சிறப்புப்பக்கங்கள்

ஆறு குணங்கள் கொண்டவளாம்...

கலாப்ரியா

உலகில் ஏழே ஏழு திரைக்கதைகள்தான் உண்டு என்று சொல்லுவார்கள் அது போல், தமிழ் சினிமாவில் ‘ மாதர் குல மாணிக்கம்’, மங்கையர் திலகம், குலதெய்வம், குலவிளக்கு, தெய்வப் பிறவி, பெண்குலத்தின் பொன் விளக்கு, இன்னும் சில பெயர்களைச் சொன்னால் கட்டுரை முடிந்து விடும் அளவுக்கு பெண்ணின் பெருமை பேசும் ஒரே வகையான சினிமாக்களே, கதைகள் மட்டுமே நினைவுக்கு வருகிறது. நம்முடைய கதை சொல்லிகள் ஆதி காலத்திலிருந்தே அனுசூயாக்களையும் அருந்ததிகளையும் சீதையையும் பாஞ்சாலியையும் மையப்படுத்தியே தங்கள் புனைவுகளைப் பின்னி வருகிறார்கள். புராணங்களை பின்னணியாகக் கொண்டே தென் இந்திய சினிமாக்கள் எடுக்கப் பட்டன, ஆரம்பத்தில். களம் மாறினாலும் ஆட்டம் மாறினாலும் கதையாக என்னவோ அதுவே காலா காலத்திற்கும் தொடர்ந்தது.  

கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் வகைமையில் எப்படிப்பட்ட கணவன், எந்த வழியில் வாய்த்தாலும், அது ஆண் கட்டும் கட்டாயத் தாலியோ, அல்லது தாய் மகளுக்குக் கட்டிய தாலியோ, சகித்துக் கொண்டு, பதிபக்தியோடு மங்கையர்க்கரசியாய் வாழ்ந்து சப்த கன்னிகையர் வரிசையில் ஆயிரம், ஆயிரத்தி ஒன்றாவது கன்னிகையர்களாக விளங்குபவர்கள்தான் தமிழ் சினிமா கதாநாயகியர்கள். அவ்வப்போது கூட்டுக் குடும்பத்திற்கு தன் உழைப்பை வாரியிறைத்து விட்டு ‘குலவிளக்கு’ என்று பெயர் பெறும் அவர்கள் என்றும் ஒரு தொடர்கதைதான்.

ஆனாலும் எதிர்பாராமல் சில பாத்திரங்கள் அமைந்து விடுவது உண்டு. அது ஸ்ரீதர் போன்ற சில புதுமையைச் சிந்திக்கிறவர்களால் சாத்தியமானது. எதிர்பாராதது அப்படி ஒரு பாத்திரப் படைப்பு. தன் காதலியையே தனக்குச் சிற்றன்னையாக விதி கொண்டு வந்து நிறுத்தும் சினிமாக் கதை. அது வரைதான் புதியது. அதற்கப்புறம் சிற்றன்னையாகி விட்ட பத்மினியைக் காதலனாக நெருங்கும் சிவாஜியை கன்னத்தில் அறைந்து வெளியேற்றும் தர்ம பத்தினியாகி விடும் வழக்கமான பெண் பாத்திரம்தான். இதற்கு நேர் மாறாக சிற்றன்னையான ராணி கிழ ராஜாவான அசோகரை விடுத்து இளவரசனான குணாளனை மோகிக்கும் பெண் பாத்திரமாக கண்ணாம்பா நடிக்கும் அசோக் குமார் படம் புத்த நடோடிக் கதையின் பின்னணியில் எழுதப்பட்டது. இதே போலக் கதையை கண்ணாம்பாவே பிற்காலத்தில் தாலி பாக்கியம் என்று எடுத்தார். எம்.ஜி.ஆரின் சின்ன மாமியார் போன்ற பாத்திரத்தில்  வரும் எம்.என் ராஜம் அவரை மோகிப்பது போல வரும்.

