சிறப்புப்பக்கங்கள்

அறம்: பாலின அரசியல் பேசிய பாத்திரம்...

ஸ்டாலின் சரவணன்

அறம் படம் மூன்று பெண் பாத்திரங்களை மையமாகக் கொண்டு சுழலும் கதை. ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தை தன்சிகா, அவளின் தாய் சுமதி, அக்குழந்தையை மீட்க நேரடியாக களத்தில் பணியாற்றும் மாவட்ட ஆட்சியராக மதிவதனி.

குழந்தையை மீட்கும் பணியில் தன் அதிகாரத்தை தாண்டி பணிபுரிந்ததற்காக மதிவதனி விசாரணைக்கு உள்ளாகும் காட்சியோடு தொடங்கும் படம்,கதையை பின்னோக்கி இட்டுச் செல்லும்.

மதிவதனி பாத்திரத்தை நேர்த்தியாக வடிவமைத்திருப்பார் இயக்குநர் கோபி நயினார். ஒரு பெண் முதன்மையாக வரும் படங்கள் சமூகத்தில் அதிர்வை உருவாக்குகிறது. ஏனெனில் பல நூறு ஆண்டுகளாக புறக்கணிப்புக்கு உள்ளான பெண் சமூகத்தின் பிரதிநிதி அப்பாத்திரம் என்ற பொறுப்புணர்வு இயக்குநருக்கு கூடுதலாக அமைந்து விடுகிறது. இதே அதிகாரியாக ஒரு ஆணைக் கூட வைத்து இருக்கலாம். ஒரு பெண் அப்பாத்திரத்தை ஏற்று நடிப்பது இயக்குநரின் தாராள மனது மட்டும் காரணம் இல்லை. உளவியலாக பார்வையாளர்கள் படத்தோடு ஒன்றிப் போக ஒரு பெண் பாத்திரம்தான் துணை செய்கிறது, கிணற்றில் விழுந்த ஒரு குழந்தையை மீட்க ஒரு பெண் அதிகாரி வரும் போது இயல்பாய் பெண்களுக்கே இருக்கும் பரிவும், தாய்மை உணர்வும் சேர்ந்து பார்வையாளர்கள் உணர்வுகளுக்கு நியாயம் சேர்க்கிறது.

உயர்ந்த அதிகாரம் என்றாலும் அதில் பெண் பணி செய்யும்போது பல்வேறு சவால்கள் தானாக முன்வந்து நிற்கின்றன,‘பெண்தானே‘ என்ற பின் புத்தியையும் சேர்த்து அவர் சமாளிக்க வேண்டி இருக்கிறது. உயர் அதிகாரிகளிடம் இருந்து வரும் அழுத்தம், லோக்கல் அரசியல்வாதி காட்டும் ஆணாதிக்க திமிர் கலந்த இடையீடு என பல வடிவங்களில் அவை வருகின்றன இவற்றையெல்லாம் மதிவதனி கையாளும் இடங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கும்.

மதிவதனி என்ற பெயர் கூட அறிவின் முகம் என்றே பொருள் தரும் அர்த்தமிக்கதாக வைக்கப்பட்டு இருக்கும். ஆணை நாயகனாகக் காட்ட உடல் பலத்தை முன்வைத்த சண்டை காட்சிகள் போதுமனவையாகிவிடுகின்றன. அந்த இடத்தை நயன்தாராவின் உடல் மொழியும் கச்சிதமான நடிப்பும் ஈடுசெய்கின்றன. ஆனால் அதிகாரியாக அவர் காட்டப்படுகிறார் என்பதற்காகவே கழுத்து வரை மூடிய நீளக்கை வைத்த ஜாக்கெட் அணிந்தே வரவேண்டுமா?இயல்பாக பெண்கள் அணியும் உடையில் ஒரு பெண் அதிகாரி காட்டப்படுவதில் இருக்கும் தயக்கம் ஏன் வருகிறது என்பதையும் நாம் சேர்த்தே யோசிக்க வேண்டி உள்ளது. அதுவும் வண்ணம் குறைந்த இரண்டே புடவைகள்தான் அவருக்கு படம் முழுவதும். அதே இடத்தில் ஒரு ஆண் அதிகாரி வண்ணமிக்க சட்டையில் வந்தால் நம் மனங்கள் எந்த சந்தேகத்திற்கும் உள்ளாகாதுதானே? அந்த மீட்புப் பணியில் வெற்றி பெற்றாலும் ‘‘சட்டங்கள் மக்களுக்கு பணி செய்யவா? அவர்களை கட்டுக்குள் வைக்கவா?'' என்ற கேள்வியோடு மதிவதனி அப்பதவியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறாள்.

அதிகாரத்தில் இருப்பது ஆணா? பெண்ணா? என்ற பாலின வேறுபாடு இங்கு இருக்கிறது.அரசு அதிகார அலட்சியங்கள், அதனை வால் பிடித்து வரும் ஓட்டு அரசியல்கள் அவற்றோடு பாலின அரசியலையும் சேர்த்துப் பேசிய பெண் சமூகத்திற்கான மிகப்பெரிய உந்துதலை தந்த படம் அறம்.

மார்ச், 2023