சிறப்புப்பக்கங்கள்

இரண்டாயிரத்தில் ஒருவன்!

ஜெ. ராம்கி

நான் பாட்டுக்கு என் வழியிலே போயிட்டிருக்கேன்... வம்புக்கு இழுக்காதீங்க'

‘நேத்து கூலி, இன்னிக்கு நடிகன்... நாளைக்கு?'

‘நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. எப்ப வரணுமோ, அப்போ கரெக்டா வருவேன்'

90களின்  சினிமாவில் ரஜினி பேசி, பரபரப்பை ஏற்படுத்திய பன்ச் வசனங்கள் இவை. அண்ணாமலை என்னும் பால்காரர் கதாபாத்திரம் பேசிய வசனமாக நினைக்கவில்லை. கூலியாக இருந்து, நடிகனாக நடிப்பவர் பேசிய வசனமாகவும் நினைக்கவில்லை. முத்து என்னும் சாதாரண கூலி வேலை செய்பவர் பேசும் வசனமாவும் நினைக்கவில்லை. ரஜினி என்னும் சூப்பர் ஸ்டார் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை விளக்கும் வசனமாக புரிந்து கொள்ளப்பட்டது. சினிமா ரஜினியும், அரசியல் ரஜினியும் ஒன்றாக இணையும் அபூர்வ தருணம் அது. திரையில் தோன்றி ரஜினி பேசும் வசனம், நேரில் வந்து ரஜினி பேசும் அரசியல் வசனமாகவே ரசிகர்கள் நினைத்தார்கள்.

90களில் ரஜினி ஏற்ற கதாபாத்திரங்கள் ஆட்டோ ஓட்டுநர், பால்காரர், கூலி என சாமானியர்களாகவே காட்டப்பட்டன. படத்தின் கதைக்களத்தில் அரசியலோ வரலாறோ, சமூக அவலங்களுக்கு எதிரான காட்சியமைப்புகளோ இருந்ததில்லை. குறிப்பாக சாட்டையடி அரசியல் வசனங்கள் இருந்தில்லை. வழக்கமான மசாலா படமாக இருந்தாலும், ஏதோ ஒரு காட்சியில், ஏதோ ஒரு கணத்தில் பேசிய வார்த்தைகள்தான், அரசியலில் இன்று வரை சாகாவரம் பெற்றிருக்கின்றன. நிஜ ரஜினியையும் நிழல் ரஜினியையும் இணைத்து ரசிகர்களை மகிழ்விக்கும் வித்தை, பத்தாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பாபாவில் முடிவடைந்தது.

பாபா, 90களில் ரஜினி நடித்த படங்களின் நீட்சிதான். ரஜினி பேசிய வசனங்கள், அரசியலையும் தாண்டி ஆன்மீகத்தை பேசின. மீள முடியாத ஆன்மீகப்பாதைக்கு சென்று விட்ட பாபா, மக்களின் நலனுக்காக அரசியலுக்கு வருவதாக படம் முடிவடைந்துவிடும். பாபா, திரையிலும் திரைக்கு வெளியேயும் பல சர்ச்சைகளையும் பரபரப்புகளையும் ஏற்படுத்தியது. தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட தோல்விப்படமாக பாபா இன்று வரை சித்திரிக்கப்படுகிறது. 90களில் ஆரம்பித்து 2002வரை அரசியல் முலாம் பூசப்பட்ட வசனங்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி என்ன ஆனார்?

பாபாவுக்கு பிந்தைய ரஜினி, அரசியல் வசனங்களோடு நின்றுவிடவில்லை. வேறொரு பரிணாமத்தை எட்டின. ரஜினி நடித்த பாத்திரங்கள், ரட்சகராக,  அதிசயப் பிறவியாக உருவாக்கப்பட்டன. 2005ல் வெளியான சந்திரமுகியின் சரவணன், அமெரிக்காவின் பிரபல மனோதத்துவ நிபுணரின் சிஷ்யர். போட்டி, பொறாமை, துரோகம், பழிவாங்கும் உணர்ச்சியோடு ஒரு மர்ம மாளிகையில் உலா வரும் குடும்ப உறவினர்களை இக்கட்டிலிருந்து விடுவிக்கிறார். எந்தவித உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ இன்றி அனைவரையும் காப்பாற்றிவிட்டு, அமெரிக்காவுக்கு கிளம்புகிறார்.