கண்ணாம்பாதான் தன் அம்மா என்று தெரியாமல் அவளைப் ‘பெண்டாள’  நினைத்து அவள் வீட்டுக்கு வரும் பி.யு.சின்னப்பா மங்கையர்க்கரசியில் மூன்று வேடத்தில் வருவார். இது, விக்கிரமாதித்தன் கதைகள் போல பிரபலமான ‘மதனகாமராஜன் கதை’களில் ஒன்று. ஆனால் சோதனைகளையெல்லாம் வென்று கடைசியில் மங்கையர்க்கரசி ஆகி விடுவார் கண்ணாம்பா. அதே மதனகாமராஜன் கதைகளிலிருந்து எடுத்த இன்னொரு கதை/ பாத்திரம் ‘மங்கம்மா சபதம்’. தன்னை ஏமாற்றிய ராஜாவை கழைக் கூத்தாடியாக வந்து அவன் மூலமாகவே பிள்ளை பெற்று அவனை ராஜாவுக்குப் போட்டியாக வளர்த்து அவனையே ஜெயிக்கிற கதை. ராணி மங்கம்மா பற்றிய கதையைத் தழுவி நாயக்கர் மகள் என்று கே.எஸ் கோபாலகிருஷ்ணன் அவரது படத்தில் ஜெயசித்ராவை ஒரு சிறந்த ராஜ தந்திரியாக, ஸாரி ‘ராணி தந்திரி’யாகக் காண்பித்திருப்பார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமாக யோசித்தவர் ஸ்ரீதர். அவரது மீண்ட சொர்க்கம் புதுமையான கதை. தற்செயலாகக்  கண்டெடுக்கும் ஆடும் மயிலான ஒரு  மலைவாசிப் பெண்ணை ஆடற்கலைக்கே அரசியாக்க நினைக்கும் கதாநாயகன் அவளை சிறந்த குருவிடம் கொண்டு சேர்க்கிறான். அவர் ஒரு நிபந்தனை விதிக்கிறார், கலைக்காகவே பிறந்தவள் இவள், இவளை சாதாரண குடும்ப பந்தத்தில் தள்ளி விடக்கூடாது என்கிறார். நானும் அவளது கலையையே காதலிக்கிறேன் அவளையல்ல என்கிறான் நாயகன். அவளோ அவனை மனமார விரும்புகிறாள். கொஞ்சம் கொஞ்சமாகஅவளது அன்புக்கு இணங்கி இவனுமே காதலிக்கத் தொடங்கி விடுகிறான், ‘ கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்..’ என்று மாறி விடுகிறான். அப்புறம் கதையும் மாறி விடுகிறது. ஆனால் இது ஒரு அற்புதமான காதல் கதை.

‘அவளுக்கென்று ஒரு மனம்’ இருக்கும் ஒரு பெண்ணின் கதையையும் ஸ்ரீதர் எடுத்திருந்தார். காதலனின் மனைவிக்கு துயரம் நேரக் கூடாது என்று தன்னையே அழித்துக் கொள்ளும் பெண்ணாக பாரதி சிறப்பாக நடித்த படம் அது. அவர்  எடுத்த அலைகள் படத்தின் நாயகி விபச்சார விடுதியில் இருந்து காப்பாற்றப் பட்டவள். அவளை இன்ஸ்பெக்டர் நாயகன் தன்னுடன் வைத்து வாழ்வது போல கதை செல்லும். ஸ்த்ரீ என்றொரு மலையாளப் படத்தில் ஊரே விபச்சாரி என்று தூற்றும் கடைசிக் கட்டத்தில்  இன்ஸ்பெக்டர் சத்யன், சாரதாவுக்கு தாலி கட்டி மானமுள்ள ஸ்த்ரீ ஆக்குவார், அங்கே முடிகிற கதை இங்கே ஆரம்பிக்கிறது அலைகளில்.

முழுக்க முழுக்க மலையாளப் படங்களின் பாதிப்பில் வந்த அவளும் பெண்தானே படத்தில் இதே போல கால் கேர்ளான சுமித்ராவைத் திருமணம் செய்து கொள்ளுவார் முத்துராமன், அதற்கு உறுதுணையாக அம்மா பண்டரி பாய் உதவுவார்.துரை சற்று வித்தியாசமான டைரக்டர். பசி படத்தில் வித்தியாசமான பெண் பாத்திரங்களைக் காண்பித்திருந்தார். ஆர்.சி.சக்தியின் சிறை படத்தில் லக்‌ஷ்மியின் பாத்திரம் வித்தியாசமானது, தன்னைக் கெடுத்த ரவுடியுடன் வாழும் திடமான முடிவெடுக்கும் பாத்திரம். ஆர்.சி. சக்தியின் உணர்ச்சிகள் படத்தில் ஸ்ரீவித்யா செக்ஸ் ஒர்க்கராக வந்து இயல்பாக நடித்திருப்பார். அதில் கமலஹாசன் வித்யாவை நெருங்க நினைத்து பணம் தரும்போது அடி வாங்கிக் கொள்வார். அதே நேரத்தில் வந்த மலையாளப் படமான விஷ்ணு விஜயம் படத்தில் கமல் தன்னை விட வயதான ஷீலாவுடன் உறவாடுவார்.

