சிறப்புப்பக்கங்கள்

ஆள் இல்லாத வீட்டில் நீ என்ன செய்ற?

எஸ்.ராமகிருஷ்ணன்

விக்ரமாதித்யன் வேதாளத்தைத் தனது முதுகில் தூக்கிச்சுமப்பதை போன்றதே இலக்கிய அமைப்பினை நடத்துவதும். வேதாளத்தை ஏன் விக்ரமாதித்யன் தூக்கிச் சுமக்கிறான். வேதாளம் ஏன் அடிக்கடி அவனை விட்டு முருங்கை மரமேறி விடுகிறது. புரியாத உறவது.

வேதாளம் என்பது விக்ரமாதித்யனின் மனது தானோ என்னவோ. இலக்கியத்தை ஆழ்ந்து வாசிக்கிற ஒருவன் அதைப் பலரும் அறிந்து கொள்ளும்படி மக்கள் மத்தியில் பரவலாக்க வேண்டும் என்றே ஆசைப்படுவான். அதுவும் படைப்பாளியாக இருந்துவிட்டால் இந்த ஆசை தீவிரமாகிவிடும்.

பாண்டிய மன்னர்கள் துவங்கிய தமிழ் சங்கம் முதல் இன்று ஏதோ ஒரு சிற்றூரில் துவங்கப்படும் இலக்கிய அமைப்பு வரை ஒரே நோக்கம் கொண்டதே. அது படைப்பையும் படைப்பாளிகளையும் கொண்டாடுவதும், தேவையான விமர்சனத்தைத் தந்து படைப்பின் தரத்தை நிர்ணயம் செய்வதுமாகும்.

இலக்கிய அமைப்புகளே உண்மையில் பண்பாட்டினை முன்னெடுத்துச் செல்கின்றன. இலக்கிய அமைப்புகளில் முக்கிய இலக்கியவாதிகள் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். முக்கியப் படைப்புகள் பேசப்பட்டிருக்கின்றன. கல்வி நிறுவனங்கள், அரசுத்துறை கண்டுகொள்ளாத படைப்பாளிகளை இலக்கிய அமைப்புகளே கண்டு கொள்கின்றன; கௌரவிக்கின்றன. அந்த வகையில் இலக்கிய அமைப்புகள் இலக்கியச்சூழலுக்கு மிகவும் அவசியமானவை.

என் அனுபவத்தில் தமிழகத்தில் பத்து வகையான இலக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருவதாக அறிகிறேன் 1) திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம் போன்ற நூல்களைக் கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்ட மன்றங்கள் மற்றும் இலக்கிய அமைப்புகள்.

2) சமயம் சார்ந்த நூல்களான தேவாரம், திருவாசகம், பிரபந்தம், திருப்பாவை, திருஅருட்பா, திருமந்திரம் பெரிய புராணம் போன்ற நூல்களை முன்னெடுக்கும் இலக்கிய அமைப்புகள். 3)அரசியல் கட்சிகளின்

சார்பில் செயல்படும் இலக்கிய அமைப்புகள் மற்றும் முற்போக்குச் சிந்தனை கொண்ட, அரசியல் சார்பு இலக்கிய அமைப்புகள். தலித் விடுதலை மற்றும் அடித்தட்டு மக்களின் விடுதலையை முதன்மைப்படுத்தும் அமைப்புகள். 4) தமிழ் இனம், மொழி, தமிழர் உரிமை, தமிழர் பண்பாடு குறித்த சிந்தனைகளை முதன்மைப்படுத்தும் தமிழ் தேசிய இலக்கிய அமைப்புகள். 5) பிரபல எழுத்தாளர்களால் நடத்தப்படும் இலக்கிய அமைப்புகள். 6) நவீன இலக்கியம் சார்ந்த சிற்றிதழ்கள்,

எழுத்தாளர்கள். கவிஞர்கள், வாசகர்கள், ஆர்வலர்கள் நடத்தும் இலக்கிய அமைப்புகள்.

7) வசதியானவர்களால் நடத்தப்படும் இலக்கிய அமைப்புகள், அறக்கட்டளை மற்றும் தந்தை, தாய் பெயரில் விருது வழங்கும் அமைப்புகள். 8) அரசு மற்றும் கல்விப்புலம் சார்ந்த இலக்கிய அமைப்புகள். 9) வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்

சங்கங்கள். இலக்கிய அமைப்புகள்.10) கிறிஸ்துவ, இஸ்லாமிய இலக்கிய அமைப்புகள்.

