சிறப்புப்பக்கங்கள்

இலக்கியம்

Staff Writer

எழுத்துலகம் ஒவ்வொரு புதிய இளம் எழுத்தாளனின் வருகையின்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. தங்கள் வருகையால் அதைச் செழுமைப்படுத்தி நடைபோடச்செய்யும் இளைஞர்களில் சிலரைப்பற்றிய குறிப்புகள்.

*****

கௌதம சன்னா: தலித்திய சிந்தனையாளரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளருமான கௌதம சன்னா, சமீபத்தில் வெளியான குறத்தியாறு என்ற நாவலின் மூலம் தமிழ்ப் படைப்புலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைச் சேர்ந்தவரான இவர் வழக்குரைஞரும் கூட. 1995-ல் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தவர் தொடர்ந்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவந்திருக்கிறார்.

சிறுபத்திரிகைகள்தான் பெரும்பாலும் இவரது எழுத்தைத்தாங்கி வந்திருக்கின்றன. தமிழ் சிந்தனை உலகில் தலித்திய சிந்தனை ஆக்கம் பெற்ற காலகட்டத்தில் அதற்கு கௌதம சன்னாவும் பங்களித்தவர். அயோத்திதாச பண்டிதர் வாழ்க்கைவரலாறு, பண்டிதரின் கொடை போன்ற பல நூல்களை எழுதியிருப்பவர், அன்னை நீலாம்பாள் உரையை தொகுத்து வெளியிட்டிருக்கிறார். தமிழ் உயிர் ஓவியத்தொகுப்பு என்ற நூலும் வந்திருக்கிறது. “மகேந்திர பல்லவன் எழுதிய மத்தவிலாசப் பிரகடனம் என்ற நூலுக்கு 1400 ஆண்டுகள் கழித்து நான் மறுப்பு எழுதுகிறேன். அது சுத்தவிலாச விவேகம் அல்லது மத்தவிலாச கண்டனம் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. புனைவுகளில் தொண்டைமண்டலம் சார்ந்து எழுதுகிறேன். அபுனைவுகளை தலித்தியம்,. மார்க்சியம், பௌத்தம், அம்பேத்கரியம் சார்ந்து எழுத விரும்புகிறேன்” என்கிறார் இவர்.

குணாகவியழகன்: தமிழகத்தில் வாழும் எழுத்தாளர்களின் வாழ்வைப் போலில்லை ஈழ எழுத்தாளர்களின் நிலை. இனப்படுகொலைக்குப் பின்பான தமிழீழ இலக்கியச் சூழல் நம் கற்பனைக்கும் எட்டாதது. அதிகாரத்தோடு ஒத்தூதும் இலக்கியவாதிகள் பிழைக்கத் தெரிந்தவர்கள்.

இப்படியான சூழலில் தான் ‘தன்னுடைய இளம் வயதிலிருந்து ஈழப் போராட்டத்தில் பங்கெடுத்த, 1998 க்குப் பிறகு ஊடகவியலாளராகவும், அரசியல் விமர்சகராகவும் தமிழ் பரப்பில் அறியப்பட்ட குணா கவியழகன் நம்பிக்கையை விதைக்கிறார்.

‘தமிழ் ஈழ போராட்டத்தின் திசைவழி ஒன்று அடைபட்டது ஏன்? எதனால்? எதற்காக ?’ என்ற இவரின் விமர்சன தொடர் அதிக கவனத்தை பெற்றது. இவரின் முதல் நாவலான ‘நஞ்சுண்டகாடு‘ தமிழீழப் போராட்டத்தின் இறுதிப் போருக்கு முன்பான சமாதான காலத்தில் எழுதப் பட்டாலும் முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு பின்பே வெளியானது .

நஞ்சுண்ட காடு புதினம் கனடா தமிழ் இலக்கிய தோட்ட விருது மற்றும்  2014 க்கான சிறந்த நாவல் விருதை கலகம் அமைப்பிடமிருந்தும் பெற்றது .

விடமேறிய கனவு என்ற தனது இரண்டாவது நாவலின் வழியே முள்ளி வாய்க்காலுக்குப் பின்பான போர்க்கைதி  முகாம் துயரங்களோடு, அறத்தால் எண்ணற்ற உயிர்களால் எழுப்பப் பட்ட உரிமைப் போராட்டத்தின் தோல்வியையும் பேசுகிறார்.

‘வாழ்ந்த வாழ்வு குறித்து கர்வம் எதுவும் இல்லை. கழிவிரக்கமும் எனக்கு இல்லை. கால நதியில் என் கடப்பாடுகள் நிறைவேற்றப்பட்டன. மேலும் படும்’ என கலைஞனுக்கே உண்டான மனோபாவத்துடன் சொல்லும் குணா கவியழகன்  ‘அலைக்கழித்த அபூர்வமான வாழ்வின் தருணங்களை கலையாக்கி காலக் கைமாறு செய்வது’ தான் தன் எழுத்தின் நோக்கமெனச் சொல்கிறார் .

