சிறப்புப்பக்கங்கள்

ஆரோக்கிய உணவு!

முத்துமாறன்

க ல்லீரல், கணையம், கருப்பை, பெருங்குடல், மார்பகம், சிறுநீர்ப்பை போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கும் நீரிழிவு நோய்க்கும் இருக்கும் தொடர்பை இன்னும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். ஆனால் இந்த இரண்டும் ஏற்பட பொதுவான காரணங்கள் உள்ளன.

வயது: வயது ஏற ஏற புற்றுநோய், நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் கூடுகின்றன.

பாலினம்: ஆணுக்குத்தான் பெண்ணை விட இந்த இரண்டு நோய்களும் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

இனம்: ஆப்பிரிக்கர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம். அதுபோல் ஆசியர்களுக்கு நீரிழிவு நோய்.

உடல் பருமன்:  குண்டாக  இருப்பவர்களுக்கு நீரிழிவு, புற்றுநோய்க்கான வாய்ப்புகள் கூடுதல்.

உடற்பயிற்சி: அதிகம் ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு இந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவே.

புகைத்தல்: சொல்லவே வேண்டாம்.
நீங்களே அறிவீர்கள்.

மது: தினமும் அருந்துகிறவர்களுக்கு இந்த இரு நோய்கள் தாக்கும் அபாயமும் அதிகம்.

செய்யவேண்டியது என்ன?

உடல் எடையைக் குறையுங்கள். கொஞ்சம்
குறைத்தாலும் அது பெரிய மாறுதலை உருவாக்கும்.

ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்: உணவில் பசுமையான காய்கறிகள், காய்கறி ஜூஸ் இருக்கவேண்டும். முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், கீரைகள், கத்தரிக்காய், நாட்டுக்காய்கறிகள் ஆகியவை சாப்பிடலாம். தினமும் 3&5 தடவை காய்கறிகள்
சாப்பிடுதல் நல்லது. ஒவ்வொரு முறையும் ஒரு கப் அளவுக்கு பச்சையாகவோ வேக வைத்த காய்கறிகளோ சாப்பிடவேண்டும்.

பட்டைத்தீட்டப்படாத தானியங்கள்: அரிசியோ கோதுமையோ சிறுதானியங்களோ அவை முழுமையாக பட்டைதீட்டப்படாதவையாக வாங்கி உண்ணுங்கள். கைகுத்தல் அரிசி, பழுப்பரிசி என சாப்பிடுங்கள்.

பசுமையான பழங்கள்: தினமும் உணவில் சேருங்கள்.

மாமிசங்கள்: கொழுப்பு குறைவான பால், தோல் இல்லாத கோழிக்கறி, மீன்கள், முட்டை, சர்க்கரை சேர்க்கப்படாத பால்பொருட்கள் ஆகியவற்றை உண்ணவும். எவ்வளவு
சாப்பிடுகிறீர்கள் என்பதிலும் கவனம் தேவை.

உடற்பயிற்சி: வாரத்துக்கு ஐந்து நாட்களாகவது பயிற்சியில் ஈடுபடும் இலக்கு வைக்கவும். 30 நிமிடம் நடை அல்லது ஒரு சுறுசுறுப்பான செயல்பாடு வேண்டும். இதை மூன்றாக பத்து பத்து நிமிடங்களாக பிரித்தும் மேற்கொள்ளலாம்.

புகைப்பதை நிறுத்தவும்: ஒரு நாள் குறித்து அத்துடன் விடலாம்.  என்ன செய்தேனும் இதை நிறுத்தவும்.

டிசம்பர், 2019.