சிறப்புப்பக்கங்கள்

இந்திரா காந்தியின் எழுச்சி - காங்கிரஸ் பிளவு

சேஷையா ரவி

இன்றைய காங்கிரஸ் பேரியக்கத்தை(?!) அரசியல் அகராதியில் புரட்டிப் பார்த்தால் - ‘கோஷ்டிப் பூசல்’ என்றுதான் சொல்ல வேண்டும் போலிருக்கிறது!

ஆனால், சுதந்திரத்தின் பிந்தைய காலத்தில் போராட்ட முகமாக உண்மையிலேயே பேரியக்கமாக நின்றது காங்கிரஸ்தான். இன்று ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி பல்வேறு குழுக்களாக மாறி அடிமரத்துக்கே உலை வைக்கிறது. இந்தப் பூசல் அல்லது பிரிவுகள் அல்லது மோதல்கள் எல்லாவற்றுக்கும் முதன்முதலில் விழுந்த வித்து மறைந்த பிரதமர் இந்திராகாந்தி - மொரார்ஜி தேசாய் பனிப்போர்தான். அதுவே ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என உதித்தது எனலாம்.

நேரு மரணமடைந்த பின்னால், அடுத்த பிரதமர் யார் என்று கேள்வி எழுந்தது. குல்சாரிலால் நந்தா தாற்காலிக பிரதமரானார். அப்போது பேரியக்கத்தின் பேரியக்க தலைவராக கொண்டாடப்பட்டவர் தமிழகத்தின் காமராஜர். சாஸ்திரியே பிரதமர் என முடிவெடுத்த போது மொரார்ஜி தேசாயும் களத்தில் குதித்தார். ஆனால் காமராஜரின் செல்வாக்கால் பிரதமரானது சாஸ்திரிதான். எப்படி 1967-ல் தமிழகத்தின் திமுகவின் முதலமைச்சராக பொறுப்பேற்ற சி.என்.அண்ணாதுரை துரதிர்ஷ்டமாக, ஒன்றரை வருடங்களில் மறைந்தாரோ அதுபோல், சாஸ்திரியும் ரஷ்யாவின் தாஷ்கண்ட் மாநாட்டில் கலந்துகொண்டு அங்கேயே கண்ணை மூடிவிட்டார். மீண்டும் யார் பிரதமர் என்ற கேள்வி கட்சித் தலைமையின் தலை மேல் தொங்கியது.

குல்சாரிலால் நந்தாவே மீண்டும் தற்காலிக பிரதமராக அமர்ந்தார். காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றக் குழு புதுப்பிரதமரை தேர்ந்தெடுக்க கூடியது. காமராஜர் நேருவின் மகள் இந்திராவையே பிரதமராக்க விரும்பினார். ‘இளமை கொண்டவர், துறுதுறுப்பானவர், கட்சியின் எல்லா தலைவர்களிடத்தும் பழக்கம் கொண்டவர், அவர் இந்தியாவின் மகள்’ என்று காமராஜர் நினைத்தார் என்று சொல்கிறார் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா. ஆனால், அரசியல் அனுபவம் இல்லை, ஆட்சி நிர்வாகத் திறமை குறைவு என இரண்டு பலவீனங்கள் இந்திரா மீது சொல்லப்பட்டது. மொரார்ஜியும் பதவிக்கு போட்டி போட்டார். இரு முகாமும் டெல்லி முழுவதும் பிரசாரம் செய்தன, அரசியல் லாபிகள் தோன்றின, குதிரை பேரங்கள் கிளம்பின. எல்லாவற்றையும் தாண்டி சிண்டிகேட் எனப்படும் காமராஜர், நிஜலிங்கப்பா, சாதிக் அலி, அபித் அலி, அசோக் மேத்தா ஆகியோர் குழு இந்திராவுக்கு பக்கபலமாக இருந்தது. முடிவில், 1966 ஜனவரி 19-ம் தேதி கட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் பிரதமராக வாகை சூடினார் இந்திராகாந்தி. கட்சித் தலைமை காமராஜரிடமும் பின்னர் 1967ன் கடைசியில் நிஜலிங்கப்பாவிடமும் இருந்தது. கட்சியின் பொறுப்புகளின் தனக்கு விசுவாசமான ஆட்களைக் கொண்டுவர இந்திரா முயன்றார். ஆனால் இயலவில்லை. ஆட்சித்தலைமைக்கும் கட்சித் தலைமைக்குமான நெருடல் மெல்ல வளர்ந்தது.

இளைய தலைமுறையின் பிரதிநிதியாக இருந்த இந்திரா சோஷலிச கொள்கையின் பாதையில் கிளம்பினார். ஆனால் பழைய தலைமுறையின் இன்னொரு பிரிவு அதை ஏற்கவில்லை. இதனால் கட்சிக்குள்ளேயே இடதுசாரி தன்மையும், வலதுசாரி தன்மையும் ஏற்பட்டது. இந்நிலையில் நாட்டின் குடியரசு தலைவராக இருந்த ஜாஹிர் ஹுசைன் 1969-ல் மரணமடைய புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க கட்சி முனைப்பானது. அதில்தான் இந்தப்பிளவு வெளிப்படையாக வெடித்தது. பெங்களூருவில் அந்த ஆண்டு  11-13 ஜூலை வரை நடந்த கட்சிக் கூட்டத்தில் சிண்டிகேட் தலைவர்களுக்கு ஆதரவான சஞ்சீவ ரெட்டியை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்த முடிவெடுத்தது. இது இந்திராவுக்கு உவப்பளிக்கவில்லை. ஆனால் கட்சியின் முடிவை எதிர்க்க அவருக்கு கட்சிக்குள் போதிய பலம் இல்லை.

