பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே இந்திரா காந்தியின் போக்கில் மாறுதல்கள் நடக்க ஆரம்பித்தன. அதன் விளைவாக பல அரசியல் மாற்றங்களும் நிகழ ஆரம்பித்தன.
மாநிலங்களில் உள்ள பலம் வாய்ந்த தலைவர்கள், அந்தந்த மாநில எம்பிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை தனது தேர்தலே உணர்த்திவிட்டது என்பதை அவர் புரிந்துகொண்டார். மாநிலத்தில் சக்தி வாய்ந்த தலைவர்கள் இனி தலைதூக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தவர் -எல்லோருக்கும் ஒரு விதத்தில் வேட்டு வைத்தார்- காமராஜர் உட்பட!
டெல்லி அரசியலில் ஆபத்தான சர்வாதிகார சிந்தனை எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. அதுவே கொஞ்சம் கொஞ்சமாக விசுவரூபம் எடுத்து எமர்ஜென்சி வரை போயிற்று.
இந்திய அரசியலில் இப்படி ஒரு கோணலான போக்கு ஏற்பட்ட சமயத்தில்தான் அதிமுக பிறந்தது! மாநிலங்கள் டெல்லியை எதிர்த்துப் பேசும் சக்தியை இழக்க ஆரம்பித்த காலம் தொடங்கியது!
டெல்லி காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது என்றும் இந்தி எதிர்ப்பு உணர்வை வளர்த்தும் ஆட்சியைப் பிடித்த திமுக- டெல்லியோடு கைகோர்த்தது!
1971 இல் இந்திரா காங்கிரசுடன் திமுக கூட்டணி! இந்திரா அலையில் ராஜாஜி-காமராசர் கூட்டணியை முறியடித்து மாபெரும் வெற்றி!
அடுத்து நடந்தது என்ன? திமுக நிம்மதியாக ஆட்சி நடத்த முடியவில்லை. கலைஞர் இன்னொரு செல்வாக்கு மிக்க மாநிலத் தலைவராக வருவதை டெல்லி ஏற்குமா? மாநிலங்களை அடக்கி கைக்குள் வைத்திருக்கும் மனோபாவம் டெல்லிக்கு ஏற்பட்டுவிட்டதே!
இந்த அரசியல் பின்னணியில் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பிக்கிறார்! எமர்ஜென்சி வந்தேவிட்டது! திமுக ஆட்சி டிஸ்மிஸ்! எம்ஜிஆர் தனித்து நின்றாலும் ஜெயித்திருப்பார்! எமர்ஜென்சி கெடுபிடிகளால் மாநில கட்சிகளுக்கு தடை வருவதாக வதந்தி கிளம்பியது. தன் கட்சிப் பெயரையே அகில இந்திய அதிமுக என்று மாற்றிக்கொண்டார்!
எம்ஜிஆர் தமிழக ஆட்சியை பிடித்தார். அந்தோ! இந்திரா, தானே தோற்று ஆட்சியை இழந்தார்! மொரார்ஜிதேசாய் தலைமையில் ஜனதா ஆட்சி! எதற்கும் வளைந்துகொடுக்காத மொரார்ஜி தேசாய்!
இந்திரா காந்தி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் செல்ல முடிவு செய்கிறார்!
தமிழ்நாட்டில் தஞ்சாவூருக்கு இடைத்தேர்தல் வருகிறது! அதில் போட்டியிட முதலமைச்சர் எம்ஜிஆரை நாடினார் அவர். கூட்டணியில் அதிமுக இருக்கிறதே! எம்ஜிஆருக்கும் இந்திராவிடம் பெருமதிப்பு உண்டு. சம்மதித்தார்!
ஆனால் நடந்தது என்ன? பிரதமர் மொரார்ஜிதேசாய் தொலைபேசியில் அழைத்தார். ‘’இந்திராவுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட ஆதரவு தரக்கூடாது! மத்திய அரசுக்கு அதில் துளியும் விருப்பமில்லை’’ என்று திட்டவட்டமாகக் கூறினார். எம்ஜிஆர் உடனே இந்திராவுக்குக் கொடுத்த வாக்குறுதியை வாபஸ் பெற்றார்!
