என் அண்ணா, நாற்பத்து இரண்டு வருடங்களில் ஏழாயிரத்து ஐந்நூறு மேடை ஏறியிருக்கிறார். பதினெட்டு நாடகங்கள் இயக்கி இருக்கிறார். அமெரிக்காவில் மட்டும் 160 முறை மேடை ஏறியிருக்கிறோம். பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் எங்களின் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், எஸ்.வி.சேகருக்கு மூன்று நாடகங்களும், காத்தாடி ராமமூர்த்திக்கு மூன்று நாடகங்களும், டி.வி.வரதராஜனுக்கு ஒரு நாடகமும் இயக்கியிருக்கிறார்,'' கிரேசி மோகனைப் பற்றிப் பேசுவதென்றால் அவரது தம்பியும் நடிகருமான மாது பாலாஜிக்கு பெருமை கொப்பளிக்கிறது. அண்ணன் கிரேசி மீது அவ்வளவு ப்ரியம் வைத்திருக்கும் தம்பி.
‘‘கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரைப் போல் நாடகத்தில் மோகன் அவ்வளவு சாதனைகளை வைத்திருக்கிறார்.
சாக்லெட் கிருஷ்ணா, ஆயிரம் முறைக்கு மேல் மேடையேறி இருக்கிறது. எந்த குழுவும் செய்திராத அபூர்வ சாதனை இது. அதேபோல், மற்ற எல்லா நாடகங்களும் முந்நூறு மேடைகளுக்கு மேல் அரங்கேறியிருக்கின்றன. எங்கள் குழுவில் மொத்தம் மூன்று கலைமாமணிகள் இருக்கின்றோம்.
மோகன் என்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த போது, கல்லூரிகளுக்கு இடையிலான நாடக போட்டியில், யாராவது கதை எழுதிக் கொடுத்தால், போட்டியில் கலந்து கொள்ளலாம் என கல்லூரியில் முடிவெடுக்கப்படுகிறது. கதை எழுதுவதற்கு மூன்று பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதில் மோகனுடைய ‘கிரேட் பாங்க் ராபர்ரி' என்ற கதை தேர்வு செய்யப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட மோகன் சிறந்த நடிகர், சிறந்த கதையாசிரியர் உள்ளிட்ட விருதுகளை வெல்கிறார். இது நடந்தது 1972-இல்.
கல்லூரி படித்து முடித்த பிறகு, எஸ்.வி.சேகர் தன்னுடைய நாடக குழுவிற்கு கதை எழுத சொல்லி மோகனைக் கேட்டுக் கொண்டார். அப்படி எழுதப்பட்டது தான் 'கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்'. இந்த கதையை 1975&-76இல் எழுதினார். இந்த நாடகம் மிகப் பெரிய ஹிட்டானது. அப்போது மூன்று மோகன்கள் இருந்ததால், ஆர். மோகன் என்ற பெயரை கிரேசி மோகன் என ஆனந்த விகடன் பெயர் மாற்றியது.
அதற்குப் பிறகு தானே சொந்த குழுவை ஆரம்பிக்கலாம் என்று அண்ணன் முடிவெடுக்கிறார். அப்போது நான் கல்லூரி படித்திருந்தேன். 1979-இல் கிரேசி கிரியேஷன்ஸ் என்ற நாடகக்குழுவை ஆரம்பித்தார்.
அப்போது சுந்தரம் க்ளேடன் கம்பெனியில் அவர் வேலைப்பார்த்து கொண்டிருந்தார். பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘பொய்க்கால் குதிரை' திரைப்படம் கிரேசி மோகனின் கதையாகும். இதனைத் தொடர்ந்து, 1985ஆம் ஆண்டு சுந்தரம் க்ளேடன் கம்பெனியில் வேலையை விட்டுவிட்டு ஆனந்த விகடனில் துணை ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார். ஆனந்த விகடனுக்கும், ஜூனியர் விகடனுக்கும் கதைகள், கட்டுரைகள், கேள்வி பதில்கள் எழுதிக் கொண்டிருந்தார். அதற்குப் பின்னர் 1988-இல் கமலஹாசனை ஒரு சுடுகாடு ஒன்றில் சந்திக்கிறார். அதற்குப் பிறகு இருவருடைய நட்பும் வளர்ந்தது.
