சிறப்புப்பக்கங்கள்

அமைச்சரின் மகள் கடத்தப்பட்டார்

ஹரூண் ரெஷி

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் அப்போதுதான் முளைவிட்டிருந்தது. அதன் அழகான தெருக்களில் துப்பாக்கிச்சூடும் குண்டுவெடிப்பும் அன்றாட நிகழ்வுகள் ஆகியிருந்தன. ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற அமைப்பு ஆயுத விடுதலைப் போராட்டத்தைத் தூண்டிவிட அதிரடியாக எதையாவது செய்யும் துடிப்புடன் இருந்தது. அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அந்த  இயக்கத்தின் தலைவர் இஷ்பக் மஜீத் வானி தன்  குழுவினருடன் நடத்திய ஆலோசனையில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அது மத்திய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீதின் மகள் 23 வயதான மகள் ரூபையா சயீதைக் கடத்துவது. அப்போது அவர் ஸ்ரீநகரில் ஒரு மருத்துவமனையில் மருத்துவப் பயிற்சியில் இருந்தார். அவருக்கு பாதுகாப்புகள் ஏதும் இல்லை.

கடத்துவதும் எளிது. வி.பி. சிங் அரசில் முப்தி முகமது சயீத் நாட்டின் முதல் இஸ்லாமிய உள்துறை அமைச்சராகப் பதவியேற்று சில நாட்களே ஆகியிருந்தன. நாட்களை வீணடிக்காமல் டிசம்பர் எட்டாம்தேதி ரூபையா கடத்தப்பட்டார். இந்த கடத்தல் காஷ்மீர் முன்பு கண்டிராத அளவுக்கு துணிச்சலானது.

பிபிசி, ராய்ட்டர் ஆகிய செய்திநிறுவனங்களுக்கு அப்போது செய்தி சேகரிப்பாளராக இருந்தவர் யூசு ஜமீல். அவர்தான் இந்த கடத்தல் பற்றிய செய்தியை உலகுக்கு முதலில் அறிவித்தவர். “ரூபையா கடத்தப்பட்ட உடனே முப்தி குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளர் எனக்குத் தகவல் சொன்னார். நான் உடனே செய்தியை அனுப்பிவிட்டேன். உலகம் முழுக்க உடனே அச்செய்தி பரவி அனைவரும் இந்தியாவை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தனர்” என்கிறார் அவர். நாட்டுக்கே இது அதிர்ச்சி அளித்தது. காஷ்மீர் மக்கள் பலருக்கும் முதலில் இந்த கடத்தல் பிடிக்கவில்லை. ஆனால் சில நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னால் அரசு பணிந்தது.  ரூபையாவை மீட்பதற்காக ஜம்முகாஷ்மீர் விடுதலை முன்னணியின் ஐந்து உறுப்பினர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதை அடுத்து ஆயிரக்கணக்கில் மக்கள் தெருக்களில் கூடி தீவிரவாதிகளின் வெற்றியை ஆதரித்தனர்.

இப்போது இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. ரூபையாவை கடத்திய தீவிரவாதிகளில் ஒருவரான முகமது சலீம் என்கிற நானாஜி அந்த சம்பவத்தை நன்றாக நினைவில் வைத்துள்ளார். “காஷ்மீரில் எங்கள் இயக்கத்துக்கு அந்த கடத்தல் பெரும் புகழைத் தந்தது” என்கிறார். இப்போது தனது பழைய இயக்கத்தில் இருந்து வெளியேறி புதிய இயக்கம் ஒன்றுக்கு அவர் தலைமைதாங்குகிறார். சையது அலி ஷா கிலானி போன்ற பிரிவினைவாத தலைவர்களால் அந்த கடத்தல் சம்பவம் கண்டிக்கப்பட்டது. ஆனால் சலீம் அதற்காக வருத்தப்படவில்லை. “எங்களுக்கு அந்த கடத்தலில் இறங்குவது மிகவும் தேவையாக இருந்தது. காலத்தின் கட்டாயம் அது” என்கிறார்.

“ரூபையாவைக் கடத்துவதற்கு இரு நாட்கள் முன்பாக அவர் பணிபுரிந்த மருத்துவமனைக்கு நானும் யாசின் மாலிக்கும் (இப்போதைய ஜம்முகாஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர்) சென்று நோட்ட மிட்டோம். ரூபையா அங்கு காண்டீனில் தேநீர் அருந்திக் கொண்டிருந்ததைக் கண்டோம். நாங்களும் அங்கே அமர்ந்து தேநீர் குடித்தோம். இருநாட்கள் கழித்து திட்டத்தை நிறைவேற்றினோம்.”

கடத்தியவுடன் ஸ்ரீநகருக்கு 50 கிமீ வடக்கே உள்ள சோபூர் நகருக்கு ரூபையாவை வாகனத்தில்  கொண்டு சென்று அங்கே மறைவான இடத்தில் ஒளித்துவைத்தார் சலீம். கடத்தல் நடந்த உடனே பேச்சுவார்த்தைகள் தொடங்கின. காஷ்மீரின் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஏ.ஏ.குரு, மூத்த பத்திரிகையாளர் ஜாபர் மெஹ்ராஜ், வழக்கறிஞர் ஷப்னம் லோன்,  மதத்தலைவர் மௌல்வி அப்பாஸ் அன்சாரி உள்ளிட்டோர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தியது. நீதிபதி மோதிலால் பட், வழக்கறிஞர் மியான் அப்துல் கையூம் ஆகியோர் மூலம் இறுதி முடிவு எடுக்கப்பட்டது. ஷேக் அப்துல் ஹமீது, ஷேர் கான்(பாகிஸ்தானைச் சேர்ந்தவர்), நூர் முகமது கல்வால், ஜாவித் ஜார்கர், அல்டாப் பட் ஆகிய ஐந்து தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டனர்.

122 மணிநேரங்கள் தீவிரவாதிகள் பிடியில் கழித்த ரூபையா விடுவிக்கப்பட்டார். இதையடுத்து சலீம் உள்ளிட்ட 13 பேர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜம்முவில் உள்ள தடா நீதிமன்றத்தில் இன்னும் நடந்துவருகிறது.

மூன்று ஆண்டுகள் கழித்து நடந்த மோதலில் எல்லைப்பாதுகாப்பு படையினரால் விடுவிக்கப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவரான ஷேக் ஹமித் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் மர்மமான முறையில் ஷேர் கான் 2008-ல் இறந்தார். கல்வால், ஜாவித் ஜர்கர், அல்டாப் பட் ஆகியோர் இன்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியில் செயல்பட்டு வருகின்றனர்.

(ஹாருண் ரெஷி, ஸ்ரீநகரைச் சேர்ந்த பத்திரிகையாளர்)

ஆகஸ்ட், 2014.