சந்திரமுகியின் மர்ம அரண்மனைக்கும் தமிழ்நாட்டிற்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. பல ஆண்டுகளாக தொடரும் கற்பிதங்களை உடைத்து, உண்மையை வெளிப்படுத்திவிட்டு கடமையையைச் செய்த திருப்தியுடன் வந்த இடத்திற்கே திரும்பச் செல்லும் ரஜினி படத்தில் எந்தவொரு அரசியல் வசனமும் பேசவில்லை. ஆனாலும், சந்திரமுகி சரவணன் பாத்திரம் சொல்லும் அரசியல் செய்திகள் ஏராளம்.

2007ல் வெளியான சிவாஜி, ஒரு முக்கியமான சமூக பிரச்னையை விவரிக்கிறது. எது கருப்பு பணம்? எது வெள்ளை பணம்? இந்தக் குழப்பம் தமிழ்நாட்டில் அன்றும், இன்றும் இருக்கிறது. வருமான வரித்துறை ரெய்டுக்கும், அமலாக்கத்துறை ரெய்டுக்கும் உள்ள வித்தியாசம் மக்களுக்கு தெரிவதில்லை. இங்கே எதுவும் மாறலை என்று ஆதங்கப்படும் அமெரிக்க ரிட்டர்ன் சிவாஜி, நன்கொடை வாங்காத கல்லூரி கட்ட ஆரம்பித்து அரசியல் வில்லங்கத்தை எதிர்கொள்கிறார். சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்துவிட்டு தெருவில் நிற்கிறார். பிளாட்பாரத்தில் உட்கார்ந்தபடி அவர் சுண்டிவிழும் நாணயத்தில் சிங்கமுகம் விழுந்ததால் சிலிர்த்தெழுந்து அரசியல் எதிரிகளை துவம்சம் செய்கிறார். விழுந்தவர், எழுகிறார் என்பதுதான்

சிவாஜியின் கதை.  சறுக்கி விழுவதையும் மீண்டு எழுவதையும் சமமாக பாவிப்பவரால் மட்டுமே தொடர்ந்து ஓடமுடியும்.

சுண்டியெறியப்பட்ட நாணயத்தில் ஒருவேளை பூமுகம் விழுந்திருந்தால் அமைதியாக அமெரிக்கா திரும்பியிருக்கக்கூடும். ஆக, சிவாஜி ரஜினியின் பாதையை நிர்ணயிப்பது சுண்டியெறியப்படும நாணயம். விளைவுகள் எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ளும் மனநிலை கொண்டவராக சிவாஜி ரஜினியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சிவாஜி ரஜினி பாத்திரம், மாற்றத்தை கொண்டு வருபவராக மக்கள் மத்தியில் ரஜினியை அடையாளப்படுத்தியது.

2010ல் வெளியான எந்திரன் படம், சாகாவரம் பெற்ற ஒரு ரோபோட்டின் வாழ்க்கையை காட்டியது. மனிதர்களைப் போல் ரோபோக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் விளையும் ஆபத்தை குறிக்கும் அதே நேரத்தில் சிட்டி ரஜினியின் சாகசப்படமாகவும் விரிகிறது. சிட்டி ரஜினியை வசீகரன் ரஜினியே இயக்குவதாக வடிவமைத்ததுடன், அசகாய சூரனாகவும் காட்டியது. ரெட் சிப் இணைத்ததால் தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்லக்கூடியவர். எவராலும் இயக்கப்படக்கூடியவர் என்றாலும் சிட்டி என்னும் ஆத்மாவை இழந்துவிடாதவர். அரசியல் வசனங்களோ, காட்சிகளோ இடம்பெறாவிட்டாலும் ரஜினி என்னும் சூப்பர் ஸ்டாரை இன்னும் பல படிகள் உயர்த்தி உட்கார வைத்தது.