எங்களுடையது கூட்டுக்குடும்பம். வீட்டில் மொத்தம் பதினான்கு பேர். எல்லோரும் மந்தைவெளியில் உள்ள வீட்டில் தான் இருந்தோம். கூட்டுக்குடும்பமாக இருந்ததுதான் இவ்வளவு வெற்றிக்கும் காரணம். வீட்டிலிருந்த எல்லோரும் மோகனின் திறமையைப் பாராட்டி ஊக்குவித்தனர். அவர் நல்லா கவிதையும் எழுதுவார். இதுவரை நாற்பதாயிரம் வெண்பாக்கள் எழுதியிருக்கிறார். பெயிண்டிங் நல்லா வரைவார். ரவிவர்மாவின் ஓவியங்களை அப்படியே வரைவார். கிட்டத்தட்ட ஆயிரம் பெயிண்டிங்குக்கு மேல் வரைந்திருக்கிறார்.
என்னைப் பொருத்தவரை குரு, அண்ணன், அப்பா என எல்லாமே மோகன் தான். எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து பாலாஜியாக இருந்த என்னை மாது பாலாஜியாக மாற்றியவர். இன்றைக்கு நான் ஏழாயிரம் மேடையேறி பிரபலமாகியிருக்கிறேன் என்றால் அதற்கு அவர் தான் காரணம். நான் வேறு யாருடைய வசனங்களையும் பேசியது கிடையாது கிரேசி மோகனுடைய வசனங்களை மட்டும் தான் இன்றுவரை பேசி நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த ஒரு பெருமை எனக்கு உண்டு. அவர் அடிக்கடி
‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று சொல்வார்கள். ஆனால். என்னைப் பொறுத்தவரைக்கும் தம்பியுடையான் நாடகத்திற்கு அஞ்சான்' என்று
சொல்வார். மோகன் சினிமா, நாடகம் என்ற இரண்டிலும் முழுமையாக இருந்தார். நானும் சினிமாவிற்கு சென்றுவிட்டால் குழுவை நிர்வகிக்க முடியாது என்பதால் நான் முழுக்க முழுக்க நாடகத்திலேயே இருந்துவிட்டேன்.
மேடையில், நேரத்திற்கு ஏற்றாற்போல் நகைச்சுவைகளை சொல்வது எங்கள் ஸ்பெஷாலிடி. இது எல்லாவற்றிற்கும் நாகேஷ் சாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மோகன் சிறு வயதிலிருந்து நாகேஷ் சாரின் ரசிகர். எங்களைப் போன்ற நகைச்சுவை நடிகர்களுக்கு எல்லாம் நாகேஷ் தான் ஆசான்.
அண்ணாவும் நானும் நிஜவாழ்க்கையில் நண்பர்கள் போல் தான் இருப்போம். சண்டை போட்டுக் கொள்வோம். நாடகம் சம்பந்தமாகத்தான் பேச்சுவார்த்தை, தகராறு எல்லாம் நடக்கும். இதெல்லாம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் இருவரும் சாந்தமாகிவிடுவோம். எனக்கு எல்லாமே அவர் தான். எனக்கு அவரிடம் எந்த ஈகோவும் கிடையாது. என் மீது மிகுந்த அக்கறையுடன் இருப்பான். என்னுடைய பிறந்தநாளுக்கு முதல் காரை அவன் தான் வாங்கிக் கொடுத்தான் 1992-இல். அதெல்லாம் மறக்கவே முடியாத ஒன்று.