ஆனால் இந்திரா இதற்கு ஒரு முடிவு கட்டத்தீர்மானித்தார். ஜூலை 18 அன்று மொரார்ஜி தேசாயிடம் இருந்த நிதியமைச்சர் பொறுப்பை தானே எடுத்துக்கொண்டார். மொரார்ஜி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். ஜூலை 21 அன்று 14 வங்கிகளை தேசியமயமாக்கும் முடிவை அறிவித்தார். மன்னர் மானியமும் ஒழிக்கப்பட்டது. இவ்விரண்டும் முக்கியமான சீர்திருத்தங்களாகப் பார்க்கப்பட்டன. சஞ்சீவ ரெட்டி எப்படியும் குடியரசுத் தலைவர் ஆகிவிடுவார் அப்புறம் பார்க்கலாம் என்று மூத்த தலைவர்கள் அமைதி காத்தனர். குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டியில் சுதந்திரா கட்சி, ஜனசங்கம் ஆதரவுடன்  சி.டி.தேஷ்முக்கும், குடியரசுத் துணைத் தலைவராக இருந்த விவி கிரி சுயேச்சையாகவும் நின்றனர். கிரிக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, முஸ்லிம் லீக், அகாலி தளம், சம்யுக்த சோஷலிச கட்சி ஆகியவை ஆதரவு தந்தன. இந்திரா கிரியை ஆதரிக்க தீர்மானித்தார். ஆனால் கட்சியை மீறி எப்படிச் செய்வது?

இதற்கிடையில் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. சஞ்சீவ ரெட்டியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய  ஜனசங்கம், சுதந்திரா கட்சிகளைச் சந்தித்த நிஜலிங்கப்பா, அக்கட்சியினரின் இரண்டாவது விருப்புரிமை வாக்குகளை ரெட்டிக்குப் போடும்படி கேட்டுக்கொண்டார். இதைப் பிடித்துக்கொண்ட இந்திரா, சிண்டிகேட் தலைவர்கள் மதவாத சக்திகளுடன் உறவு வைத்து தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற திட்டமிடுவதாகச் சாடினார். வாக்குப் பதிவு அன்று ரெட்டிக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்று கட்சி சார்பில் விடுக்க வேண்டிய கொறடா உத்தரவை இந்திரா அளிக்கவில்லை. எம்பிக்களும் எம் எல் ஏக்களும் மனச்சாட்சிப்படி வாக்களிக்கச் சொன்னார். கிரி இந்திரா விருப்பப்படியே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் குடியரசுத்தலைவர் ஆனார். சிண்டிகேட் தலைவர்களின் எண்ணம் தவிடுபொடியானது.

நவம்பர் 12-ஆம் தேதி காங்கிரஸ் கட்சித்தலைவர் நிஜலிங்கப்பா கட்சிக் கட்டுப்பாடுகளை மீறியதாகச் சொல்லி இந்திராவை கட்சியை விட்டு நீக்கினார்.

தொடர்ந்து நிஜமாகவே காங்கிரஸ் இரண்டாக பிளந்தது. மூத்த தலைவர்கள் கொண்ட அணி காங்கிரஸ் (ஓ), பழைய காங்கிரஸ், இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (ஆர்), அதாவது சீர்திருத்தம் என்றும் சூட்டப்பட்டன. இந்த இரண்டுமே பின்னாளில் ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என சொல்லப்பட்டன. இந்திராவுக்கு 220 எம்பிக்கள் ஆதரவு இருந்தது. ஸ்தாபன காங்கிரசுக்கு 68 எம்பிக்கள் ஆதரவு இருந்தது. அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் 705 உறுப்பினர்களில் 446 பேர் இந்திரா பக்கம் போய்விட்டார்கள்.

1971 தேர்தலில் இந்திரா காங்கிரஸ் ஏகப்பட்ட சீர்திருத்த திட்டங்களை அறிவித்தது. குறிப்பாக ‘கரிபி ஹட்டோ’, அதாவது ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற கோஷம் நாடு முழுவதும் ஒலித்தது. ஸ்தாபன காங்கிரஸ் ஜன சங்கம் உள்ளிட்ட கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணி அமைத்து இந்திரா காங்கிரஸை எதிர்த்தது. ஆனால் இந்திரா காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. இந்திராவின் செல்வாக்கு விண்முட்ட உயர்ந்துவிட்டது.

“காமராஜரைப் பொறுத்தவரை இந்திரா மீது வருத்தம் இருந்தும்கூட 1971 தேர்தல் தோல்விக்குப் பின்னர் கோவை, புதுச்சேரி இடைத்தேர்தல்களில் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தார். இ.காங்கிரசுடன் இணைப்பு நடப்பதற்குள் அவர் மரணம் அடைந்துவிட்டார். 1969-ல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையாமல் இருந்திருந்தால் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்து இருக்கும் வாய்ப்பு காங்கிரசுக்கேகூட  கிடைத்திருக்கலாம். இந்திரா காந்தி திமுகவுடன் கூட்டணி வைத்த நிகழ்வு நடந்திருக்காது” என்று அந்திமழையிடம் கருத்து தெரிவிக்கிறார் தமிழக காங்கிரஸ் பிரமுகரும் காமராஜர் ஒரு சகாப்தம் என்ற நூலை எழுதியவருமான கோபண்ணா.

செப்டெம்பர், 2014.