லிங்கா, வழக்கமான மசாலா என்றெல்லாம் ஒதுக்கிவிடமுடியாது. நதி நீர் இணைப்பு, ரஜினியின் கனவு என்பதை நினைவுப்படுத்தும் வகையில் கதைக்களமும் இருந்தது. அணை கட்டுவதற்காக தன்னுடைய சொத்தை இழக்கும் பிரிட்டிஷ் காலத்து இந்திய ராஜாவாக ரஜினியின் பாத்திரம் அமைக்கப்பட்டிருந்தாலும் முல்லை பெரியார் அணையை கட்டிய பென்னி குயிக்கின் கதையை தழுவி அமைக்கப்பட்ட கதைக்களம்தான் என்பதில் சந்தேகமில்லை. இந்தியனே வா என்றெல்லாம் பாடல் வரிகள் ரஜினி படத்தில் இடம்பெற்றது புதுமைதான். அதுவரை தான் நடித்த திரைப்படங்களில் தேசிய உணர்வாளராக தன்னை ரஜினி காட்டிக்கொண்டதில்லை. அணை கட்டியவரின் பேரன், பிரபல திருடனாக இருந்தாலும் தாத்ததாவின் கனவான அணையை காப்பாற்றி, அவரது பெயரையும் காப்பாற்றிவிட்டு வந்த இடத்திற்கே திரும்பச் செல்கிறார். எப்போது தேவைப்படுகிறதோ அப்போது எங்கிருந்தோ வந்து மக்களுக்கான தேவையை நிறைவேற்றிவிட்டு மீண்டும் வீடு திரும்பும்படியாக அமைக்கப்பட்ட வழக்கமான ரஜினி படத்து திரைக்கதை. 

கபாலி, ரஜினியை மலேசியாவுக்கு அழைத்துச் சென்றது. 25 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் வெளியே வரும் மலேசியாவின் டான், காணாமல் போன தன்னுடைய குடும்பத்தினரை தேடும் முயற்சியில் பழைய பகைகள் குறுக்கிடும்போது தன்னுடைய சுயரூபத்தை வெளிப்படுத்துகிறார். டாக்டர், மகாராஜா, ரோபோட் என்று உச்சத்துக்கு போன ரஜினி கேரக்டர், தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து மலேசியாவுக்கு பிழைக்கப் போன தாழ்த்தப்பட்ட வகுப்ப்பைச் சேர்ந்தவர்,  மலேசியத் தமிழர்களின் அரசியலை தீர்மானிக்கும் தலைவராக உயரும் பாத்திரம். மலேசியத் தமிழ் மக்களின் வாழ்க்கையை சொன்னதோடு, தமிழகத்தை விட மலேசிய பின்னணியில் வந்த காட்சிகள் அதிகம் கொண்ட படமாகவும் கபாலி அமைந்தது. அரசியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் தமிழ்நாட்டு மக்களோடு நெருக்கமாக இருக்கும் மலேசியத் தமிழர்களின் வாழ்க்கையை தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மத்தியில் கொண்டு சென்றது கபாலியின் சாதனை.

தமிழ் சினிமாவில் தாழ்த்தப்பட்டவராக நடித்த ஒரே முன்னணி நடிகராக ரஜினியை மட்டுமே சொல்லமுடியும். அம்பேத்கார் கோட்சூட் அணிந்ததற்கும், காந்தி கோட் சூட்டை துறந்ததற்கும் இடையே உள்ள நுண்ணிய அரசியலை வசனமாக பேச, எந்தவொரு சூப்பர் ஸ்டாரும் முன்வரமாட்டார்கள். 80களிலும் 90களிலும் குடிசைப்பகுதியில் வாழும் எளிய கதாநாயகனாக படைக்கப்பட்ட ரஜினியை முத்து, அருணாசலம் போன்ற படங்கள் ஜாமீன்தார், கோடீஸ்வராராக சித்திரித்து பின்னாளில் டாக்டர், மகாராஜா என்றெல்லாம் சாமானியர்களை விட்டு தள்ளி வைத்து பார்த்த பாத்திரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் கபாலி ரஜினி, சாமானியர்கள் மீண்டும் சென்று சேர காரணமாக அமைந்தது.

கபாலி ரஜினி, ரஜினியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான பாத்திரம். தன்னுடைய பரம எதிரியை நேருக்கு நேராக எதிர்கொள்ள செல்லும்போதும் மனைவி, மகளோடு குடும்ப சகிதமாக செல்வதாக வடிவமைக்கப்பட்டதும், ரஜினி படத்தில் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதும் முக்கியமான விஷயம்.

காலா, இன்னொரு முக்கியமான படம். தாராவி தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக காட்டப்பட்ட காலா, நிலமே மக்களின் உரிமை என்பதை வலியுறுத்தி அமைதி வழிப் போராட்டத்தை முன்னெடுக்கும் பாத்திரம். ராவண காவியம் படித்தபடி  கருப்பு சட்டை, கருப்பு வேஷ்டியில் படம் முழுவதும் வந்தாலும் நாத்திகம் பேசாத பாத்திரம். 60 வயதில் வாழ்க்கையில் குறுக்கிடும் முன்னாள் காதலி, அவருடனான தனிப்பட்ட சந்திப்பு என ஜானி காலத்து ரஜினியை திரையில் கொண்டு வந்தாலும் காலா ஒரு பேராளியாகத்தான் நினைவில் நிற்கிறார். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றாகிவிட்ட காலகட்டத்தில் ஓய்வெடுக்கும் முன்னாள் டான், மக்கள் நலனுக்காக மறுபடியும் களத்தில் இறங்குவதும், அமைதி வழியில் அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் காலா, முற்றிலும் வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்தது.

