சிறப்புப்பக்கங்கள்

இளைஞர் சிறப்பிதழ்

சினிமா, ஊடகம், இலக்கியம்

அந்திமழை இளங்கோவன்

1989 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஒரு நாள். சென்னையில் இருக்கும் அந்த முன்னணி பத்திரிகைக்கு என் முதல் படையெடுப்பு நிகழ்ந்தது.வாசலில் நிற்கும் செக்யூரிட்டி தெனாவட்டான குரலில் “என்ன விசயம்?” என்றார். இன்னாரை பார்க்க வந்திருக்கிறேன் என்று ஒரு பெயரை சொன்னேன்.

 “அவர் வரச்சொன்னாரா?”

“ஆமாம்” என்று ஒரு பொய்.

ஒரு நோட்டை எடுத்து முன்னால் போட்டு பெயரை எழுத சொன்னார். காம்பௌண்டிற்குள் நுழைந்தவனை ஒரு அறையில் உட்கார சொன்னார்கள். காம்பௌண்ட் சுவருக்கும் பத்திரிகை கட்டிடத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் இருந்த சிறிய அறை அது. அதில் சில நாற்காலிகள், நான் மட்டும் தனியாக. நிசப்தமான சூழல். முன்னணி பத்திரிகை இயங்குகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அரை மணி நேரம் கழித்து ஒருவர் வந்தார். ஒரு கணம் சினேகபாவத்துடன் பார்த்துவிட்டு “என்ன” என்றார். நான் என்னைப்பற்றியும், கால் நடை மருத்துவம் படிக்கும் மாணவன் என்றும், கதை, கவிதை, கட்டுரை எழுதும் திறமை மற்றும் பல விஷயங்களை கூறிவிட்டு பகுதி நேர பத்திரிகையாளனாக பணிபுரிய விருப்பம் என்றேன். அது பற்றி பேச இன்னாரை பார்க்க வந்தேன் என்று முடித்தேன். காத்திருக்க சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சுமார் முக்கால் மணி நேரம் கழித்து வேறொருவர் வந்து உள்ளே அழைத்து சென்றார். ஓரிடத்தில் உட்கார வைக்கப்பட்டேன். சிறிது நேரம் கழித்து “அவர் வந்தார்”. அந்த மென்மையான முகத்தில் புன்னகை ஏதுமில்லை. கையோடு கொண்டு போயிருந்த என் படைப்புகள் அடங்கிய பைலை அவரிடம் நீட்டினேன். அவரது கைகள் வாங்க முன் நீளவில்லை. மீண்டும் ஒரு முறை என்னைப் பற்றியும், வந்த நோக்கம் பற்றியும் விலாவரியாக கூறினேன். பேசி முடித்தவனை உற்றுப் பார்த்தார். பின் அவர், “தமிழ்நாட்டுல இருக்கிறவாள்ல பாதி பேர் எங்க பத்திரிகைல எழுதணும்னு நினைக்கிறா, அது முடியற காரியமா? புதுசா எழுதறவாள ட்ரெயின் பண்ண எங்களுக்கு நேரமில்ல” என்றார். ஒரு இடைவெளி விட்டு மூன்று வார இதழ்களின் பெயரைக் குறிப்பிட்டு, “அங்க போய் எழுதுங்கோ. உங்க எழுத்து நன்னா இருந்தா நாங்களே கூப்பிட்டனுப்புவோம்” என்று கூறிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் உள்ளே சென்றுவிட்டார்.

சோர்வுடன் வெளியே வந்தேன்.

