சிறப்புப்பக்கங்கள்

அரசியல் ஆட்டம்: நேரு முதல் மன்மோஹன் வரை

க.முகிலன்

ஜவஹர்லால் நேரு இறந்து 50 ஆண்டுகளாகின்றன . இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1946லேயே , இந்தியாவின் பிரதம மந்திரி ஆனவர் நேரு . 1964 மே மாதம் மரணம் அடைகிற வரையில் 18 ஆண்டுகள் நேரு இந்தியாவின் பிரதமராக இருந்தார்.

சுதந்திரம் பெற்ற பிறகு கடந்த 67 ஆண்டுகளில் காங்கிரசுக் கட்சி 57 ஆண்டுகள் இந்தியாவின் மைய அரசில் ஆட்சியில் இருந்தது. நேருவின் மகள் இந்திராகாந்தி, 16 ஆண்டுகளும், பேரன் இராஜிவ் காந்தி 5 ஆண்டுகளும் பிரதமர்களாக ஆட்சி செய்தனர், தற்போது பத்து ஆண்டுகளாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்து வருகிறார் என்ற போதிலும் நேரு குடும்பத்தில் மருமகளாக வந்த சோனியாவிடம் தான் உண்மையான அதிகாரம் இருக்கிறது .

நேருவின் காலத்திலும் அதற்குப்பிறகும் 1950 சனவரியில் நடப்புக்கு வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தான் இந்திய ஆட்சியும், நிர்வாகமும், நீதித்துறையும், தேர்தல்களும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் நேருவின் மறைவுக்குப்பின் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் பொருளாதாரம், சமூகம் ஆகிய தளங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இந்த மாற்றங்களை இந்தியாவின் அரசியல் கட்சிகளும், ஆளும் வர்க்க சக்திகளும் முன்னெடுத்தபோதிலும் உலக அரங்கில் நடந்த நிகழ்வுகளும் இந்தியா மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தப் பின்னணியில் நேருவுக்கு பின் நிகழ்ந்த மாற்றங்களை நாம் ஆராயவேண்டியுள்ளது .

இரண்டாம் உலகப் போருக்குப்( 1939 - 45) பின், 10 ஆண்டுகளில் அன்னிய ஆட்சியின் கீழ் காலனி நாடுகளாக இருந்த இந்தியாவும் மற்ற நாடுகளும் விடுதலை பெற்றன. சூரியன் மறையாத நாடு என்று பெருமிதம் கொண்டிருந்த பிரிட்டிஷ் பேரரசின் வல்லாண்மை வீழ்ந்தது. அமெரிக்காவும் சோவியத் நாடும் உலகின் இரு பெரும் வல்லரசுகளாக உருவெடுத்து எதிரெதிர் முகாம்களாக நின்றன. இந்தக் காலகட்டத்தில் தேசிய இன விடுதலை உணர்ச்சி மேலோங்கி இருந்தது , வேளாண்மையும் தொழில் துறையும் ஒவ்வொரு நாட்டிலும் சுயசார்பு குறிக்கோளுடன் வேகமாக வளர்ந்தன. 1950- 70 காலத்தைப் பொருளாதார வளார்ச்சியின் பொற்காலம் என்று வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர் , அதே சமயம் மக்கள் நல அரசு (ஙிஞுடூஞூச்ணூஞு ண்tச்tஞு ) என்ற கோட்பாடு வலிமை பெற்றது , மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், சாலைகள், மின்சாரம் போன்றவற்றை அளிக்க வேண்டியது அரசின் கடமை என்ற கருத்து மேலோங்கியது . இந்தியாவின் பெருத்த மூலதனம் தேவைபடும் பெருந்தொழில்கள் அரசின் பொதுத் துறை மூலம் மேற்கொள்ளபட்டன.

