சிறப்புப்பக்கங்கள்

இசைக் காவியங்கள்!

வெற்றிப் படங்கள் 1930-60

திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன்

தமிழ் சினிமாவின் ஆரம்பகட்டத்தில் மூன்று பேர் வசூல் மன்னர்களாக இருந்தார்கள்.  தியாகராஜ பாகவதர்,  பியூ சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம் ஆகியோரே அவர்கள்.  இம்மூவருமே மிகச்சிறப்பாகப் பாடக்கூடியவர்கள் என்பது ஒற்றுமை.  இவர்களின் வெற்றிப்படங்கள் நிறைய இருக்கின்றன என்றாலும் சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.  இம்மூவரில் முதலிடம் வகிப்பவர் தியாகராஜ பாகவதர்தான். 1939-ல் வெளியான திருநீலகண்டர் தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்டபடம். பிரபல இயக்குநர் ராஜா சாண்டோ இயக்கியபடம். பாடல்கள் எல்லாம் மிக அற்புதம். குறிப்பாக ஒன்றைச் சொல்லவேண்டுமென்றால் பவழமால் வரை என்று ஒரு பாடல்; ராகமாலிகைப் பாடல் இது. இசை விற்பன்னர்கள் எல்லோருமே இதைப் பாடத்தயங்குவார்கள். பாகவதர் மட்டுமே பாடக்கூடிய பாடல் என்று எல்லோருமே ஒப்புகொண்டார்கள். நானும்கூட என் அனுபவத்தில்  வேறு எந்த இசைக் கலைஞரும் மேற்குறிப்பிட்ட பாடலை எடுத்துப் பாடியதைக் கண்டதில்லை. அவ்வளவு கஷ்டமான பாடல் அது.

சிவகவி என்ற  இவரது படம் 1943-ல் வெளியானது பட்சிராஜா ஸ்ரீராமுலு கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாரித்து வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. இதில் இடம் பெற்ற தமிழிசைப்பாடல்கள் பெயர்பெற்றவை. மனம் கனிந்தே,வள்ளலைப் பாடும் வாயால் போன்ற பாடல்கள் நினைவில் நிற்கின்றன. அதற்குப் பிறகு வந்த ஹரிதாஸ்(1944) மிகப்புகழ்பெற்ற படம்.  சென்னை ஏழு கிணறு பகுதியில் அமைந்த ப்ராட்வே தியேட்டரில் மூன்று தீபாவளிகள் தொடர்ந்து ஓடியது. மக்கள் கூட்டம்கூட்டமாகத் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். மன்மதலீலையை வென்றார் உண்டோ என்ற பாடல் அந்த காலகட்டத்தில் மிக செக்ஸியான பாடல்!  பாடல்கள் வெற்றிக்கு உதவின என்றாலும் இன்னொரு விஷயமும் உண்டு. அப்போது பிலிம் சுருளுக்கு தட்டுப்பாடு. யுத்தகாலம் என்பதால் 12000 அடிக்கு மேல் படம் எடுக்க கட்டுப்பாடு இருந்தது. எனவே இதன் இயக்குநர் சுந்தர்லால் நட்கர்னி நன்றாக எடிட் செய்து படத்தை வெளியிட்டார். எனவே படமும் அந்த கால படங்களுடன் ஒப்பிடுகையில்  மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

நடிகர் பியூ சின்னப்பா நாடகத்துறையில் இருந்து சினிமாத்துறைக்கு வந்து சில படங்களில் நடித்தார். எதுவும் சிறப்பாக ஓடவில்லை. எனவே திரைப்படத்துறைக்கு முழுக்கு போட்டுவிடலாம் என்று இருந்தபோது அவரை வைத்து எடுக்கப்பட்ட படம்தான் உத்தமபுத்திரன்(1940). மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம் ‘எ மேன் இன் தி அயர்ன் மாஸ்க்’ என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்து கவரப்பட்டார். அது அலெக்ஸாண்டர் டூமாஸ் எழுதிய கதை. இதைத்தான் உத்தமபுத்திரனாக மாற்றினார்கள். தமிழில் வெளியான முதல் இரட்டை வேடப்படம். மகத்தான வெற்றியை அடைந்தது. செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற பாரதியார் பாடல் ராகமாலிகைப் பாடலாக இடம்பெற்ற படம். இந்த படத்தை அப்போதைய பாட்டுபுத்தகங்களிலே ‘சிறந்த தமிழ் தேசியத் திரைப்படம்’ என்று அறிமுகப்படுத்தினார்கள்.

