சிஎஸ்.அமுதன் 
சிறப்புப்பக்கங்கள்

“இதைச் செய்தால் அபத்தங்களுக்கு இடமிருக்காது!”

ஜி.கௌதம்

தமிழ் திரைப்படங்களில் காலகாலமாகத் தொடர்ந்து வரும் அபத்தங்களையும், க்ளிஷேக்களையும் திரைப்படமாகவே எடுத்துக் கலாய்த்தவர்.. சிஎஸ்.அமுதன்.

அவரது தமிழ் படம், அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த வெற்றிப்படம். அடுத்து இயக்கிய தமிழ் படம் 2 - ல்  அரசியல் நையாண்டிக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.

''குறிப்பிட்டு யாரையும் கிண்டல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் தமிழ் படம் இயக்கவில்லை. சும்மா.. ஜாலியாக ஒரு படம் பண்ண வேண்டுமென்றுதான் ஆரம்பித்தோம். பரவலாக ரசித்த படக்காட்சிகளையும், ரசிகர்களைப் பரவசப்படுத்திய காட்சிகளையும் போகிற போக்கில் கலாய்த்துக் கொண்டு கதை நகரும். அவ்வளவுதான். தமிழ் திரைப்படங்களையோ, சினிமா முன்னோடிகளையோ, அரசியல்வாதிகளையோ கேலி செய்வதல்ல எங்கள் நோக்கம்..'' என்று பேச ஆரம்பித்தார்.

'பரவசப்படுத்தியவை என நீங்கள் சொன்னாலும், பெரும்பாலான காட்சிகள் வருடக்கணக்காக ரசிகர்கள் பார்த்துப் புளித்துப்போன அபத்தங்கள்தானே..' என்றதும், மாற்றுக்கருத்தை முன் வைத்தார்.

''நீங்கள் அபத்தம் என சொல்லும் காட்சிகளை, ஹீரோயிஸத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகைப்படுத்திச் சொல்லும் காட்சிகள் என நான் எடுத்துக் கொள்கிறேன். அசாத்தியமானவராக ஹீரோவைக் காட்டும் முயற்சி இன்று நேற்றல்ல.. பல வருடங்களாகவே இருக்கிறது. எழுபது சதவிகிதம் அப்படிப்பட்ட படங்களுக்கே இங்கே பலமான வரவேற்பு இருக்கிறது. மக்கள் ரசிக்கிறார் கள். பிறகெப்படி அப்படிப்பட்ட படங்களை குறைசொல்ல முடியும்! அந்த பாணி நம் மக்களுக்கு அலுக்கவே இல்லை. புதுப்புது பரிமாணங்களுடன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

தெலுங்கு சினிமாக்களை எடுத்துக் கொண்டால், இதுவே தொண்ணூற்றி ஐந்து சதவிகிதமாக இருக்கிறது. மீதமிருக்கும் ஐந்து சதவிகிதத்தில்தான் மாற்று முயற்சிகள் நடக்கின்றன. கதிகலங்க வைக்கும் அவர்களது ஹீரோயிஸ காட்சிகள். அந்த வகையில் தமிழ் சினிமா ஆரோக்கியமாகவே இருக்கிறது. மீதமுள்ள முப்பது சதவிகிதம் அருமையான திரைப்படங்களே வெளியாகின்றன. அழுத்தமான கருத்தைச் சொல்லும் எத்தனையோ
படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ரஞ்சித், மாரி செல்வம், வெற்றி மாறன்.. என கருத்தையும் கதையையும் அட்டகாசமான திரைமொழியில் கொடுக்கும் பலர் இங்கிருக்கிறார்கள். அவர்களது துணிச்சலான முயற்சிகளையும் மக்கள் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக.. நீங்கள் குறிப்பிடும் அபத்தங்கள் விஞ்சி இருந்தாலும், மிஞ்சி இருக்கும் முப்பது சதவிகிதத்தில் இந்திய திரையுலகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிலேயே நமது தமிழ் திரைப்படங்கள் இருக்கின்றன..'' என்றார் அமுதன்.

