சிறப்புப்பக்கங்கள்

ஆபீஸ் பாலிடிக்ஸைப் பத்தி உங்க கருத்து என்ன?

ஜெ. தீபலட்சுமி

ஆபீஸ் பாலிடிக்ஸைப் பத்தி உங்க கருத்து என்ன?' இதற்கு முன்பு வேலை பார்த்த அலுவலக நேர்முகத் தேர்வில் இப்படியொரு கேள்வி கேட்கப்படுமென்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

‘அது தெரிஞ்சா நான் ஏன்யா இருபது வருசத்துல பதினஞ்சு கம்பெனி மாறி இருக்கப் போறேன்?' என்று எண்ணமிட்டபடி ஒரு நிமிடம்  யோசித்தேன். சுதாரித்துக் கொண்டு, ‘ஆபிஸ் பாலிடிக்ஸில் ஆர்வமோ விருப்பமோ இல்லாவிட்டாலும் அதில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கவாவது அது பற்றித் தெரிந்திருக்க வேண்டும். வேண்டாத அரசியல் செய்பவர்களைக் கண்டு கொள்ள வேண்டும். என்னால் அது முடியும்!' என்று தெனாவட்டாக பதிலளித்தேன். ஆகப் பெரும் கபடவேட சூத்திரதாரியிடம் தான் அந்தப் பதிலைச் சொன்னேன் என்பதே தெரியாமல்! அது வேறு கதை!

கிசுகிசு என்பதே சும்மா நேரம் போக்குவதற்காகப் பகிரப்படுவது அல்ல, அதன் பின் நிச்சயம் மலினமான சூழ்ச்சியும், மோசமான பின்விளைவுகளும் இருக்கும்.

இந்தக் கருத்து எல்லாவகைப் புரணிக்கும் வெட்டிப் பேச்சுக்கும் பொருந்துமா என்றும் கூட நாம் சிந்தித்துப் பார்க்கலாம். ஆனால் நிச்சயமாகப் பணியிடங்களுக்குப் பொருந்தும் என்பது எனது அனுபவபூர்வமான நம்பிக்கை. தேவையற்ற புரணிக்குக் காது கொடுத்த கொடுமையினாலேயே ஒரு நல்ல பணியிலிருந்து நான் வெளியேறும் நிலைக்கு ஆளான கதையைத் தான் இங்கே பகிரப்போகிறேன்.

புதிதாகவும் வெகு வேகமாகவும் வளர்ந்து வந்து கொண்டிருந்த ஐடி நிறுவனங்களில் ஒன்றிலிருந்து மார்கெட்டிங் கம்யூனிகேஷன் எக்ஸிக்யூட்டிவ் பணிக்கு அழைப்பு வந்தது. மார்கெட்டிங் டீமில் முதல் ஆளாய் நியமிக்கப்பட்டது நான் தான். மேலாளருக்கு என் வேலையும் எழுத்தும் மிகவும் பிடித்தும் போனது. உச்ச மேலாண்மையின் நேரடிப் பார்வையில் வேலை செய்யும் அனுபவம் புதிய அனுபவமாகவும் சவாலாகவும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அது எனக்கு நல்லதொரு பணி உயர்வு தான்.

பின்பு அதே டீமில் இரண்டு ஆண்கள் வேலைக்கு எடுக்கப்பட்டார்கள். ஒருவன் கொஞ்சம் சீனியர். இன்னொருவன் எனக்குச் சமமான வரிசை தான். ஆனால் பணியில் வெகு சுமார். நன்கு வாய்ச்சவடால் அடித்தாலும், அடிப்படையான விஷயங்களுக்குக் கூட என் உதவியும், கற்பித்தலும் தேவைப்பட்டது அவனுக்கு.

அவன் என்னுடன் மட்டுமல்லாது எல்லாருடனும் மிகவும் கலகலப்பாகவும் நட்புடனும் பழகினான். பழைய கம்பெனி நட்புகளை விட்டு விட்டு வந்திருந்த எனக்கு அலுவலகச் சூழல் கொஞ்சம் இதமானதற்கு அவன் ஓயாமல் பேசிய புறணியும் அடித்த ஜோக்குகளும் தான் காரணம். நான் எழுதிய ரைட்டப்புகளை வேறு ஓயாமல் புகழ்வான்.