இதற்கு அடுத்ததாக பியூ சின்னப்பாவின் வெற்றிப்படம் என்று சொல்லவேண்டுமானால் 1942-ல் வெளியான கண்ணகியைச் சொல்லலாம். எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கம். அமெரிக்க பாணியில் எடுக்கப்பட்ட காதல் காட்சிகள் புகழ்பெற்றன. இதில் தான் முதல்முதலாக இளங்கோவன் வசனகர்த்தாவாக அறிமுகம் ஆனார். வசனங்கள் பேச்சு மொழியில் இடம்பெற்று புதிய பாணிக்கு வழி வகுத்தன. எஸ்.வி வெங்கட்ராமன் இசை. பாடல்களும் சிறப்பாக இருந்தன என்று தனியாக சொல்லவே வேண்டாம். இதில் கண்ணகியாக நடித்த கண்ணாம்பாவும் புகழ்பெற்றார். 1964-ல் கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில்  வெளியான பூம்புகார் படத்தின் முன்னோடி இந்த படமே.

ஜெகதலப்பிரதாபன், என்ற படம் பியூ சின்னப்பாவின் நடிப்பில் 1944-ல் வெளிவந்தது. இதில் தேவலோகத்தில் இசைத்திறனை நிரூபிக்கும் காட்சி. பியூ சின்னப்பா பாடுவார். அவருடன் இசைக்கருவிகளை வாசிக்க ஐந்து வேடங்களில் சின்னப்பா தோன்றினார். ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அந்த பாடல் ஒரு கல்யாணி ராகப் பாடல். தாயைப்பணிவேன் என்று தொடங்கும் பாடல். இந்த பாடலின் உரிமையை ஹெச் எம் வி இசைத்தட்டு நிறுவனத்தாருக்கு வழங்க படத்தயாரிப்பு கம்பெனியார் தயங்கினர். ஆனால் ஹெச் எம் வி காரர்கள் ஒரு காரியம் செய்தார்கள். இதே இசையில், ராகத்தில் ’நமக்கினி பயமேது’ என்று புதிய பாடலைப் பாடவைத்து பதிவு செய்து இசைத்தட்டில் வெளியிட்டனர்.  தாயைப் பணிவேன் பாடலை விட படத்தில் இடம்பெறாமல் இசைத்தட்டில் வெளியான நமக்கினி பயமேது பாடல்தான் அந்த காலத்து ரசிகர்களின் மனதில் நீண்ட நாள் நின்றது.

டிஆர் மகாலிங்கம் 13  வயதில் நந்தகுமார் படத்தில்  தோன்றினார். ஏவிஎம் 1945-ல் எடுத்த ஸ்ரீவள்ளி படத்தில்  இவரை நாயகனாக நடிக்க வைத்தார்கள். நடிகை ருக்மணி இப்பட நாயகி. பக்தி ரசம் சொட்டும் இந்த படம் முக்கியமான வெற்றிப்படம். அதே ஏவிஎம் தயாரித்து வெளியான சமூக சீர்திருத்த கதை அம்சம் கொண்ட படம் 1947-ல் வெளியான ‘நாம் இருவர்’. இந்த படத்திலும் டிஆர் மகாலிங்கம் நடித்தார். இதில் இடம்பெற்ற பாரதியார் பாடல்கள் மிகப்புகழ்பெற்றன.

அந்த காலகட்டத்தில் இவர்கள் மூவரும் அல்லாது இன்னொரு பெண் நடித்த அனைத்துப்படங்களுமே  வெற்றிப்படமாக அமைந்தன. அவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. அவருடைய நூற்றாண்டு இது. சேவாசதனம்(1938), சகுந்தலை(1940), சாவித்திரி(1941) ஆகிய மூன்று படங்களுக்குப் பின்னால் 1945-ல் மீரா வெளியானது.  மீரா மிகப்பெரிய வெற்றி. இதற்கு எம்எஸ்ஸின் குரலில் வெளியான பாடல்கள் முக்கிய காரணம். ராஜாஜி பாடல்கள் எழுதினார். காற்றினிலே வரும் கீதம் பாடல் பெரும் புகழ்பெற்றது. இந்த படம் இந்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. இந்தியில் வட இந்திய பார்வையாளர்களுக்காக எம்.எஸ்.சுப்புலட்சுமியை அறிமுகம் செய்து கவிக்குயில் சரோஜினி நாயுடு பேசும் காட்சி படத்தின் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த படத்துடன் எம்.எஸ். திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

இந்தவெற்றிப்பட வரிசையில் இன்னொரு படத்தையும் சேர்க்கவேண்டும். அது தமிழின் முதல் முழுநீள நகைச்சுவைப் படம். பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகத்தை சபாபதி(1941) என்றபெயரில் படமாக எடுத்தார்கள். அதில் டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்து புகழ்பெற்றார். அவரும் காளி என்ற நடிகரும் தோன்றும் நகைச்சுவைக் காட்சிகள் அன்றும் இன்றும் என்றும் சிரிக்க வைப்பவை.