தமிழ்ப் படங்களைக் கிண்டலடித்ததால் நீங்கள் பலமான எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்ததாகவும், அதனால்தான் அடுத்த படம் கிடைப்பதில் உங்களுக்கு காலதாமதம் ஏற்பட்டது என்றும் ஒரு பேச்சு நிலவியதே...

 ''அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. முதல் படம் பார்த்து விட்டு என்னைப் பாராட்டிய திரைப்பிரபலங்கள் அதிகம். இயக்குநர் சிகரம் பாரதிராஜாவே எனக்கு போன் செய்து, 'என்னய்யா.. என் படத்துலதான் ஆரம்பிச்சிருக்கியா..' என ஜாலியாகத்தான் கேட்டார். மனமாரப் பாராட்டினார். அதுவே விருதுகள் பல கிடைத்தது போல உணரவைத்தது. அப்படித்தான் எல்லோரும் எடுத்துக் கொண்டார்கள். அடுத்த படத்தையும் அதே மாதிரி எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றுதான் பல வாப்புகள் தேடி வந்தன. அதை நான் விரும்பவில்லை. அப்போது நான் என் வருமானத்துக்காக சினிமாவையே முழுவதுமாக நம்பிக் கொண்டிருக்கவில்லை. விளம்பர நிறுவனம் நடத்தி வந்தேன். வருமான தன்னிறைவு இருந்தது. அதனால், வந்த வாய்ப்புகளை விழுந்தடித்து ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டேன். சரியான ப்ராஜக்ட் வரட்டும் என காத்திருந்தேன்.

ஒரு இடைவெளிக்குப் பிறகு அடுத்த படத்துக்கு தயாரானேன். 'உங்களுக்குத்தான் கிண்டலும் கேலியும் மிக நன்றாக வருகிறதே. அரசியலை நையாண்டி செய்து படம் எடுங்களேன்' என்றார்கள். தமிழ் படம் 2 அதன் பிறகே உருவானது. அடுத்த படம்.. நிச்சயம் இந்த வரிசையில் இருக்காது. தீர்மானமாக இருக்கிறேன் நான். விரைவில் அறிவிப்பு வெளியாகும். அந்தப் படத்தில் நானும்கூட கமர்ஷியல் மசாலாக்களை கரைத்து ஊற்றக்கூடும்..''

உங்கள் முதல் படம் வெளியாகி பல வருடங்களாகின்றன. அதில் நீங்கள் முன் வைத்த விமரிசனங்களுக்குப் பிறகாவது திருந்தியதா தமிழ் திரையுலம்?

''விமரிசனமெல்லாம் செய்யலைங்க. வெறுமனே ஒரு பொழுது போக்குப் படம் எடுத்தேன்.
ரசிகர்கள் விசிலடிச்சாங்க. வெற்றிப்படமாச்சு. சினிமாவை விமரிசனம் செய்து, திருத்த வேண்டும் என்ற பெரும் கனவெல்லாம் இல்லை என் முயற்சியில். அதைச்செய்ய நான் யார்.. சொல்லுங்க.. தவிர, இப்படிப்பட்ட நையாண்டிகளைப் படமாக எடுப்பது நான் கண்டுபிடித்த விஷயமல்ல. சத்யராஜ், மணிவண்ணன் போன்ற ஜாம்பவான்கள் ஏற்கெனவே நிறைய காட்சிகள் பண்ணியிருக்கிறார்கள். நான் முழுப்படமாக எடுத்தேன்.. அவ்வளவுதான்''

உங்கள் படங்களில் நீங்கள் கிண்டலடிக்கத் தயங்கிய, வேண்டாம் என்று விலக்கிய காட்சிகள் இருக்கின்றனவா?