இவையன்றி தனித்து, ஒற்றை ஆளின் முன்னெடுப்பில் செயல்பட்டுவரும் அமைப்புகளும் இருக்கின்றன.

பெரும்பான்மை இலக்கிய அமைப்புகளின் அடிப்படை பிரச்சனை பொருளாதாரமே. ஒத்த சிந்தனை கொண்ட நண்பர்கள் ஒன்று சேர்ந்து கையில் இருப்பதைப் போட்டுக் கூட்டம் நடத்துவதே வழக்கம். இலக்கிய அமைப்புகளுக்கு அங்கீகாரமோ, பணுதவியோ கிடைப்பதில்லை.

சென்னையிலிருந்து செயல்பட்டு வரும் இலக்கியச் சிந்தனை அமைப்பு மாதந்தோறும் சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்து பரிசளித்து வருகிறது. அத்தோடு ஆண்டுத் தோறும் ஒரு படைப்பாளி குறித்துத் தனிநூல் வெளியிட்டு வருகிறார்கள். அது மிகுந்த பாராட்டிற்குரிய பணி.

இதுபோலவே ஜெயமோகன் நடத்தி வரும் விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் ஒரு படைப்பாளிக்கு விருது வழங்கி அவர் குறித்த ஆவணப்படத்தை உருவாக்கி சிறப்பித்து வருகிறார்கள். அத்தோடு இளந்தலைமுறை படைப்பாளிகள் மற்றும் வாசகர்களுக்கு இலக்கிய முகாம்களைத் தொடர்ந்து நடத்தி வருவது பாராட்டிற்குரிய விஷயம்.

தற்போது கோவையில் செயல்பட்டு வரும்

‘‘சிறுவாணி வாசகர் மையம்'' ஆண்டுச் சந்தா செலுத்தினால் மாதம் ஒரு சிறந்த புத்தகம் என வருஷத்தில் 12 புத்தகங்களை வீடு தேடி அனுப்பி வைக்கிறார்கள். தற்காலச் சூழலில் மிகவும் தேவையான இலக்கியச் சேவையிது.

கம்பன் கழகம், திருவள்ளுவர் மன்றம். மணிமேகலை மன்றம், இளங்கோவடிகள் இலக்கிய மன்றம். பாரதி மன்றம் போன்ற அமைப்புகள் ஆண்டு முழுவதும் விழா நடத்துகிறார்கள்.

தமிழகம் முழுவதும் புத்தக அறிமுகங்களையும் விமர்சனக் கூட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வரும் வாசகசாலை தனித்துப் பாராட்ட வேண்டிய அமைப்பாகும்.

நானும் அட்சரம் என்ற இலக்கிய அமைப்பைத் துவங்கி நான்கு ஆண்டுகள் நடத்தினேன்.

அட்சரம் சார்பில் நூல் அறிமுகம், கருத்தரங்கம், மற்றும் குற்றாலத்தில் பயிலரங்கம் ஏற்பாடு செய்திருக்கிறேன். இதில் வண்ணதாசன் பிரபஞ்சன், பூமணி, சா.தேவதாஸ், முருகேச பாண்டியன், கலாப்ரியா, சோ.தர்மன், ஜி.குப்புசாமி, நா.முத்துகுமார், வசந்தபாலன், ஸ்ரீராம், காலபைரவன் சு.வெங்கடேசன், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடி காரணமாகவே அதைத் தொடர இயலவில்லை.

நெருக்கடியான பொருளாதாரச் சூழலிலும் தொடர்ந்து காத்திரமாகக் கூட்டங்களை நடத்தியவராகக் காஞ்சிபுரத்தை சேர்ந்த இலக்கியவட்டம் நாராயணனைக் குறிப்பிடுவேன்

இது போலவே விருட்சம் அழகியசிங்கர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் கூட்டங்களும், முன்றில் மா.அரங்கநாதன் தனது முன்றில் அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்த கூட்டங்களும் கருத்தரங்குகளும் முக்கியமானவை.

திருச்சியில் செயல்பட்டு வரும் களம் இலக்கிய அமைப்பு மாதந்தோறும் சிறந்த எழுத்தாளரை அழைத்து உரையாற்றச் செய்கிறது. ஆண்டுதோறும் பெரிய இலக்கிய விழாவினை நடத்துகிறார்கள்.

பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் சிற்பி அறக்கட்டளையும் சிறந்த கவிஞருக்கு ஆண்டுதோறும் விருது அளித்து மிகச்சிறந்த இலக்கிய நிகழ்வினை ஏற்பாடு செய்து வருகிறது.

இது போலவே இலக்கியவீதி நடத்தும் கூட்டங்களும், களரி என்ற அமைப்பினை உருவாக்கி கூத்துக்கலைஞர்களை கௌரவித்து வரும் மு.ஹரி கிருஷ்ணன் செய்யும் பணியும் பாராட்டிற்குரியன.

குவிகம், இலக்கிய வட்டம், பதியம், விளக்கு, வீதி, தில்லிகை, கூழாங்கற்கள், சிற்றில், கூடு, ஏடகம், சந்திப்பு, வீதி, மேலும், வதனம், கரிசல், தமிழ் மரபு அறக்கட்டளை, வம்சி, எழுத்து, பாலம், வல்லினம், ழ, கனவு, அறம், வெளி, கனலி போன்ற இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து காத்திரமாகச் செயல்பட்டு வருவதை நான் அறிவேன்.

இலக்கிய அமைப்பினை நடத்தி கடனாளி ஆன பலரை நான் அறிவேன். அவர்கள் அதன்பிறகு இலக்கியத்தை விட்டு விலகிப் போய்விடுகிறார்கள். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் கூட்டங்களில் கலந்து கொண்டு நான் பெற்ற அனுபவங்கள் ஏராளம். அதில் சில மறக்கமுடியாதவை. இலக்கிய அமைப்பு மற்றும் அமைப்பாளர்களின் பெயர் குறிப்பிட வேண்டாம் என்பதால் நிகழ்வுகளை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்

ஓர் இலக்கிய அமைப்பின் சார்பில் லத்தீன் அமெரிக்க இலக்கியம் குறித்து உரையாற்ற அழைக்கப்பட்டேன். விருதுநகரிலிருந்து பயணம் செய்து கூட்டம் நடக்க இருந்த இடத்திற்குப் போன போது காலை மணி ஒன்பது.

வழியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என அதிகாலையில் வீட்டிலிருந்து கிளம்பியிருந்தேன்.கூட்டம் நடக்க இருந்த இடம் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடம். அன்று விடுமுறை தினம் என்பதால் பூட்டப்பட்டிருந்தது. காவலாளியைக் கூடக் காணவில்லை.

அருகிலுள்ள டீக்கடைக்குப் போய் ஒரு தேநீர் குடித்துவிட்டு திரும்பி வந்தேன். அங்கே கூட்டம் நடப்பதற்கான அறிகுறியே இல்லை. ஒருவேளை முகவரி தவறா என அழைப்பிதழை சரிபார்த்துக் கொண்டேன். அப்போது செல்போன் வசதி இல்லை. ஆகவே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

சரி வரும்போது வரட்டும் எனப் பள்ளியின் முன்னால் இருந்த மரத்தடியில் நிற்க துவங்கினேன். பன்னிரெண்டு மணி அளவில் ஒருவர் சைக்கிளில் வந்து பள்ளிக்கதவை திறந்தார். அவர் பள்ளியின் காவலாளி.

கூட்டம் நடந்துவிடும் என்ற நம்பிக்கை உருவானது. அவரிடம் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். உள்ளே உட்காருங்கள். அவர்கள் வந்துவிடுவார்கள் என்று சொல்லி ஒரு வகுப்பறையைக் காட்டினார். உள்ளே சென்று மரநாற்காலி ஒன்றில் உட்கார்ந்து கொண்டேன்

மதியம் இரண்டு மணி வரை ஒருவரும் வரவேயில்லை. இரண்டு மணிக்கு நிகழ்ச்சி நடத்துகிற நண்பர்கள் இருவர் பைக்கில் வந்தார்கள்.

காலையில் தெரிந்த ஒருவரின் சாவு வீடு. ஆகவே அங்கே போய்விட்டோம் என்றார்கள்.

மணி இரண்டாகிவிட்டது என்று சொன்னேன். ஆள் யாரும் வரவில்லையா என அவர்கள் என்னிடம் கேட்டார்கள். இல்லையெனத் தலையாட்டினேன். பரவாயில்லை அடுத்த மாசம் கூட்டம் வச்சிகிடுவோம் என்றபடியே தாங்கள் கையில் வைத்திருந்த ஒரு நோட்டில் கையெழுத்துக் கேட்டார்கள். எதற்கு எனக்கேட்டேன்.