1970களில் பெட்ரோலியப் பொருள்களின் கடுமையான விலை உயர்வால் பொருளாதார வளார்ச்சியில் உலக அளவில் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அதனால் மூன்றாம் உலக நாடுகள் உலக வங்கி , பன்னாட்டு நிதியம் (ஐMஊ) ஆகியவற்றிடம் அவை விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று, கடன் வாங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. அரசுகள் பொதுத் துறைக்கு அளிக்கின்ற உதவியையும் , ஊக்கத்தையும் குறைத்து, தனியார் துறைக்கு முதன்மைதர வேண்டும் என்பதே கடன் பெறுவதற்கான நிபந்தனையின் சாரமாகும். இதன்பின் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கு தடையின்றி இந்தியாவில் அனுமதிக்கப்பட்டன. 1980 களில் பிரிட்டனில் மார்க்ரெட் தாட்சரும், அமெரிக்காவில் ரீகனும்தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்தனர். இவர்கள் காலத்தில் தான் தாராளமயம், தனியார் மயம், உலக மயம், என்ற கோட்பாடு உலகில் பிற நாடுகளிலும் ஊடுருவி வளார்ந்தது. அதனால் 1989ல் பெர்லின் சுவர் தகர்க்கபட்டது, சோவியத் ஒன்றியம் 15 நாடுகளாகப் பிரிந்தது, சோசலிச ஆட்சி முறை அகற்றபட்டது.

மாவோவின் மறைவுக்குப் பின், 1978 முதல் சீனாவிலும் முதலாளித்துவப் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றது. உலக அளவில் இந்த பொருளாதார வளர்ச்சி பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியது. ஏழைகளுக்கு எவ்விதத்திலும் உதவவில்லை.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்துவது , மக்கள் வாக்களிப்பது, அதிக இடங்களில் வெற்றி பெற்ற ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ சட்டமன்றங்களிலோ, தில்லியில் மத்திய அரசிலோ ஆட்சியில் அமர்வது என்பதாக மட்டுமே நம் நாட்டில் அரசியல் என்பது பெருமக்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அரசியலோடு பின்னிப் பிணைந்துள்ள- அரசியலுக்கே ஆணிவேராக இருக்கின்ற பொருளாதாரக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால்தான், பொருளாதாரம் எவ்வாறு அரசியலை இயக்குகிறது, ஆட்டிப்படைக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நேருவின் காலத்தில் 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்குப் பொதுதேர்தல் நடந்தது , மூன்று தேர்தல்களிலும் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று நேருவின் தலைமையில் ஆட்சி அமைத்தது. அதே போன்று 1957 ல் கேரளம் தவிர்த்து, மற்ற எல்லா மாநிலங்களிலும் காங்கிரசே ஆட்சி செய்தது , 1962 சட்டமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டில் திமுக 50 இடங்களைப் பெற்று இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது.

இக்காலக்கட்டத்தில் நாடாளுமன்றத்தில், சுதந்திரப் போராட்டக் காலத்தில் காங்கிரசுக்கட்சியில் பெரும் தலைவர்களாக இருந்து, பிறகு தனியாகக் கட்சி தொடங்கிய ஆச்சாரியா கிருபாளானி, லோகியா போன்ற சோசலிஸ்ட் தலைவர்களும் , கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர். அதனால் நாடாளுமன்ற விவாதங்கள் கண்ணியமான முறையில் நடந்தன. அதே சமயம் எதிர்க்கட்சித் தலைவர்கள் நேருவையும் , அமைச்சர்களையும் ஆணித்தரமான புள்ளி விவரங்களை அள்ளி வீசி தங்கள் நாவன்மையால் திணறடித்தனர், குறிப்பாக பட்ஜெட் கூட்டத் தொடரின் நெடிய விவாதங்கள் அறிவார்ந்தவைகளாக விளங்கின, தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடக்கும் கலாட்டா - ரகளை போன்ற நிலை நேரு பிரதமராக இருந்தபோது ஒரு நாள் கூட நடந்ததில்லை.

