திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே திரை அரங்குகளின் பணி. அதற்காகவே பிரத்யேகமான கருவிகளை அவை கொண்டிருந்தன. திரை அரங்கின் சரிதம் 1877 இலிருந்து தொடங்குகிறது.
ஒலியற்ற அல்லது மௌன சலன துண்டுப் படங்களை ஐரோப்பியர்கள் கொண்டு வந்து இங்குத் திரையிட்டு மக்களை அதிசயிக்கவிட்டனர். மதராஸை (இன்றைய சென்னை) பொருத்தமட்டில் சென்னை கார்ப்பரேஷன் மற்றும் ரயில்வே நிலையத்திற்கும் இடையே இன்றும் கம்பீரமாக பொலிவுடன் நிற்கும் விக்டோரியா பப்ளிக் ஹாலில் தான் முதல் முதலாக இத்துண்டுப் படங்களைக் காட்டி மக்களை மகிழ்வித்தனர். இச்சலனப்படங்கள் பேசாததால் மொழிப் பிரச்சனை இல்லை. சினிமாவின் பரிமாண வளர்ச்சியில் படங்களை வெளியிடத் தனித்துவம் பொருந்திய சபை கூடம் உருவானது. 1900ஆம் ஆண்டு தோன்றிய இந்த சபை கூடமான திரையரங்கம் 'எலக்ட்ரிக் தியேட்டர்' என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தது. இதன் உரிமையாளர் Major Warwick என்பவர் ஆவார். டிக்கெட்டுகள் விற்று வணிக ரீதியில் முதன்முதலாகப் படங்களை மக்களுக்குக் காட்டியது இதுதான்.
சென்னை அண்ணாசாலை தபால் அலுவலக வளாகத்தில் உள்ளே இந்த 'எலக்ட்ரிக் தியேட்டர்' இன்னும் அந்த அலுவலகத்தின் ஒரு அங்கமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதை தொடர்ந்து 1905ஆம் ஆண்டில் Cohen என்ற ஆங்கிலேயருக்கு அண்ணா சாலையிலேயே (அன்றைய மவுண்ட் ரோடு) லிரிக் தியேட்டர் என்ற பெயரில் ஒரு பொழுதுபோக்கு அரங்கு இருந்தது.
சினிமா ஆர்வத்தை உணர்ந்த இணிடஞுண 1905ஆம் ஆண்டில் அதை பயன்படுத்திக்கொள்ள நினைத்ததால் அதன் விளைவாக லிரிக் முற்றிலுமான ஒரு திரை அரங்கமாக மாற்றப்பட்டு, 'Elphinstone' என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது. ஆங்கில மௌனப் படங்கள் இந்த தியேட்டரில் அரங்கேறின. தவிர தமிழ் சினிமா கர்த்தாக்களின் ஒருவரான கீ.நடராஜ முதலியார் தயாரித்த முதல் திரைப்படமான ‘கீசக வதம்' 1917 ஆம் ஆண்டில் இத்திரையரங்கில் தான் வெளியிடப்பட்டது.
பின் இக்கட்டடம் மேற்கத்திய பாணியில் திருத்தி அமைக்கப்பட்டு ‘New Elphinstone' என்ற பெயரில் தொடர்ந்து இயங்கியது. காலமாற்றத்தில் இதன் சரித்திரம் முற்றுப்பெற்று ‘ரெஹஜா காம்ப்ளக்ஸ்' என்ற பெயரில் வணிக வளாகமாக மாறிவிட்டது.
