சிறப்புப்பக்கங்கள்

இமெயில் இல்லாத உலகு: கொஞ்சம் மிஞ்சி இருந்தா வாஞ்சை!

ஜெ.தீபலட்சுமி

எனது முதல் மின்னஞ்சல்  முகவரி jdeepa_007 என ஆரம்பிக்கும்.  அது என்ன 007 என்கிறீர்களா? முகவரியை உருவாக்கும் போது பெயரை மட்டும் பதிய அனுமதிக்கவில்லை. கூடவே ஏதேனும் எண் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று அந்த இன்டெர்னெட் அண்ணன் சொன்னவுடன் ஏனோ சட்டென்று 007 என்றேன். ‘பார்ரா!‘ என்று புன்னகையுடன் பதிந்து கொடுத்தார்.

நான்கு ஆண்டுகள் கோவை கல்லூரி விடுதி வாழ்க்கை முடிந்து மீண்டும் சென்னை முகவரியையே அடையாளமாய் ஏற்க வேண்டி வந்த போது, எல்லாமே நிறைய மாறி இருந்தது. சென்னையில் பள்ளித் தோழிகள், அண்டை வீட்டு நட்புகள், வீட்டு அரசியல் எல்லாவற்றிலிருந்தும் தாற்காலிகமாகப் பிரிந்து கல்லூரி வாழ்வில் பல அனுபவங்கள் கிடைக்கப்பெற்றிருந்தாலும், அடுத்து என்ன? என்ற ஒரு பெரிய கேள்விக்குறி முன்னால் நின்ற போது புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்த மாதிரி ஒரு மருட்சி உண்டானது.

வேலை தேடும் படலத்துக்கென‌த் தேவையான சான்றிதழ்கள் ஜெராக்ஸ் எடுக்கத் தான் அந்த இன்டெர்னெட் கடைக்கு முதலில் போனேன். அடிக்கடி போனதால் ஏற்பட்ட பழக்கத்தில் ஏதோ ஓர் விண்ணப்பத்தில் அப்பாவின் பெயரைப் பார்த்து விட்ட அந்தக் கடை உரிமையாளர் (அண்ணா!)

சகஜமாக உரையாடத் தொடங்கி நட்பு தொடர்ந்தது. அவரது அறிவுரையால் தான் எஞ்சினியர் கனவை மறந்து கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்ந்தேன். மெயில் ஐடி உருவாக்கித் தந்ததும் அவர்தான். ஆனால் மெயில் அனுப்புவது என்பது ஒழுங்காகப் பிடிபட வெகு காலமானது. நெட்ஸ்கேப் நேவிகேட்டர் என்ற பிரவுசர் தான் அப்போது பிரபலம்.

இப்போது அனிச்சைச் செயலாய் மாறிப்போன பல சின்னச் சின்ன விஷயங்களுக்குச் சிரமப்பட்டது நினைவுக்கு வருகிறது.

மெயில் பாக்ஸில் வந்திருக்கும் ஒரு மெயிலைத் திறக்க அதன் மீது மவுசை வைத்தால் கை போல் மவுஸ்குறி மாறும். அதனைக் கிளிக் செய்தால் தான் மெயில் திறக்கும் என்று தெரியாமல், மெயில்களை செலக்ட் செய்யும் செக்பாக்ஸைக் கிளிக்கி விட்டு ‘மெயிலே திறக்கலை, உங்க சிஸ்டம் ஹேங் ஆயிடுச்சு' என்று பலநிமிடங்கள் அமர்ந்திருந்ததும் அந்த அண்ணன் வந்து தலையில் அடித்துக் கொண்டு சிரித்தார்.

மேலும், மெயிலைப் படித்து விட்டு அப்படியே வர மனம் வராது. அதனை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளத் தோன்றும். தேவையில்லை, எப்போது வந்து லாகின் செய்தாலும் மெயிலைப் பார்க்கலாம் என்று சொன்னாலும் கூடச் சில மெயில்களைப் ப்ரிண்ட் அவுட் எடுத்துச் சேமித்துக் கொள்ளத் தோன்றும்; குறிப்பாக நட்புகளிடமிருந்து வரும் கடிதங்கள். அவற்றைக் காகிதவடிவன்றி வேறெப்படியும் விட்டு வைக்க மனமே வராது.

