சந்தோஷ் ஹரிஹரன் 
சிறப்புப்பக்கங்கள்

இளம் பாடகர்கள்

அரசியல் செய்தியாளர்

கண்ணிமைக்கும் நேரத்தில் புதிது புதிதாய் பாடகர்கள் தமிழ் சினிமாவுக்குள் வந்து போய்விடுகிறார்கள். இசையமைப்பாளர்களும் புதிய குரல்களாகத் தேடித் தேடி அறிமுகப் படுத்துகிறார்கள். இந்நிலையில் நிலைத்து நிற்கக் கூடிய வாய்ப்பும் திறமையும் உடைய சில இளம் பாடகர்கள் இங்கே.

---

சந்தோஷ் ஹரிஹரன், 24  

சங்கர் மகாதேவனை குருவாக வரித்துக்கொண்டிருக்கும் இளம் பாடகர் சந்தோஷ் ஹரிஹரன். 2011 விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மூலமாக பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான சந்தோஷ், திரைப்படத்தில் முதன்முறையாக இசையமைப்பாளர் இமானின் இசையில் சாட்டை படத்தில் பாடிய ‘அடி ராங்கி’ பாடல் மூலம்  அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன்பிறகு திரும்பவும் இமான் இசையில் மனம் கொத்திப் பறவையில் ‘ஊரான ஊருக்குள்ள’ பாடலும்,விஜய் ஆண்டனியும் நான் படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்ல’ பாடலும்  பாடினார். இன்றைக்கும் இசை சேனல்களில் திரும்ப திரும்ப கேட்க,பார்க்கப்படுபவை இவை!

ஹரிஹரசுதன், 24

விஷாலின் பாண்டியநாடு படத்தில் முதலில் வெளியிடப்பட்ட ஒத்தக்கடை ஒத்தக்கடை மச்சான் என்கிற பாடலுக்கு நல்ல வரவேற்பு. இந்தப்பாடலைப் பாடியிருக்கும் ஹரிஹரசுதனுக்கு இது இரண்டாவதுபாடல்! அவர் பாடிய முதல் பாடல்   வருத்தப்படாதவாலிபர் சங்கத்தில் இடம்பெற்றிருக்கும் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்... முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லையென்றாலும் சிறுவயதிலிருந்தே பாடுகிற ஆர்வம் கொண்ட இவருக்கு அடையாளம் கொடுத்ததும் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சிதான். 2011 இல் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் 12 சுற்றுவரை வந்து வெளியேறியவர். அதனால் மனமுடைந்து  இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு டெல்லிக்கு வேலை செய்யப்போய்விட்டார். அதன்பின் அவருடன் பாடிய நண்பர் சந்தோஷிடம் இசையமைப்பாளர் இமான் புதிய குரல் ஒன்று வேண்டுமெனக் கேட்க அவர் இவரைப் பரிந்துரைத்திருக்கிறார். அதுவரை ஏராளமான பாடல்களில் கோரஸ் பாடிக்கொண்டிருந்த ஹரிஹரசுதனுக்கு தனியாகப் பாடும் வாய்ப்பு. 2013 ஜனவரி முதல்நாள் அந்தப்பாடல் பதிவு செய்யப்பட்டதாம். அந்தப்பாடல் வெளிவருமுன்னே இமான் இசையிலேயே இன்னும் சில படங்களில் பாடியிருக்கிறார்.

இந்தப்பாடல் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றதும் இப்போது நிறைய இசையமைப்பாளர்களிடமிருந்து அழைப்பு வந்து ஓய்வின்றிப் பாடிக்கொண்டிருக்கிறார். பாடகராக புகழ் பெற்ற பிறகு குல்தீப்சாகர் என்கிற குருவிடம் ஹிந்துஸ்தானி கிளாசிகல் இசையை முறைப்படி கற்றுக்கொண்டிருக்கிறாராம். இப்போது ஒரு தனியார்நிறுவனதில் வேலை செய்துகொண்டே பாடிக் கொண்டிருக்கிறார்!