சீக்கிரம் வந்து விடுவதால் காலைத் தேநீருக்கு மட்டும் நாங்கள் இருவரும் மட்டும் செல்வோம். அப்படிப் போன போது கொஞ்ச நாட்களிலேயே மேலாளரைப் பற்றி மெதுவாகப் புறணி பேச ஆரம்பித்தான். அவன் மிகவும் நட்புடனும் நெருக்கத்துடனும் பழகும் மேலாளரைப் பற்றி அப்படிப் பேச ஆரம்பித்தது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது, அதுவும் ஒரு ஸ்கூல் மாணவி மனப்பான்மையிலேயே மேலாளர்களைப் பார்த்து வந்த எனக்கு அவன் பேசியது ஆச்சரியமாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்தது. ‘சரியான பேக்கு' என்று சரியாகக் கணித்த அவனது பேச்சுகள் விரைவிலேயே வேறு மாதிரி போயின.

‘அட, அந்தாள் ஒரு அல்பம்மா... சரியான மீடியா பைத்தியம்; கம்பெனிக்கு மார்க்கெட்டிங் பண்ணச் சொன்னா, தனக்குப் பண்ணிக்கிறான். பாரு எல்லாப் ப்ரெஸ் ரிலீஸ்லயும் அவன் பேரு தான், சீனியர் மேனேஜ்மெண்ட்ல வேற யார் பேரும் இல்ல' என்று அவன் சொன்னதில் எல்லாம் உண்மையும் இருந்ததால் இறுக்கமான பணிச்சூழலிலும் சிரித்து மகிழ்ந்திருக்க முடிந்தது.

ஒரு நாள் ‘உனக்குத் தெரியுமா? நம்ம---ல்ல அவளுக்கு லவ் மெசெஜ் அனுப்பிர்க்காம்மா இந்தாளு.'

‘நிஜம்மாவா?' என்றேன், அதிர்ச்சியாக.

‘அட ஆமாம்.. சரியான பொம்பளப் பொறுக்கி!'

‘சே...அப்டில்லாம் இருக்காது. டீசண்டான ஆள் தான்.'

‘ம்கும் உன்கிட்ட நடந்துக்கறத வெச்சி சொல்லாத. நீ கொய்ந்தம்மா... உனக்கொண்ணும் தெரியாது' என்று ரொம்பத் தெரிந்த மாதிரி சிரித்தான்.

இத்தோடு நிறுத்தி இருந்தால் கூடப் பரவாயில்லை. தொடர்ந்து அவன் செய்தது தான் ஆகப் பெரும் தகிடுதத்தம்.

‘நான்லாம் இந்தாபீஸ்ல ஆறுமாசம் கூட இருக்க மாட்டேன். பாத்துக்கிட்டே இருக்கேன்..

ஆக்செஞ்சர் ல இண்டர்வ்யூ அட்டெண்ட் பண்னிருக்கேன்.. பார்ப்போம்..' இந்த ரீதியில் பிட்டுகளைப் போடத் துவங்கினான்.

அவ்வளவு தான். ஏற்கெனவே கொஞ்சம் தனித்த சுபாவம். நல்லாப் பேசுற ஒரு ஆளும் கிளம்பப் போறான். பாஸ் வேற சரியில்லை. நாமும் கிளம்பிட வேண்டியது தான் என்று ஆறுமாதம் முடியும் முன் தீர்மானமாக யோசிக்க ஆரம்பித்தேன். அவன் வார்த்தைகள் மூலமாகவே எல்லாரையும் பார்க்கத் தொடங்கி இருந்த எனக்கு, பணிச்சூழல் ஒரு வித ஒவ்வாமையைக் கொடுக்கத் தொடங்கியது.

அதற்கேற்றபடி அடுத்த மாதத்துக்குள் வேறு வேலை ஒன்று வந்தது. அப்போது ஐடி துறையில் வேலைக்குப் பஞ்சமே இருக்கவில்லை.

காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்த மாதிரி முதல் முறையாக நான் எழுதிய கட்டுரையில் ‘பஞ்ச்' பற்றவில்லை என்று பாஸ் சொன்னது, (அதையும் இந்த அழகு நண்பன் தான் வந்து என்னிடம் தெரிவித்தான்) அடுத்த நாளே ராஜினாமா செய்தேன். மேலாளருக்கு ஒன்றும் புரியவில்லை. என் வேலையில் மட்டுமல்லாது என் மீதும் மதிப்பு இருந்தது ‘அந்தாளுக்கு'. இப்படி திடீரென்று நான் வேலையை விடுவதன் காரணம் தெரியவில்லையே என்று குழம்பினார். தர்மசங்க டமாகிப் போன நான் கணவருக்கு வேலை மாற்றம் என்று ஒரு பொய்யைச் சொன்னேன்.

இப்போது பரவலாகி இருக்கிறதே ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்'அதை அப்போதே தருவதாகச் சொன்னார். வீட்டிலிருந்தபடியே எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வேலை பார் என்று சொன்னதும் தவறு செய்கிறோமோ என்று தோன்றியது. அதே நண்பனிடம் வந்து பகிர்ந்தேன். அவன் நக்கலாய்ச் சிரித்து அவர் மீது மேலும் சேற்றை வாரி இறைத்தான். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு அலுவலகங்கள் மாறிவிட்டாலும், இன்னும் அன்று எடுப்பார் கைப் பிள்ளையாக, கிசுகிசுவுக்குக் காது கொடுத்ததால் எடுத்த முடிவு தவறானது என்றே நிச்சயமாய் உணர்கிறேன்.

ஆனால் அந்தப் பணியிடம் குறித்தும் மேலாளரைக் குறித்தும் அவ்வளவு எதிர்மறையாகப் பேசி என்னைத் துரத்தியவன் அதே கம்பெனியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணியாற்றி, உயர் பதவிகளைப் பெற்றுக் கொண்டான். அவன் மேலாளரான பின்பு அவனது டீமில் வேலைக்கு எடுக்கப்பட்ட நான்கு பேரும் ஆண்கள்; ஒரே இனக்குழுவினர் என்பது கூடுதல் தகவல்.

இது ஒரு சாம்பிள் தான். எப்போதுமே பணியிடங்களில் ஒரு பெண் முன்னேறி வந்தால் சட்டென்று மேலாளரின் மதிப்பைப் பெற்றால் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவள் மீது சேற்றை இறைப்பதில் ஆண்கள் முன்னணியில் இருப்பது கண்கூடு. ஒரு பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தால் கூட அவள் டீமில் இருக்கும் ஆணுக்கு யோசிக்காமல் க்ரெடிட் கொடுப்பார்கள்.

பெண்களை அவர்களது நேரந்தவறாமை, ஒழுங்கு, நம்பகத்தன்மை போன்றவற்றுக்காக மதிப்பார்களே ஒழிய, வேலைத் திறமையையோ, அறிவுக்கூர்மையையோ அவ்வளவு எளிதாகப் பொதுவில் பாராட்டி விட மாட்டார்கள். பேச்சுத் திறமை இருந்து விட்டால் துணிச்சலானவள் என்ற பெயர் உடனடியாகக் கிடைக்கும். கறாரான மேலாளராக இருந்தால் அவள் கோபக்காரி, கடினமானவள் என்பார்கள். இந்தப் பிம்பங்களை எல்லாம் புறணி பேசாமலா கட்டமைக்கிறார்கள் இந்த ஆண்கள்?

சிகரெட் பிடிக்கப் போவதே புறணி பேசத் தானே!

நம் கதைக்கு வருவோம். சூடு பட்ட பூனையாய் அதன்பின் நான் யாருடனும் புறணி பேசுவதே இல்லை. அலுவலக அரசியலில் எப்போதுமே சுயேச்சை வேட்பாளர் தான். பணி இடைவேளைகளில் பெரும்பாலும் புத்தகங்கள் படிப்பது அல்லது காதில் இயர்ஃபோனைப் பொருத்திக் கொண்டு இசை கேட்பது தான் வழக்கமாகிப் போனதால் இழந்தது அதிகம் தான். ஆனால் கிசுகிசு என்பது என்னவோ பெண்களுக்குத் தான், ஆண்கள் அதிலெல்லாம் ஈடுபட மாட்டார்கள் என்று யாராவது சொன்னால், வாயில் கபசுரக் குடிநீரைக் காய்ச்சி ஊற்றுங்கள்.

ஜூன், 2021