அதை நினைத்தோ அல்லது ‘40 கேரட்ஸ்’ போன்ற ஹாலிவுட் சினிமாக்களின் பாதிப்போ என்னவோ, கமல் ஸ்ரீவித்யா  ஜோடியையும் , சுந்தர ராஜன் ஜெயசுதா ஜோடியையும் அபூர்வ ராகங்கள் படத்தில் வித்தியாசமாக நடிக்க வைத்திருப்பார் பாலசந்தர், ஆனால் ’தாலிக்கு மேல் ஒரு தாலி உண்டா வேலிக்கு மேலும் ஒரு வேலி உண்டா என்று பாட்டுப் பாடி பண்பாட்டைக் காப்பாற்றி விடுவார்.  மம்தா என்ற இந்தி/வங்காள படத்தின் தழுவலான காவியத்தலைவி படத்தில் சௌகார் ஜானகி படுகிற கஷ்டமெல்லாம் பட்டு, கடைசியில் மகளுக்காக கணவனையும்  கொல்வார், காதலை இழந்த ஜெமினி கணேசன் காதலியின் குழந்தையை வளர்ப்பதே காதலுக்குச் செய்யும் மரியாதை என்று தியாகம் மேற்கொள்ளுவார். கடைசியில் எப்படியோ நாயகி ஒரு தாசி என்னும் உண்மை மகளுக்குத் தெரிய வரும் போது உயிரை விட்டு காவியத் தலைவி ஆகி விடுவாள்.

கிட்டத்தட்ட இதே கருத்துடன் சலங்கை ஒலி படத்தில்  ஜெயப்ரதா தன்னை விரும்பியவனை, தானும் விரும்பிய மகா கலைஞனை மறுபடிக் கண்டெடுத்து குடியின் அழிவிலிருந்து காப்பாற்ற தான் விதவை என்பதை மறைத்து, மகளிடம் கெட்ட பேர் வாங்கிக் கொண்டு அவளுக்கு நடனமும் கற்றுத்தர வைக்கும் சிறந்த பாத்திரம். அனேகமாகப் புதியது, ஆனால் தெலுங்கு வாடை வீசும்.

இதே போல் இந்தி வாடை வீசும் எங்கிருந்தோ வந்தாள் படத்தில் ஜெயலலிதா ஆட்டக்காரியாக இருந்து பைத்தியமான சிவாஜியைப் பார்த்துக் கொள்ள வரும் நர்ஸாக இருந்து அவருக்குத் தன்னயே வழங்கி  ஏமாற்றமடைந்து, விரட்டப்பட்டு, கடைசியில் வழக்கமான சுபம். இந்த ‘ட்வைஃப்’   (Twife )வகையான அரசவைக்கு நேர்ந்து விட்ட ஆட்டக்காரிகளைப் போல இங்கே தேவதாசிகள், அப்படியொரு தேவதாசியைப் பற்றிய கதை தாலியா சலங்கையா இதில் வாணிஸ்ரீக்கு தேவதாசி பாத்திரம். படம் எதிர்பாராத விதமாக நன்றாக ஓடியது. மக்கள் புதிய விஷயத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஆனால் தயாரிப்பாளர்கள் மோசமான உதாரணத்தையே விரும்புவார்கள்.

சந்ததி என்ற படமா அல்லது முன்னூறு நாட்கள் என்ற படமா சரியாய் நினைவில்லை. செக்ஸ் ஒர்க்கரான ஸ்ரீப்ரியா வாடகைத் தாயார் (surrogate mother) ஆக நடிப்பார்.  ஸ்ரீப்ரியா அபாரமாக நடித்திருப்பார். நாயகன் சிவகுமார் என்றும் நினைவு. அது தமிழுக்கு அது வரை புதிது. ஸ்ரீப்ரியாவின் அவள் அப்படித்தான் படத்தின் மஞ்சு பாத்திரம் ஆகச் சிறந்த புதுமையான பாத்திரம். எனக்கு ஜூலி கணபதியில் சரிதா ஏற்றிருந்த ஜூலி பாத்திரமும் மிகவும் புதிய ஒன்றாகப் பட்டது. தன் உடம்பின் பருமனை அருமையான நடிப்புக்கு சாதகமாக்கிக் கொண்டிருப்பார் சரிதா. பாலு மகேந்திராவின் சாதனைகளில் ஒன்று அந்தப் படம். (கதை என்னவோ ஸ்டீஃபன் கிங் கின் Misery நாவலின் தழுவல்தான்) சரிதாவின்  அக்னி சாட்சி பாத்திரப் படைப்பு கூட அனுதாபம் ஏற்படுத்துகிற வகையில் புதியதுதான்.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமான பாத்திரப் படைப்புகள் அவ்வப்போது தலை நீட்டினாலும் பொதுவாகப் பெண்களை, “பொறுமையிலே பூமகளாய், பேரழகில் திருமகளாய், பசியில் அமுதளிக்கும் அன்னையாய், காதல் அரவணைப்பில் கணிகையுமாய்,, ஊழியத்தில் பணிப்பெண்னாய், அறிவினை உரைப்பதிலே அமைச்சனாய் ”  ஆறு குணங்கள் கொண்ட ஒரு பாவையாக ராமன் தேடும் சீதையாகப் பெண்களைப் படைப்பதே தமிழ் சினிமா வாங்கி வந்த வரம். இது வரமா சாபமா... நாயகனுக்கே தெரியாது.

மார்ச், 2016.