1974இல் வெளியான ‘அவள் ஒரு தொடர்கதை‘ படத்தில் கவிதாவாக வரும், சுஜாதாவை இன்னும் பலரால் மறக்க முடியவில்லை. எம்.எஸ்.பெருமாள் எழுதிய, ‘வாழ்க்கை அழைக்கிறது' என்ற குறுநாவலில் வந்த கதாபத்திரத்தைத்தான் கவிதாவாக, திரையில் உலவவிட்டு இருந்தார் இயக்குநர் கே.பாலசந்தர்.
ஓடிப்போன கணவனை நினைத்தபடியே வாழும் அம்மா; தனக்கு முன்பே திருமணம் செய்து விதவையாக நிற்கும் தங்கை; இன்னொரு தங்கை; பொறுப்பே இல்லாத குடிகார அண்ணன் - அவனை நம்பி அண்ணி -அவர்களின் குழந்தைகள்; பார்வையற்ற தம்பி... இவர்களை எல்லாம் தூக்கிச் சுமக்கும் கவிதா!
‘குடும்பத்துக்காக ஓடாய் உழைக்கிறாள் கவிதா; அவளை யாரும் புரிந்துகொள்ளவே இல்லையே‘ என்கிற ஆதங்கம் - பரிதாபம், வெகு பலருக்கு இன்றும் இருக்கிறது.
கூர்ந்து கவனித்தால் அவளால்தான் பிறர், பரிதாப நிலைக்கு ஆளாகிறார்கள் என்பதை உணர முடியும்.
அவள் அலுவலகத்துக்கு புறப்படும் முன்பும், வந்த பின்பும் வீடே மயான அமைதி ஆகிறது; ஆளுக்கொரு மூலைக்கு ஓடுகிறார்கள்; பயந்து பம்முகிறார்கள்! ஒரு காட்சியில் கவிதா, குடும்பத்தினருக்காக தான் வங்கியில் பணம் சேர்க்கும் ‘ரகசியத்தை' உடைக்கிறாள்.
ஏற்கனவே குடும்பத்தினரிடம் இதைச் சொல்லி, அன்புடன் பழகி இருந்தால் ஒட்டு மொத்த குடும்பமும் பணப்பிரச்சனையை மகிழ்வோடு எதிர்கொண்டு இருக்குமே!
தவிர வேலைக்குப் போய் சம்பாதித்தால்தான் உழைப்பா.. இவளுக்கு ‘ஆக்கிப்போட்டு', துணி துவைத்து பணிவிடை செய்யும் குடும்பத்தினர் உழைப்புக்கு மரியாதையே இல்லையா?
பிறகு... அண்ணன் மகன் உணவகத்தில் திருடித் தின்கிறான், தம்பி பிச்சை எடுக்கிறான்.. இந்த நிலையில் லிப்ஸ்டிக், சென்ட் போட்டுத்தான் அலுவலகம் போகிறாள், ‘டைப்பிஸ்ட்' கவிதா. ‘வேலைக்கு இவை தேவை' என்கிறாள்.
தட்டச்சர் பணிக்கு லிப்ஸ்டிக், சென்ட் ஆகியவையும் குவாலிபிகேசன் என எந்தவொரு அலுவலகத்திலும் இருந்ததாக & இருப்பதாக தெரியவில்லை. (தவிர உலகத்திலேயே ஏழு மணி நேரம் மட்டும்... காலை பத்து முதல் மாலை ஐந்து வரை இயங்குவது அவளது அலுவலகமே!)
அண்ணிக்கு உடல் நலமில்லை என சிகிச்சைக்கு பணம் கேட்க, இவளோ தனக்கு லிப்ஸ்டிக் வாங்க தம்பியை ஏவுகிறாள். தவிர, ‘உன் (குடிகார) அண்ணனிடம் கேள்' என்கிறாள் நிஷ்டூரமாக! நாவினாற் சுட்ட வடு!
காதலனையும் அவன் அம்மாவையும்கூட விட்டு வைக்கவில்லை கவிதா.
அவன் தனது தாயிடம் இவளை அறிமுகப்படுத்துகிறான். அந்த பெண்மணியும் மரியாதையுடன் பேசுகிறாள். கவிதாவோ, ‘கல்யாணத்துக்கு முன் கர்வமா இருக்கலாம்.. கர்ப்பமாத்தான் இருக்கக் கூடாது‘ என்று அதிர வைக்கிறாள்.
இன்னொரு சமயத்தில், ‘பணம் செலவு செய் பத்து புருசன்கள் வந்து நிப்பாங்க' என்று அழ வைக்கிறாள்.
தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்று நினைக்கும் கவிதா, பிறரையும் தான் மதிக்க வேண்டும் என்பதை ஏன் உணரவில்லை?
அவளது முதல் காதலனை தவிர்த்து தள்ளிவிட்டார். இரண்டாவதாக, முதலாளியே அவளை பிடித்துப் போய் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான்... கவிதாவும் ஒப்புக்கொள்ள திருமண ஏற்பாடு நடக்கிறது.. கடைசி நேரத்தில் அண்ணன் இறந்துவிட (அண்ணியின் குழந்தைகளை காப்பாற்ற..) காதலனுக்கு தனது தங்கையை திருமணம் செய்து வைக்கிறாள்.
தவிர இவளது திடீர் முடிவை, காதல் மாப்பிள்ளை உடனடியாக ஏற்கிறான். ஆச்சரியம்தான்.
மேலும், கடைசி நேரத்தில்தான் இந்த விசயத்தை தனது தங்கையிடம் கூறி மணவறையில் உட்கார வைக்கிறாள். தங்கையின் விருப்பம் கவிதாவுக்கு பொருட்டல்ல.
இவற்றை எல்லாம் ‘அவள் அப்படித்தான்' என்று கடந்துவிட முடியாது.
தனக்கு காதல் கடிதம் கொடுத்த அதிகாரியை, ‘அவரது அரைகுறை ஆங்கில அறிவுக்காகவே தண்டனை தரணும்' என்கிறாள் கிண்டலாக..
அதாவது ஆங்கிலம் சரிவர தெரியாதவர்கள் கீழானவர்கள் என்கிற மனநிலை!
விலங்குகளின் மீதுகூட அன்பு செலுத்துபவள் கவிதா. ஆனால் வேலை பறிபோய் போராடும் தொழிலாளர்களைப் பார்த்து, ‘பிச்சை எடுக்கிறதும் போராட்டம் நடத்துறதும் நம்ம நாட்ல தொழிலா போச்சு...' என்கிறாள் கொடூரமாக. ‘போராட்டமே கூடாது..' என்ற
‘சிஸ்டத்தின்' 1974 வெர்சன்தான் கவிதா.
ஆனாலும் கவிதா என்ன செய்வாள், பாவம்! அவளைப் படைத்தவர், கே.பாலச்சந்திர மூர்த்தி ஆயிற்றே!
மார்ச், 2023