நாற்பது வயதை நெருங்கும் குணாகவியழகன் தற்போது ஐரோப்பாவில் வசித்து வருகிறார்.

விநாயகமுருகன்: கும்பகோணத்தைப் பூர்விகமாககொண்ட விநாயகமுருகன், இரு நாவல்கள் (ராஜீவ் காந்தி சாலை, சென்னைக்கு மிக அருகில்) எழுதி உள்ளார். ஒரு கவிதைத்தொகுப்பு கோவில் மிருகம் என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. கும்பகோணம் நகர மேனிலைப்பள்ளியில் படித்ததுதான் தன்னுடைய இலக்கிய ஆர்வத்துக்குக் காரணமாக இருந்தது என்கிறார். 95-ல் தமிழ் கம்ப்யூட்டர் இதழில் எழுதியதுதான் முதல் கட்டுரை. பின்னர் அந்த பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். இப்போது  மென்பொருள் துறையில் வேலைபார்க்கிறார். பல பத்திரிகைகளில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவரும் வி.மு. தன்னுடைய மூன்றாவது நாவலை இப்போது எழுதிவருகிறார். தன்னுடைய முதல் இருநாவல்களிலும் சமகால பிரச்னைகளை அமைதியாக அணுகியதற்காக விமர்சன கவனம் ஈர்த்தார்.“ புறச்சூழல் கொடுக்கும் அழுத்தத்திலிருந்து தப்பிக்க புனைவுக்குள் ஓர் உலகை சிருஷ்டித்துப் பார்க்கிறேன்” என்கிறார் வி.மு.

கவிதா சொர்ணவல்லி: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிறந்த கவிதா சொர்ணவல்லி, மிகவும் சீரான, கூர்மையான கதைமொழி கொண்டவர். பொசல் என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. கல்லூரிப் படிப்புக்குப் பின்னால் சென்னைக்கு வேலை தேடிவந்தவருக்கு இருந்த இயல்பான வாசிப்பு ஆர்வமும் எழுத்துப்பயிற்சியும் நாளிதழ் ஒன்றில் வேலை வாங்கித் தந்தது. தொடர்ந்து நவீன இலக்கிய அறிமுகம் கிடைத்தது. விகடனில் வெளியான இவரது சிறுகதைகள் பரவலான கவனத்தைப் பெற்றன. “ஜெயமோகன், அம்பை, பிரான்சிஸ் கிருபா போன்ற எழுத்தாளர்களின் எழுத்துகள் மிகவும் பிடிக்கும்.  மென்மையான மானுட உறவுகளை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொள்வது போன்றவை பற்றி என் கதைகளில் எழுத விரும்புகிறேன்.” என்கிறார் கவிதா. வலிமையான தலித்தியம் பேசும் நாவலை எழுதுவது எதிர்காலத் திட்டம்.

சயந்தன்: சுவிட்சர்லாந்தில் வசிக்கும் சயந்தனுக்கு சொந்த ஊர் யாழ்ப்பாணத்தில் தொல்புரம் என்ற குக்கிராமம். போரால் புலம்பெயர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவர். ஆஸ்ரேலியாவில் தகவல் தொழில் நுட்பத்தில் உயர்கல்வி பயின்றவர். 13 வயதுகளில் எழுதத்தொடங்கியவர். ஆனால் 18 வயதில்தான் முதற்கதை பத்திரிகையில் வெளியானது.

இவரது 23 வயதில்‘அர்த்தம்’ என்ற முதலாவது சிறுகதைத்தொகுதி வெளிவந்தது. ‘பெயரற்றது’ என்ற கதைத்தொகுதி 2013-ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது.  இவரது ஆறாவடு நாவல் 2012-ல் பெரும் கவனத்தை தன் மொழியாலும் கதைசொல்லும் முறையாலும் ஈர்த்தது. தவிர படைப்புக்கள் அந்திமழை, அம்ருதா, காலச்சுவடு, கல்குதிரை, காலம், இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.

“செங்கை ஆழியான் முதலானோரைப் படித்து எழுதத்தொடங்கினாலும் எழுத்தின் சாத்தியங்களையும் உத்திகளையும் பின்னாளில் பலரைப் படித்துக் கண்டடைந்தேன்.

என் அடுத்த நாவல் ஆதிரை 2015 நவம்பரில் வெளியாகிறது. ஈழ யுத்தம் எல்லோர் முதுகிலும் விழுந்த அடிதான். அந்த அடிகளை வாய்ப்புக்களாக மாற்றும் தந்திரமும் விச்சுழித்தனமும் தெரியாத சனங்களின் வாழ்வும் கதையும் இது பேசுகிறது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் கலாசார நெருக்கடிகள், வாழ்வு பற்றிய ஒரு நாவல் எழுதுவது எதிர்காலத் திட்டம். புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாகிவிட்ட இரண்டாம் தலைமுறையினருக்கென்று கலாசார ரீதியிலும் வாழ்க்கை முறைமையிலும் தனித்துவமான பிரச்சனைகள் இருக்கின்றன. அவை நமக்குப் புதியவை. குறிப்பாக இரட்டைக் கலாசாரம். வீட்டிலும் வெளியிலும் வெவ்வேறு. இவற்றையெல்லாம் பதிவு செய்யும் அந்த நாவல்” என்கிறார் சயந்தன்.

