு. நாங்க பேசி முடிவு பண்ணி செய்வோம். அதனால எங்களுக்குள்ள எந்த பிரச்னையும் வந்ததில்ல.

பன்னீர் புஷ்பங்கள் படம் முழுக்கவே ஊட்டியில் எடுத்தோம். நாங்க முதற்கொண்டு சுரேஷ்,சாந்தி கிருஷ்ணான்னு மொத்த டீமுமே இளைஞர்கள். எல்லாருக்குமே புதுசா எதாவது செய்யணும்னு துடிப்பு. 21 நாள்ல மொத்த படப்பிடிப்பையும் முடிச்சிட்டோம். உண்மையா சொல்லணும்னா முடிச்சதே எங்களுக்கு தெரியல. அடுத்த நாள் என்ன எடுக்கப்போறோமுன்னு அஸோசியேட் கிட்ட கேட்டா, அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சதுன்னு சொல்றார். அவசரம் அவசரமா டிக்கெட் புக் பண்ணி சென்னை வந்து சேர்ந்தோம். கடைசியா விநியோகஸ்தர்கள் ரொம்ப வற்புறுத்துனதால கமர்சிஷயல் பாட்டு பசங்க ஹாஸ்டல்ல பாடுறமாதிரி இங்க எடுத்து சேர்த்தோம். புட்டேஜ் 23 ரோல் தான். எடிட்டிங்ல மொத 10 ஆயிரம் அடில எல்லாமே ஓக்கே ஷாட். எடிட்டர் லெனினே என்னப்பா வேஸ்டேஜே இல்லையான்னு கேட்டார். பன்னீர் புஷ்பங்கள் பெரிய ஹிட். அதுக்கப்புறம் மதுமலர்,மெல்ல பேசுங்கள், நீதியின் நிழல்ன்னு எட்டு படம் ஒண்ணாவே செய்தோம். மதுமலர் சுகாசினி, பிரதாப் போத்தன் நடிச்சது. அடுத்து பாரதிராஜா புரடக்‌ஷன்ல மெல்ல பேசுங்கள். வசந்த், பானுப்பிரியா நடிச்ச படம். இப்படி வரிசையா எல்லாமே நல்ல பேரை பெற்றுத்தந்த படங்கள். ரெண்டு பேர் டைரக்ட் பண்றப்ப முக்கியமான விஷயம் ஈகோ பார்க்கக்கூடாது. ‘வண்டி உருண்டோட அச்சாணி தேவை’ பாட்டு மாதிரி இட,வல மாடு ரெண்டும் சமமா போனாதான் வண்டி ஓடும். ரெண்டும் ரெண்டு பக்கம் இழுத்தா வண்டி நகராது. அவ்வளவுதான். 

சிவாஜி புரடக்‌ஷன்ஸ்ல நீதியின் நிழல் படம் முடிச்ச பிறகு அடுத்த படம் கொஞ்சம் தள்ளிப்போனது. அந்த சமயத்துல வாசுவோட அப்பா கன்னட படம் ஒன்னை புரட்யூஸ் செய்யறதா இருந்தாரு. அந்த படத்த வாசு தனியா டைரக்ட் பண்ணனும்னு விருப்பப்பட்டார். சரின்னு பேசி சுமூகமாவே பிரிஞ்சிட்டோம். அவருக்கு கமர்சியல் படங்கள் பண்றதுல விருப்பம் அதிகமா இருந்தது. நான் அனந்து சார்,கமலஹாசன் கூட சேர்ந்துட்டு இந்த பக்கம் வந்துட்டேன். ஸ்ரீதர் சார்கிட்ட இருந்து வெளியே வந்து படம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்த போது கமல் கூப்பிட்டார். கமலஹாசன் அப்ப ராஜபார்வை படம் ஆரம்பிச்சு ரெண்டு நாள் ஷூட்டிங் செய்தப்பிறகு நின்னுப்போச்சு. வேற படங்கள்ல கமல் பிசியா இருந்தார். அவர் என்னை கூப்பிட்டு ராஜபார்வைக்கு ஸ்கிரிப்ட் செய்ய சொன்னார்.  நானும் அவர்கிட்ட பண்றேன் உங்களுக்கு புடிச்சிருந்தா தொடர்வோம். இல்லேன்னா பரவாயில்லைன்னு சொல்லிட்டு வந்தேன். நானும் என்னோட நண்பர் ரமணனும் சேர்ந்து இரண்டு நாள்ல அவுட் லைன் ரெடி பண்ணிட்டோம். ரமணன் குடிசை ஜெயபாரதிகிட்ட அஸோசியேட்டா இருந்தவர். கமலுக்கு பிடித்திருந்தது. பிறகு தொடர்ச்சியா அதை பேசி சீன் ரெடி செஞ்சோம்.  வாசு கன்னட படம் பண்ண போனப் பிறகு கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்த கமல் என்னை டைரக்ட் செய்ய சொன்னார். அப்புறம் குணா,சின்ன மாப்ளே, மகா நதி ன்னு வரிசையா வந்துடிச்சி.

இதுக்கிடையில நடிகர் சிவசந்திரன் எங்களுடைய நீதியின் நிழல், கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்துல நடிச்சிருந்தார். அவர் என்னுயிர் கண்ணம்மா படம் டைரக்ட் செய்யறப்ப என்னை வற்புறுத்தி நடிக்க வச்சார். அதுக்கப்புறம் கரகாட்டக்காரன் ஆரம்பிச்சப்ப நீதான் வில்லன் ரோல் பண்றன்னு அமர் சொல்லிட்டார். அதுக்கப்புறம் நடிக்கவும் ஆரம்பிச்சாச்சு. நானா யார்கிட்டேயும் நடிக்கணும் கேட்டதில்லை. வர்ற ரோலை செஞ்சிட்டிருக்கேன்.

ஏப்ரல், 2015.