ஒரு முறை பெங்களூரிலிருந்த நண்பன் ஒருவன் வேலை கிடைத்ததும் தனது பணியிடத்திலிருந்து மெயில்கள் அனுப்பி இருக்கிறான். ப்ரவுசிங்

 செண்டர் போவதே எப்போதாவது தான் என்பதால் அவற்றை நான் பார்க்கவில்லை. என்னிடமிருந்து பதிலே வராததால் அத்தனை மெயில்களையும் ப்ரிண்ட் எடுத்துத் தபாலில் அனுப்பினான். இமெயிலைத் தபாலில் அனுப்பி வைக்க நேர்ந்ததற்காக எனக்குத் திட்டு வேறு.

பலருக்கும் இது தான் இமெயில்களின் ஆரம்பகால நிலையாக இருந்திருக்கும்.

இதே காலகட்டத்தில் தான் ஈகிரீட்டிங்குகள் மிகப் பிரபலமாகின. 2000இன் தொடக்கத்தில் அறிமுகமாகிப் பிரபலமான 123greetings.com.ஞிணிட் பலத்த வரவேற்பைப் பெற்றது. என்ன நிகழ்வாய் இருந்தாலும் அனுப்புநர், பெறுநரின் மெயில் ஐடி மட்டும் இருந்தால் போதும். நொடியில் உங்கள் நட்புக்கு அழகான வாழ்த்தொன்றை அனுப்பி விடலாம். இலவசம் என்றாலும் ஈகிரீட்டிங்குகள் வழக்கமான வாழ்த்தை விட மதிப்புள்ளவையாகப் பார்க்கப்பட்டன. பின்னே இணையம் வழி வருகிறன்றன அல்லவா?

ஆரம்ப காலத்தில் வேலை பார்த்த அலுவலகங்களில் இணைய‌ வசதி (இன்டர்னெட்) இருக்காது. இன்ட்ராநெட் என்று சொல்லப்படும், பணியிடத்தில் உள்ள கணினிகள் மட்டுமே ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் மெயில் வசதி மட்டும் இருந்தது. அதாவது இணையத்தில் வலைத்தளங்களில் உலவ முடியாது; வெளியில் இருக்கும் எவ‌ருடனும் இமெயில் மூலம் மட்டும் தொடர்பு கொள்ளலாம். காதல் வயப்பட்ட காலத்தில் வெவ்வேறு அலுவலகத்தில் வேலை பார்க்க நேர்ந்தவர்களுக்கு இது போதுமே!

செல்ஃபோன் கைவராமல் காதல் மட்டும் கைகூடி இருந்த காலம். வீட்டு லேண்ட்லைனோ, அலுவலக லேண்ட்லைனோ காதலுக்குக் கட்டுப்படியாகக் கூடியதல்ல. காலை அலுவலகம் சென்று அமர்ந்தவுடன் மெயில்பாக்ஸில் ‘அவனது' (அல்லது ‘அவளது') பெயரில் இன்னமும் படித்திடாத (unread) மெயில் ஒன்றாவது இருந்தால் தான் அந்த நாள் இனிய நாள்; கட்டாயம் வந்திருக்கும். காதலும் ஏக்கமும் அள்ளித் தெளிக்கும் வார்த்தைகளில் உப்புப் பெறாத விஷயங்கள் கூட அறுசுவையுடன் பரிமாறப்பட்டன.

‘வந்துட்டியா?‘

என்ன ட்ரஸ் போட்ருக்கே? நான் ப்ளாக் ஷர்ட், லைட் ப்ளூ ஜீன்ஸ், நீ வாங்கிக் கொடுத்த பெல்ட்!‘

‘சாயங்காலம் எங்கே மீட் பண்ணலாம்?'