நிகழ்ச்சிக்கு வந்ததிற்குக் கையெழுத்து போட வேண்டும் என்றார்கள்.

கூட்டம் நடக்கவேயில்லையே என்றேன். பேச்சா ளரைத்தான் ஏற்பாடு பண்ண முடியும். கேட்கிற ஆட்களையும் நாங்களே ஏற்பாடு பண்ண வேண்டுமா என அவர்கள் கோபத்துடன் கேட்டார்கள்.

எனக்கோ நல்ல பசி. காலையில் இருந்து காத்திருந்த சலிப்பு இரண்டும் ஒன்று சேர அவர்களை மோசமாகத் திட்டிவிட்டேன். மறுநிமிசம் அவர்கள் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

என் கையில் காசில்லை. அவர்கள் தரும் பணத்தைக் கொண்டு ஊர் திரும்ப நினைத்திருந்தேன். ஆனால் கோவித்துக் கொண்டு போய்விட்டார்கள். இனி என்ன செய்வது எனப்புரியவில்லை.

பள்ளியின் காவலர் கேட்டைப் பூட்டவேண்டும் என என்னை வெளியே போகச் சொன்னார். கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த்து. தார்

சாலையில் கானல் மினுங்கியது, பசியோடு தலை கிறுகிறுக்கச் சாலையில் வந்து நின்றேன்.

இலக்கிய வேதாளம் என்னைப் பார்த்து சிரிப்போடு கேட்டது. இவர்களைப் போன்றவர்களை நம்பி வந்தது உன் குற்றமா, அல்லது ஆள் வராத நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்துகிறார்களே அது அவர்களின் குற்றமா? என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை.

நல்லவேளை, என்னோடு கல்லூரியில் படித்த ஒரு நண்பன் அந்த ஊரில் இருந்தான். அவன் வீடு தேடி நடந்து போனேன். அவனே சாப்பாடு போட்டு கைச்செலவிற்குப் பணம் தந்து அனுப்பி வைத்தான்.

சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதே இலக்கிய அமைப்பிடமிருந்து ரஷ்ய இலக்கியங்கள் பற்றிப் பேச வேண்டும் எனத் தபால் அட்டை வந்திருந்தது.

நானே என் வீட்டின் சுவரைப் பார்த்து பேசிக் கொள்கிறேன், நன்றி என நானும் பதிலுக்கு ஒரு தபால் அட்டை போட்டு விட்டேன்!

வேறு என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்!

இன்னொரு இலக்கிய அமைப்பின் கூட்டத்திற்காக ரயிலில் போய் இறங்கினேன். அமைப்பாளர்கள் நான்கு பேர் ரயில்நிலையத்திற்கு வந்து அழைத்துப் போனார்கள். மாலையில் தான் கூட்டம் என்பதால் பகலில் ஒய்வு எடுங்கள் என்று ஒரு வீட்டிற்கு அழைத்துப் போனார்கள்.

புறநகரிலிருந்த வீடது. அந்த வீட்டில் என்னைத் தங்க செய்தார்கள். ஒரு நண்பரின் வீடது. அவர் திருப்பதி போயிருக்கிறார் என்றார்கள். அந்த வீட்டிலிருந்த டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்தபடியே நேரத்தை போக்கிக் கொண்டிருந்தேன்.

திடீரென மின்சாரம் போய்விடவே வெளியே போகலாமே என வாசலுக்கு வந்தேன். அப்போது தான் கவனித்தேன், அவர்கள் என்னை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டுப் போயிருந்தார்கள். எப்படி வெளியே போவது எனத் தெரியவில்லை.

மின்சாரமற்ற வீட்டில் வியர்த்து வழிய உட்கார்ந்திருந்தேன். மதியம் மூன்று மணி வரை எவரும் வரவில்லை.

திடீரென அந்த வீட்டின் காலிங்பெல் அடிக்கபடும் சப்தம் கேட்டு ஜன்னலைத் திறந்தேன். வெளியே ஒரு பெரியவர் நின்றிருந்தார். அவர் சுரேஷ் இல்லையா எனக்கேட்டார். எனக்குச் சுரேஷ் யார் என்றே தெரியாது. இருந்தாலும் அவர் திருப்பதி போய்விட்டார் என்றேன்.

