சிறப்புப்பக்கங்கள்

இமையம் : அடையாளத்தைக் அழித்துக்கொள்ளும் கலைஞன்

அரவிந்தன்

இமையம் எழுதத் தொடங்கியபோது தமிழ் இலக்கிய உலகில் எழுத்து  முறை பற்றிய விவாதங்கள் சூடுபறக்க நடந்துகொண்டிருந்தன. அதுவரையில் பரவலாகப் புழக்கத்தில் இருந்த யதார்த்த வகை எழுத்து மரபு மிகத் தீவிரமாகக் கேள்விக்குட்படுத்தப்பட்டது. இன்னொரு புறம் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை பற்றிய கவனம் கூர்மை பெற்றது. குறிப்பாக, தலித் வாழ்வைக் கையாளும் படைப்புகள் முக்கியத்துவம் பெற்றன.

இந்தச் சூழலில் எழுதத் தொடங்கிய இமையம் இந்த விவாதங்களின் பரப்பில்தான் செயல்பட்டார். அவரது எழுத்துக்களில் இரண்டு அமசங்கள் அந்த விவாதச் சூழலுடன் தொடர்புடையதாக இருந்தன. அவரது கதை மாந்தர்கள் பலரும் தலித்துகளாக இருந்தார்கள். அவரது எழுத்து முறை முழுக்க முழுக்க யதார்த்த பாணியைச்  சேர்ந்ததாக இருந்தது.

யதார்த்த பாணியிலான எழுத்தின் மீது வைக்கப்பட்ட முக்கியமான விமர்சனம், அது தட்டையாக இருக்கிறது; எனவே பன்முக வாசிப்புக்கு இடம் தரவில்லை என்பதுதான். ஒற்றை மையத்தை மறுத்துப் பன்முகத் தன்மையைக் கோரும் பின்நவீனத்துவச் சூழலில் யதார்த்தவாதம் பொருத்தமற்றதாக உள்ளது என்று சொல்லப்பட்டது. வாதங்களை முன்வைத்துப் பலரும் விவாதித்துக்கொண்டிருந்தபோது இமையம் தன் படைப்புகளின் மூலமாக யதார்த்தவாத எழுத்துக்கு மாபெரும் பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருந்தார். யதார்த்தவாத எழுத்தில் எந்த அளவுக்கு நுட்பமும் மௌனமும் பல்லடுக்குகளும் இருக்க முடியும் என்பதைத் தன் படைப்புகளின் மூலம் அவர் காட்டினார்.

நான்கு நாவல்கள், 60க்கும் மேற்பட்ட சிறுகதைகள் ஆகியவற்றை எழுதியுள்ள இமையத்தின் படைப்புலகைச் சிறியதொரு வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. தன் அனுபவப் பரப்பிற்குட்பட்ட மனிதர்களையும் வாழ்வையுமே இமையம் பெரும்பாலும் தன் கதைகளில் கொண்டுவருகிறார். பெரும்பாலானவர்களுக்கு நேரடி அனுபவத்திற்கு வரவே முடியாத வாழ்நிலைகளையும் மனிதர்களையும் இமையம் சித்தரிப்பதால் அவரது கதைகள் வாசகர்களின் அனுபவப் பரப்பை விரிவுபடுத்தக்கூடியவையாக இருக்கின்றன.

தன் அனுபவங்களை மதிக்கும் எந்த ஒரு கலைஞரும் அவற்றை அக்கறையோடும் மரியாதையோடும் கையாள்வார். கலைக்கு அப்பாற்பட்ட தேவைகளுக்காகத் தன் அனுபவ உலகைத் திரிக்கும் வேலையில் இறங்க மாட்டார். இத்தகைய கலைஞர்களின் ஆக்கங்கள்தாம் வாசகர்களால் தமது அனுபவப் பரப்பிற்குள் இயல்பாக உள்வாங்கப்படுகின்றன. இமையம் இத்தகைய ஒரு கலைஞர். எனவேதான் அவருடைய பாத்திரங்களும் களங்களும் நமக்கு நெருக்கமாகிவிடுகிறார்கள்.

யதார்த்தவாத எழுத்தின் மீதான பல விமர்சனங்களுக்கு சிலர் அதைக் கையாண்ட விதமே காரணம். நுட்பங்களோ படைப்பூக்கமோ இல்லாத சித்தரிப்பு, உணர்ச்சிவசப்படும் நடை, தாக்கம் ஏற்படுத்துவதற்காகக் குரலை உயர்த்திப் பேசுவது, செயற்கையான தழுதழுப்பு, விருப்பு, வெறுப்பு சார்ந்து யதார்த்தத்தைத் திரிப்பது, முன்முடிவுகளுக்குள் சிக்கிக்கொள்வது ஆகியவற்றால் போலிப் படைப்பாளிகளின் பொக்கையான கதைகள் சூழலை மாசுபடுத்திக்கொண்டிருந்தன. இமையத்தின் எழுத்து, யதார்த்த வகையின் வலிமையை நமக்கு உணர்த்துவது. நேர்த்தியான சித்தரிப்பு, எளிமை, நுட்பங்கள், சிக்கனம், இயல்புத்தன்மை ஆகியவை அவரது எழுத்தில் காணப்படுகின்றன. பிரச்சினைகள் கருத்து நிலைசார்ந்து அல்லாமல் யதார்த்தம் சார்ந்து கையாளப்படுகின்றன. இந்தப் பண்புகளே இமையத்தைக் கலைஞராக அடையாளம் காட்டுகின்றன.