1957ல் கேரளத்தில் இ.எம்.எஸ்.நம்பூரிதிபாட் தலைமையில் அமைந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை இந்திராகாந்தியின் வற்புறுத்தலின் பேரில் நேரு கலைத்தார், அதனால் நேரு பெரிய சனநாயகவாதி என்ற புகழுக்குக் களங்கம் ஏற்பட்டது. 1962 ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லையில் நடந்த போரில் இந்தியாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. அதனால் நேருவின்

செல்வாக்குச் சரிந்தது. 1964 மே மாதம் நேரு மறைந்தார். நேரு இறந்த போது காமராசர் அகில இந்திய காங்கிரசுக் கட்சியின் தலைவர். அவரது ஆதரவுடன் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். அவர் 1966 ஜனவரியில் தாஷ்கண்டில் இறந்தார். பிரதமர் பதவிக்கு மொரார்ஜி தேசாயும் இந்திராகாந்தியும் கடுமையாக போட்டியிட்டனர். கட்சியின் தலைவராக இருந்த காமராசர் இந்திராகாந்தி பிரதமாராக ஆவதற்கு வழியமைத்தார்.

இந்திராகாந்தி பிரதமரானபோது அவரை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களான - காமராசர் , நிஜலிங்கப்பா, சஞ்சீவி ரெட்டி, எஸ்.கே.பாட்டீல் , அஜய் கோஷ், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள் அவர்கள் பிறந்த மாநிலங்களில் பெரும் தலைவர்களாக விளங்கினர். மத்திய அரசிலும், கட்சியிலும் தன் விருப்பம் போல் செயல்படுவதற்குச் செல்வாக்கான மூத்த தலைவர்கள் தடையாக இருப்பார்கள் என்று இந்திராகாந்தி கருதினார். ‘ இளம் துருக்கியர்’ என்ற பெயரில் காங்கிரசுக் கட்சியில் படித்த இளைஞர்களை மூத்த தலைவர்களுக்கு எதிராக ஏவினார். இதற்காகக் காங்கிரசில் கடைபிடிக்கப் பட்டுவந்த சனநாயக மரபுகளை உடைத்தெறிந்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் சஞ்சீவி ரெட்டியை கட்சியின் வேட்பாளராக இந்திராகாந்தி முன் மொழிந்த பிறகு, மனச்சான்றின் படி வி.வி.கிரிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். சஞ்சீவி ரெட்டியை தோற்கடித்தார் . கட்சியின் வேட்பாளரை அக்கட்சியின் பிரதமரே தோற்கடிப்பது என்ற அரசியலுக்கு வித்திட்டார் இந்திராகாந்தி. காங்கிரசுக் கட்சி இரண்டாக உடைந்தது. அப்போதுதான் இந்திரா காங்கிரசு என்ற பெயர் ஏற்பட்டது. மூத்த தலைவர்களைக் கொண்ட காங்கிரசு காலவெள்ளத்தில் கரைந்து போனது.

ஆட்சி அதிகாரத்திலும், கட்சியிலும் தானே முழு அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதற்காக வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை முன்னிருத்தி நாடாளுமன்றத் தேர்தலை முன் கூட்டியே 1971 ல் நடத்தினார். இந்திரா காங்கிரசு 352 இடங்களில் வெற்றி பெற்றது. மீண்டும் பிரதமரானார். மன்னர் மானியத்தை ஒழித்தார். வங்கிகளை நாட்டுடமையாக்கினார். மக்களிடம் - குறிப்பாக உழைக்கும் சாதி மக்களிடையே இந்திராகாந்தியின் செல்வாக்கு உயர்ந்தது.

ஆனால் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக மாநிலங்களில் மக்கள் செல்வாக்கு உடைய தலைவர்கள் உருவாகாதவாறு அரசியலில் காய்களை நகர்த்தினார். எந்த இரவில் எந்த முதலமைச்சரின் தலை உருளுமோ என்ற அச்சத்தை உண்டாக்கியிருந்தார். விதி 356-ஐ பயன்படுத்தி மாநில அரசுகளைத் தன் விருப்பம் போல் கலைத்தார். இந்திராகாந்தியின் சர்வாதிகார போக்கின் உச்சகட்டமாக 1975-ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை அறிவித்தார். எதிர்கட்சித்தலைவர்களைச் சிறையில் அடைத்தார். செய்தி ஊடகங்களை ஒடுக்கினார் .

ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் எதிர்கட்சிகளும் மக்களும் ஒன்று திரண்டு இந்திராகாந்தியின் சர்வாதிகாரத்தை எதிர்த்தனர். 1977-ல் நடந்த தேர்தலில் ஜனசங்கம் உள்ளிட்ட பலகட்சிகளின் கலவையான ஜனதா கட்சி வெற்றி பெற்றது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.

நெருக்கடி நிலைக்குபின் நடந்த தேர்தலில் வட இந்திய மாநிலங்களில் ராம் மனோகர் லோகியாவால் ஈர்க்கபட்ட இளைஞர்கள்- குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞர்கள் அரசியலில் செல்வாக்கு பெற்றனர் . 1977க்கு முன் வரை பார்ப்பனர், இராஜபுத்திரர் , பூமிகார், போன்ற மேல் சாதியினரிடமே அரசியல் ஆதிக்கம் இருந்தது. ஆனால் முதன் முறையாகப் பிற்பட்ட வகுப்பைச் சார்ந்த முலாயம் சிங் உ.பியிலும் , பின்னர் லாலுபிரசாத் பீகாரிலும் முதலமைச்சர்களாகப் பதவிக்கு வந்தனர். 1967ல் தமிழ் நாட்டில் காங்கிரஸ் தோற்ற பிறகு தலையெடுக்க முடியாமல் எப்படித் தவிக்கிறதோ , அதேபோன்ற நிலையில் உ.பி.யிலும் பீகாரிலும் இப்போது காங்கிரஸ் இருக்கின்றது.

ஜனதாகட்சியின் உள் முரண்பாடுகளால் இரண்டு ஆண்டுகளில் அதன் ஆட்சி முடிவுற்றது. ‘நிலையான ஆட்சி ‘ முழக்கத்தை 1980 தேர்தலில் இந்திராகாந்தி முன் வைத்தார்; வென்றார்.

பஞ்சாபில் காலிஸ்தான் இயக்கத்தையும், அசாமில் மாணவர் போராட்டத்தையும் பல்வேறு வழிகளில் ஒடுக்கினார் , இதன் விளைவாக தன் மெய்க்காப்பாளராக இருந்த சீக்கியர்களாலேயே 1984 -ல் சுட்டுக் கொல்லப்பட்டார். காங்கிரஸில் பிறதலைவர்கள் உருவாகாமல் மட்டந்தட்டப்பட்டதால், ராஜிவ்காந்திக்கு பிரதமர் மணிமுடி சூட்டப்பட்டது.  ராஜிவ்காந்தி ஆட்சியில் இரண்டு குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்கள் நடந்தன, 1984 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நான்கு தொகுதிகளில் தான் வெற்றிபெற்றது. எனவே தன் அரசியல் வளர்ச்சிக்கும், ஆட்சியை பிடிக்கவும் இந்துத்துவத்தைப் பயன்படுத்த முடிவெடுத்தது. அயோத்தியில் இராமர் கோயில் கட்டி இந்துக்களின் சுயமரியாதையைக் காக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

பிரதமர் ராஜிவ்காந்தி , இந்துக்களின் வாக்கு வங்கியை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தால் 1986ல் பாபர் மசூதியில் 1949 முதல் பூட்டபட்டிருந்த பூட்டை உடைத்து இந்துக்கள் உள்ளே சென்று வழிபட வழிவகை செய்தார் , சங் பரிவாரங்கள் இராமர் கோயில் கட்ட ‘சிலானியாஸ்’ பூசை நடத்தவும் அனுமதித்தார். அத்வானி அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்காக இரத யாத்திரை மேற்கொண்டார். இறுதியில் 1992 டிசம்பர் 6 அன்று ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி , பா.ஜ.க வினரால் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கபட்டது. இதன் விளைவாக இந்திய அரசியலில் மதவெறி மேலோங்கியதுடன் , சாதாரண கிராமத்திலும் இந்து முஸ்லீம்களிடையே இருந்த நட்புணர்வு பகையாக மாறிவிட்டது. மோதல்கள், உயிரிழப்புகள் தொடர் நிகழ்வுகளாயின.

