இந்துத்துவ அரசியலையும் வலதுசாரி அரசுக் கொள்கை முடிவுகளையும் குறிப்பாக மத்திய பா.ஜ.க. அரசின் நிலைப்பாடுகளை அலசும் உரையாடல்களை அரண் செய் நிகழ்த்தி வருகிறது.
முன்னணி ஊடக நிறுவனத்திலிருந்து வெளியேறிய பத்திரிகையாளர் அசீப் முகமது, திரைப்பட உதவி இயக்குநராக இருந்த மகிழ்நன் பா.ம இருவரும் சேர்ந்து ‘அரண் செய்' என்ற பெயரில் செய்தி இணையதளத்தையும் யூடியூப் சேனலையும் தொடங்கினர்.
‘அரண் செய் இணையதளக் கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் வருமானம் எதுவும் இல்லை. ஒன்றரை வருடத்தில் இணையதளத்தை நிறுத்திவிட்டோம்,' என்கிறார் அசீப்.
இணையதளத்துக்கு கிடைக்காத வரவேற்பு ‘அரண் செய்' யூடியூப் சேனலுக்கு கிடைத்ததால், ‘அரண் செய் ப்ளஸ்' உதயமானது. இதிலும், மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அன்றாட அரசியல் நிகழ்வுகளின் பின்னுள்ள அரசியல் வீடியோக்களைப் பார்க்க முடியும்.
சமூக நீதி, சமத்துவம் பேசும் பல கருத்தாளர்களின் நேர்காணல்கள், அசீப், மகிழ்நன், தேவா பாஸ்கர் ஆகியோர் தோன்றிப் பேசுவதும் அரண் செய் ஸ்பெஷல்.
‘அரண் செய் முகநூல் தொடங்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பின் வருமானம் வந்தது. திடீரென, அந்தப்பக்கம் காரணமே இல்லாமல் முடக்கப்பட்டது. முகநூல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். எந்த பலனும் இல்லை. மீண்டும் புதிய பக்கத்தைத் தொடங்கினோம். அதுவும் முடக்கப்பட்டது. இப்போது, மூன்றாவது முகநூல் பக்கம் தொடங்கி இருக்கிறோம். அதிலிருந்தும் கொஞ்சம் பணம் வர ஆரம்பித்திருக்கிறது. எங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை எதிர்த் தரப்பினர் முடக்குகின்றனர்,' என்று ஆதங்கப்படுகிறார் அசீப்.
அரண் செய் குழுவில் 11 பேர் பணி புரிகிறார்கள். தீவிரமான அரசியல், சமூகம் சார்ந்த காணொலிகளை அரண் செய் தொடர்ந்து வெளியிடுகிறது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள், நிகழ்வுகளில் குறிப்பாக உரைகளைப் பதிவுசெய்யும் முயற்சியாகத் தொடங்கப்பட்டதே, குலுக்கை யூடியூப் சேனல்.
‘பின்னர் ஈழத்தை வைத்து இங்கு சுயநல அரசியல் செய்யும் போக்கு அதிகரிக்கவே, இந்த மண்ணுக்கான பிரச்னைகள், சமூகநீதி ஆகியவற்றை கவனப்படுத்தத் தொடங்கினோம்,' எனும் குலுக்கைக் குழுவினர், இன்றுவரை ஆவணப்படுத்தல் பணியை இடைவிடாமல் செய்துவருகிறார்கள். சமூக நீதிக்கான குரல்களின் களஞ்சியம் என்பது இதன் முழக்கம்!
இப்போது, வரலாற்றுப் பேராசிரியர் அ. கருணானந்தன், தொல்லியல் துறை வல்லுநரும் மத்திய தொல்லியல் அதிகாரியுமான அமர்நாத் ராமகிருஷ்ணா, தி.க. தலைவர் கி.வீரமணி, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, மூத்த வழக்கறிஞர் அருள்மொழி போன்றவர்கள், திராவிடர் இயக்கம், சமூகநீதி இயக்கம் சார்ந்த முழு உரைகளை வெளியிடுவது, குலுக்கையின் தனித்தன்மை. ‘இதன் நோக்கம், பிரச்சாரமே. கருத்துதான் ஆயுதம். ஏனென்றால், இங்கு பொது மனசாட்சி என்பதே கருத்துருவாக்கத்தால் கட்டமைக்கப்படுகிறது. எந்த ஒன்றிலும் வரலாற்றுப் பார்வை இல்லாததால், தவறான முடிவுகளை, பார்வைகளை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. எது வரலாறு, எது தொன்மக் கதை என வித்தியாசம் இல்லாமல், சுவாரசியத்துக்காக விசயங்களைப் பார்க்கப் பழகியதன் பாதிப்பை, தமிழ் மக்கள் அனுபவிக்கிறோம். சமகாலச் சிக்கல்களை வரலாற்றுப் பார்வையோடு அணுக, எங்களின் பணி பயன்பட வேண்டும். பொதுவாக, சமூக முன்னேற்றத்துக்கு உதவும் விசயங்களை எடுத்துச்செல்கிறோம்,' என நறுக்கெனச் சொல்கிறார்கள், குலுக்கை குழுவினர்.