1942-ல் எஸ்.எஸ்.வாசன் தண்டபாணி தேசிகரை வைத்து நந்தனார் என்ற படத்தை எடுத்தார். அது ஒரு முற்றும் முழுமையான இசைச்சித்திரம். மகத்தான வெற்றியைப் பெற்ற படம் அது. பக்தி, தீண்டாமைக் கொடுமை என இரு விஷயங்களைத் தொட்டுச் சென்ற படம் அது. இந்த படத்தின் பாடல்களை சிறப்பாக வரிசைப்படுத்தி அளிப்பவர்களுக்கு பரிசுகளை அறிவித்து படத்தை விளம்பரப்படுத்தினார் வாசன்.

ஜெமினி ஸ்டூடியோ என்றாலே பிரம்மாண்டம்தான்.  1948-ல் டிஆர் ராஜகுமாரி, எம்கே ராதா, ரஞ்சன் ஆகியோர் நடித்த சந்திரலேகா வெளியானது. ராஜேஸ்வர ராவ் இசை.   மிகப்பிரமாண்டமாக  அந்த காலத்திலேயே 65 லட்சரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. அதன் முரசு நடனம் பெரும் புகழ் பெற்றது. இதற்காகவே தனியாக தகவல்கள் அடங்கிய விளம்பர அட்டைகள் வெளியிடப்பட்டன.  தமிழில் வெற்றிப்படம்தான் என்றாலும் அவ்வளவாக வசூல் குவித்தது என்று சொல்ல முடியாது. இந்த படத்தை இந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டபோதுதான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் என்று சொல்லவேண்டும்.  நகைச்சுவை காட்சிகளை மட்டும் வட இந்திய நடிகர்களை நடிக்க வைத்து சேர்த்திருந்தார் எஸ்.எஸ்.வாசன். எப்படி இருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த படமாக சந்திரலேகா அமைந்தது.

 1953-ல் ஜெமினியின் தயாரிப்பில் வெளியான அவ்வையார் படமும் முக்கியமான வெற்றிப்படமே.  கேபி சுந்தராம்பாள் நடிப்பில் வெளியான இப்படத்தை அவரிடம் வேலை வாங்க லகுவாக இருக்குமே என்று கொத்தமங்கலம் சுப்புவை இயக்குமாறு செய்துவிட்டார் வாசன். ஏனெனில் கேபிஎஸ் மிகவும் கோபக்காரர் என்று பெயர் எடுத்தவர். அவரை சமாளிப்பதற்கு தன்னுடைய கட்டுப்பாடான அணுகுமுறை ஒத்துவராது என்று வாசன் உணர்ந்திருந்தார். படமும் சிறப்பாக வெளியாகி வசூலை வாரிக்குவித்தது.

இதற்கு ஓராண்டு முன்பு வெளியான பராசக்தி(1952) தமிழ் சினிமாவின் முக்கிய திருப்புமுனைப்படம். பெருமாள் முதலியாரின் நேஷனல் பிக்சர்ஸ், ஏவிஎம்  தயாரிப்பில் ஆர்.சுதர்சனம் இசையில் கலைஞரின் அனல் கக்கும் வசனங்கள், கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம். யுத்தம் முடிந்திருந்த நிலையில் அதன் பின்னணியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று சிவாஜி கணேசன் என்ற அற்புதக் கலைஞனைத் தந்தது.

இந்த படங்களுக்கு  இடையில் ஒரு தெலுங்கு நடிகர் நடித்த படமும் வெளியாகி பெரும் வெற்றிப்பட வரிசையில் இடம்பிடித்தது. அது தேவதாஸ்(1953). வினோதா பிக்சஸ் நிறுவனத்தார் வங்க எழுத்தாளர் சரத் சந்திரரின் நாவலைத் திரைக்கதை ஆக்கினர். நாகேஸ்வரராவ்- சாவித்திரி நடிப்பில் தெலுங்கிலும் தமிழிலும் ஒரே சமயத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் இசை சிஆர் சுப்பராமன். தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருந்தார். அவர் படம் வெளியாவதற்குள் இறந்துவிட்டார். பாடல்கள் பெரும் வெற்றியை ஈட்டின.

