எத்தனைப் படங்களில் பார்த்திருக்கிறோம் எடிட்டிங் பி.லெனின் - வி.டி.விஜயன் என. இந்த இரட்டையர்கள் இப்போது இணைந்து பணி செய்வதில்லை என்றாலும் இவர்கள் தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகள். வி.டி.விஜயனிடம் பேசியதிலிருந்து:
எனக்கு சொந்த ஊர் பாலக்காடு. என் அண்ணன் பூக்காரி படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக வேலைபார்த்தார்.
அப்போ அந்த படத்துக்கு காமிராமேனாக இருந்த அமிர்தம் சார்கிட்ட உதவியாளராக சேர வந்திருந்தேன். ஆனால் அவர்கிட்ட நிறைய பேர் இருந்தாங்க. அதனால எனக்கு தொடர்ந்து பணிபுரிய வாய்ப்பு இல்லை. அந்த படத்துக்கு இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு. அதில் பஞ்சு சார் என்னைப் பார்த்துட்டு விசாரித்து எடிட்டிங் உதவியாளனா சேர்ந்துக்கோ என்று சொல்லிவிட்டார். அப்படித்தான் நான் எடிட்டிங் துறைக்கு வந்தேன்.
அப்புறம் பாலச்சந்தர் சார் எடுத்த அபூர்வராகங்கள், மன்மதலீலை போன்ற படங்களில் பணிபுரிந்த என்.ஆர்.கிட்டு சார்கிட்ட உதவியாளராக வேலைபார்த்தேன். அப்போது ‘அவர்கள்’ படம் ஒர்க் பண்ணோம். அதில் பேட், பால் எதுவும் இல்லாமல் கிரிக்கெட் ஆடற சீன் ஒண்ணு வரும். அதுக்கு சவுண்ட் போடறதுக்கு லெனின் சாரை வரவெச்சிருந்தாங்க. அப்பல்லாம் எடிட்டர்தான் அதெல்லாம் செய்யணும். ஏற்கெனவே சிலநேரங்களில் சில மனிதர்கள் படத்தில் லெனின் சார் நல்லா பண்ணியிருந்ததால் அவரை வரவெச்சிருந்தாங்க. அப்ப அவர்கூட பழக்கம் ஏற்பட்டது. அவர் தனியா படத்துக்கு எடிட்டிங் பண்ணப்போறேன் வர்றியா என்று அழைத்தார். கிட்டு சார்கிட்ட சொன்னேன். ‘தராளமாப் போ... அவர்கிட்ட நீ நிறைய கத்துகிடலாம். பெரிய ஆளா வருவேன்’னு அனுப்பி வெச்சார்! மகேந்திரன் சாரோட உதிரிப்பூக்களில் அவருடன் வேலை பார்த்தேன். அதில் டைட்டில் கார்டில் எடிட்டிங் உதவி வி.டி, விஜயன் என்று போட்டார். ரொம்ப பெருமையாக இருந்தது. எடிட்டிங் பி.லெனின் - வி.டி. விஜயன் அப்படின்னு போட்ட முதல்படம் ஏதோ மோகம். பானுப்ரியா அறிமுகமான முதல் படம்.
1979-ல் ஆரம்பித்து 2001 வரைக்கும் லெனின் சார்கூட இருந்திருக்கேன். அவரைப்பத்தி நான் வாழ்க்கையில் நினைக்காத நாளே கிடையாது. கோழிகூவுது படத்தில் ஏதோ மோகம் ஏதோ தாகம் பாட்டு. லெனின் சார் என்னைப் பண்ணச் சொல்லிட்டுப் போயிட்டார். மாண்டேஜ் ஷாட்ஸ் நிறைந்த பாட்டு அது. அதை இளையராஜா சார் பார்த்துட்டு ரொம்ப நல்லா இருக்கேன்னு சொன்னார். லெனின் சார் உடனே சொன்னார்: அது விஜயன் பண்ணதுன்னு! இந்த மாதிரி நிறைய எனக்கு கிரெடிட் கொடுத்ததைச் சொல்லாம்.