''அப்படித் தயங்கியிருந்தால் அவற்றை இப்போதும் சொல்ல முடியாதுதானே... ஒன்று மட்டும் கூற முடியும். திரைக்கதைக்காக உட்கார்ந்து பேசியபோது பல காட்சிகள் மனதில் தோன்றின. இன்னும் பல திரைப்படங்கள் நினைவுக்கு வந்து போயின. ஆனால், பர்சனல் விஷயங்களையும் தனி மனிதர்களின் கேரக்டரையும் கேலி செய்வது போன்ற காட்சிகளை எடுக்க வேண்டாம். தனிப்பட்ட முறையில் கேலி செய்து, சம்பந்தப்பட்டவர்களை ஹர்ட் பண்ணித்தான் மக்களை சிரிக்க வைக்க வேண்டுமா என எனக்கு நானே கேட்டுக் கொண்டு, அதையெல்லாம் தவிர்த்து விட்டேன்

ஆனால் பொதுவாக நிஜத்தைக் கேலி செய்யும் நையாண்டிப் படங்களுக்கு வெளி நாடுகளில் மிகுந்த வரவேற்பு இருக்கிறதே...

''ஆமாம். அமெரிக்காவில் பிரசிடெண்ட்டை கேவலமாகச் சித்திரித்தும் படங்கள் எடுக்கிறார்கள். அதையெல்லாம் நகைச்சுவையாக ஏற்றுக் கொண்டு ரசிக்கும் பழக்கம் அங்கே எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால், ஒரு விமரிசனத்தை நக்கலடிக்கும் கிரியேடிவிடி நம் தமிழர்களுக்குத்தான் அதிகம் இருப்பதாக நான் கருதுகிறேன். இதைத்தான் நமது மீம் கிரியேட்டர்களிடம் இப்போது பரவலாக பார்க்க முடிகிறது..''

இன்னும் தொலையாத அபத்தங்கள் என தமிழ் திரைப்படங்களில் எதைக் குறிப்பிடுவீர்கள்? மாற வேண்டிய விஷயங்கள் என்னென்ன?


''இரண்டு படங்கள் எடுத்திருக்கும் நானெல்லாம் இதற்கு கருத்து சொல்ல முடியாதுங்க. ஐம்பது படங்கள் எடுத்திருக்கும் பெரியவர்கள்தான் இதைச் சொல்ல முடியும்..''

பொதுவாக ஒரு தமிழ் சினிமா ரசிகனாக கருத்துக்களைச் சொல்லுங்களேன்..


''தொழில் நுட்ப ரீதியில் தமிழ்ப்படங்கள் மிகவும் வலுவானதாகவே இருக்கின்றன. நமது தொழில் நுட்ப கலைஞர்கள்தான் அத்தனை மொழிகளிலும் முன்ணணியில் இருக்கிறார்கள். ஆனால், ஸ்க்ரிப்ட் விஷயத்தில் நாம் இன்னும் மெனக்கெட வேண்டும் என நினைக்கிறேன். அதுதான் முழுப்படத்துக்கும் ஆதாரமாக இருக்கும். ஸ்பாட் லைட் என்றொரு ஆங்கிலப் படம் பார்த்தேன். கத்தோலிக்க திருச்சபைகளில் நடப்பதாகப் பேசப்படும் பாலியல் கொடுமைகளை கதையாகச் சொல்லும் படம் அது. அதில் கிராஃபிக்ஸ், பிரும்மாண்டமெல்லாம் கிடையாது. ஆனால், படத்தின் ஸ்க்ரிப்டில் ஆகச் சிறந்த பிரும்மாண்டம் இருக்கும். இழுத்துப் பிடித்து உட்கார வைக்கும் கதை நேர்த்தி கொண்டதாக இருக்கும். அப்படி ஒரு வலிமையான கதையம்சமும், அதற்கான முன் திட்டமிடல்களும் இப்போது இருக்கும் நமது திரைப்பட தொழில் நுட்ப முன்னேற்றங்களுடன் கைகோர்க்கும்போது.. தமிழ் சினிமாக்களை அடித்துக் கொள்ள உலகம் முழுக்க ஆளே இருக்காது!'' என்று முடிக்கிறார் அமுதன்.

நவம்பர், 2019.