சிறப்புப்பக்கங்கள்

இருபத்தைந்து ஆண்டுகள்...

அந்திமழை இளங்கோவன்

பத்திரிகைத் துறை என்னை ஏன்,  எப்படி வசீகரித்தது என்று இன்று வரை புரியவில்லை.

1990 ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் ஐந்தாம் நாள் ஆசிரியராக நான் தயாரித்திருந்த முதல் இதழை புரட்டிக் கொண்டிருந்தேன். கல்லூரி காலம் முழுவதும் சிந்தனை செயலெல்லாம் பத்திரிகையின் மீதுதான்.

படிப்பு முடிந்த பின் முழுநேர பத்திரிகையாளனாகத்தான் என் வாழ்வு தொடர்ந்திருக்க வேண்டும். ஏதேதோ காரணங்கள் . நான் படித்த கால்நடைத்துறை சார்ந்த வேலையில் தொடரவேண்டிய கட்டாயம். ஐந்து ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவன வேலையை உதறிவிட்டு முழு நேர பத்திரிகையாளனாய் குஷியுடன். நல்ல டீம், பிடித்த வேலை மனசுக்கு திருப்தியுடன். ஆனால் குழந்தை பிறந்து பொறுப்புள்ள குடும்பஸ்தனாக இருக்க வேண்டிய நேரத்தில் இப்படி முடிவெடுக்கலாமா என்று குடும்பத்திற்குள் வசை கேட்க வேண்டியதாயிற்று.

அப்போது எனது நண்பர் ஒருவர் பத்திரிகையாளனாக இருப்பதற்கு ஏன் பிரியப்படுகிறாய் ? என்று கேட்ட போது , ‘As a journalist you are essentially running to things that other people are running away from ‘ என்கிற Lester-இன் வார்த்தைகளை முன்வைத்தேன்.

2004 ஆம் ஆண்டு அந்திமழை இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது. 2012 ஆகஸ்டில் அச்சில் ஆரம்பித்து நாற்பது மாதங்கள் கடந்துவிட்டன.

ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு அடையாளமிருக்கிறது. அந்திமழைக்கான அடையாளமாக சிறப்பிதழ்களை உருவாக்கினோம்.

வேலைக்கு போகாமல் வாழ்வது எப்படி? பேசித் தீர்த்த பொழுதுகள்... நீயா நானா? உத்தம வில்லன்கள், நீங்களும் கடத்தப்படலாம், கட்சிக்குள் கலகம்,  குருசிஷ்யன், கரிகாலன் முதல் பிரபாகரன் வரை, தலைமைக்கு மிக அருகில் என்று வித்தியாசமான சிறப்பிதழ்களாக இதுவரை 34 உருவாக்கியுள்ளோம். இந்த இதழில் இதழியலின் ஒரு கூறு சிறப்பிதழாக விரிந்துள்ளது. மூத்த பத்திரிகையாளர்கள் அணிவகுத்துள்ளனர்.

வாசிப்பனுபவத்தை கொண்டாடுவது தான் எங்கள் நோக்கம்.

ஒவ்வொரு இதழும் புதுப்புது அனுபவங்களை முன்வைக்கும். படித்து முன் மாதிரியாக எடுக்கத் தகுந்த வெற்றிக்கதைகளை தொடர்ந்து வெளியிடுவோம்.

‘To hell with circumstances; I create opportunities ‘என்ற Bruce Lee யின் வார்த்தைகளின் உதாரணமாகி இளைஞர்கள் புதுப்புது வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

கடந்த 25 ஆண்டுளில், உன் கனவுகளை நடுவீதியில் அம்போ என்று விட்டு ஓடிவிடு என்று என்னை மிரட்டியிருக்கிறது காலம்.

சிக்கல்கள் வரும் போதெல்லாம் என் கனவுகளை இறுக்கமாக கைப்பற்றிக் கொள்வேன் .

என் நண்பர் ஒருவர் தன் கனவுப் பாதையில் சிக்கல் வரும் போதெல்லாம் Harriet Tubman -னின் ‘Every great dream begins with a dreamer. Always remember, you have within you the strength, the patience, and the passion to reach for the stars to change the world ’’   வாசகத்தை மனதில் கூறிக் கொள்வாராம்.

இந்த இருபத்தைந்து ஆண்டுகளாக என் கனவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவிய வாசகர்கள், விமர்சகர்கள்,நண்பர்கள்,உறவுகள் யாவருக்கும் நன்றி..

  

என்றும் உங்கள்

அந்திமழை இளங்கோவன்                   

பிப்ரவரி, 2016.