ஆள் இல்லாத வீட்டில் நீ என்ன செய்றே எனத் திருடனைப் பார்ப்பது போல முறைத்தபடியே கேட்டார்.

என்னை உள்ளே வைத்து பூட்டிவிட்டுப் போய்விட்டார்கள் என்றேன்.

நீ சுரேஷ்க்கு சொந்தமா? எனக்கேட்டார் அந்தப் பெரியவர்.

இல்லை, நான் ஒரு எழுத்தாளர் என்றேன். அவருக்குச் சந்தேகம் வலுத்துவிட்டது. திருட்டுப்பயலே.. மரியாதையா வெளியே வாடா என்று உரத்து சப்தமிட்டார். கதவை திறக்கமுடியாமல் தான் உள்ளே இருக்கிறேன் என்றேன். அவர் அதைப் புரிந்து கொள்ளவில்லை. ஆட்களை அழைத்துக் கொண்டு வரப்போவதாகக் கிளம்பி போனார்.

என்ன செய்வதென்று புரியவில்லை. மனதில் ஏதேதோ தோன்றுகிறது. அடுத்த அரைமணி நேரத்தில் அந்தப் பெரியவர் நாலைந்து ஆட்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.

அவர்கள் உரத்த குரலில் என்னை வெளியே வரச்சொல்லி சப்தமிட்டார்கள். நான் சொன்னதையே திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்கள் நம்பவில்லை.

நல்லநேரமாக நிகழ்ச்சி அழைப்பாளர்களில் ஒருவர் பைக்கில் வந்து சேர்ந்தார். அவர் கையில் எனக்கான மதிய உணவு. வீட்டின் முன்பாகக் கூட்டம் திரண்டு நிற்பதைக் கண்டு அவர் பயந்து போய்விட்டார். பிறகு நடந்த உண்மையைச் சொல்லி அவர் தன் பாக்கெட்டிலிருந்த சாவியை எடுத்து வீட்டினை திறந்துவிட்டார். வெளியே இருந்த பெரியவர் சுரேஷ் மனைவியின் உறவினர் என்று அதன் பிறகே தெரிந்தது.

அந்தப் பெரியவர் சுரேஷ் இல்லாத நேரம் அவர் வீட்டில் எப்படி வெளியாளை தங்க வைக்கலாம் என்று கத்திக் கொண்டிருந்தார்.

நான் உடனே அந்த வீட்டிலிருந்து வெளியேறி போகலாம் என்றேன். நண்பர் பைக்கில் என்னை ஏற்றிக் கொண்டார்.

ரயில் நிலையத்திற்கே வந்து சேர்ந்தேன். அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து சாப்பிட்டேன். அந்த பெஞ்சிலே சாய்ந்து படுத்துக் கொண்டேன். நண்பருக்கு என்ன செய்வது எனத்தெரியவில்லை. மாலை வரை ரயில் நிலையத்திலேயே இருந்தேன்.

ஆறுமணிக்கு இன்னொரு நண்பர் வந்து மன்னிப்பு கேட்டு என்னைக் கூட்டத்திற்கு அழைத்துப் போனார்.

கூட்டம் துவங்கிய போது எனக்கு சால்வை அணிவிப்பதற்கு சுரேஷ் வீட்டில் சண்டை போட்ட பெரியவரை அழைத்து வந்திருந்தார்கள். அவரை எப்படிப் பேசி சம்மதிக்க வைத்தார்கள் எனத் தெரியவில்லை. அவர் எனக்கு சால்வை அணிவித்தபோது அவரது முகத்தில் புன்னகை வெளிப்பட்டது. ஆள் யாருனு தெரியாமல் பேசிட்டேன் என்று சொன்னார். நானும் சிரித்தபடியே அதனால் என்ன என்று சொல்லி சமாளித்தேன்.

அன்று மட்டும் அந்த நண்பர் பைக்கில் வராமல் போயிருந்தால் பெரியவர் என்னை நிச்சயம் போலீஸில் பிடித்துக் கொடுத்திருப்பார் என்பதை மறக்க நீண்டகாலமானது.

இப்படி என் இலக்கிய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள். வேடிக்கைகள் ஏராளம். அன்று அவமானமாகப் பட்ட விஷயங்கள் இன்று வேடிக்கையாக மாறி விட்டிருக்கின்றன. அது தான் காலம் செய்யும் விந்தை போலும்.

ஜனவரி, 2020.