மகிழினி, 32

சொய்ங்..சொய்ங்... என்று கும்கியில் இமானின் இசையில் அனைவரின் பாரட்டையும் பெற்றுக் கவனத்தையும் ஈர்த்தவர் வேடந்தாங்கலைச் சேர்ந்த மகிழினி மணிமாறன். இப்போது சென்னைவாசி ஆகிவிட்டார். புத்தர் கலைக்குழுவில் ஓர் அங்கமாக பாடிக்கொண்டிருந்தவர் இன்று தமிழ் சினிமாவில் பரபரப்பான பாடகி. இப்போதைக்கு 27 படங்களில் பாடியிருக்கிறார். பவதாரிணியின் இசையில் ஹாக்கி படத்தில் பாடி கணவர் குழந்தைகளுடன் பறை இசைக் கலைஞர்களாக நடித்துமிருக்கிறார். படம் இன்னும் வெளிவரவில்லை. கும்கியில் பாடுகையில் அவரிடம் பாஸ்போர்ட் கூடக் கிடையாது. இப்போது மலேசியா போன்ற வெளிநாடுகளில் பறந்து பறந்து நிகழ்ச்சிகளில் பாடிக்கொண்டிருக்கிறார். விகடன் 2012 விருது, எடிசன் விருது, விஜய் தொலைக்காட்சி விருது, தமிழக அரசின் கலை வளர் மணி உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.

---

பூஜா, 25

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் இடம் பெற்றிருக்கும் ‘பாக்காத’ பாடலைப் பாடியிருப்பவர்  பூஜா. தாய்மொழி தமிழ்தான் என்றாலும் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஹைதராபாத் என்பதால் படித்தது பாடத்தொடங்கியது எல்லாம் அங்கேதான் என்கிறார் பூஜா.  விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடி வெற்றி பெற்றிருக்கிறார். 2011 செப்டம்பரில் அவர் வெற்றி பெற்றவுடன் இசையமைப்பாளர் ஜீவி.பிரகாஷ்டமிருந்து அன்னக்கொடி படத்தில் பாட அழைப்பு வந்திருக்கிறது. அந்தப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் ராஞ்சனா இந்திப்படத்தில் ஒரு பாடலும் அதன் தமிழ்ப்பதிப்பில் இரண்டு பாடல்களும் பாடியிருக்கிறார். அண்மையில் வெளியான தலைவா படத்தில் இடம்பெற்றிருக்கிற ‘தளபதி தளபதி‘ பாடலும் இவருக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்திருக்கிறது. இப்போது நிறையப்படங்களில் பாடிக்கொண்டிருக்கும் இவர் இதுவரையில் மேடைக்கச்சேரிகளுக்காக பாதி உலகம் சுற்றிவந்துவிட்டாராம். மங்கையர்மலர் இதழின் விளம்பரப்படத்தில் நடித்துமிருக்கிறார். இவருடைய அம்மா முப்பதுஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டிருந்த வங்கி வேலையை விட்டு விட்டு ஹைதராபாதிலிருந்து சென்னைக்கே வந்துவிட்டார்கள். தமிழோடு இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளும் நன்றாகத் தெரியும் என்பதால் இம்மூன்று மொழிகளிலும் பாடுகிற வாயப்புகள் தேடிவருகின்றனவாம்.  இன்னும் குறைந்தது பத்தாண்டுகளுக்கு நான் பிஸியாக இருப்பேன் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார். 

சக்திஸ்ரீகோபாலன்

சக்திஸ்ரீகோபாலன் 24

உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

    நான் கேரளாவில் பள்ளிப்படிப்பை முடித்தேன். என் தாய்மொழி தமிழ்தான் என்றாலும் அப்பா வேலை நிமித்தமாக கேரளா போனதால் நான் பிறந்தது, வளர்ந்தது படித்தது எல்லாம் கேரளாவிலுள்ள கொச்சியில். பள்ளியில் படிக்கும்போதே பாட்டி எனக்கு பாட்டு சொல்லிக்கொடுப்பார். அதன்பின் ஆர்கிடெக்ட் படிப்பதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். இங்கு வந்து எஸ்எஸ் மியூசிக் சேனலில் 2008 இல் நடந்த வாய்ஸ்ஹண்ட் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டேன். அப்போதே நானே கம்போஸ் செய்து பாடல்களை இணைய தளத்தில் போடத் தொடங்கினேன்.