1954-ல் அருணா பிக்சர்ஸ் தூக்குத்தூக்கி படத்தை வெளியிட்டனர். சிவாஜி நடிப்பில் மற்றுமொரு வெற்றிப்படம். திருவிதாங்கூர் சகோதரிகளான லலிதா, பத்மினி, ராகினி மூவரும் நடித்த படம். அத்துடன் முதல் முதலாக  டி.எம். சவுந்தரராஜன் பாடகராக அறிமுகம் ஆனபடமும் கூட.  ‘ஏறாத மலைதனிலே’ என்பது அவர் சிவாஜிக்குப் பாடிய முதல் பாடல். அதில் தொடங்கிய உறவு பல்லாண்டு தொடர்ந்தது.

இந்த காலகட்டத்தில் ராஜகுமாரி, மந்திரிகுமாரி போன்ற பல படங்களில் நடித்து இருந்த ஒரு நடிகர் பட்சிராஜா ஸ்டூடியோவின் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். நாமக்கல் கவிஞரின் கதையான அப்படத்தின் பெயர் மலைக்கள்ளன்(1954).  அந்த நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன். படம் வெளியாகி மிகப்பிரமாண்டவெற்றியையும் எம்ஜிஆருக்கு வெற்றிப்பட நாயகன் என்ற நிரந்தர இடத்தையும் அளித்தது. மூன்று தோற்றங்களில் எம்ஜிஆர் இந்த படத்தில் தோன்றினார். மிகச்சிறப்பான நடிப்பு என்றுதான் சொல்லவேண்டும். இப்படம் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம் ஆகிய மொழிகளிலும்  தயாரிக்கப்பட்டு வெற்றியைக் கண்டது. அனைத்திலும் நடித்த நடிகர்களைக் காட்டிலும் தமிழில் நடித்த எம்ஜிஆரின்  நடிப்பே சிறந்தது என்று என்னால் சொல்லமுடியும்.

இதற்கிடையில் 1957-ல் எஸ்.எஸ்.ஆர் நடித்த முதலாளி என்ற படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அதில்  நடிகை தேவிகா(தெலுங்கில் பிரமிளா என்ற பெயரில் நடித்துவந்தார்) அறிமுகம் செய்யப்பட்டார். இது நூறு நாள் ஓடியதுடன் தேசிய விருதும் பெற்றது. 1958-ல் டி. பிரகாஷ்ராவ் இயக்கத்தில்  மீண்டும் உத்தமபுத்திரன், இம்முறை சிவாஜி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றது.  இதற்கு அடுத்த ஆண்டு வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் இன்னொரு வெற்றிப்படம்.  இது முழுதும் டெக்னிக் கலர் படமாகும்.  1960-ல் வெளியான படிக்காத மேதை சிவாஜிக்கு இன்னொரு வெற்றிப்படம். கல்யாணப்பரிசு 1959-ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான முதல் படம். ஜெமினி கணேசனுக்கு முக்கியமான படமும் கூட. இந்த படம் வெளியான முதல்நாள் காசினோ தியேட்டருக்கு ஸ்ரீதர் படம்பார்க்கப் போனார். அரங்கத்தில் ரசிகர்களிடம் வரவேற்பே இல்லை. படம் முடிந்த இருண்டமுகத்துடன் வெளியே வந்த ஸ்ரீதர், அங்கே வீனஸ் பிக்சர்ஸ் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தார். இந்த படத்தின் இறுதிக்காட்சியை மாற்றி அமைத்திருக்கலாமோ? இது ரசிகர்களைக் கவரவில்லையே என்று அவரிடம் வருத்தத்துடன் கூறினாராம். ஆனால் படம் மூன்றாவது நாளுக்குப் பிறகு வேகம் எடுத்து எக்கச்சக்க வசூலைக் கொட்டியது!

நாம் குறிப்பிட்டிருக்கும் படங்களைத் தவிர மேலும் சில வெற்றிப்படங்களும் உண்டு. இடம் கருதி முக்கியப்படங்களாக நாம் தேர்ந்தவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்!

(நமது செய்தியாளரிடம் பேசியதில் இருந்து)

நவம்பர், 2016.