இதனைத்தொடர்ந்து ரகுபதி வெங்கய்யா என்ற திரைப்பட தயாரிப்பாளர் 1912ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலை அருகில் ‘கெயிட்டி' என்ற பெயரில் ஒரு நிரந்தர திரை அரங்கம் கட்டி திரைப்படங்களை வெளியிட்டார். இது கூவம் நதிக்கரையோரம் அமைந்திருந்தது. இது முழு வீச்சில் லாபகரமாக இயங்கியதால் வெங்கய்யா வடசென்னை தங்க சாலையில் ‘கிரவுன்' என்ற பெயரில் ஒரு தியேட்டரையும் புரசைவாக்கத்தில் ‘குளோப்' என்ற ஒரு தியேட்டரையும் கட்டி நடத்தினார். இதில் ‘குளோப்' தியேட்டர் பின்னர் ‘ராக்ஸி' தியேட்டர் என பெயர் மாற்றப்பட்டது. இந்த காலகட்டத்தில் திரையுலக முன்னோடிகளில் ஒருவரான கோயம்புத்தூரைச் சேர்ந்த வின்சென்ட் சாமிக்கண்ணு 1913ஆம் ஆண்டில் ‘வெரைட்டி ஹால்' என்ற பெயரில் ஒரு பிரம்மாண்டமான திரை அரங்கை நிர்மாணித்து திரைப்படங்களை வெளியிட்டார். சென்னையைப் பொறுத்தவரை மௌனப் பட தயாரிப்பு பெருகி வந்தது. விஞ்ஞான வளர்ச்சியால் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அமெரிக்க நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் 1927ஆம் ஆண்டில் AL Jolson என்ற நடிகரை கொண்டு ‘தி ஜாஸ் சிங்கர்' என்ற பேசும் படத்தை முதன் முதலாக தயாரித்து வெளியிட்டனர். இத்திரைப்படம் பாடியது, ஆடியது, பேசியது உலகையே வியக்க வைத்தது. துவக்க காலத்தில் பேசும் படத்தயாரிப்பில் சில சிக்கல்கள் இருந்தாலும் இவைகளை களைந்து மேம்படுத்தப்பட்டது. இப்போது முற்றிலும் பேசும் படங்கள் மக்களை மகிழ்விக்க தயாராகிவிட்டன.
முதல் பேசும் படத்தை திரையிட்ட அரங்கம்
வடசென்னை ஏழுகிணறு பகுதியில் இருந்த தோட்டத்தை திருத்தி காய்கறி மார்க்கெட் நடத்திவந்தார் அதன் உரிமையாளரான முருகேச முதலியார். பின்னர் நாடகங்கள் மீது கொண்ட நாட்டத்தால் 1910ஆம் ஆண்டில் ‘மெஜஸ்டிக்' என்ற பெயரில் நாடக கொட்டகையாக மாற்றி புகழ்பெற்றார். பம்பாய் பிரமுகர்கள் தொடர்பு அவரை சினிமாத்துறைக்கு ஈர்த்தது. எனவே தக்க மாற்றங்கள் செய்து தனது நாடகக் கொட்டகையை 'மெஜஸ்டிக்' என்ற அதே பெயரிலேயே திரை அரங்கமாக்கினார். 1916ஆம் ஆண்டில் லாரல் - ஹார்டியின் நகைச்சுவைப் படங்கள், ‘கீததேசம்' போன்ற மௌனப் படங்களை தொடர்ந்து திரையிட்டார். 1931ஆம் ஆண்டு இந்திய சினிமா முதல் முதலாக 'ஆலம் ஆரா' என்ற திரைப்படத்தின் மூலம் பேசத் தொடங்கி மக்களின் பேராதரவை பெற்றது. ஆலம் ஆரா வைத் தயாரித்த இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி அதே ஆண்டே ‘காளிதாஸ்' என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரித்தது. இதில் கதாநாயகி T.P ராஜலட்சுமி தமிழில் பேசி நடிக்க, கதாநாயகன் கங்காள ராவ் ( இவர் தெலுங்கர்) தெலுங்கில் பேசி நடிக்க விந்தையாக இருந்தது.
1931ஆம் ஆண்டில் மெஜஸ்டிக் என்றிருந்த பெயர் கினிமா சென்ட்ரல் என்று மாற்றப்பட்டது. இந்த கினிமா சென்ட்ரல் திரையரங்கில் தான் முதன்முதலாகத் தமிழ் பேசும் படமான ‘காளிதாஸ்' 31.10.1931இல் சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் திரையிடப்பட்டது. படத்தில் ஒளியுடன் இணைந்திருந்த ஒலி காட்சிகளில் அரங்கமே அதிர்ந்தது. திரை அரங்கத்தின் வெளித்தோற்றம் கோவிலாக உருவாக்கப்பட்டு காளி சிலை வைக்கப்பட்டது. மக்கள் தீபாராதனை காட்டிவிட்டு திரைப்படம் பார்க்க சென்றனர். வெளியூரிலிருந்து மாட்டு வண்டி கட்டிக் கொண்டு கூட்டம்கூட்டமாக திரையரங்கு வந்தார்கள். ‘நான் பேசும் படம் பார்த்தேன்' என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டனர். அப்போதெல்லாம் இரண்டு காட்சிகள் மட்டுமே வசூலை வாரி குவித்தன.