இரண்டாவதாக தாராளமயம், தனியார்மயம், உலகமயம், என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைவதற்கு வழியமைத்தவர் இராஜிவ்காந்தி . அதன் பின் நரசிம்மராவும் மன்மோகன் சிங்கும் (1991 - 96) பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேண்டிய நிலம், நீர், கனிம வளம், மின்சாரம்,  சாலைகள், ஆகிய அனைத்தையும் செய்து கொடுத்தனர், 1998 - 2004 வரை இருந்த வாஜ்பாய் ஆட்சியிலும் 2004 முதல் 2014 வரை சோனியாவின் அறிவுரைப்படி இயங்கும் மன்மோகன் சிங் ஆட்சியிலும் இது தொடர்கிறது.

நேரு காலத்தில் அணி சேரா நாடுகளுக்குத் தலைமை தாங்கி வழிகாட்டிய இந்தியா, அமெரிக்கா ஏகாதிபத்திய ஏவலாளாகச் செயல்படுகிறது.

இந்திராகாந்தி, காங்கிரசுக்கட்சியில் ஜனநாயக நடைமுறைகளைப் புறக்கணித்தார். காங்கிரஸுக்குத் தலைமை தாங்கவும் இந்திய நாட்டை ஆட்சி செய்யவும் நேரு குடும்பத்துக்கே உரிமை உண்டு என்ற நிலையை உருவாக்கினார். இந்தத் தொற்றுநோய் மாநிலக் கட்சிகளையும் பற்றிக்கொண்டது.

தலைவர் வழிபாடு, முடிவெடுக்கும் அரசியல் அதிகாரத்தைத் தலைவரிடம் ஒப்படைத்தல் என்று வளர்ந்துவிட்ட இழிந்த அரசியல் போக்கே இந்திய ஜனநாயகத்தின் வேர்களை அரித்து அழித்துக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசில் இனி காங்கிரசோ , பா.ஜ.க வோ தனித்து ஆட்சி அமைக்க முடியாத அரசியல் போக்கு உருவாகி இருக்கிறது. மாநில கட்சிகள் வலிமை பெற்றுள்ளன . அதனால் கூட்டணி ஆட்சியே அமைக்க முடியும் . இது இந்தியா போன்ற பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கிற , மொழிகள் பேசுகின்ற பரந்த நாட்டில் வரவேற்கத்தக்க அரசியல் முன்னேற்றமாகும். இந்தச் சூழலில் மாநிலக் கட்சிகள் மத்திய அரசின் இளைய கூட்டாளிகளாகி ஆட்சி அதிகாரத்தையும் ஊழல்களின் பணத்தையும் பங்கு போட்டுக்கொள்ளவே முயல்கின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டும்.

கடந்த இருபது ஆண்டுகளில் தென் அமெரிக்கக் கண்டத்தில் பெரும்பாலான நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலை ஒழித்தும் மக்கள் நல அரசுகளாகச் செயல்படும் நிலையை மக்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

எனவே இந்தியாவில் தேசிய இனங்களின் அடிப்படையில் தன்னுரிமை பெற்ற மாநிலங்களை கொண்ட மதச்சார்பற்ற ஓர் உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்குவதன் மூலமே மக்கள் நாயகத்தையும் , மக்கள் நல அரசுக் கோட்பாட்டையும் , மக்களுக்கான அரசியல் என்ற நிலையையும் உருவாக்க முடியும்.

(க.முகிலன், மார்க்சிய பெரியாரிய அரசியல் விமர்சகர்)

மார்ச், 2014.