நேசமித்திரன்: கம்பம் தம்மம்பட்டியில் பிறந்த நேசமித்திரனின் இயற்பெயர் திருராம்சங்கர். இவரது மாமா நூலகர் என்பதால் சின்னவயசிலேயே வாசிப்பின் மீது ஆர்வம் வந்துவிட்டது. படிப்பை முடித்தபின் வட இந்தியாவில் வேலைபார்த்து இப்போது நைஜீரியாவில் பணிபுரிகிறார். பெண்ணியம், சமகால சமூகத்தில் நவீனத்துவத்தின் பாதிப்புகள் குறித்து இவரது எழுத்துகள் பேசுகின்றன. கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள், மண்புழுவின் நான்காவது இதயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. வலசை என்ற பெயரில் ஒரு சிற்றிதழையும் நடத்திவருகிறார். உடலரசியல், பாலின சிறுபான்மையினர், ஆட்டிசம், குழந்தைகள் மீதான வன்முறை, நாடுகடத்தப்பட்ட படைப்பாளிகள் பற்றிய விஷயங்களைத் தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது. காத்திரமான வாசிப்பும், வலிமையான கருத்துகளும் கொண்ட இளைஞராக நேசமித்திரன் நவீன தமிழ் இலக்கிய உலகில் உலவுகின்றார்.

மண்குதிரை: புதிய அறையின்சித்திரம் என்ற கவிதைத் தொகுப்பு மூலம் கவனம் ஈர்த்த மண்குதிரை என்கிற ஜெயகுமார் இப்போது தி ஹிந்து தமிழ்ப் பதிப்பில் பணிபுரிகிறார். பள்ளியில் படிக்கும்போது ஓர் ஆசிரியர் மூலமாகக் கலாப்ரியாவின் கவிதைகள் அறிமுகமாயின. பின்னர் சுந்தர ராமசாமியின் கதைகள். அதன் பின்னர் இவரது இலக்கிய வாசிப்பு பரவலாகியது. பொறியியல் படித்துவிட்டு மொரிசியஸில் சில ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு சென்னைக்கு வந்தவர், ஊடகத்துறையில் வேலைக்கு சேர்ந்தார்.“இந்த ஆண்டு நான் மொழிபெயர்த்த கவிதைகள் தொகுப்பு ஒன்று வெளிவருகிறது. இலக்கியக் கட்டுரைகளை தொகுத்து வெளியிடும் திட்டமும் உள்ளது’ என்று மென்மையாகச் சொல்கிறார் மண்குதிரை. முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய இலக்கிய மதிப்பீடுகளைப் பதிவு செய்யவேண்டும் என்பது இவரது ஆசை. இவரது கவிதைத் தொகுப்பு நெய்தல் அமைப்பின் ராஜமார்த்தாண்டன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். மண்குதிரை என்பது இவரது பால்யகால நினைவுக்காக சூட்டிக்கொண்ட புனைபெயராம்!

என்.ஸ்ரீராம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே செங்காட்டூரைப் பூர்வீகமாக கொண்டவர், தாராபுரம் பிஷப்தார்ப் கல்லூரியில் இளங்கலை (கூட்டுறவு) படித்தவர். கொங்கு நில காட்சிகளையும் அசலான மனிதர்களின் வாழ்வையும்  நவீன இலக்கியத்தில் பதிவுபடுத்தி வருவதோடு அழிந்துவரும் தொன்மையான கதையாடல்களையும் வட்டார வழக்குகளையும் மீட்டெடுத்து வருபவர். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாக எழுதிவருகிறார். இவரின் சிறுகதை தொகுப்புகள்: வெளிவாங்கும் காலம் (2003), மாடவீடுகளின் தனிமை(2007), அத்திமரச் சாலை (2010), கெண்டைமீன்குளம்(2012), மீதமிருக்கும் வாழ்வு(2013). 

கணையாழி வாசகர் வட்ட பரிசு (2001), இலக்கிய சிந்தனை பரிசு (2007), சுஜாதா உயிர்மை விருது (2014) போன்றவற்றைப் பெற்றிருக்கிறார். இவர் தற்போது தொலைக்காட்சி ஊடகத்தில் பணிபுரிந்து வருகிறார். உலக சினிமா மற்றும் உலக இலக்கியத்திலும் ஆழ்ந்த பரிச்சயம் கொண்டவர்.

சென்னையில் வசித்து வருகிறார்.

செப்டெம்பர், 2015.