அண்ணாவுக்கு சென்டிமென்ட் ஜாஸ்தி. அவர் எப்போதும் டவல் ஒன்று வைத்திருப்பார். எந்த ஊருக்கு சென்றாலும் அந்த டவலை எடுத்துச் செல்வார். ஒருமுறை அமெரிக்காவுக்கு சென்றிருந்த போது சேக்ரமெண்டோவில் தங்கியிருந்து நாடகம் போட்டோம். அடுத்த நாள் சான் பிரான் சிஸ்கோவுக்கு நாடகம் போடுவதற்கு சென்றோம். டவலை சேக்ரமெண்டோவிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். அவருக்கு அந்த டவல் இருந்தால் தான் நாடகம் நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கை. நாடக ஏற்பாட்டாளர்களை கூப்பிட்டு, நீங்கள் எப்படியாவது அந்த டவலை எடுத்து வந்துவிடுங்கள். அப்போது தான் நாடகம் ஆரம்பிக்க முடியும் என்று சொல்லிவிட்டார். இரண்டு பேர் நான்கு மணி நேரம் பயணம் செய்து அந்த டவலை கொண்டு வந்து கொடுத்தார்கள். அன்னைக்கு சாக்லெட் கிருஷ்ணா நாடகம் போட்டோம். அதில் மோகன் கிருஷ்ணராக நடிப்பார். டவல் சம்பவத்தை காமெடியாக ‘எல்லோரும் கிருஷ்ணருக்கு அவல் கொடுப்பார்கள், ஆனால் இந்த கிருஷ்ணாவுக்கு டவல் கொடுக்கிறார்கள்' என்றாரே பார்க்கலாம். சிரிப்பை அடக்கவே முடியவில்லை!
அன்று கபாலி கோவிலில் இருந்த போது, காலையில் ஒரு ஏழரை மணிக்கு அண்ணனிடமிருந்து போன் வந்தது. வயிறு வலிக்கிறது வீட்டுக்கு வரமுடியுமா என்று கேட்டார். நான், வழக்கமான வயிற்று வலியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். கோவிலிலிருந்து வீட்டிற்கு செல்வதற்குள் ஐந்து முறை போன் பண்ணிவிட்டார். வீட்டிற்கு சென்று மருத்துவரிடம் தகவலைச் சொன்னதற்கு பத்து மணிக்கு மருத்துவமனைக்கு வரச்சொன்னார். ஆனால், அதற்குள் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனே காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவமனைக்குச் சென்ற அடுத்த பத்து நிமிடத்தில் உயிரிழந்துவிட்டார். வாழ்க்கையில் மறக்க முடியாது சம்பவம் அது. எதிர்பாராத ஒன்றும் கூட. முந்தைய நாள் இரவு இந்தியா & ஆஸ்திரேலியா கிரிக்கெட் மேட்ச் பார்த்துவிட்டு, சிரித்துப் பேசிவிட்டு, காலையில் இப்படி நடக்கிறது என்றால் என்ன சொல்லுவீர்கள் இதற்கு? அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வருவதற்கு எனக்கு ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியது.
எல்லோரும் சொல்வார்கள், பாலாஜியும் மோகனும் ராமன்& லட்சுமணன் மாதிரி, எங்கு போனாலும் ஒன்றாகத் தான் போவார்கள் என்பார்கள். லட்சுமணன் ராமனுடன் காட்டுக்குப் போவார். நான் என் அண்ணனுடன் காட்டுக்குப் போகவில்லை. பரதனாக திரும்பி வந்துவிட்டேன். என்னை லட்சுமணன் என்று சொல்லக் கூடாது பரதன் என்று தான் சொல்ல வேண்டும். சுடுகாட்டில் அவனை விட்டுவிட்டு வந்துவிட்டேன்,'' தழுதழுக்கிறார், பாலாஜி.
அக்டோபர், 2021