ஒரு முதலமைச்சர் தன் வாக்குறுதியை நிறைவேற்றவே டெல்லியில் இருந்து தடை!
நாட்டின் பிரதமராக வருகிறவர்கள் நேரடியாக முதல்வர்களின் முடிவுகளில் தலையிடத்தொடங்கிய சரித்திரம் ஆரம்பம்!
அடுத்துவந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திரா காந்தி திமுகவுடன் கூட்டு! திமுக ‘நேருவின் மகளே வருக’ என்றது. மிசா கொடுமையை மறந்தது! இந்திரா அலையில் திமுக மாபெரும் வெற்றி!
அடுத்து ஒரு காரணமும் இன்றி எம்ஜிஆர் ஆட்சி டிஸ்மிஸ்! இந்த டிஸ்மிஸ் டெல்லிக்கு வழக்கமான விளையாட்டு ஆகிவிட்டது! சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் வெற்றிபெற, மீண்டும் காங்கிரஸ் கவனம் எம்ஜிஆர் பக்கம் திரும்பியது! அதற்குள் நாட்டில் அரசியல் விபரீதமாகிவிட்டது! இந்திரா படுகொலை- எம்ஜிஆர் உடல்நிலை பாதிப்பு! - பிரதமர் ஆகிறார் ராஜிவ்.
எப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிமுக அரசியலில் நடைபோட வேண்டியதாகி விட்டது!
ராஜிவ்காந்தியும் சற்று சர்வாதிகார சிந்தனையுடன் தான் பத்திரிகை உரிமைகளைப் பறிக்கப் பார்த்தார். ஈழப்பிரச்னையில் தமிழக உணர்வுகளை முற்றிலும் கேட்பாரில்லாத நிலை உருவாயிற்று! டெல்லி தன் கையை ஓங்கிக்கொள்ள ஆரம்பித்தது! இடையே நடந்த பல நிகழ்ச்சிகளில் மாநில உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுவதற்கு உதாரணங்கள் பல கூறமுடியும்! வாஜ்பாய் ஆட்சியைத் தவிர.
ஜெயலலிதாவைக் கண்டு டெல்லி பயந்ததாக சொல்லப்படுகிறது! அவரை எப்படி அடக்கலாம் என்பதே அவர்களின் உண்மையான சிந்தனையாகவும் இருந்திருக்கும்!
ஜெ. மறைந்த உடனே நள்ளிரவில் வழக்கத்துக்கு மாறாக புது முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணியில் ரகசியம் இருப்பதாகப் பேசப்படுகிறது! முதல்வராக எழுச்சி பெற்ற சசிகலா ஒரே வாரத்தில் சிறைக்கு அனுப்பப்பட்டார்! இது எப்படி இருக்கு?
பிறகு வந்த இரட்டையர் ஆட்சி டெல்லிக்கு இரட்டை நாயனம் வாசிக்கத் தானே வேண்டி இருந்தது!
டெல்லிக்கு அடிபணியும் கட்டாயநிலை தொடர்கதையாகவே போய்க்கொண்டுள்ளது.
“அதிமுகவைப் பொருத்தவரை சசிகலா தலைமை வருமானால் மீண்டும் தமிழக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. டெல்லியில் பின் பலத்தோடு! சசிகலா- ஜெயைப் போல மத்திய அரசுக்கு வளையாதவராக ஆளமுடியுமா?’’ இப்படிக்கேட்டார் ஒரு முன்னாள் அதிமுக அமைச்சர்.
அதிமுக தோன்றியபோது இருந்ததை விட டெல்லியின் பிடி உச்சத்தில் இருக்கும் நேரம் இப்போது!
பிப்ரவரி, 22