கோவை நகரின் நுரையீரல் பகுதி. ஒரு ஞாயிறு காலை 11 மணி. பொன்னையராஜபுரம், மாரண்ண கவுடர் உயர்நிலைப்பள்ளி வகுப்பறை ஒன்றில் 20-25 பேர் கூடியிருக்கும் சிறுகூட்டம்தான்.
ஆனால் அதில் கவிஞர்கள் கனல் மைந்தன், அறிவன், அவைநாயகன் என ஆழ்வாசிப்பு இலக்கியமுகங்களை தரிசிக்க முடிகிறது. கலந்துரையாடல், விவாதம், ‘மகேந்திரன் கோ'வின் ‘மழை நிரம்பிய கால் சட்டைப் பை' என்ற கவிதை நூலின் வெளியீடு, அதன் மீதான மதிப்புரை என தொடர்கிறது. இது ‘களம்' அமைப்பின் 83 ஆம் மாதாந்திர இலக்கிய நிகழ்வு. 70 வயது கடந்த நிலையிலும் தொடர்ந்து நடத்துபவர் ஆறுமுகம். ‘‘1980-ல் ஞானி தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. 10 வருஷம் வ.உ.சி. பூங்கா புல்தரையில் நடத்தினோம். அப்புறம் 10 வருஷம் நரசிம்மலு நாயுடு பள்ளியில். அப்புறம் இங்கே நடத்தறோம்!'' என்று பழையதை நினைவு கூர்கிறார்.
அடுத்து திவ்யோதயா ஹால். நகரின் இதயப்பகுதி. தமுஎகச நடத்தும் சி.ஆர். ரவீந்திரன் படைப்புகள் குறித்த படைப்பரங்கம். ச.தமிழ்செல்வன் உரையாற்றுகிறார். இடையிடையே கைதட்டல். அரங்கில் நூறுக்கும் குறையாத இலக்கிய முகங்கள். அதில் 99.99 சதவீதம் பேர் கதையோ, கவிதையோ, கட்டுரையோ நூல்களாக வெளிக் கொண்டு வந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
சிறப்பரங்கம் என்பதால்தான் இது இங்கே. மாதாந்தர இலக்கியக்கூட்டம் என்பது மாதந்தோறும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை காலை, இங்கிருந்து அரை கி.மீ தள்ளியுள்ள தாமஸ் கிளப்பில் நடக்கும். குறைந்தபட்சம் 30&40 பேர் இருப்பர். அப்படி இதுவரை இவர்கள் 211வது இலக்கிய சந்திப்பு நிகழ்வை நடத்தி முடித்திருக்கிறார்கள்.
இதையடுத்து காந்திபுரம் நகர்ந்தால் கிராஸ்கட் ரோடு கிரேசியர் பார்க் கட்டடம். மேல்மாடி அரங்கு. நடுநாயகமாய் கவிஞர் கலாப்ரியா& 50 பேனர் வரவேற்கிறது. கலாப்ரியாவை நடுவில் அமர்த்தி விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம், ஜான்சுந்தர், ஜெயாபுதீன், அம்சப்பிரியா, இரா. பூபாலன் என பத்துக்கும் மேற்பட்டோர் அவரது படைப்புகளை திறனாய்கிறார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கேட்பாளர்களாக அமர்ந்திருக்கிறார்கள். நிகழ்வு முடிவில் ஆளாளுக்கு தாம் எழுதிய கவிதை நூலை கலாப்ரியாவுக்கு பரிசாக அளித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இலக்கிய சந்திப்பு என்ற பேனரில் இப்படியான மாதாந்தர இலக்கியக் கூட்டங்கள் 109 ஐ நடத்தி முடித்திருப்பவர்கள் கவிஞர்கள் இளஞ்சேரல், இளவேனில்.
இங்கிருந்து 10 கிலோமீட்டர் மேற்கே நகர்ந்தால் வேலாண்டிபாளையம். கோவையின் புறநகர் பகுதி. ஜே.பி.பர்னிச்சர் கட்டிடத்தின் மேல்மாடி. ஹால்.
சங்கமம் என்ற பேனரில் மாதத்தில் இரண்டாவது, நான்காவது சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் மாலை நேரங்களில் 50 முதல் 100 கலை இலக்கிய கர்த்தாக்களையாவது காண முடிகிறது. கூட்டம். பறையிசை என தூள் பறக்கிறது. வருடா வருடம் இலக்கிய, சமூக ஆளுமைகளுக்கு பாராட்டு விழா. இது தொடங்கி 15 ஆண்டுகளாகிறது. இடதுசாரி சிந்தனையாளர்கள், கட்சி சாராத இலக்கியவாதிகள் ஆக்கபூர்வமாக பேசி, செயலாற்றி கூடிக் கலைய ஒரு இடம் வேண்டும் என ஆரம்பித்தது. இன்றைக்கு 300க்கும் மேற்பட்ட கலை, இலக்கிய கூட்டங்களை நடத்தி விட்டார்கள். இதற்கு தலைவர் ஆர்.ராமசாமி, செயலாளர் எல்.ஜான்.