‘பக்த நந்தனார்', ‘சிந்தாமணி' , ‘அம்பிகாபதி' , ‘திருநீலகண்டர், எம்ஜிஆர் முதல் முதலாக நடித்த ‘சதிலீலாவதி', ‘அசோக்குமார்', 'கிருஷ்ண விஜயம்', ‘ஸ்ரீவள்ளி' போன்ற அற்புதமான திரைப்படங்கள் பின்னாளில் இங்கு வெளியாகின.
‘கினிமா சென்ட்ரல்', ‘சினிமா சென்ட்ரலாக' மாறியது. வயது முதிர்வால் உரிமையாளர் முருகேச முதலியார் தியேட்டரை தனது மகன் V.M பரமசிவத்திடம் ஒப்படைத்தார். 1948ஆம் ஆண்டு ‘சினிமா சென்ட்ரல்' புதுப்பிக்கப்பட்டு ‘ஸ்ரீ முருகன்' என்ற பெயர் மாற்றி பரமசிவம் சிறப்பாக தியேட்டரை நடத்தினார். பரமசிவம் புரட்சி நடிகர் அவர்களின் நெருங்கிய நண்பர் என்பது அவரைப்பற்றி குறிப்பிடத்தக்கது. பரமசிவம் 27.8.2006இல் காலமானார். பின் சில காலத்தில் கம்ப்யூட்டர் டிஜிட்டல் உலகம் கபளீகரம் செய்த தியேட்டர்களில் ஸ்ரீ முருகனும் ஒன்றானது.
திரை அரங்குகளில் விசித்திரங்கள்
1930 லிருந்து 1960 வரையில் திரையரங்குகளின் நிகழ்வுகள் விசித்திரமானவை, வியக்கவைக்கக் கூடியவை.
திரை அரங்கில் துவக்க காலத்தில் டிக்கெட் விலை கீழ்கண்டவாறிருந்தது.
1938ஆம் ஆண்டில் வணிக ரீதியில் பெரும் வெற்றி பெற்ற முதல் தமிழ் படமான ‘சிந்தாமணி;' திரைப்படத்திற்கான டிக்கெட் விலை இது (மாதிரிக்கு)
டிக்கெட் (வரிஉட்ப) அணா 8 (இன்றைக்கு லீ ரூபாய்), அணா 6, அணா 4, அணா 2, அணா 1 லீ ஸ்திரிகளுக்கும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் பெஞ்சு 1 அணா
திரை அரங்கு கட்டுப்பாடுகள்:
1. இடம் உள்ள வரைதான் டிக்கெட் உண்டு.
2. கரண்டு தவறினால் ரீபண்ட் இல்லை.
3. மேனேஜர் இஷ்டம் போல் புரோகிராம் மாற்றப்படும்
4. சைக்கிள் நிறுத்த பைசா 6
5. கண்டிப்பாக ‘ஒன்ஸ்மோர்' கிடையாது.
6 .தளத்தில் இடம் (வகுப்பு) மாறி உட்காரக்கூடாது.
7. முதன்மை பெற்ற படங்களைக் காண முன்னிடம் தேடுங்கள்.
8. குழந்தைகளுக்குத் தனியாக தூளி வசதியுண்டு.
9. திரை அரங்கில் கலவரம் செய்யக்கூடாது
10. கண்டிஷன்களுக்கு முன் நோட்டிசை அனுசரிக்கவும்
ஒப்பம்: மேனேஜர்
திரை அரங்குகளில் தனித்துவம்
திரையில் படம் ஓடுகின்ற நிலையில், பிஸ்கட், தின்பண்டங்கள் தட்டுகளில் ஏந்தி குரல் கொடுத்தவாறு அரங்கிலே வியாபார சுற்றுலா வரும் பையன்கள் டீ, காபி, கலர் சோடா என்று லாவகமாக கையிலேந்தி உள்ளே வலம் வருவார்கள் (என்.எஸ்.கே.இளம்வயதில் அவரது சொந்த ஊரான ஒழுகின சேரியில் அமைந்த முத்து தியேட்டரில் இந்த வேலையைத்தான் செய்தார்) விசிறிபோல் விரித்துப் படத்தின் கம்பெனி பாட்டுப்புத்தகங்களைக் கூட விற்கும் ஒருவன் என்று இப்படிப் பல கோஷங்கள் படத்துடன் கேட்க வேண்டும்.