மறுநாள் காலை அவரது பட்டியலில் இருந்த ஒரு வார இதழின் அலுவலகத்திற்கு இன்னொரு படையெடுப்பு. அந்த அலுவலகம் அண்ணா நகரில் பெண்கள் கல்லூரி ஒன்றின் அருகிலிருந்தது. இந்த அலுவலகத்தில் சுலபமாக ஆசிரியரை பார்க்க முடிந்தது. உட்கார வைத்து பேசினார். படைப்புகளை மேலோட்டமாக படித்து பார்த்தார். “நம்ம ஆபிஸ் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட் மாதிரி ஆயிடுச்சு. ஒரு மாதம் பொறுத்து படைப்புகளை அனுப்புங்கள், பார்க்கலாம்” என்று கூறி அனுப்பினார். காத்திருந்த போது பரிச்சயமான அந்த அலுவலகத்து நண்பர் வெளியே வரும்போது, உங்க டைமிங் சரியில்ல. இரண்டு நாட்களுக்கு முன் தான் உங்களை மாதிரி ஒரு இளைஞர் இங்கிருந்து அந்த (நான் முன் தினம் சென்ற பத்திரிகை அலுவலகம்) கேம்பஸிற்கு சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டார். அதனால் எடிட்டர் கோபத்தில் இருக்கிறார். மற்றொரு நாள் வாருங்கள், வாய்ப்பு கிடைக்கலாம் என்றார். இது நடந்து ஐந்து மாதங்கள் கழித்து “அந்திமழை” இதழ் உதயமானது.

“பின்னாடி பார்க்கலாம்”, “கொஞ்ச நாள் கழித்து வாருங்கள்”, “ரெண்டு நாள் முன்னாடி வந்திருந்தால் உங்களை பயன்படுத்தியிருப்பேன்”, “ஒரு மாதத்திற்கு பிறகு என் செகரட்ரிய பாருங்க”, “நான் இப்ப பிசியா இருக்கேன்”. இப்படி “ இல்லை” என்கிற வார்த்தையை பல ரூபங்களில் தரிசித்திருக்கிறேன். பலரைப்போல் ஆரம்பத்தில் வாழ்வின் சிக்கல்களை, போராட்டங்களை மோசமான ஒன்றாகத்தான் கருதினேன். நம்மிடம் ஏதோ தப்பிருக்கிறது அதனால் தான் நமது வாழ்க்கை போராட்டமாக இருக்கிறது என்றும் தோன்றும். அதற்கு பின் தான் தியோடர் ரூஸ்வெல்ட்டின், “கஷ்டப்படாத, சுலபமான வாழ்வை வாழும் யாரையும் வரலாறு நினைவில் வைத்துக்கொள்ளாது” என்கிற வார்த்தைகள் எனக்கு அறிமுகமாயின.

ஹோண்டா கம்பெனி நிறுவனரான ச்சிரோ ஹோண்டாவை டொயோட்டா கம்பெனி லாயக்கில்லாதவர் என்று வேலை தராமல் நிராகரித்தது.சோனி கம்பெனியின் புகழ்பெற்ற நிறுவனரான அகியோ மொரிடாவின் முதல் தயாரிப்பான ரைஸ் குக்கரால் அரிசியை வேகவைக்க முடியவில்லை. நூறுக்கும் குறைவான யூனிட்டுகளே விற்பனையானது. பிரசித்தி பெற்ற திரைப்பட இயக்குனரான ஸ்பீல்பெர்க்கை சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று சதர்ன் கலிபோர்னியா திரைப்படக் கல்லூரி இரண்டு முறை நிராகரித்திருக்கிறது.மைக்ரோ சாப்ட் ஆரம்பிப்பதற்கு முன் பில் கேட்ஸ் தனது இரு கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆரம்பித்த, Tras o data என்ற நிறுவனம் வெற்றிபெறவில்லை.

போராடிப் போராடி சோர்ந்து போயிருக்கும் இளைஞர்கள், “இளம்பிறையே உன் ஏழ்மையை எண்ணி வருந்தாதே, உன்னுள்தான் பூரண சந்திரன் புதைந்து கிடக்கிறான்” என்ற கவிஞர் இக்பாலின் வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சிக்கல்களும் போராட்டங்களும் மாறு வேடமணிந்து வந்திருக்கும் வாய்ப்புகள். சில நேரம் முயற்சியை கைவிட்டு விடலாம் என்று தோன்றும். அப்போது, ” Darkest hour of the night comes just before dawn” என்பதை நினைவு கொள்ளுங்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், வெற்றி நிச்சயம்.

செப்டம்பர், 2013