இங்கிருந்து நகர்ந்தால் மணி ஸ்கூலில் நடக்கும் கம்பன் கழக நிகழ்ச்சிகள், சவுரிபாளையத்தில் டாக்டர் சுப்பிரமணியத்தின் தலைமையில் இயங்கும் கம்பன் கலைக்கூடம், கவிஞர் செல்வகணபதி குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா வாசகர் வட்டம் மற்றும் விருதுகள் விழா, மாணிக்கம் தலைமையில் இயங்கும் பாரதி இலக்கியப் பேரவை, இயாகாகோ சுப்பிரமணியம் நடத்தும் நன்னெறிக்கழகம்,
துரைசாமி ஒருங்கிணைந்து நடத்தும் ஒரிசா தமிழ் சங்கம், பிஎஸ்ஜி கல்லூரியில் இயங்கும் வானவில் அமைப்பு, கேஎம்சிஎச்சின் உலக தமிழ் பண்பாட்டு மையம், பேரூர் தமிழ்சங்கம், பொள்ளாச்சியில் மாதந்தோறும் கூட்டங்கள் கூட்டும் கவிஞர்கள் அம்சப்ரியா, பூபாலன் வழிநடத்தும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம், அமரர் நா.மகாலிங்கம் உருவாக்கிய இராமலிங்கர் பணி மன்றம், வருடந்தோறும் வாழ்நாள் சாதனையாளர்,
சிறந்த கவிஞர்களுக்கான விருதுகளை அளிக்கும் கவிஞர் சிற்பி அறக்கட்டளை அமைப்பு...
இப்படி கோவையை பொறுத்தவரை எதற்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ இலக்கிய அமைப்புகளுக்கும், இலக்கிய அளவளாவலுக்கும் பஞ்சம் இருப்பதேயில்லை!
‘‘இங்குள்ள கலை, இலக்கிய அமைப்புகளின் ஆதி அந்தம் இன்னமும் கூடுதல் சுவாரஸ்ய மிக்கது!'' என்று அந்தக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார் விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம்.
‘‘1960களின் கடைசியில் சிலோன் எழுத்தாளர் செ.கணேசலிங்கம் நூலுக்கு காராளன் என்பவர் அணிந்துரை தந்திருந்தார். அவருடன் இருந்த ஆனந்தரங்கன், கோவை காந்தி அமைதி நிறுவனம் தலைவர் சி.பி.சடகோபன் போன்றோரை இணைத்து நண்பர்கள் இலக்கிய சங்கம் என்று ஒன்றை ஆரம்பித்தோம். அந்த அமைப்பின் நிகழ்ச்சியில் நா.பார்த்தசாரதி கலந்து கொண்டிருக்கிறார். சி.பி. சடகோபனின் காந்தி அமைதி நிறுவனமும் காந்தியக் கொள்கையை வலியுறுத்தி நிறைய காந்திய சிந்தனைக் கூட்டங்களை நடத்தி வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் கோவை தேவாங்கர் பள்ளிக் கட்டடம் அருகில் உள்ள சன்மார்க்க சங்கக்கட்டடம்தான் இலக்கியவாதிகளின் கூடுகை. ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி கட்டாயம் இருக்கும் என்பதால் அத்தனை பேருமே அங்கே ஆஜராகி விடுவார்கள். அதற்கேற்ப நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடக்கும். அதே காலகட்டத்தில் சேக்கிழார் மன்றம் சிலப்பதிகார மழையை பொழிவித்தது. நன்னெறிக்கழகத்தை பாபுராவ் என்பவர் தொடங்கினார். இப்போது அந்த அமைப்பைத்தான் இயாகாகோ சுப்பிரமணியம் தலைமையேற்று நடத்துகிறார்.
வானம்பாடி இதழில் சிற்பி, மீரா, புவியரசு, பாலா, அக்னி என களை கட்டினார்கள். அது இதழாக நடந்தாலும் வேளாண் கல்லூரியில் வைத்து கவிராத்திரி நடத்தியது சிறப்பு. ஒருவர் கவிதை வாசித்து முடித்தால், அதிலிருந்து அடுத்த கவிஞர் கவிதையை தொடங்குவார். இன்றைக்கு சன் டிவி பட்டிமன்றங்களில் கலாய்க்கும் சாலமன்பாப்பையாவுக்கு முதன்முதலாக களம் அமைத்துக் கொடுத்தது கோவைதான். மணி ஸ்கூலை மையமாக வைத்து பாரதி இலக்கியப் பேரவைக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்த மாணிக்கம் தேவாங்கர் ஸ்கூல் மைதானத்தில் வைத்து சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தை நடத்தினார். அதை அப்படியே பொதிகை தொலைக்காட்சியில் ஒளி பரப்பு செய்தார் முன்னாள் தொலைக்காட்சி இயக்குநர் நடராஜன். அதுக்குப்பின்னாலதான் சன் டிவி பட்டிமன்றத்தில் எல்லாம் சாலமன் பாப்பையா வந்தார். விஜயா பதிப்பகம் 1979ல் வாசகர் திருவிழாவை நடத்த ஆரம்பித்தது. இன்று விஜயா வாசகர் வட்டம் என்கிற பெயரில் புதுமைப்பித்தன் விருது, ஜெயகாந்தன் விருது, வை.கோவிந்தன் விருது எல்லாம் கொடுத்துட்டு இருக்கோம்!''
ஜனவரி, 2020.