‘12 மணிக்குக் கால் பண்ணட்டுமா? ஃபோன் பக்கத்தில் நீயே வெயிட் பண்ணு பேபி. அந்த

சிடுமூஞ்சி ஓவராக் கேள்வி கேக்குறான்.'

அப்புறம் செல்லத்தைப் பார்க்கணும் போல இருக்கு, லவ் யூக்கள், இத்யாதி இத்யாதி.

இப்ப‌டிப் பிரியச் சங்கிலியாய்த் தொடர்ந்த மெயில்கள் பின்னாட்களில் சின்னச் சின்ன ஊடல்களையும் கூடப் பார்க்கும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் எழுதப்படும் வார்த்தைகளில் எப்போதுமே இயல்பாய்க் கை வரும் நிதானம், சிறிதும் கசப்போ வெறுப்போ கலந்து விட அனுமதித்ததே இல்லை. அதனால் எல்லா இமெயில்களுமே ஸ்வீட் மெமரீஸ் தான்.

காதல் இமெயில்கள் மட்டுமல்ல, அந்தக் காலகட்டத்தில் ஐடி நிறுவனங்களில் வேலை பார்த்தவர்களின் தலையாய பொழுது போக்கே இந்த ஃபார்வார்டு செய்யப்படும் ஜோக்குகளும், புதிர்களும், விடியோக்களும் தான்.

காலை முழுதும் தீவிரமாய் வேலை பார்த்து விட்டு மதியத்துக்கு மேல் இமெயில் ஃபார்வார்டுகள் அனுப்பிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்த காலங்கள் பசுமையான நினைவுகள்.

சூர்யா ஜோதிகா திருமணத்தன்று அலுவலகத்தில் வேலை பார்த்த நினைவே இல்லை. படங்களும் வீடியோக்களும் யாராவது அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். அடுத்த நாள் என் தோழி ‘இன்னும் யாரும் பார்க்காத படங்கள் எக்ஸ்க்ளூஸிவ்' என்றொரு zip file அனுப்பி இருந்தாள். ஆர்வத்துடன் அதைத் திறந்து பார்த்தால், ‘நேற்று பூராப் பார்த்துக் கொட்டமடிச்சது பத்தலையா? போய் வேலையைப் பார் என்று மேனேஜர் கத்துவது போல் ஒரு வீடியோ!‘ அதுவும் மிகப் பிரபலமாகி வலம் வந்தது!

எப்படியோ இதே காலகட்டத்தில் இடது சாரிச் சிந்தனைகளின் பால் வெகுவாக ஈர்க்கப்பட்டேன். பல வலைதளங்களுக்குச் சென்று அலுவலக மெயில் ஐடியைக் கொடுத்து சப்ஸ்க்ரைப் செய்து விடுவேன். அப்புறமென்ன, உலகத்திலுள்ள‌ புரட்சியாளர்களெல்லாம் மெயிலிலேயே புரட்சி செய்து கம்யூனிச உலகைப் படைத்துக் கொண்டிருந்தோம்.

பிறகு மெல்ல இணையம் இலகுவானது, பரவலானது. ஜிமெயிலைத் தொடர்ந்து ஆர்க்குட் வந்தது. ஆர்க்குட் அழிந்து ப்ளாக்ஸ்பாட் எனும் வலைப்பூக்களும் பின்பு முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களும் படையெடுப்பு செய்து நம்மை முற்றிலும் ஆக்கிரமித்திருப்பதும் வரலாறு.

ஆனால் எப்போது பதில் வரும் என்று தெரியாமல், கணினியை விட்டு எழுந்து போகவும் முடியாமல் இமெயிலுக்குக் காத்திருந்த தவிப்பில் கடிதங்கள் எழுதிக் கொள்வதில் இருந்த ஏக்கமும் வாஞ்சையும் கொஞ்சம் மிஞ்சி இருந்தன‌ என்று தான் சொல்ல வேண்டும்.

ஏப்ரல், 2022