வைரல், பரபரப்பு நோக்கங்களுக்கு வாய்ப்பு இருந்தாலும், தங்களுக்கு அதில் விருப்பம் இல்லை என உறுதிபடச் சொல்கிறார்கள்.
அன்றாடச் செய்திகள், அரசியல் நிகழ்வுகளை அன்றைய பொழுதுக்கானதாக மட்டும் அணுகாமல், பின்னணிகளையும் தரவுகளையும் ஆராய்ந்து 360 டிகிரி கோணத்தில் அலசும் ஊடகத்தை நடத்துவதுதான் தங்கள் இலட்சியம் என்கிறார்கள், மெட்ராஸ் ரிவ்யூ குழுவினர். ‘ஆங்கிலத்தில் இதுபோன்ற சில செய்தித் தளங்கள் இருந்தாலும், தமிழில் இப்படியான முயற்சிகள் குறைவாக இருந்ததாகவே நாங்கள் உணர்ந்தோம். அப்படிப்பட்ட ஒரு தளத்தை, வணிகரீதியாக அல்லாமல், சுதந்திர ஊடகமாக நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.' என்றும் கூறுகிறார்கள், பன்னீர்
செல்வகுமார், விவேகானந்தன், சத்தியராஜ் மூவரும்.
கடந்த 2020 ம் ஆண்டு madrasreview.com என்ற இணையதளத்தைத் தொடங்கிய இவர்கள், இப்போது யூடியூப் தளத்திலும் இயங்கிவருகிறார்கள். புதுடெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது அதுகுறித்த இந்தக் குழுவினரின் அலசல்களுக்கு, சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பரபரப்பாக எந்தத் தலைப்பையாவது எடுத்து அதற்குள் போவது என்பதைவிட, அரசுகளின் கொள்கை முடிவுகள், முக்கிய நிலைப்பாடுகள் பற்றி இந்த குழு விரிவாக அலசல்களை மேற்கொள்கிறது.
இந்தியாவில் தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் சாதியம், இனவாதம், தனிநபர் துதி போன்றவற்றைக் குழைத்து, கலவையாக குழப்பமாக அவரவர் வசதிக்கு வண்ணங்களைப் பூசிக்கொண்டு இருக்கையில், 'அவையெல்லாம் பிற்போக்குத்தனம்' என அடித்து விலக்கி, 'தமிழ்நாட்டின் உரிமைகள், தமிழ் - தமிழர்க்கான பிரச்னைகள் தொடர்பானவற்றில் மையம் கொண்டு இயங்குகிறார்கள்.
தமிழ்த் தேசியம் என்றாலே திராவிட நீக்கம் அல்லது வெறுப்பு என்று பரவலாக அறியப்படும் நிலையில், திராவிடர் இயக்கத்தை தமிழ்த் தேசியத்துக்கு நட்பாகவும் அதன் மாநில சுயாட்சிப் பார்வையில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் அலசல்களை முன்வைக்கிறார்கள், மெட்ராஸ் ரிவ்யூ குழுவினர்.
டியூபில் அரசியல் பேசும் சேனல் தொடங்க வேண்டும் என்பது பதிப்பாளர் ஆழி செந்தில்நாதனின் விருப்பம். அதனடிப்படையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், அண்ணாவின் பிறந்த நாளில் பேரலை பிறந்தது. இந்த சேனலின் பொறுப்பாளர் மில்டனிடம் பேசினோம்.
‘‘அரசியல் யூ டியூப் சேனல்களை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? அதில் எந்த வீடியோவை அதிகம் விரும்புகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவே எங்களுக்கு ஒருவருடம் ஆனது. செய்தியை செய்தியாகச் சொல்வதை மட்டுமே மக்கள் விரும்புவதில்லை. அவர்கள் செய்தியோடு கருத்தையும் விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொண்டோம்.
பேரலைக்கு 3 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருந்தபோது, எச்.ராஜா ஊடகத்தினரை மிக மோசமாக பேசியது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்த வீடியோவிற்காக எங்களின் சேனலை ஹேக் செய்து, பிட் காயின் வீடியோவைப் பதிவேற்றி, சேனலை முடக்கினார்கள். யூ டியூப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரத்திற்குப் பிறகே வீடியோக்களை பதிவேற்றத் தொடங்கினோம். இதுவரை 36,00 வீடியோ பதிவேற்றியிருக்கிறோம். 4 லட்சத்து 9 ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
அரசியல் யூடியூபாக செயல்படுவது என்பதே பெரும் சவால் நிறைந்தது. பொருளாதார ரீதியாகவும் செயல்பாட்டு வடிவத்திலும் அதிக நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நாங்கள் பேசும் அரசியலுக்காக பாராட்டுதலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகிறோம்.
யூடியூப் வந்த பிறகு நேரடியாக மக்களை அரசியல் படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. பேசப்படாமல் விடப்பட்ட விஷயங்கள் பேசப்படுகின்றன.
சமூகப் பொறுப்போடு செயல்படும் பேரலை, சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருப்பதாகவே கருதுகிறோம். பேரலை போன்று நிறைய யூ டியூப் சேனல்கள் தொடங்கப்பட வேண்டும்,' என்கிறார் மில்டன்.