சிறப்புப்பக்கங்கள்

இடது பக்கம் திரும்பவும்

ஆர்.முத்துகுமார்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறும் கட்சிகளாக பாமக, மதிமுக மற்றும் சில சிறுகட்சிகளைத்தான் அடையாளம் காட்டுகிறோம். அந்தப் பட்டியலில் நாம் பெரும்பாலும் இடதுசாரிகளைச் சேர்ப்பதில்லை. கொள்கை, சித்தாந்தம் சார்ந்து இன்றும் இயங்கக் கூடியவர்களாக அவர்கள் இருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் தேர்தல் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் ஆரம்ப காலம் முதல் நேற்றுவரை தொடந்து அணிமாறக்கூடியவர்களாக இடதுசாரிகளும் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

சுதந்தர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலின்போது கம்யூனிஸ்டுகளுக்கு பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது. என்றாலும், புதிய கட்சியான திமுகவின் ஆதரவைப் பெறவேண்டும் என்பது கம்யூனிஸ்டுகளின் விருப்பம். ஆனால் திராவிட நாடு கோரிக்கையை ஏற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கோரியதால் கம்யூனிஸ்டுகள் பின்வாங்கினர். பிறகு கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் சிலருக்கு மட்டும் திமுக தாமாக முன்வந்து ஆதரவளித்தது. தேர்தலின் முடிவில் பிரதான எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி உருவெடுத்தது.

1957 தேர்தலின்போது காங்கிரஸ் எதிர்ப்பை முன்வைத்து முத்துராமலிங்க தேவரின் ஃபார்வர்ட் ப்ளாக், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி ஆகியவற்றுடன் தேர்தல் உடன்பாடு செய்துகொண்டது கம்யூனிஸ்ட் கட்சி.  அதற்கடுத்த தேர்தலிலும் அதே காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டில் தனித்துப் போட்டியிட்டது. ஆனால் திருச்சி மாவட்டத்துக்கு மட்டும் திமுகவுடன் உடன்பாடு செய்துகொண்டது.

கம்யூனிஸ்டுகளின் கூட்டணி அரசியல் புதிய பரிணாம வளர்ச்சியைப் பெற்றது 1967 தேர்தலின் போதுதான். அப்போதுதான் கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்த ரீதியில் சிபிஎம், சிபிஐ என்று இரு கூறுகளாகப் பிளவுபட்டிருந்தது. காங்கிரஸை எதிர்த்து திமுக வானவில் கூட்டணியை உருவாக்க முயன்றபோது சிபிஎம்முக்கு திமுகவுடன் அணியமைக்க ஆர்வம். ஆனால் திமுகவுக்கோ இடதுசாரியான சிபிஎம் மீதும் ஆர்வம், வலதுசாரியான சுதந்தரா மீதும் ஈர்ப்பு.

இருவரையும் அரவணைத்துக்கொள்ளும் வகையில் இருவருடனும் தனித்தனியே தேர்தல் உடன்பாடு செய்துகொண்டது. கூடவே, ஒரு திட்டிவாசல். விரும்பினால், சிபிஎம்மும் சுதந்தராவும் பரஸ்பரம் எதிர்த்துப் போட்டியிட்டுக் கொள்ளலாம். ஆனால் இருவரும் திமுகவை ஆதரிக்கவேண்டும். அதற்குச் சம்மதித்தே அவர்கள் திமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டனர். ஆக, திமுகவின் வெற்றியில் இடதுக்கும் பங்குண்டு, வலதுக்கும் பங்குண்டு. என்ன ஒன்று, அந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

அதிமுகவின் உருவாக்கத்துக்குப் பிறகு இடதுசாரிகள் எதிரெதிர் முகாம்களில் இடம்பிடிக்கத் தொடங்கினர். சிபிஎம் திமுக அணியில் இடம்பெற்றால், சிபிஐ அதிமுக அணியில் இடம்பெறுவதும் அடுத்த தேர்தலில் அப்படியே கூட்டணியை மாற்றிக்கொள்வதும் இயல்பான ஒன்றாக மாறியது. 1977 மக்களவைத் தேர்தலின்போது திமுக அணியில் சிபிஎம் இடம்பெற்றது. இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான அணியில் இடம்பெற்றோம் என்பது சிபிஎம்மின் விளக்கம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ அதிமுக அணியில் இடம்பெற்றது. ஆனால் அடுத்த சில மாதங்களில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியில் இருந்த சிபிஎம் சட்டென்று அதிமுக அணிக்குத் தாவியது. சர்க்காரியா கமிஷன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் திமுக அணியில் இடம்பெறமுடியாது என்றது சிபிஎம். ஆனால் அவர்கள் சொன்ன அதே சர்க்காரியா கமிஷன் விசாரணை நடந்துகொண்டிருந்தபோதுதான் மக்களவைத் தேர்தலும் நடந்தது என்பதே உண்மை.

மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், எமர்ஜென்ஸிக்கு எதிராக திமுகவுடன் அணி அமைக்கிறோம் என்று சொன்ன சிபிஎம், அதே எமர்ஜென்ஸியைத் தீர்மானம் போட்டு ஆதரித்த அதிமுகவுடன் பின்னாளில் அணி அமைப்பதற்கு எவ்வித அசூயையும் கொள்ளவில்லை. அதேபோல, எமர்ஜென்ஸியை ஆதரித்த சிபிஐ எமர்ஜென்ஸியால் பாதிக்கப்பட்ட திமுகவுடன் பின்னாளில் அணி அமைத்துக்கொள்வதற்கு எவ்வித தயக்கத்தையும் காட்டவில்லை.

1980ல் திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி திடீரென உருவாகிவிட, இடதுசாரிகளுக்கு நெருக்கடி.  விளைவு, இருவருமே அதிமுக அணியில் சங்கமித்தனர். ஆம், பிளவுக்குப் பிறகு இரண்டு கம்யூனிஸ்டுகளும் ஓரணியில் இணைந்தது அதுதான் முதன்முறை. பின்னர் 1984 தேர்தலின்போது அதிமுகவும் இந்திரா காங்கிரஸும் கூட்டணி அமைத்துக் கொண்டதால், இரண்டு இடதுசாரிகளும் திமுக அணிக்கு வந்தனர்.

இந்த இடத்தில் இடதுசாரிகளின் கூட்டணி அரசியலின் ஒரு முக்கியமான கூறு கவனிக்கத்தக்கது. அது, புதிய அரசியல் கட்சி ஒன்று முளைத்தால் அதனுடன் காட்டும் நெருக்கம். ஐம்பதுகளின் தொடக்கத்தில் திமுக, ஐம்பதுகளின் மத்தியில் காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி, எழுபதுகளின் தொடக் கத்தில் அதிமுக என்று வெவ்வேறு காலகட்டங்களில் உருவான புதிய கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடோ, கூட்டணியோ வைத்துக்கொள்வது இடதுசாரிகளின் பாணி. அது தொண்ணூறுகளின் மத்தியிலும் தொடர்ந்தது.

1996 தேர்தலில் திமுக அணியில் சிபிஐ இணைந்துகொள்ள, புதிதாக உருவான மதிமுக அணியில் சிபிஎம் இடம்பெற்றது. அந்த அணி வெற்றிபெற்றால் வைகோவே முதல்வர் என்றார் ஹர்கிஷன்சிங் சுர்ஜீத். அதன்பிறகு ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இரண்டு இடதுசாரிக் கட்சிகளும் திமுக அணிக்கோ, அதிமுக அணிக்கோ மாறிமாறித்தான் சென்று கொண்டிருந்தனர்.

இங்கே கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம், பாஜகவின் பங்களிப்பு. முதலில் பாஜகவுடன் அதிமுக அணி அமைத்ததால் அந்த அணியில் இடம்பெற முடியாத நிலையில் இடதுசாரிகள் திமுக அணிக்கு வந்தனர். பின்னர் பாஜகவுடன் திமுக அணி அமைத்ததால் இடது சாரிகள் அதிமுக அணிக்கு இடம்பெயர்ந்தனர். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக இடதுசாரிகள் கைக்கொண்டுவந்த தேர்தல் கூட்டணி அணுகுமுறை 2014 மக்களவைத் தேர்தலில் மாறியது. இரண்டு இடதுசாரிகளும் அதிமுக அணியிலிருந்து வெளியேறி, தங்களுக்குள் கூட்டணி அமைத்து, சொற்ப தொகுதிகளில் போட்டியிட்டனர்.

சுதந்தரம் அடைந்த காலம் தொடங்கி பல கட்சிகளுடன் மாறிமாறி கூட்டணி அமைத்த இடதுசாரிகள் இன்று ஒருவழியாக “சுயக்கூட்டணிக்கு” வந்துள்ளனர். இனி இதே பாதையில் செல்வார்களா, அல்லது பெரிய கட்சிகளுடனான கூட்டணியே வழி என்று முடிவெடுப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும்!

(ஆர்.முத்துக்குமார், ஓர் அரசியல் ஆய்வாளர்)

ஜூன், 2015.