சிறப்புப்பக்கங்கள்

நேரடியாகச் சொன்னார்! -எம்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.

Staff Writer

ஆறுமுறை தலைவரே எனக்கு எம்.எல்.ஏ.வாக நிற்க வாய்ப்பளித்தார். ஏழாவது முறை தளபதி அளித்தார். 2016 - இல் சீட்டு அளித்தபோது, தொலைபேசியில் தலைவரே என்னை அழைத்து, ‘ராமச்சந்திரா, நீ ஒரத்தநாடு தொகுதியில் நிற்கிறாயா?' எனக் கேட்டார்.

எனக்கோ ஆச்சர்யம், தலைவரே இப்படி நேரடியாகக் கேட்கிறாரே என்று. ‘அய்யா எங்கு நிற்கச் சொன்னாலும் நிற்கிறேன்' என்றேன். அதன்பிறகு நேரில் பார்க்கச் சென்றபோது துரைமுருகன், நான் தான்  ஒரத்தநாட்டுக்கு உன் பெயரைச் சொன்னேன் என்றார். தலைவரோ...‘ எனக்குத் தெரியாதா? ராமச்சந்திரனைப் பற்றி...' என்று சிரித்தார். வழக்கமாக எம்.எல்.ஏ. சீட்டுக்குத் தேர்வு செய்யப்படும்போது பட்டியல் வாசிக்கப்படுவதுதான் வழக்கம். அதில்  தெரிந்துகொள்வதுதான் நடைமுறை. ஆனால் அவரே நேரடியாக அழைத்துச் சொல்வது என்பது என் விஷயத்தில் நடந்தது பெரும் பாக்கியம்.

எப்போதும் நெற்றியில் பொட்டு வைத்திருப்பது என் வழக்கம். இதற்காக கிண்டல்களையும் தலைவர் முன்னிலையில் சந்தித்தது உண்டு. அது பாஜகவுடம் கூட்டணி ஏற்பட்டிருந்த நேரம். தலைவரைப் பார்க்கப் போயிருந்தோம். அங்கிருந்த முரசொலி மாறன், என் நெற்றியில் இருந்த பொட்டைப்  பார்த்துவிட்டு ராமச்சந்திரனால்தான் நமக்கு பாஜகவுடன் கூட்டணி ஏற்பட்டுள்ளது போலிருக்கிறது என்று அர்த்தபூர்வமாகச் சிரித்தார். தலைவரோ.. ‘நான் என்ன சொல்வது? ராமச்சந்திரன் பட்டுக்கோட்டையில் இருந்து அல்லவா வந்திருக்கிறான்' என்றார். பட்டுக்கோட்டை அழகிரியின் ஊர் என்பதை எல்லோரும் புரிந்துகொண்டு சிரித்தோம். சட்டமன்றத்தில் பல கேள்விகளை முதல்வரிடம் கேட்டுள்ளேன்.  ஒருமுறை கேள்வியைக் கேட்டு,  ‘முதலமைச்சர் அய்யா சொல்வார்களா?' என்று கேட்டேன். தலைவர் எழுந்து,'முதலமைச்சரின் அய்யா எப்போதோ இறந்துவிட்டார். எனவே இக்கேள்விக்கு முதலமைச்சர்தான் பதில் சொல்வார்' என ஆரம்பித்தார்.

என் மகனுக்கு மருத்துவக்கல்லூரி இடத்துக்கு சிபாரிசு செய்யுமாறு அவருக்குக் கடிதம் கொடுத்துவிட்டு வெளியே நின்றுகொண்டிருந்தேன். உள்ளே கூப்பிட்டார்கள்.  ‘நீ தான் சாமி கும்பிடறவனாச்சே.  உனக்கு சாமி அல்லவா கொடுக்க வேண்டும்? ஏன் என்னிடம் கேட்கிறாய்?' என்றார் தலைவர் கிண்டலாக.

‘அய்யா... கடிதத்தை நன்றாகப் பாருங்கள். நான் இறைவனை வணங்குகிறவன். நான் வணங்கும் கடவுள் நீங்கள் என்பதால் உங்களிடம் கேட்பதாக எழுதி இருக்கிறேன்' என்று கூறினேன், அந்த வரியைப் படித்தார். ‘சரி சரி..போ' என அனுப்பிவிட்டார். இடமும் கிடைத்தது. அவரைப் போல் ஒரு தலைவரை இனி காணமுடியாது!

(நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)