இடதுசாரி எழுத்தாளர்கள் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் கலை இலக்கியக் கழகம் என அமைப்பு சார்ந்து எழுதுபவர்களைச் சொல்லலாம் பொதுவில். அமைப்பில் இல்லாமல் ஆனால் இடதுசாரித் தத்துவங்களை உள்வாங்கிக் கொண்டு எழுதுபவர்களையும் நாம் இடதுசாரி எழுத்தாளர்கள் என்றே சொல்லவேண்டும்.
அப்படிக் காத்திரமாக இடதுசாரி சிந்தனை சார்ந்து எழுதுபவர் என்று சு.வெங்கடேசனைச் சொல்லலாம். அவரது சாகித்ய அகாடெமி விருது பெற்ற ‘காவல்கோட்டம்’ ஒரு முக்கியமான நாவல்.அவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர். எங்கள் இயக்கத்தின் தனித்த எழுத்து அடையாளம்.
அ.கரீமின் தாழிடப்பட்ட கதவுகள் சிறுகதைத் தொகுதியை சமீபத்தில் வெளிவந்த காத்திரமான இடதுசாரி எழுத்துக்கான உதாரணமாகச் சொல்லலாம். 2016 ஆம் ஆண்டின் சிறந்த உரைநடைக்கான உயிர்மை சுஜாதா விருது பெற்ற தொகுப்பு இது. தொண்ணூறுகளின் கோயம்புத்தூர் கலவரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட படைப்பு இது.
எப்போதுமே அறிவு ஜீவிகளால் எழுதப்படும் வரலாறுகளை விடவும் படைப்புகள்தாம் அதிகம் சொல்லப்படாத உண்மைகளைச் சொல்லி விடுகின்றன. அதற்கு நம் கண் முன்னே இருக்கும் படைப்புச் சாட்சியம் சதத் ஹசன் மண்ட்டோவின் கதைகள். சுதந்திரத்தை ஒட்டி நிகழ்ந்த நாற்பதுகளின் இந்தியாவை அவரளவுக்கு படைப்பில் பதிவு செய்தவர்கள் எவருமில்லை என்றே சொல்ல முடியும்.
சம்சுதின் ஹிராவின் மௌனத்தின் சாட்சியங்கள் என்ற நாவலும் கோயம்புத்தூர் கலவரத்தை மதச்சார்பற்ற நிலையில் நின்று எழுதப்பட்ட படைப்பாகும். வரலாற்று நோக்கில் எழுதப்பட்ட இந்த நாவல் பல விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரன் கார்க்கியின் கருப்பர் நகரம் முதலான நாவல்கள், பாக்கியம் சங்கரின் ‘நான் வட சென்னைக்காரன்’ ஆகிய படைப்புகள் சென்னை சார்ந்து, குறிப்பாக வடசென்னை அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சார்ந்து சமீபத்தில் எழுதப்பட்ட முக்கியமான இடதுசாரி சார்புநிலைப் படைப்புகள் எனலாம்.
கவிஞர்களில் சாத்தூர் லட்சுமிகாந்தன், வெண்புறா, சென்றாயன், ஜீவலட்சுமி, ஸ்ரீரசா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்களின் கவிதைத்தொகுப்புகள் வெண்புறா- தகிப்பின் நிலம், சென்றாயன் - நிலம் இழந்த மண்புழு / உருவி எடுக்கப்பட்ட கனவு , ஜீவலட்சுமி- காதல் அமரும் கிளை, சாத்தூர் லட்சுமிகாந்தன்- அவரவர் வானம் அவரவர் காற்று ஆகிய கவிதைத் தொகுப்புகள் பரவலான வாசகக் கவனம் பெற்ற தொகுப்புகள் எனலாம்.
கோயம்புத்தூரில் சமீபத்தில் நாற்பது வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளுக்கான பயிற்சி முகாம் ஒன்றை நடத்தினோம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தற்போது எழுதிக்கொண்டிருக்கும் இன்னும் தொகுப்புகளாகத் தமது படைப்புக்களை வெளியிடாத சுமார் 120க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் கலந்து கொண்டார்கள். இது எங்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒரு சேரத் தந்தது.