திரைப்படங்களில் பாடத் தொடங்கியது பற்றி?

    இணையதளத்தில் என்னுடைய பாடல்களைப் பார்த்து குருபிரசாத் என்கிற கன்னடஇசையமைப்பாளர் கன்னடப்படத்தில் பாடவைத்தார். நான் பாடிய முதல்பாடல் அது. ஆனால் அது வெளியாகவே இல்லை. தமிழில், விஜய்ஆண்டணி இசையில் உருவான தநா.அல.4777 என்கிற படத்தில் முதன்முதலாகப் பாடினேன். அதன்பின் அவருடைய இசையிலேயே உருவான மக்காயாலா பாடல் உட்பட நிறையப்பாடல்களைப் பாடிவிட்டேன். இந்த மாத்தில் மட்டும் ராஜாராணி, இரண்டாம்உலகம், ஆரம்பம் ஆகிய படங்களின் பாடல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் நானும் பாடியிருக்கிறேன்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடியது எப்படி?

    வேறோரு படத்தின் பாடல்பதிவு அவருடைய ஸ்டுடியோவில் நடந்தது. அப்போது நான் வெளியில் உட்கார்ந்து பாடல் ப்ராக்டிஸ் செய்து கொண்ருந்தேன். அப்போது ரகுமான் சார் என்னைத் தாண்டிப்போயிருக்கிறார். அவரைக் கவனிக்காமல் நான் பயிற்சி செய்துகொண்¬ருந்தேன். என குரலைக் கேட்ட அவர் மானேஜரிடம் சொல்லி என்னை வரவழைத்துப் பாடவைத்தார். தொடக்கத்தில் அவருக்கு இந்தி கஜினி தொடங்கி நிறைய கோரஸ் பாடிக்கொண்டிருந்தேன். கடல் படத்தில் இடம் பெற்ற நெஞ்சுக்குள்ளே பாடல் எனக்குப் பெரிய அடையாளம் கொடுத்தது.

படித்த படிப்பு என்ன ஆனது?

    நான் பகுதி நேரமாக கட்டடங்கள் வடிவமைக்கும் வேலைகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறேன். அண்மையில் திறக்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமான் சாரின் இசைக்கல்லூரிக் கட்டடத்தை நான்தான் வடிவைமைத்திருக்கிறேன்.

இரண்டிலும் கவனம் செலுத்த நேரமிருக்கிறதா?

    நான் படிக்கிற காலத்திலிருந்தே ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்து பழக்கப்பட்டிருக்கிறேன். எனவே அதில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை.

நீங்களே இசையமைக்கும் திட்டமிருக்கிறதா?

    ஒரு முழுநீளத் திரைப்படத்திற்கு இசையைமைக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்றே நினைக்கிறேன். அந்த நம்பிக்கை எனக்கு வரும்போது நிச்சயம் இசையமைப்பேன்.

நடிக்கிற திட்டம் இருக்கிறதா?

    என்னிடம் எதற்கு இந்தக்கேள்வி? நான் நண்பர்கள் எடுத்த சில குறும்படங்களில் நடித்திருக்கிறேன். திரைப்படங்களில் நடிப்பது பற்றி யோசித்தது இல்லை.

நல்ல இயக்குநர் பெரியநிறுவனம் கூப்பிட்டால் நடிப்பீர்களா?

    விடமாட்டீர்கள் போலிருக்கிறதே? அப்படி நல்ல அழைப்புகள் வந்தால் நடிப்பது பற்றி யோசிப்பேன்.

அக்டோபர், 2013.