சீர்கெட்டிருக்கும் காலேஜ் ஹாஸ்டலை சரிப்படுத்தும் வார்டனாக அறிமுகமாகிறார், பேட்ட காளி. 25 ஆண்டுகளாக ஒதுங்கியிருந்துவிட்டு, தொடரும் பழைய பகையை முறியடித்து மாணவர்களை காப்பாற்ற காவலனாக களத்தில் இறங்குகிறார். இதுவரைக்கும் யார், யார்,  இங்கே என்ன செய்து கொண்டிருந்தவர்கள் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. இனிமே இது என்னோட பேட்டை, இனிமேல்தான் வேட்டை என்று ஹாஸ்டல் வார்டன் காளி சொல்வதை வெறும் சினிமா வசனமென்று கடந்துவிடமுடியுமா?

புதுசா வர்றவனை, ஏற்கெனவே இருக்கிறவங்க உள்ளே விடாம வெறுத்து ஒதுக்குவது எல்லா இடங்களிலும் நடக்கும் இயல்பான விஷயம் என்னும் கள யதார்த்தை உணர்ந்து கொண்டே காளி, புதிய மாற்றங்களை கொண்டு வருகிறார். அவையெல்லாம் மாணவர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, இதயத்தில் இடம் பிடிக்க காரணமாகிவிடுகிறது. பலவீனமான வில்லன்களான உள்ளூர் அரசியல்வாதி, கேன்டீன் காண்ட்ராக்டர் உடன் நேரடியாக மோதும் காளி, தன்னை விட பலமுள்ள உத்திரப் பிரதேச வாழ் வில்லன்களுடன் மோதும்போது நேரடியாக மோதாமல் சாமார்த்தியமாக ஒரு கூட்டணியை உருவாக்கி வெற்றி காண்கிறார். தன்னுடைய எதிரி யார் என்கிற தெளிவு,  காளி ரஜினிக்கு இருந்த காரணத்தால் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் சக்தியாக பேட்டையில் தெரிந்தார்.

தர்பார், ஒன்மேன் ஷோ. சிஸ்டம் சரியில்லை, அதை சீர்படுத்துவதற்கு நம்மால் முடிந்த விஷயங்களை செய்யவேண்டும் என்று ரஜினி அறிவித்தபின்னர், ரஜினி படத்தின் கதைக்களமும் அதையொட்டி அமையும் என்பது எதிர்பார்த்ததுதான். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, கடமையைச் செய்யும் ஆயிரக்கணக்கான ஆதித்யா அருணாச்சலங்களுக்கு தர்பார் ஒரு முக்கியமான சமர்ப்பணம் என்பதில் சந்தேகமில்லை.

பாபா படம் தோல்வியாக வலிந்து எழுதப்பட்ட நேரத்தில் ரஜினி சகாப்தம் முடிந்துவிட்டது. இனி பஞ்ச் டயலாக் என்னும் பெயரில் அரசியல் வசனங்களை பேசமுடியாது. அமிதாப் பச்சன் போன்று வயதை கருத்தில் கொண்டு, ஆக்‌ஷன் படங்களை தவிர்த்துவிட்டு குணச்சித்ர வேடங்களில் நடிக்கவேண்டும் என்றெல்லாம் அறிவுரை சொல்லாத சினிமா அரசியல் விமர்சகர்களே இல்லைலையென்று சொல்லாம். சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்து விட்டது என்றார்கள். வசனங்களோடு நின்றுவிடாமல், கதைக்களம், கதாபாத்திரம், காட்சிக்கு காட்சி அரசியல் குறியீடுகள் என்று முன்பை விட அழுத்தமாகவும், ஆக்ரோஷமாகவும் எழுந்து நின்றார், ரஜினி. 70 வயதைக் கடக்கும் ரஜினி, அடுத்து வரும் பத்தாண்டுகளுக்கு எடுக்கப்போகும் அவதாரம் எதுவென்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், சூப்பர் ஸ்டார் இமேஜில் ஏற்றம் இருக்கும். இறக்கம் இருப்பதற்கு வாய்ப்பேயில்லை.

மார்ச், 2020.