எழுத்தாளர் ஜெயமோகன் ‘சொல் புதிது’ இதழை ஆரம்பிக்கும்போது தலையங்கத்தில் ஒன்றைக் குறிப்பிட்டார். நவீனத் தமிழிலக்கியச் சூழலே நீண்டகாலமாக இடதுசாரிப் படைப்பாளிகளால் ஆனதுதான். இதைக் கொஞ்சமேனும் மாற்றவே இந்த இதழை ஆரம்பிக்கிறோம் என்று அவர் சொன்னார். இதிலிருந்தே தமிழின் இடதுசாரிப் படைப்புகளின் இடத்தை நாம் அறிந்துகொள்ளலாம்.
தஞ்சை களப்பிரன், மதுரை சு.ரவிக்குமார், புதுக்கோட்டை சு.மாதவன், கவின்மலர், ஜெயராணி ஆகியோரின் கட்டுரைத்தொகுப்புகள் சமூகம், இலக்கியம், வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள் ஆகிய தளங்களில் விரிவான வாசிப்புத் தளத்தையும் சலனங்களையும் உருவாக்கியவை. கவின் மலரின் சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள், ஜெயராணியின் சாதியற்றவளின் குரல், ஆகிய படைப்புகள் ஒடுக்கப்பட்டோர், தலித்துகள், பெண்கள் ஆகியோரின் சார்பாக உரத்துப்பேசும் படைப்புகள் எனலாம். இவ்விரு படைப்பாளிகளும் இடதுசாரி இயக்கத்துக்கு வெளியே இயங்கும் படைப்பாளிகள் ஆவர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஒவ்வோர் ஆண்டும் பதினான்கு பிரிவுகளில் படைப்பிலக்கிய விருதுகள் வழங்குகிறோம். அதில் இடதுசாரி அமைப்புக்கு வெளியே இருந்து எழுதும் படைப்பாளர்களே அதிகமும் இதுவரை விருது பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் எப்போதும் அமைப்புக்கு வெளியே இயங்கினாலும் படைப்புகளை அங்கீகரித்து ஊக்குவிப்பதற்கு என்றுமே தயங்கியதில்லை.
இடதுசாரிப் படைப்புகளில் எப்போதுமே உழைக்கும் மக்களும், அவர்களின் பாடுகளுமே பேசுபொருளாக இருக்கும். அவர்களின் சார்பு நிலையிலிருந்துதான் படைப்புகள் அவர்களுக்காகப் பேசுகின்றன. மானுட விடுதலையை சமத்துவத்தை முன் மொழிகின்றன. பெண் நிலையிலிருந்து ஆணாதிக்க சமூகத்தை நோக்கி திடமாகக் கேள்வி எழுப்புகின்றன. தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான குரலாக சமூக வெளியில் ஒலிக்கின்றன. மேலும் இடதுசாரிப் படைப்புகளில் மார்க்ஸியம் படைப்பினூகத்தான் வெளிப்படுகிறதே தவிர மார்க்ஸியச் சித்தாந்தத்துக்காக படைப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். தற்போது மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இடது சாரித் தன்மையுள்ள சார்புள்ள படைப்புகள் வெளிவருகின்றன. படைப்பு ரீதியாக இன்னும் அதிகமான படைப்புகள் வெளிவரவேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.
முன்னெப்போதையும் விட வலதுசாரிப் பாஸி சத்தை நோக்கி இந்தியா இழுத்துச் செல்லப்படுகின்ற இன்றைய காலச் சூழ்நிலையில் அளவிலும் குணத்திலும் இன்னும் வீரியமிக்க இடதுசாரிப் படைப்புகள் வரவேண்டும். வரும்.
(சரோ லாமா-விடம் கூறியதில் இருந்து..)