மணிரத்னமும் லெனின் சாரும் சின்னவயதிலேர்ந்து நண்பர்கள். அவங்க ரெண்டு பேர் வீடும் பக்கத்துப் பக்கத்துல இருந்துச்சு. அவர் படங்களுக்கெல்லாம் லெனின் சார்தான் எடிட்டிங் பண்ணுவார். நாயகன் பண்ணதுக்குப் பின்னால் அக்னி நட்சத்திரம் படத்துக்கு எடிட்டிங் பண்ண லெனின் சாருக்கு நேரம் இல்லை. தொலைக்காட்சி சீரியல்களில் பிசியா இருந்தார். அதனால் என்னையே பண்ணச் சொல்லிட்டார். அதுதான் நான் தனியா பண்ண முதல் படம். அதுக்கப்பறம் மணிரத்னம் கீதாஞ்சலி படம் இயக்கினார். அதுக்கு லெனின் பண்ணுவாரான்னு அவருக்கு தயக்கம். ‘சார்.. அப்ப லெனின் சாருக்கு வேறு வேலை இருந்ததால் அக்னி நட்சத்திரம் பண்ணமுடியல. இப்ப பண்ணுவாருன்’னு நான் போய் கூப்பிட்டேன். ஓ செய்வோமேன்னு அவர் வந்துட்டார்!
பொதுவா அவர் சினிமா விழாக்களுக்கு வரமாட்டார். எடிட்டிங்குக்கு ரெண்டு பேர் பேர்ல ஷீல்டு கொடுக் காம ஒரு ஷீல்டு லெனின் சார் பெயர் மட்டும் போட்டுக்கொடுப்பாங்க. அதனால் அவர் அதை வாங்க வரமாட்டார். நானும் அதுபோலவே இந்த விழாக்களுக்கு வருவதில்லை.
அவர் இயக்கிய நாக் அவுட் படத்துக்கு 1994-ல் தேசிய விருது கொடுத்திருந்தாங்க. என்னையும் அழைத்துக்கொண்டு போயிருந்தார்.
செக்யூரிட்டி யெல்லாம் தாண்டிப்போய் விழாவில் உட்கார்ந்திருந்தேன். விருதுபெறுபவர்களுக்கும் மத்தவங்களுக்கும் ஒரு வரிசைதான் வித்தியாசம். எனக்கும் தேசிய விருது கிடைக்கணும்னு விருப்பப்பட்டேன். அப்போ அது ஒரு பெரிய கனவாக தெரிஞ்சது. ஆனா அடுத்த வருஷமே காதலன் படத்துக் காக எங்களுக்கு தேசிய விருது கொடுத்தாங்க. அதுக்கு அடுத்த வருஷம் குற்றவாளி, ஊடாக குறும்படங்களுக்காக எங்களுக்கு விருதுகிடைச்சது.
2001-ல் ஷங்கர் படம் ஒண்ணு பண்ண பிறகு அவர் இனி எடிட்டிங் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டார். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகளில் அவர் கலந்துகொண்டிருந்தார். அங்கே தரமான படங்களைப் பற்றிப் பேசிவிட்டு அவர் எடிட் பண்ணும் படங்களில் தரக்குறைவான காட்சிகள் வந்தால் அவருக்கு தர்மசங்கடம். ஆனால் நான் தான் அந்த மாதிரி பாடல்களுக்கும் காட்சிகளுக்கும் எடிட் பண்ணியிருப்பேன்.
அவர் இனிமே நீ தனியா பண்ணிக்கோ என்று சொன்னது எனக்கு வாழ்க்கையில் மிகவும் துயரமான சம்பவமாக அமைந்தது. நானும் எவ்வளவோ கேட்டுப்பார்த்தேன். அவர் மறுத்திட்டார். ஆனால் என்னால் எதுவும் செய்ய இயலாது. என்னை நம்பி பத்து உதவியாளர்கள், எடிட்டிங் ரூம் எல்லாம் இருந்தது. படம் வந்தால்தான் பத்துபேர் பிழைக்க முடியும். என்னைப் பொறுத்தவரை எடிட்டிங் ஒரு தொழில். அதில் அவார்ட் படம்தான் பண்ணுவேன்னு பார்த்தால் என்னால் பிழைக்கவோ, என்னை நம்பியிருப்பவர்களைக் காப்பாற்றவோ முடியாது. கமர்ஷியல் படங்களும் பண்ணனும். அதுலேர்ந்து நானும் தனியாக பண்ண ஆரம்பித்தேன். அவர்கூட சேர்ந்து 300 படம் பண்ணியிருப்பேன். தனியா இதுவரை சுமார் 100 படம் பண்ணி இருப்பேன்.
கலைஞருடைய பெண் சிங்கம், இளைஞன் இரண்டு படங்களும் நான் தான் எடிட் செய்தேன். ரஜினிகாந்த் கூட பாபா படத்துக்கு பணிபுரிந்தேன். கலைஞரையும் ரஜினி சாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ஏப்ரல், 2015.