கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் தலைமை செயலாக்க அதிகாரியாக இருப்பவர் எஸ்.கிரிதர். அசீம்பிரேம்ஜி அறக்கட்டளை சார்பாக அரசுப்பள்ளிகளை மேம்படுத்த பல நடவடிக்கைகள் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளை சேர்ந்த அற்புதமான ஆசிரியர்களை இந்த பணிகளின்போது கிரிதர் கண்டு பழகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். தான் கண்ட ஆசிரியர்களைப் பற்றி Ordinary People, Extraordinary Teacher என்ற நூலும் எழுதி உள்ளார். இவரிடம் அரசுப்பள்ளிகளைப் பற்றி சிலகேள்விகளை முன்வைத்தோம்.
இந்த நூல் எழுதியபோது கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
கர்நாடகாவில் யாத்கிர் மாவட்டம், உத்தரகாண்டில் உத்தம்சிங் நகர், உத்தரகாசி மாவட்டங்கள், ராஜஸ்தானில் டோங்க், சிரோஹி மாவட்டங்கள் ஆகிய இடங்களில்கிராமப்புற அரசுப்பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களைச் சந்தித்தது உண்மையிலேயே அருமையான அனுபவம். 275க்கும்மேற்பட்ட கிராமப்புற அரசுப்பள்ளி ஆசிரியர்கள்... ஒவ்வொரு குழந்தையாலும் கல்வி கற்று முன்னேற முடியும் என்ற நம்பிக்கையும் உறுதியும் உடையவர்கள்... அவர்களை சந்திக்கச் சென்றது என்னைப் பொருத்தவரையில் ஒரு புனித யாத்திரை போல் இருந்தது.
இந்தியாவில் அரசுப்பள்ளிகள் நிலை எப்படி உள்ளது என கருதுகிறீர்கள்?
சவால்களும் நெருக்கடிகளும் நிறைய உள்ளன. எனவே எதையும்சொல்வதற்கு முன்னால் இவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும். இந்த நெருக்கடிகளை சமாளிக்க தேவையான உதவிகளைச் செய்வதில் தான் முதல் கவனம் தேவை. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு இடத்திலும் பல அரசுப்பள்ளிகளும் ஆயிரக்கணக்கான கடைமை உணர்வு வாய்ந்த ஆசிரியர்களும் உள்ளனர். நாம் அவர்களை அங்கீகரித்து ஆதரவளிக்கவேண்டும். உலகின் எந்த மூலையாக இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும் அது முன்னேற வேண்டுமானால் பொதுக்கல்வி முறை வலுவாக இருக்கவேண்டும். சமூகம் உள்ளிட்ட அனைத்து தரப்பாலும் அது ஆதரவளிக்கப்படவேண்டும்.
நீங்கள் சந்தித்த சிறந்த ஆசிரியர்கள் சிலரைப் பற்றி சொல்லமுடியுமா?
என்னுடைய இதுதொடர்பான நூலில் பல ஆசிரியர்களைப் பற்றிச்சொல்லி இருக்கிறேன். சுமார் 275 அருமையான ஆசிரியர்களை நான் சந்தித்திருந்தாலும் சுமார் 50 பேரைப் பற்றிதான் அதில் சொல்லி இருக்கிறேன். இதுவுமே சிறிய அளவுதான். ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள்..
அரசுப்பள்ளிகளுடன் இணைந்து நீங்கள் பணியாற்றும் அசீம் பிரேம்ஜி அறக்கட்டளை என்னமாதிரி பணிகள் செய்கிறது?
எங்கள் சகாக்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து, அவர்களின் திறனை வளர்ப்பதில் பங்களிக்கிறார்கள். ஆழமாகவும், நீண்டகாலம் தொடரக்கூடியதாகவும் இந்த களப்பணி அமைந்துள்ளது.
அரசாங்கம், இந்த அரசுப்பள்ளிகளைப் பொருத்தவரையில் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்?
அரசுகள் நிறைய செய்யமுடியும். பள்ளிகள் மட்டத்திலிருந்து பார்த்தால் வட்டார, மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்தபள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிறைய ஆதரவு அளிக்கமுடியும். தரமுள்ள வசதிகள், பாடப்பொருட்கள் உள்ளிட்ட ஆதரவு. தரமான சீருடைகளும் புத்தகங்களும் நேரத்தோடு அளிக்கபடுவதை உறுதி செய்யலாம். அடிக்கடி அங்கே வருகை புரிவதுடன் சமூக உறுப்பினர்களுடன் உரையாடி நம்பிக்கையை ஏற்படுத்தலாம். அரசுப் பள்ளிகளுக்குப் போதுமான நிதி ஒதுக்குதல் முக்கியமானது. நாம் 6% ஜிடிபி கல்விக்கு ஒதுக்கப்படவேண்டும் எனப் பேசினாலும் 3% மட்டுமே ஒதுக்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக்கொள்கை பல நல்ல அம்சங்களை வலியுறுத்துகிறது. அடுத்த 15&- 20 ஆண்டுகளுக்கு இந்த கொள்கையை அமல்படுத்துவது முக்கியமானது.
தமிழ்நாட்டில் அசிம் ப்ரேம்ஜி அறக்கட்டளையின் கல்விப் பணிகள் என்ன?
பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கு தொடர்ச்சியான திறன்வளர்ப்பு திட்டங்களை அளித்துவருகிறோம். தமிழக கல்வித் துறையின் தேவைக்கேற்ப, இந்த திறன்வளர்ப்புப் பயிற்சிக் காக ஒரு பாடத்திட்டமும் உருவாக்கி உள்ளோம். நேரடி பயிலரங்குகள், இணையவழி வகுப்புகள், தினந்தோறும் அவர்கள் எதிர்கொள்ளும் பணிகளில் உதவுவதற்காக வேலைப்பயிற்சிகள் ஆகியவை இத்திட்டத்தில் இடம்பெறுகின்றன. மாநிலக் கல்வித்துறையின் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் பல இடங்களில் நடத்துகிறோம். சுமார் 200 வட்டார கல்விஅலுவலர்கள், மாவட்ட கல்விப்பயிற்சி மையம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான கவுன்சில் ஆகியவற்றைச் சேர்ந்த 400 அலுவலர்கள், 120 மாவட்ட கல்வி அலுவலர்கள், 20 இணை இயக்குநர்கள் ஆகியோருடன் நாங்கள் இணைந்து உரையாடியும் பயிற்சி நடத்தியும் இருக்கிறோம். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட இடைவெளிகளில் சந்திக்கிறோம்.
தமிழ்நாட்டு பள்ளிகள் பற்றிய உங்கள் அனுபவத்தைக் குறிப்பிடுங்களேன்?
இங்கே நல்ல அடிப்படை வசதிகள், போதுமான வகுப்பறைகள், செயல்படும் நிலையில் உள்ள கழிப்பறைகள் எல்லாம் பெரும்பாலும் இருக்கின்றன என்று சொல்லலாம். மற்ற இடங்களைப் போலவே இங்கும் குழந்தைகள் கல்வியில் ஆர்வம் கொண்ட தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் உள்ளனர். பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதிகளைப் பெற்று பள்ளிகளுக்கு ஆய்வகம், நூலகம், உள்ளிட்ட வசதிகளைப் பெருக்கும் சில ஆசிரியர்களும் உண்டு. நாட்டின் பிற மாநிலங்களைப் போல இங்கும்
சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன. கற்றல்திறன் வெளிப்பாட்டில் சில இடைவெளிகள் உண்டு. சமீப காலமாக அரசு எல்லா அலுவலர்களின் திறன் மேம்பாட்டுக்காகவும் பள்ளிகளின் தரம் உயர்த்துவதற்காகவும் எண்ணும் எழுத்தும் போன்ற பல திட்டங்களை நடத்திவருகிறது. இல்லம் தேடிக்கல்வி என்கிற திட்டம் கிராமப்புற தன்னார்வலர்களின் பங்கேற்புடன் நடத்தப்படும் சிறந்த திட்டமாகும்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் வறிய நிலையில் இருக்கும் மாணவர்களே அரசுப்பள்ளிகளை நாடுகிறார்கள்... பிற மாநில நிலை எப்படி?
கடந்த 15, 20 ஆண்டுகளாக இந்த நிலையைப் பார்க்க முடிகிறது. சில மாநிலங்களில் அரசுப்பள்ளிகளை விட்டு விலகிச் செல்வதும் சில சமூகப் பொருளாதரப் பின்னணியை சேர்ந்தவர்கள் மட்டும் அரசுப்பள்ளிகளை சார்ந்திருக்கும் நிலையும் உள்ளது. என் நூலிலும் இதுபற்றிய தகவல்களை அளித்துள்ளேன். இருப்பினும் 2020/21 -இல் கோவிட் தொற்றுக்குப் பின்னால் அரசுப்பள்ளிகளுக்கே திரும்பும் நிலை உள்ளது. கடினமான சூழல்களிலும் கூட அரசுப்பள்ளிகள்தான் தங்களுக்கானவை என மக்கள் உணர்ந்துள்ளனர். வாழ்வாதாரம், குடும்ப வருமானம் பாதிக்கப்பட்ட நிலையில் குறைந்த கட்டண தனியார் பள்ளிகளில் இருந்துகூட , தங்கள் குழந்தைகளை கட்டணமில்லாமல் கல்வி அளிக்கும் அரசுப்பள்ளிகளில் மீண்டும் சேர்த்துவருகிறார்கள்.
அரசுப்பள்ளிகளைப் புறக்கணிக்கும் நிலை தொடர்ந்தால், அவற்றின் எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும்?
சிறந்த ஆசிரியர் தயாரிப்புத் திட்டங்கள் வேண்டும். நல்ல ஆசிரியர்களை பணியில் அமர்த்தவேண்டும். அவர்களை ஊக்கப்படுத்தி வளர்க்கவேண்டும். நல்ல முதலீடு செய்து, உதவிகள் அளிக்கவேண்டும். சமூகம், அரசுப்பள்ளிகளின் மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு அத்துடன் நெருக்கமாக பணிபுரியவேண்டும். அப்படி இருந்தால் தரம் உயரும்.
இந்தத் தலைமுறை மாணவர்கள் பொதுவாக மிகுந்த அழுத்தத்தில் உள்ளனரா?
தகவல்கள், ஊடகம், தொழில்நுட்பம், விருப்பங்கள், தொடர்புவசதிகள்- இவை அனைத்துமே போன தலைமுறையுடன் ஒப்பிடும்போது முற்றிலும் வேறு தளத்தில் உள்ளன. இதை அழுத்தம், ஸ்ட்ரெஸ் என்று சொல்லலாம் அதே சமயம் வாய்ப்புகளாகவும் பார்க்கலாம். என்னதான் தலைமுறைகள் மாறினாலும் குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தான். அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தை ரசிக்கவேண்டும். நமக்கும் எல்லா குழந்தைகளும் கற்க முடியும்; கற்பார்கள் என்ற நம்பிக்கை வேண்டும்.
நவம்பர், 2022