இமையம் கையாளும் உலகம் அவலங்கள் நிறைந்தது.  உணர்ச்சியின் சமநிலையைக் குலைக்கக்கூடியது. கழிவிரக்கத்துக்கும் மிகையுணர்ச்சிக்கும் கோஷங்களுக்கும் இடம்தரக்கூடியது. ஆனால், இமையத்தின் எழுத்தில் இவற்றுக்கெல்லாம் இடமில்லை. சமூக அவலங்களை இலக்கியத்தில் எப்படிப் பிரதிபலிக்கச்செய்ய வேண்டும் என்பதில் அவருக்குத் தெளிவு இருக்கிறது. மிகையுணர்ச்சியைக் கூட்டி, அவலங்களுக்குச் செயற்கையான ஒப்பனைகள் பூசிவிடாமல் உணர்வின் சமநிலையோடு அணுகுகிறார். பாத்திரங்களை அசலாகவும் துல்லியமாகவும் சித்தரிக்கும் அவர், அவர்களுக்கும் நமக்கும் குறுக்கே நிற்காமல் விலகி நின்றுவிடுகிறார். துயரங்களும் புலம்பல்களும் ஆற்றாமைகளும் நிராசைகளும் அவற்றின் வீரியத்தோடு பாத்திரங்களின் மனக் குரலாக அல்லது பேச்சாக நமக்குக் கேட்கின்றன. வாழ்க்கையின் வரங்களும் சாபங்களும் தம்மை இயல்பாக வெளிப்படுத்திக்கொள்கின்றன. திருப்பங்கள் வலிந்து திணிக்கப்படுவதில்லை.  சித்தரிப்புகள் ஒற்றைப்படைத்தன்மையை மறுத்து நுட்பங்கள், ஊடுபாவுகள் மௌனங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. பாத்திரங்களின் பேச்சு வழக்குகள் தத்ரூபமாக வெளிப்படுகின்றன. பாத்திரங்களின் உளவியலும் மனப்போக்குகளும் இயல்பாக உருக்கொள்கின்றன. ஆசிரியர் கூற்றாக எதையுமே முன்வைக்காத மிகச் சில படைப்பாளிகளில் ஒருவர் இமையம். பாத்திரச் சித்தரிப்புக்குக்கூட இவர் மெனக்கெடுவதில்லை. கதைப் போக்கிலும் உரையாடல்களிலும் பாத்திரங்களின் சித்திரங்கள் துலங்கிவிடுகின்றன. ஆசிரியரின் வெளிப்படையான குரலும் பங்கும் குறையக் குறைய, புனைவுலகுடன் வாசகர்களின் உறவு மேலும் மேலும் நெருக்கம் கொள்கிறது. சித்தரிப்பில் துல்லியம், உணர்ச்சிகளில் மிகையின்மை, உரையாடல்கள், மன ஓட்டங்களில் நம்பகத்தன்மை ஆகியவற்றுடன் இந்தப் பண்பும் சேருவது இமையத்தைத் தமிழின் தனித்துவமிக்க படைப்பாளியாக ஆக்குகிறது.

எழுத்தாளனின் மரணம் பற்றி இலக்கியக் கோட்பாடுகள் பேசுகின்றன. தன் சுயத்தை மறைத்துக்கொண்டு தன் படைப்பைத் துலங்கச் செய்யும் மாயத்தை நிகழ்த்துவதன் மூலம் இமையம் தன்னுடைய அடையாளத்தை, தன்னிலையை, அழித்துவிட்டுப் பிரதிக்கு உயிர் கொடுக்கிறார்.

ஆரோக்கியம், செடல், கலியம்மாள் எனப் பல்வேறுமனிதர்களைப் புறவயமாகச்  சித்தரிக்கும் இமையம் ‘எங்கதெ’ நாவலில் வினாயகம் என்பவனை அகவயமாகச் சித்தரித்ததன் மூலம் தன் புனைவுலகில் வேறொரு  பரிமாணத்தை எட்டியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையின் சலனங்களை சிறுகதைகளில் துல்லியமாகக் காட்டும் அவர், அந்த வரையறைக்குள் வராத மனிதர்களைச் சித்தரிப்பதிலும் அசாத்தியமான தேர்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

பெண்களின் வாழ்வை, அவர்களது உணர்வுகளை, நியாயங்களை, உறவின் ஊடுபாவுகளைப் பேசும் இவருடைய கதைகள் அற்புதமான கலைப் படைப்புகளாக உருவாகியிருக்கின்றன. கடந்த ஆண்டில் வெளியான ‘நறுமணம்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘ஈசனருள்’ கதை இதற்கு உதாரணம். நவீன வாழ்க்கையின் எதிர்மறை அம்சங்களைச்

சொல்லும் கதைகள் மட்டும் ஆசிரியரின் கருத்து நிலை சார்ந்து சற்றே சமநிலை இழந்துவிடுவதையும் ஒரு சில சிறுகதைகள் புனைவமைதி கூடாத சித்திரங்களாகச் சுருங்கிவிடுவதையும் இவரது புனைவுலகின் பலவீனங்களாகச் சொல்லலாம்.

தமிழ்ப் புனைவுலகிற்குச் செழுமை சேர்க்கும் இமையத்தின் கதைகள், யதார்த்தவாதம் இன்னும் இறந்துவிடவில்லை என்பதையும் வலுவாக அறிவித்துக்கொண்டிருக்கின்றன. தொடர்ந்து தீவிரமாகவும் கலையுணர்வுடனும் இயங்கிவரும் இமையம், ‘ஈசனருள்’ போன்ற பல சாதனைகளை நிகழ்த்தித் தமிழ்ப் புனைவுலகின் களங்களை மேலும் விரிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

ஜனவரி, 2017.