படம் மாற்றும்போது, ‘இப்படம் இன்றே கடைசி' என்ற வாசகம் கொண்ட தட்டிகள் மக்கள் பார்வைபடும் இடத்தில் வைக்கப்படும்.
“ஏகாதசி நள்ளிரவுக் காட்சி - ஒரே டிக்கெட்டில் மூன்று படங்கள் ‘விடியும் வரை' என்ற பிரத்யேக விளம்பரம்.
தியேட்டர்களில் ஒழுங்குமுறை அமுல் திடமாக இருந்தது. வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று சான்றிதழ் பெற்ற படங்களுக்குக் கண்டிப்பாகக் குறைந்தபட்சம் அரும்பு மீசையாவது இல்லாதவர்களை அனுமதிப்பதில்லை. அக்கால பிரபலமான த்ரில்லர் படமான ‘சைக்கோ' பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட இளைஞர்கள் எத்தனையோ.
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு புதிய திரைப்படங்கள் பல வெளியிடப்பட்டு மக்களால் கொண்டாடப்பட்டன.
சென்னை திரைப்பட உருவாக்கத்தின் மையமாக இருந்தது. அதனால் பன்மொழி நடிகர்களின் வசிப்பிடமானது.
திரை அரங்கின் முன்னேற்றம்
பொதுவாகத் திரை அரங்கங்கள் மொழி அடிப்படையில் பிரிந்திருந்தன. சென்னையை பொறுத்தமட்டில் தமிழ் படங்களை வெளியிடும் தியேட்டர்கள், ரீகல், நியூ எலிபென்ஸ் டேன் போன்று ஆங்கிலப்படங்களை வெளியிடும் தியேட்டர்கள், இந்திப் படங்களை வெளியிடும் ஸ்டார் போன்ற திரை அரங்குகள் இருந்தன.
சினிமா தொழில் நுட்ப வளர்ச்சியில் பின்னாளில் ஆரோக்கியமான போட்டியிருந்தது. அதன் பயனாக 35MM திரைப்படங்கள் , பனோவிஷன் ,70MM படங்கள் ஒளியாகவும் ஒலி டிஜிட்டல் முறையில் துடிப்போடும் ஒலித்தது. இதற்கிடையில் திரைபட ஃபிலிமை மூன்று பகுதிகளாக பிரித்து மூன்று ப்ரொஜெக்டர்களில் அவைகளை இனைத்து ஒட்டி பார்ப்போரைத் திகைக்க வக்கும் வண்ணம் திரையிடப்பட்டது. சென்னை பைலட் தியேட்டரில் சினிரமா திரைப்படம் காட்டப்பட்டது.
இதன் பின்னர் கூடாரம் விரித்து மக்களை உள்ளடக்கி எல்லா பக்கங்களிலும் சினிமா தெரிய வைக்கும் சர்க்கராமா முறை வந்து அதிர வைத்தது. ஆனால் ‘சினிரமா', ‘சர்க்கராமா' ஆகிய இரு முறைகளும் பரீட்சார்த்தமாக காட்டப்பட்டு தொழில்நுட்ப சிக்கல்களால் பின் கைவிடப்பட்டது.
மறைந்து வரும் திரை அரங்குகள்
இன்று விஞ்ஞான வளர்ச்சியின் அனுகூலத்தைப் பெற்ற திரையரங்குகளில் பல நூதனமான சாதனங்கள் மூலம் திரைப்படங்கள் நடைபோடுகிறது. இத்தகைய வசதிபாரத திரையரங்குகள் நஷ்டத்தில் ஓடி பின் வணிக வளாகங்களாகவும், கல்யாண மாளிகைகளாகவும் மாற்றப்படுகின்றன. அன்றைய அசாத்தியமான சினிமா இன்று எளியோருக்கும் சாத்தியமாகியிருக்கிறது. கைபேசிகள், இணைய வசதி, ஓ.டி.டி போன்றவை துணையோடு படங்கள் விரல் நுனியில் சினிமா வந்து சேர்ந்துவிட்டது. எனவே திரை அரங்குகள் அழிந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. எனினும் இன்றளவும் தியேட்டர்களில் படங்களை வெளியிடுவதில் தான் தயாரிப்பாளர்கள் பெருமை கொள்கிறார்கள். ரசிகர்கள் வரவேற்கிறார்கள் என்பது ஒரு ஆறுதலான விஷயம்.
மே, 2022